Published:Updated:

அன்பால் அபிஷேகிப்போம்!

அன்பால் அபிஷேகம்
பிரீமியம் ஸ்டோரி
அன்பால் அபிஷேகம்

செந்தில்குமார்

அன்பால் அபிஷேகிப்போம்!

செந்தில்குமார்

Published:Updated:
அன்பால் அபிஷேகம்
பிரீமியம் ஸ்டோரி
அன்பால் அபிஷேகம்

அற்புதமான சிவபக்தர் அவர். தில்லை-சிதம்பரத்தில் ஆனந்தக் கூத்தாடும் நடராஜரை வழிபட விரும்பினார். அவர் எப்படி வழிபடுகிறார் பாருங்களேன்...

அன்பால் அபிஷேகிப்போம்!

`தில்லையில் கூத்தாடும் நடராஜப் பெருமானே, கருணைக்குப் பிறப்பிடமாக இருக்கும் கடவுளே, வேதங்களால் தெளிவாக வெளியிடப்பட்ட அமிர்தமே, தெளிவான தேனே... சர்க்கரையே, திகட்டாத ஆனந்தமே... தெய்விகமான சுவைகள் எல்லாம் ஒன்றாகக் கூடி, ஒழுகும் பாகே... கள்ளனாகிய என் அறிவிடத்திலும் மெள்ள மெள்ள வெளிப்படக் கலக்க வரும், நன்மையைத் தரும் சுற்றமே!’ என்றெல்லாம் இறைவனைப் போற்றிப் பரவுகிறார்.

ஆம், நடராஜப் பெருமானைக் கருணையின் வடிவம் எனச் சொல்லி, தேன்- சர்க்கரை- பாகு என நமக்குத் தெரிந்த இனிப்பான பொருள்களைச் சொல்லி, நன்மையைத் தருவதுதான் சுற்றம்- அது இறைவன்தான் எனவும் சொல்லி, வகைவகையாக இறைவனை அழைக்கிறார்!

அன்பால் அபிஷேகிப்போம்!

இவ்வாறெல்லாம் இறைவனை அழைத்த அந்த அடியார், இறைவனை அற்புதமாக பூஜித்தார். எப்படித் தெரியுமா? அதை அவரே சொல்கிறார்...

‘`தெய்வமே! துள்ளிக் குதிக்கின்ற (என்) மனம் என்னும் ஆட்டைப் பலி கொடுத்தேன். ஆகையால், தீய செயல்கள் என்னும் துஷ்ட தேவதைகள், இனிமேல் என்னை வருத்தாது. சாந்த தேவதை யான உனக்கு, அன்பையே நீராகக் கொண்டு அபிஷேகம் செய்தேன். என் உயிரையே நைவேத்தியமாகப் படைத்தேன். மூச்சுக் காற்றையே உனக்குத் தூபமாகச் செய்தேன். அறிவையே உனக்குத் தீபமாக ஒளி வீசச் செய்தேன்’’ என்கிறார்.

எப்படியான அற்புத வழிபாடு பாருங்கள்! நாமும் இப்படித்தான் நம்மையே இறைவனிடம் சமர்ப்பித்து வழிபடவேண்டும்.

ஆடு போல கண்ட கண்ட இடங்களிலும் பாய்ந்து, துள்ளிக் குதித்து ஓடி மேயும் மனத்தை இறைவனுக்குப் பலியாகக் கொடுக்க வேண்டும். அதாவது, இறைவனிடம் நம் மனத்தை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். அப்படிச் செய்தால், துஷ்ட தேவதைகளான தீய சிந்தனைகள் இருக்காது.

அன்பையே அபிஷேக நீராக வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்; நமது ஆவியையே (உயிரையே) நைவேத்தியமாகப் படைக்க வேண்டும் என்பது அவரது கருத்து. அப்படியென்றால் சாம்பிராணி- குங்கிலியம் மாதிரி, வாசம் கமழத் தூபம் போட வேண்டாமா? வேண்டியதில்லை. நாம் விடும் மூச்சுக்காற்றையே அந்த இறைவனுக்குத் தூபமாகப் போட்டு, அறிவு என்னும் தீபத்தை ஏற்றிவைத்து, சாந்தம் என்னும் இறைவனை வழிபட வேண்டும்.

