தொடர்கள்
Published:Updated:

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி - 25

அளவில்லாத செல்வத்தை அன்பர்களுக்கு

அள்ளித் தரும் வேங்கடரமணா நீ வாராய்.

பூலோகத்தையே பீதாம்பரமாக அணிந்தவனே,

பக்தர்களைக் கைவிடாமல் காப்பவன் நீ வாராய்!

- புரந்தரதாசர்

திருமலை திருப்பதிதிருப்பதி இன்றல்ல நேற்றல்ல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருந்து அருளும் தலம். தேன் இருக்கும் இடம் நோக்கி வண்டு கள் பறந்து வருவதைப்போல, பக்தர்கள் நாடி வந்து பெருமாளின் திருவருள் பெற்று துயர் தீர்ந்து செல்லும் தலம் திருப்பதி.

செல்வம் வேண்டுவோருக்கு அது குபேர ஸ்தலம். முக்தி வேண்டுவோருக்கு அதுவே திருவைகுண்டம். மழலைச் செல்வம் வேண்டு வோருக்குச் சந்தான கோபாலன் சந்நிதி!

அது பதினைந்தாம் நூற்றாண்டு. மராட்டிய தேசம், பண்டரிபுரம் அருகே உள்ள சிறு கிராமம் வேமன்னபுரி. அங்கு மாதவராவ் - ரத்தினாபாய் தம்பதி வாழ்ந்துவந்தனர். வேண்டிய செல்வம் இருந்தும் பிள்ளைச் செல்வம் மட்டும் இல்லாமல் இருந்தது அவர்களுக்கு. ‘ஏழுமலையில் எழுந்தருளியிருக் கும் கலியுக வரதனை வேண்டிக்கொண்டால் நிச்சயம் வரம் கிடைக்கும்’ என்றார்கள் சிலர். மாதவராவ் தன் மனைவியோடு திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்தார்.

வேங்கடவனின் அருள் பரிபூரணமாகக் கிடைத்தது. அதன் பலனாக அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. நிவாசனின் திருவருளால் பிறந்த அந்தக் குழந்தைக்கு ‘நிவாச நாயக்’ என்றே பெயர் வைத்தனர். நிவாச நாயக்குக்கு உரிய வயதில் திருமணம் செய்துவைத்தனர். அவர் மனைவியின் பெயர் சரஸ்வதி. பண்டரிபுரத்தில் தன் வணிகத்தைத் தொடங்கினார் நிவாச நாயக்.

பண்டரிபுரம் பக்தர்களின் பூமி. பகவான் கிருஷ்ணன் விட்டலனாக, பாண்டுரங்கனாக அருளும் தலம். அங்கு வாழும் அனைவரும் ‘விட்டல’ நாமத்தை உச்சரித்தபடியே இருப்பார்கள். நிவாச நாயக் மட்டும் விதி விலக்கு. தன்னை நாடிவரும் அனைவருக்கும் வேண்டியதை அருள்பவன் திருமலை நிவாசன். ஆனால் அவர் பெயரைத் தாங்கி யிருந்தாலும் யாருக்கும் ஒரு சல்லிக் காசுகூடக் கொடுக்காத கருமியாக இருந்தார் நிவாச நாயக். ஆனால் அவர் மனைவி சரஸ்வதியோ தயாள குணம் கொண்டவள். தன் கணவனுக்கும் சேர்த்து பாண்டுரங்கனைத் தொழுபவள். சீக்கிரம் தன் கணவனை ஆட்கொண்டு நல்வழிப்படுத்த விட்டலனை அனுதினமும் வேண்டிக்கொண்டே இருந்தாள். அந்த நாளும் வந்தது.

வயதான அந்தணர் வடிவில் வந்த பாண்டு ரங்கன் அற்புதமான லீலை ஒன்றை நிகழ்த்தி அவரை ஆட்கொண்டார். அன்றுமுதல், ‘பாண்டுரங்கனே பெரும் செல்வம்’ என்பதைக் கண்டுகொண்ட நிவாசநாயக் தன் இசையால் இறைவனைத் துதிக்க ஆரம்பித்தார்.

தன் பெரும் செல்வத்தை எளியவர்களுக்குத் தந்துவிட்டுத் தன் மனைவியோடு பிக்ஷை எடுத்து உண்டபடி திருத்தல யாத்திரையைத் தொடங்கினார். அந்த யாத்திரை யின் ஒரு பகுதியாக திருமலைக்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில்தான் அன்னமய்யா திருமலையில் வாழ்ந்து வந்தார்.

அன்னமய்யா
அன்னமய்யா

அன்னமய்யாவின் சரிதத்தை எழுதியவர், அவரின் பேரனான சின்னய்யா சுவாமிகள். அவர், அன்னமய்யாவும் பிற்காலத்தில் புரந்தரதாசர் என்று போற்றப்பட்ட நிவாச நாயக்கும் சந்தித்த நிகழ்வையும் அவர்கள் இருவரும் திருமலையில் ஒன்றாக பஜனை செய்து வேங்கடவனைத் துதித்த நிகழ்வையும் எழுதியுள்ளார்.

இருவரும் அனுதினமும் வேங்கடவன் சந்நிதிக்குச் செல்வார்களாம். அங்கே அன்னமய்யாவுக்கு திருமாலாகவும் நிவாச நாயக்குக்கு விட்டலனாகவும் காட்சி கொடுப்பாராம் வேங்கடவன். இந்த அற்புத தரிசனத்தைக் கண்டு மகிழ்ந்து ஆனந்தமாகத் திருப்பதியில் பாடித் திரிந்தனர் இரண்டு பக்தர் களும். அதனால்தான் இருவரின் கீர்த்தனைகளிலும் சில ஒற்றுமை கள் இயல்பாகவே அமைந்தன.

நிவாச நாயக் விட்டலனின் திருவிளையாடலை அறிந்துகொண்டதும் தன் செல் வத்தைத் துறந்து ஆசார்யர் வியாச ராஜரைச் சரணடைந்தார். அவருக்கு தீட்சை அளித்த ஆசார்யர், ‘புரந்தர விட்டலா’ என்று திருநாமம் சூட்டினார். அதன்பின், ‘புரந்தர தாசர்’ என்ற திருநாமம் அவருக்கு உண்டாயிற்று என்று சொல்வார்கள்.

புரந்தரதாசர் என்னும் நாமம் நிவாச நாயக்குக்குத் திருமலையில்தான் கிடைத்தது என்பாரும் உண்டு. அந்த நிகழ்வு குறித்து சுவாரஸ்யமான கதை ஒன்றும் உண்டு.

திருமலையில் நிவாச நாயக் வாழ்ந்த நேரத்தில், அங்கே புரந்தரி என்று ஒரு தாசி இருந்தாள். ஏழுமலையான் மீது அவள் கொண்ட பக்தியை நிவாச நாயக் அறிந்து கொண் டார். தினமும் இரவு புரந்தரி ஆலய வாசலுக்குச் சென்று வீணை இசைப்பாள். உடனே கோயிலின் கதவு திறந்து கொள் ளும். உடனே அவள் உள்ளே செல்ல, கதவு தானாய் மூடிக் கொள்ளும்.

ஒருநாள் இரவு புரந்தரி தன்னை அலங்கரித்துக்கொண்டு ஆலயம் நோக்கிச் செல்வதைக் கண்ட நிவாச நாயக் அவளைப் பின்தொடர்ந்தார். ஆலய வாசலில் நின்று அவள் வீணை இசைக்கக் கதவு திறந்து கொண்டது. உடனே அவள் உள்ளே சென்றதும் கதவு மூடிக்கொண்டது. உள்ளே வீணை இசையும் நாட்டியமாடும் ஒலியும் கேட்டது. இதைக்கேட்டு வியந்த நிவாச நாயக் உள்ளே நிகழும் அற்புதத்தைப் புரிந்து கொண்டார். மறுநாள் புரந்தரியிடம் தனக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்கவேண்டும் என்றும் தானும் இன்று ஆலயத்துக்குள் வர அனுமதிக்கவேண்டும் என்றும் வேண்டினாராம்.

புரந்தரதாசர்
புரந்தரதாசர்

உடனே புரந்தரி, ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி மறுநாள் அவரையும் அழைத்துக் கொண்டு ஆலயத்துக்குச் சென்றார். ஒரு நிபந்தனை விதித்தாள். “தூணுக்குப் பின் மறைந்திருந்தே பெருமாளை தரிசனம் செய்யவேண்டும். எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது” என்று கட்டளையிட்டார். நாயக்கும் சம்மதித்தார்.

ஆலயத்துக்குள் நுழைந்ததும் ஒரு தூணின் மறைவில் அவர் நின்றுகொண்டார். புரந்தரி ஓரிடத்தில் அமர்ந்து இசைக்கத் தொடங்கினாள். அப்போது பெருமாள் சுந்தர ரூபம் கொண்டு அவள் முன் தோன்றி நடனமாடத் தொடங்கினார். இதைக் கண்ட நிவாச நாயக்குக்கு மெய்சிலிர்த்தது. கண்ணார தரிசனம் செய்தார்.

பெருமாளின் கண்களுக்கு யார்தான் மறைந்திருக்க முடியும்... நிவாச நாயக்கை வெளிப்பட வைக்கத் திருவுளம் கொண்டார் வேங்கடவன். புரந்தரியிடம் வீணையை வாங்கிக் கொண்டு அவளை நடனமாடச் சொன்னார். பெருமாள் வீணையை மீட்டினார், ஆனால் அபஸ்வரமாக! சங்கீதத்தைத் தன் ஜீவனாகக் கொண்ட நிவாச நாயக்குக்கு அதைப் பொறுக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் தூணுக்குப் பின் இருந்து வெளிப்பட்டு, “நிறுத்துங்கள்... உங்கள் அபஸ்வரத்தை” என்று கூச்சலிட்டாராம்.

இதைக் கேட்டு பெருமாளும் புரந்தரியும் சிரித்துவிட்டனர். அப்போதுதான் தன் பிழையை உணர்ந்தார் நிவாச நாயக். பெருமாளின் திருவடிகளில் விழுந்து வணங் கினார். பெருமாள் நிவாச நாயக்குக்கு உபதேசம் செய்யுமாறு புரந்தரிக்கு ஆணை யிட்டு மறைந்தாராம்.

புரந்தரியும் ஆசார்ய ஸ்தானத்தில் இருந்து உபதேசம் செய்து நல்வழி காட்டினார். புரந்தரியின் தாசராக இருந்து உபதேசம் பெற்றதால் தன் பெயரை புரந்தர தாசர் என்றே நிவாச நாயக் மாற்றிக்கொண்டார். அதுவே இன்றளவும் உலகில் நிலைத்துவிட்டது என்றும் சொல்வார்கள்.

எது எப்படியோ புரந்தரதாசர் பல நாள்கள் திருமலையில் தங்கி வேங்கடவனைக் குறித்துப் பாடி பக்தி செய்து வந்தார். பாண்டு ரங்கன் அவரை பண்டரிபுரம் வரச் சொல்லிக் கனவில் கட்டளையிட்ட பிறகுதான் மீண்டும் அங்கே சென்றார். காலமெல்லாம் பெருமாளைப் பாடிப் பரவினார். தன் 95 வயதில் முக்தி அடைந்த அவரை நாரதரின் மறு அவதாரமாகவே போற்றுகின்றனர் பக்தர்கள். இவரின் குருவான வியாசராயரே புரந்தர தாசரைப் போற்றிப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1470 முதல் 1564-ம் ஆண்டுவரை வாழ்ந்த புரந்தரதாசர் தன் வாழ்வில் 4 லட்சத்து 75 ஆயிரம் கீர்த்தனைகள் எழுதியுள்ளதாகச் சொல்வார்கள். இன்று அவற்றில் சில ஆயிரங்களே நமக்குக் கிடைத்துள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1979-ம் ஆண்டு, ‘தாச சாகித்ய புராஜக்ட்’ என்னும் திட்டத்தைத் தொடங்கி வேங்கடவனைப் பாடிய தாசர்களின் கிருதிகளைத் தொகுத்து வெளியிட்டது.

மேலும் தாசர்களின் வாழ்க்கை குறித்த நூல்களையும் வெளியிட்டு அவர்கள் குறித்து உலகுக்குத் தெரியப்படுத்தியது. அதேபோன்று 1979 முதல் ஒவ்வோர் ஆண்டும் தை அமாவாசை நாளையொட்டி, புரந்தரதாசர் ஆராதனை உற்சவமும் திருமலையில் கொண்டாடப்படுகிறது. 2006-ம் ஆண்டு முதல் இந்த வைபவம் 3 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரந்தரதாசருக்கு அலிபிரி மலையடிவாரத்தில் ஒரு சிலையும் நிறுவிப் போற்றியுள்ளது.

- தரிசனம் தொடரும்...அன்னமய்யா, நிவாச நாயக் இருவருக்கும் முறையே வேங்கடவனாகவும் விட்டலனாகவும் காட்சி தருவாராம் பகவான்!

குடமுழா வாசிக்கும் நந்தி!

திருச்சி காந்தி மார்க்கெட் அருகில், கீழப்புலி வார்டு சாலையில் உள்ளது அருள்மிகு பூலோகநாதர் திருக்கோயில். இங்குள்ள நடராஜர் விக்கிரகம் கொள்ளை அழகு.

சிவாலயங்களில் பொதுவாக நடராஜர் சந்நிதியில் அவருக்கு அருகில் மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் முதலானோர் இருப்பர். இங்கே, நடராஜருக்கு அருகில் அமர்ந்து குடமுழாவை வாசித்தபடி நந்தி தேவர் அருள்பாலிக்கிறார். இந்த நடராஜரை தரிசித்து வழிபட்டால், கல்வி-கேள்வியில் சிறந்து விளங்க லாம்; வீடு - மனை வாங்கும் யோகம் உண்டா கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

- அ.திருமலை, முசிறி