சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

இந்திரா செளந்தர்ராஜன்

எந்தை திருவரங்கேரரார் கருடன் மேல்

வந்து முகங்காட்டி வழிநடத்த - சிந்தை செய்திப்

பொல்லா உடம்புதனைப் போக்குவதெந்நாள் கொலோ

சொல்லா எதிராசா சூழ்ந்து...'

- ஆர்த்தி பிரபந்தம்

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

வைணவ உலகம் குரு பரம்பரையை மறவாமல் உறுதியாகத் தொடரும் வகையில் தானுகந்த திருமேனி, தமருகந்த திருமேனி, தானான திருமேனி என்று மூன்று திருமேனிகளை ராமாநுஜர் அளித்துச் சென்றார் என்பதை அறிவோம். அதேபோல், தன் குருவின் வழியில் தானும் செல்ல திருவுள்ளம் கொண்டார் மண வாள மாமுனிகள். அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமும் வந்தது.

மாமுனிகளின் சீடர்களில் ஒருவர் அப்பாச்சி அண்ணா. அவரைக் காஞ்சிபுரம் சென்று வைணவத் திருப்பணிகளைத் தொடரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அப்பாச்சி அண்ணன் மாமுனிகளைப் பிரிய சம்மதிக்கவில்லை. அதற்கு காரணமும் இருந்தது. மாமுனிகள் முதிர்வின் பிடியில் தள்ளாமை கொண்டிருந்தார். இருந்தும் திருவாராதனப் பணிகளைச் செய்வதில் அவர் முனைப்புடன் இருந்தார்.

அதிகாலையில் எழுந்து திருக்காவிரிக்குச் சென்று நீராடி வந்து, பின் திருவாராதன கைங்கரியங்களைச் செய்து முடித்து, பிறவிப் பிணியான வயிற்றுப் பசிக்கு அவர் உணவினை அளித்திட மதியப் பொழுதாகிவிடும். இதனால் அவரின் உடல் தளர்ந்து காணப்பட்டது. மாமுனிகளின் உள்ளமும் திருநாட்டை அடைந் திடும் விருப்பத்திற்குத் தயாராகிவிட்டது.

தாம் எழுதிய ஆர்த்திப் பிரபந்தத்தில் அந்த விருப்பத்தை அவர் தெரிவித்து எழுதிய வரிகள் சீடர்களைச் சிந்திக்கவைத்தன.

`தந்தை நற்றாய் தாரம் தனையர் பெரும் செல்வம்

எந்தனக்குனீயே எதிராசா... இந்த நிலைக்கு ஏலாத

இவ்வுடலை இன்றே அறுத்தருள

பாரத தென்னோ பகர்?

வேம்பு முற்ற கைப்புமிகுவது போல் - வெவ்வினையேன்

தீம்பு முற்றும் தேகமுற்றிச் செல்லும்கால் - ஆம்பரிசால்

ஏற்கவே சிந்தித்து எதிராசா? இவ்வுடலைத்

தீர்க்கவேயான வழிசெய்...

இவற்றையெல்லாம் படியெடுத்தவர் அப்பாச்சி அண்ணாதான். இதனால் மாமுனி கள் சீக்கிரம் உடல் துறந்து திருநாடு ஏகப் போய்விடுவார் என்று பயந்தார் அவர். அப்படி நிகழும்கால் தாம் அருகில் இல்லாது போனால் என்னாவது என்று எழுந்த கேள்வி, அப்பாச்சி அண்ணாவைத் தடுத்துவிட்டது.

`குருவின் கட்டளைகளைச் சீடன் மீறக்கூடாது’ என்பதே குரு குலத்தின் முதல் போதனை. `கடலில் குதி’ என்றாலும் தயக்கமின்றி குதிப்பவனாகச் சீடன் இருக்கவேண்டும். அது தெரிந்தும் மாமுனி களின் கட்டளையை ஏற்க தயங்கினார் அப்பாச்சி அண்ணா.