`துள்ளு மறியா மனது பலி கொடுத்தேன் கர்ம
துஷ்ட தேவதைகள் இல்லை...'
எனத் தொடங்கி, மேற்காணும் விவரத்தைச் சொல்கிறது அந்த அடியவரின் பாடல். இங்ஙனம், நம்மை முழுமையாக இறைவனிடம் சமர்ப்பிக்கத் தேவையான இந்த அற்புத வழிபாடு குறித்து நமக்கு வழிகாட்டுபவர் யார் தெரியுமா?

`எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே!’ என்று எல்லோருக்காகவும் பிரார்த்தித்த தாயுமானவ சுவாமிகள்தான் அவர். 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். 56 தலைப்புகளில் 1,452 பாடல்கள் பாடியுள்ளார். அவை அனைத்தும் நமக்கான பாடங்கள்!

புழுவும் வண்ணத்துப்பூச்சியும்!

ண்ணம்தான் கடவுள். எண்ணத்தை உபாசித்தால் எண்ணியதைப் பெறலாம். நம் லட்சியம் குறித்துத் தீவிரமாக எண்ணுவதிலும், அந்த எண்ணத்தைப் பராமரித்து வளர்ப்பதிலும், அதைச் செயலாக்குவதிலும், அதற்கான கடின உழைப்பிலும் மட்டுமே நமது வெற்றி அடங்கி இருக்கிறது.

ஆம்! மனம் என்ன நினைக்கிறதோ, அதுவாகவே மனிதன் ஆகிறான். இதை அற்புதமான ஒரு கதையின் மூலம் விளக்குகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

தரையில் ஊர்ந்து செல்கிறது ஒரு புழு. அந்தப் புழு ஆகாயத்தில் பறக்க ஆசைப்பட்டது. கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா? ஆனால் ஆச்சரியம்... அதன் ஆசை சாத்தியமானது. ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு உள்ளே குடியிருந்த புழு, சிறிது காலத்தில் கூட்டை உடைத்துக்கொண்டு, வண்ணமயமான சிறகுகளோடு பட்டாம்பூச்சியாக வெளியே பறந்து சென்றது. இது எப்படி நிகழ்ந்தது?

சுவாமி பரமஹம்சரே விளக்குகிறார்.

அந்தப் புழு, இரண்டு செயல்களைச் செய்தது. ஒன்று, ‘நான் பட்டாம்பூச்சி... நான் பட்டாம்பூச்சி...’ என்று விடாமல் நினைத்துக் கொண்டே இருந்தது. இன்னொன்று... அந்த நினைப்பின் தீவிரத்தை வேறு எவரும் கெடுத்துவிடாமல் இருக்க, தன்னைச் சுற்றி ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டது.

பிறகு என்ன... குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, தான் நினைத்தபடியே வண்ணத்துப்பூச்சியாக ஆனந்தமாக விண்ணில் பறந்தது.

புழுவாக இருக்கும் நம்மில் பலரும் பட்டாம் பூச்சிகளாக மாற வேண்டாமா? கூட்டுப்புழு தன்னைப் பட்டாம்பூச்சி என்று எப்படி விடாமல் சதா நேரமும் நினைத்துக்கொண்டு இருந்ததோ, அதேபோல் நாமும் நாம் விரும்பிய துறையில் விரும்பியபடி முன்னேற முடியும் என்று ஓயாமல் நினைக்கவேண்டும். அந்த நினைப்பை மற்றவர் தடை செய்யாத வகையில், ஒருமித்த சிந்தனையோடு அதே நினைப்பிலேயே உழைக்க வேண்டும். அப்போது வெற்றி நிச்சயம் தேடிவரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism