Published:Updated:

மகாயோகி காலக்ஞானி ஶ்ரீவீர பிரம்மேந்திரர்!

ஶ்ரீவீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவீரபிரம்மேந்திரர்

பாபா மாமி ரமா சுப்ரமணியன் ஓவியங்கள்: ஜீவா

மகாயோகி காலக்ஞானி ஶ்ரீவீர பிரம்மேந்திரர்!

பாபா மாமி ரமா சுப்ரமணியன் ஓவியங்கள்: ஜீவா

Published:Updated:
ஶ்ரீவீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவீரபிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரரின் சமாதிநிலை தவம், அவருடைய மகன் பொட்லூரய்யாவின் செய்கையால் கலைந்தது. அதனால் கோபத்துடன் கண்விழித்த ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், ``யார் எனது நிர்விகல்ப சமாதி நிலையைக் கலைத்தது?’ என்று கர்ஜித்தார். பொட்லூரய்யா நடுநடுங்கிப் போனார்!

மகாயோகி காலக்ஞானி 
ஶ்ரீவீர பிரம்மேந்திரர்!

மிகுந்த பயத்துடனும் பணிவுடனும் தந்தையிடம் மன்னிப்பு வேண்டிய பொட்லூரய்யா, அந்த இடத்திலிருந்து புறப்பட முயன்றார். ஆனால் ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், `` நீ என் புத்திரனாக இருந்தாலும் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். இனியும் நீ நம் வீட்டில் வசிப்பதற்கு உனக்கு அருகதை இல்லை. ஆகவே, உன் மனைவியை அழைத்துக்கொண்டு மல்லமீடிபள்ளி கிராமத்துக்குச் செல்.

அங்கே பெரிய குன்றின் மீது ஒரு புளிய மரம் உள்ளது. இதுவரை காய்க்காத அந்த மரத்தின் அடியில் அமர்ந்து நீ பன்னிரண்டு வருடங்கள் தவமிருக்க வேண்டும். பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு காய்த்துக் கனியும் ஒரு பழம் மட்டும் மரத்திலிருந்து உதிர்ந்து உன் கைகளை அடையும். அதை உண்டபிறகு, நீ உன் மனைவியுடன் நம் இல்லம் திரும்பலாம். அதுவரையிலும் நீ அங்குதான் வசிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த நிலையில் சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட கோவிந்தம்மாள் நடந்ததை அறிந்து வருந்தினார். மைந்தனுக்குப் புத்திமதிகள் கூறி வழியனுப்பி வைத்தவர், கிராமதேவதையான பொலேரம்மாவை வேண்டி அழைத்தார். சிறுமியின் வடிவில் தோன்றினார் பொலேரம்மா.

``அன்னையே! தவமிருக்க செல்லும் என் மைந்தனுக்குக் காவலாக அவனுடன் நீங்கள் இருந்து அருள்செய்ய வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார். பொலேரம்மாவும் ``அப்படியே ஆகட்டும்’’ என்று ஒப்புக்கொண்டாள்.

பொட்லூரய்யா குன்றின்மீது புளிய மரத்தின் அடியில் தவம் செய்யத் தொடங்கினார். கிராமதேவதையும் தினமும் சிறுமி வடிவிலேயே சென்று அவருக்கும் அவரின் மனைவிக்கும் பால் எடுத்துச் சென்று கொடுத்து வந்தாள். அவள் யார் என்பதை பொட்லூரய்யா அறியவில்லை.

12 வருடங்கள் நிறைவுற்று, தந்தையார் சொன்னபடி கிடைத்த புளியம்பழத்தை உண்டபிறகு வீடு திரும்ப ஆயத்தமானார். அப் போது அனுதினமும் தங்களுக்குப் பால் கொண்டுவந்து கொடுத்த பெண்ணிடம் `பாலுக்கான தொகை எவ்வளவு?’’ என்று கேட்டார்.

அப்போது தான் யார் என்பதை வெளிப்படுத்திய கிராமதேவதை, ``உன் அன்னையின் வேண்டுகோளையே நான் நிறைவேற்றி வந்தேன். எமக்கு ஏதேனும் நன்றிக்கடன் செய்யவேண்டும் என்று நினைத்தால்... மடத்தில் வீரபிரம்மேந்திர ஸ்வாமியின் சமாதி அருகில் நானும் வசிக்க விரும்புகிறேன். அங்கே எனக்குச் சிறியதோர் ஆலயம் அமைத்துத் தருவாயா?’’ என்று கேட்டாள் பொலேரம்மா.

பொட்லூரய்யா மெய்சிலிர்த்துப் போனார். அந்தத் தெய்வத்தைப் பலவாறு வணங்கித் துதித்தார். ``அம்மையே! மடத்துக்குள் கோயில் எழுப்புவது சிரமம். தாங்கள், அங்கேயுள்ள வேப்ப மரத்தின் அடியில் வாசம் செய்யுங்கள். வருடம்தோறும் வைசாக சுத்த ஏகாதசி அன்று தங்களுக்குத் திருவிழா எடுத்து, சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடத்த ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதன்படியே இன்றளவும் வீரபிரம்மேந்திரர் ஸ்வாமி மடத்தில் அருள்பாலித்து வருகிறாள் அன்னை பொலேரம்மா.

மகாயோகி காலக்ஞானி 
ஶ்ரீவீர பிரம்மேந்திரர்!

சித்தய்யாவோ ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் இட்ட கட்டளைப்படி பணிகளைத் தொடர்ந்தார். குருவின் அருளுடன் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை, அவரின் கிராமத்துக்கு அருகில் அமைந்திருந்த ஊரில் திம்மரெட்டி என்ற செல்வந்தரைக் கொடிய விஷ நாகம் தீண்டிவிட்டது.

மருத்துவர் வந்து பார்த்தார்; திம்மரெட்டியின் உயிர் பிரிந்து பல மணித் துளிகள் ஆகிவிட்டது என்று கூறிவிட்டார். ஊர் மக்கள் மிகுந்த வருத்தத்துடன் திம்மரெட்டியின் உடலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் தனது கிராமத்திலிருந்து நடந்து வந்துகொண்டிருந்த சித்தய்யா அவர்களை மறித்து, உயிருடன் இருப்பவரை எங்கே தூக்கிச் செல்கிறீர்கள் என்று கேட்டார். அங்கிருந்தவர்கள் திடுக்கிட்டனர். ``இவர் இறந்து பலமணி நேரம் ஆகிவிட்டது. மருத்துவரும் இவரின் இறப்பை உறுதி செய்துவிட்டார். ஆகவே சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்கிறோம்’’ என்றனர்.

உடனே சித்தய்யா, ``அவரை இங்கே கிடத்துங்கள்’’ என்றார். அவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்களாக அந்த ஊர் மக்கள், செல்வந்தரின் உடம்பைத் தரையில் கிடத்தினார்கள்.

சித்தய்யா கண்களை மூடி சூரிய உபாசனை செய்தார். பிறகு, குருவை வணங்கிவிட்டு தம் கண்களின் வழியே இறந்த உடலின் மீது ஒளியைச் செலுத்தினார். என்ன ஆச்சர்யம்... சித்தய்யாவின் அருள்பார்வை பட்டவுடன் அந்த மனிதர் எழுந்து அமர்ந்தார்.

ஊர்மக்கள் வியந்தனர். அவரோ தன் குருநாதரின் அருளே அனைத்துக்கும் காரணம் என்றார். இவ்வாறு அவர் நிகழ்த்திய பல அற்புதங்களைக் கண்ட மக்கள் அவரைப் போற்றிக் கொண்டா டினர். கோவிந்தா என்பவர் தம்மைச் சீடராக ஏற்கும்படி சித்தய்யாவிடம் வேண்டிக்கொண்டார்.

சித்தய்யா தம்முடைய குருநாதரின் வாக்குப்படி பல சோதனைகளை நிகழ்த்தினார். அவை அனைத்திலும் கோவிந்தா வெற்றி கண்ட பிறகு, ஸ்வாமி வீரபிரம்மேந்திரரின் அருள் உத்தரவைப் பெற்று கோவிந்தாவைத் தன் சீடராக ஏற்றுக்கொண்டார் சித்தய்யா. இன்றும் பலருக்குக் குருவாக விளங்கி வருகிறார் சித்தய்யா.

இந்த நிலையில் அவரின் வளர்ச்சியைக் கண்டு பலரும் பொறாமை கொண்டனர். அவர்களில் அவ்வூர் கணக்கரும் ஒருவர். அவருக்கு ஊரில் செல்வாக்கும் மதிப்பும் அதிகம். மக்கள் சித்தய்யாவைக் கடவுளாகக் கருதி போற்றுவதை அந்தக் கணக்கரால் ஏற்க இயலவில்லை. அதனால் அவர் மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று சித்தய்யாவை இழித்தும் பழித்தும் பேசி வந்தார். அவரைப் பகைக்க விரும்பாத மக்களும் பதில் பேசாமல் விலகினர். மட்டுமன்றி, அந்தக் கணக்கரின் முன் சித்தய்யாவைக் குறித்துப் பேசுவதையும் தவிர்த்தனர்.

மகாயோகி காலக்ஞானி 
ஶ்ரீவீர பிரம்மேந்திரர்!

ந்த நிலையில் ஒருநாள், கணக்கரின் வீட்டு வழியே சித்தய்யா செல்ல நேர்ந்தது. அவரைப் பார்த்த கணக்கர் சித்தய்யாவை அருகில் அழைத்தார். அவரின் மனநிலையை சித்தய்யா அறிந்திருந்தார் என்றாலும் மறுப்பேதும் சொல்லாமல் அருகில் சென்றார்.

``சித்தய்யா! சிறுவயதிலேயே கிராமத்தைவிட்டு ஓடிவிட்டாய். இப்போது காவித் துணியும் விபூதியும் ருத்ராட்சமும் அணிந்தபடி வந்து நிற்கிறாய். பொற்கொல்லரான உன் குருவிடம் நீ இதுவரை என்ன வித்தையைக் கற்றுக்கொண்டாய்?’’ என்று ஏளனமாகக் கேட்டார் கணக்கர்.