``ஸ்வாமி! நான் எப்போதும் எந்நாளும் உம்முடனேயே இருந்து விட விரும்புகிறேன். என்னால் உம்மைப் பிரிந்து வாழ இயலாது’’ என்று நாயகா நாயகி பாவம் காட்டிப் பேசினார்.

சிரித்தார் மாமுனி. பின் பேசலானார். பேச்சல்ல அது... கல்வெட்டு!

``அப்பாச்சி! பிறந்துவிட்டாலே பிரிந்து தானே தீரவேண்டும். நிழல் இல்லாத உடல் இருக்கிறதா? நீ எப்போதும் என்னைத் தொடர இயலாது. உனக்கான வாழ்நாள்கள் நிறைய உள்ளன. அவற்றை நீ எம்பெருமானின் பக்தி நிமித்தமாய் கழிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.’’

``ஸ்வாமி! உடம்போடு வாழ முடியாத வாழ்நாள்கள் எனக்குத் தேவையில்லை. நீர் முதிர்ந்து திருநாட்டுக்குச் செல்ல விரும்பும் தருணம் நானும் என்னை மாய்த்துக்கொண்டு ஸ்வேத உடம்போடு உம்மைத் தொடர்வேன்.’’

``பேதையே! நான் இந்த உடம்பில் மட்டும் இருப்பதாய் நீ நினைக்கப் போய்தான் இப்படிப் பேசுகிறாய். சப்த வடிவில் நான் எழுதியிருக்கும் என் எழுத்துக்கள் சகலத்தி லும் இருக்கிறேன். ஒலி வடிவில் எழுத்துக் களில் வசிக்கப்போகும் நான், ஒளி வடிவில் ஸ்தூலமாகவும் திகழப் போகிறேன். என் குருவான ராமாநுஜர் அதற்கு எனக்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

இதோ... அவர் நிமித்தமாய் நான் பெற் றிருக்கும் செம்புச் சொம்பு. இதை நான் தருகிறேன். இதை உருக்கி என் திருமேனிகள் இரண்டினை நீயே செய்திடு. ஒன்றை நீ வைத்துக்கொள். இன்னொன்றைப் பொன்னடிக்காலனிடம் கொடுத்துவிடு. இவை வெறும் செம்புச் சிலைகள் மட்டுமல்ல. என் விருப்பத்தால் உருப் பெறப் போவதால், இவற்றில் என் ஆவிர்பவிப்பு எப்போதும் இருந்திடும்.

நான் சுமந்து நிற்கும் இந்த ஊனுடம்பு, தாய் - தந்தையரின் சுக்ல சுரோணிதத்தால் உண்டான ஒன்று. காமம் இதன் தொடக்கம். மரணம் இதன் முடிவு. இதனுள் இருக்கும் பஞ்ச பூதங்களுக்குக் கால ப்ரமாணம் உண்டு. அதன்படி 120 ஆண்டுகளுக்கு மேல் இது வலிவோடு திகழாது. இது சுண்டிச் சுருங்கி மீண்டும் மண்ணாக வேண்டும்.

அல்லாது போனால், இந்தப் பூவுலகில் ஒரு நாள் மானுடர்கள் நிற்பதற்குக்கூட இடம் இருக்காது. மானுட வாழ்வைக் கற்பனையும் செய்து பார்க்க முடியாது. எனவேதான் ஒரு காலப்ரமாணத்தை எம்பெருமான் வடிவமைத்து அதற்கு ஆயுள் என்ற பெயரிட்டுத் தந்துள்ளான். அதை யாரும் மீறக்கூடாது; மீறவும் முடியாது. இதை என் சீடனான நீ மட்டுமல்ல, சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

உடல் உதிர்ந்தாலும் உள்ளமாகிய சப்தம் அழியாது வாழ்ந்திடும். அது, என் வடிவச் சிலைகளைக் காணும்போதெல்லாம் மனதுக்குள் தொன்றும். சப்தமே சாஸ்வதம். எனவேதான் எம்பெருமானும் முதலில் வேதங்களை உண்டாக்கிவிட்டு, பின் அதைப் பின்பற்றி வாழ்ந்திடும் மனிதர்களைப் பிரம்மாவிடம் தொடங்கிப் படைத் தான். என் போன்ற குருமூர்த்திகளும் அவ்வழியே செல்கிறோம். ஆகவேதான் நானும் என் வாழ்நாளில் நூல்களை எழுதிக் குவித்தேன்.

ஸ்ருதி, பாஷ்யம், ப்ரகாசிகை, பாஞ்ச ராத்ரம், ராமாயணம், விஷ்ணு புராணம் என்பவையெல்லாம் இதன்பொருட்டே. இவற்றை ஒருவன் உபாசிக்கும்போது, அவற் றைப் படைத்தவர்களின் அருகில் நெருங்கி, அவர்களோடு வசிப்பவன் ஆகிறான். இதனால் அழிக்க முடியாத குரு சம்மந்தமும் உண்டாகிவிடுகிறது.

அதேநேரம் ஒரே விஷயத்தை ஏன் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என்ற கேள்வியும் சலிப்பும் சிலருக்கு ஏற்படும். அவர்கள் இந்தச் சம்பந்தம் உண்டாவதைப் புரிந்துகொண்டால் சலிப்பு போய்விடும்.

தாய், தந்தை, உற்றார், உறவினர்களோடு வாழ்நாள் முழுக்க இருக்கிறோம். அவர்கள் முகமும் பேச்சும் சலித்தா போகின்றன. நாள்கள் செல்லச் செல்ல உறவும் பாசமும் வலிவடைவது போல். ஸ்லோக - பாராயணங் கள் காலத்தால் வலிவுபெற்று பற்பல அரிய பொருளை, அவற்றை ஓதுபவர் மனதில் ஏற்படுத்தும். `இது ஏன் தொடக்கத்தில் தோன்றவில்லை’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.

நான் கூறும் இந்தக் கருத்துக்கள் எல்லாம் ஒரு நாளில் - ஒரு பொழுதில் உண்டானவை அல்ல. மரமானது முதல் கனியைத் தருவ தற்குப் பல கட்டங்களைக் கடப்பதைப் பார்த் திருக்கிறோம். முதலில் விதை, பின்னர் செடி, பின்னர் மரம், அதன் பிறகு பூ-பிஞ்சு-காய்... பிறகு பழம்... என ஏழு கட்டங்கள் இருப்பதைக் காணலாம். இதையே ஏழு ஜன்மம் என்றும் கூறுவர். இந்தத் தத்துவத்தையே சுருக்கி `உரிய காலம் வரும்போது எல்லாம் நடக்கும்’ என்கிறோம். இப்படியான காலகதி, இறை வனின் படைப்பில் எல்லாவற்றுக்கும் பொருந்தும். இதை என் சீடர்களாகிய நீங்கள் புரிந்து தெளிவது அவசியம்’’ என்று நெடிய உரை நிகழ்த்தி அப்பாச்சி அண்ணாவைத் தெளிவித்தார் மாமுனி.

அதன் பின்னர் அப்பாச்சி அண்ணா மறுபேச்சு பேசவில்லை. அந்த செம்புச் சொம்பும் மாமுனிகளின் விருப்பப்படியே இரண்டு சிலைகளாக மாறியது. அவற்றில் ஒன்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, மற்றதை பொன்னடிக்கால் ஜீயரிடம் வழங்கினார். தற்போது இவற்றில் ஒன்று சிங்கப்பெருமாள் கோயில் முதலியாண்டான் திருமாளிகையிலும் இன்னொன்று நாங்குநேரி வானமாமலை மடத்திலும் இருக்கிறது. இன்றும் நாம், காலத்தை வென்ற அந்த அனந்த மூர்த்தங்களைச் சேவிக்கலாம்.

இவ்வாறு தன் சீடர்களுக்குத் தகுந்த உபதேசம் செய்து நெறிப் படுத்திய மாமுனிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணாவை பாஷ்ய ஆசார்யனாகவும், கந்தாடை அண்ணனை பகவத் விஷய ஆசார்யனாகவும் நியமனம் செய்தார். கந்தாடை நாயனை `ஈடு 36000 படி’க்கு அரும்பதம் சாதிக்கச் செய்தார். மேலும் பல சீடர்களை வடநாட்டு திவ்ய தேசங்களை நோக்கி அனுப்பிவைத்தார். தன் திவ்ய பாதுகைகளை எறும்பியப்பா என்பவருக்குத் தந்தருளினார்.

நிறைவாக தினமும் தாம் திருவாராதனை செய்த அரங்க நகரப்பனைப் பொன்னடிக்கால் ஜுயரிடம் தந்து, வானமாமலை\யில் ஒரு மடத்தை நிறுவி, அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்யத் தூண்டினார். இந்தக் காலகட்டத்தில் பாண்டிய நாட்டை அவர் கடக்கும் தருணம், சிற்றரசர்களின் ஒருவரான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் புகுந்து, தன்னைத் தொண்டனாக்கிக் கொண்டதுடன் பல கைங்கர்யங்களையும் செய்தான்.

மாமுனிகள், மதுரையை ஒட்டிய ஒரு கிராமத்தின் வழித்தடத்தில், ஒரு புளிய மரத்தின் அடியில் தங்கி ஓய்வு எடுத்தார். விருட்சங்களில் புளிய மரம் தனித்தன்மைகள் பல கொண்டது. எவ்வகையில் தெரியுமா?

- தொடரும்.

மகாவிஷ்ணு வழிபாடு!
மகாவிஷ்ணு வழிபாடு!

பொங்கல் அன்று மகாவிஷ்ணு வழிபாடு!

சூரியன், மகர ராசியில் பிரவேசிக்கும் தினம் என்பதால் தை முதல் நாளை ‘மகர சங்கராந்தி’ எனப் போற்றுகிறோம். அன்று ‘இந்திரோபேந்திர சகித சூரிய நாராயணாம் பூஜயாமி’ என்று சூரியனைப் பூஜிக்கவேண்டும்.

திரேதா யுகத்தில் ரவி குலத்தில் ராமனாக அவதரித்து, சூரியனுக்குச் சிறப்புச் சேர்த்தார் விஷ்ணு. சூரியன் மந் நாராயணரின் அம்சம் என்பதால், பொங்கலன்று திருமாலைப் பூஜிப்பது விசேஷம்.

பிருகுவின் மகன் வைசம்பாயனர், தருமர், அகத்தியர் ஆகியோரும் தை முதல் நாளில் சூரியனை வழிபட்டனர் என்கிறது பவிஷ்ய புராணம்.

- கே.ராணி, சென்னை-53

சூரிய ரதம்
சூரிய ரதம்

பெருமாள் கோயிலில் சூரிய ரதம்!

மதுரையில் பெரியார் பேருந்துநிலையம் அருகிலுள்ளது கூடலழகர் கோயில். இங்கே கோயில் அலுவலக அறைக்கு இடப் புறத்தில் சூரிய ரதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ரதத்தின் மத்தியில் அறுகோண வடிவ கட்டத் தில் அருள்கிறார் சூரிய பகவான். அறு கோண மூலைகளும் ஆறு ருதுக்களைக் குறிக்கும். அடுத்துள்ள 3 வட்டங்கள். பூ- புவ- ஸூவ எனும் வியாஹ்ருதிகளைக் குறிக்கும். தொடர்ந்து சூரியனை இடமிருந்து வலமாகச் சூழ்ந்தபடி 12 ராசிகள் உள்ளது விசேஷ அம்சம் என்கிறார்கள்!

- இ.வேலு, மதுரை-3