சித்தய்யாவும் தான் கற்ற விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தார். உடனே கணக்கர் சிரித்தபடியே ``அதுசரி... உன் குரு சமாதி அடையுமுன் காவி வஸ்திரமும் ஜபமாலையும் மட்டும்தான் உனக் குக் கொடுத்தாரா? மற்ற குருமார்களைவிடவும் அவர் எவ்விதத்தில் உயர்ந்தவர்... பாதுகையும் தடியும்தான் உனக்கு மிச்சமா...’’ என்றெல்லாம் கேலித் தொனியுடன் கேட்டு நகைத்தார்.

பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்த சித்தய்யா திடீரென ஆவேசமாகி ``ஹே... சென்று விடு. மரியாதையாகச் சென்றுவிடு...’’ என்று உரக்கக் குரல் கொடுத்தார்.

அங்கிருந்த அனைவரும் பயந்துவிட்டனர். உடனே கணக்கர் கோபம் கொண்டு, ``ஏய் சித்தா... என் வீட்டில் இருந்துகொண்டு இங்கிருப்பவர்களைப் பயமுறுத்துகிறாயா... ஏன் இவ்வாறு கூச்சல் போடுகிறாய்?’’ என்று கேட்டார்.

சட்டென்று அமைதி நிலைக்குத் திரும்பிய சித்தய்யா அவரிடம் விவரித்தார்: ``முதலில் அனைவரும் என்னை மன்னியுங்கள். உங்களைப் பயமுறுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இங்கிருந்து கிழக்குப் பகுதியில் சினைப் பசு ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. சிறுத்தை ஒன்று அதன் மீது பாய்ந்து கொல்ல முனைந்தது. அந்தப் பசுவைக் காப்பாற்றவும் சிறுத்தையை விரட்டவுமே நான் அவ்வாறு கூச்சலிட்டேன்!’’

இதைக் கேட்ட கணக்கரின் கோபம் அதிகமானது. ``நீ சொல்வது பொய் என்று நிரூபிக்கிறேன்’’ தம் ஆள்களை அழைத்து சித்தய்யா குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று நடந்ததை அறிந்து வரும்படி அனுப்பினார்.

கணக்கரின் ஆள்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றபோது, அங்கே சினைப் பசு ஒன்று மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டனர். ஆனால் சிறுத்தை எதையும் அவர்கள் பார்க்கவில்லை. இந்த விஷயத்தைக் கணக்கரிடம் வந்து தெரிவித்தனர்.

அதேநேரம், கிழக்குப் பகுதிக்கும் பசுக்களை ஓட்டிசென்றிருந்த சிலர், பசுக்களுடன் திரும்பிக்கொண்டிருந்தனர். கணக்கர் அவர்களை அழைத்து, ``நீங்கள் இருந்த இடத்தில் சிறுத்தை எதையும் பார்த்தீர்களா?’’ என்று விசாரித்தார்.

அவர்கள் ஒருசேர ``ஆமாம்’’ என்று பதிலளித்தனர். மட்டுமன்றி கூட்டத்தை விலக்கிவிட்டு முன்னால் வந்த ஒருவன், ``ஐயா! நான் என் சினைப் பசுவை மேய்த்துக் கொண்டிருந்தபோது, திடுமென எங்கிருந்தோ வந்த சிறுத்தை ஒன்று என் பசுவின் மீது பாய்ந்து கொல்வதற்கு முயற்சி செய்தது. அப்போது, இங்கிருக்கிறாரே இவர் தான் ஓங்கிக் குரல் கொடுத்து சிறுத்தையை விரட்டினார். சிறுத்தை ஓடிவிட்டது. ஆனால் விந்தை... அதன் பிறகு இவரும் மறைந்து விட்டார்’’ என்று சித்தய்யாவைச் சுட்டிக்காட்டிக் கூறினான்.

அத்துடன், ``இதோ பாருங்கள்... என் பசுவின் உடம்பில் சிறுத்தை ஏற்படுத்திய காயங்களை’’ எனக் கூறி, தன் பசுவையும் காண்பித்தான். கணக்கர் வியந்தார். அப்போதே சித்தய்யாவின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.

சித்தய்யாவும் அவரை மன்னித்தருளினார். அவரின் புகழ் மேன்மேலும் அதிகரித்தது. அனைவரும் அவரை அன்புடன் சித்தேந்திர ஸ்வாமி என்றே அழைக்கத் தொடங்கினர். மிகப்பெரும் யோகியாய் அனைவருக்கும் வழிகாட்டியாய்த் திகழ்ந்தார் சித்தேந்திர ஸ்வாமி. நிறைவில் தன் சொந்தக் கிராமத்திலேயே அவர் சமாதி அடைந்தார். இன்றைக்கும் முதுமூலா கிராமத்தில் சித்தேந்திர ஸ்வாமியின் சமாதிப்பீடம் உள்ளது. அந்த ஊரில் உள்ள குழந்தைகளுக்கு ஊர்ப் பெரியவர்கள் சித்தேந்திர ஸ்வாமியின் கதையைக் கூறும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது.

- தரிசிப்போம்...