Published:Updated:

திருமலை திருப்பதி - 14

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

ஓவியம்: ம.செ

திருமலை திருப்பதி - 14

ஓவியம்: ம.செ

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

"உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்

உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்

உள்ளத்தின் உள்ளனென்று ஓர்"


- பொய்கை ஆழ்வார்

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

கண்டிராத கடவுளை இரண்யகசுபு நம்பவில்லை. ஆனால் பிரகலாதன் நம்பினான். கண்ணால் கண்டும் கடவுள் என்று ராவணன் அறிந்துகொள்ளவில்லை. விபிஷணன் அறிந்துகொண்டான். விஸ்வரூபம் எடுத்து நின்றும் சிசுபாலன் பரப்பிரம்மம் என்று உணரவில்லை. சுற்றி வலிமையில் சிறந்த கணவர்களும் நீதிமான்களும் இருந்தும் சபையில் `கோவிந்த நாமமே தன்னைக் காக்கும் நாமம்' என்பதை அறிந்துகொண்டாள் திரௌபதி. மூன்று யுகங்களிலும் இறைவனைக் காணாமலும் கண்டும் உணர்ந்தும் நம்புகிற பக்தர்கள் இருந்தார்கள். ஆனால் கலியுகமோ மிகவும் கடினமானது. அதர்மத்தின் பிடியில் சுழலும் கலியுக பக்தர்கள் மீது இறைவன் கருணை கொண்டால்

தவிர அவர்களால் இறைவனை உணரமுடியாது. அதனால்தான் அவதாரமாக இந்தப் பூலகுக்கு வந்து போகாமல் அர்ச்சாவதாரமாக கலியுகம் முடியும்வரை கோயில்கொள்ளத் திருவுளம் கொண்டார் பெருமாள்.

கலியுகத்தில் செல்வமே பிரதானம். அருளைத் தேடி ஓடுபவர்களைவிடப் பொருளைத் தேடி ஓடுபவர்களே அநேகம். அப்படி இருக்கையில் அவர்களுக்குச் செல்வத்தை அருள தன்னோடு தாயார் பொருந்தியிருக்க வேண்டியது அவசியம் அல்லவா... அவள் விலகியிருந்ததால்தானே அவரே கடன்பட நேர்ந்தது... அந்த நிலை தன் பக்தர்களுக்கு ஏற்படக்கூடாது என்று எண்ணினார் பகவான். அதற்காகத் திருமகளை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தார்.

சேஷாசலத்தில் சுவர்ணமுகி நதிக்கரையில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் எழுந்தருளுமாறு தேவியை தியானித்தபடி தவமிருந்தார். தவம் அவர் உருவை மாற்றியிருக்க தவத்தின் வலிமை மூவுலகங்களையும் அதிரச் செய்தது. இந்திரன், `யாரோ ஒரு ரிஷி அகோரத் தவம் செய்கிறார்' என்று நினைத்து அதைக் கலைக்க ரம்பை முதலான அப்சரஸ்களை அனுப்பினான்.

பெருமாளா இந்த மாயைகளில் எல்லாம் மயங்குபவர்?! தன் தவவலிமையால் ஒரு ஜகன் மோகினியை உருவாக்கினார். அந்த ஜகன் மோகினியின் பேரழகைக் கண்ட ரம்பை முதலான தேவதைகள் வெட்கமடைந்தனர். அங்கிருந்து மறைந்து இந்திரலோகம் அடைந்தனர். நடந்தவற்றை இந்திரனிடம் சொல்ல, இந்திரன் தியானம் செய்து அங்கு தவம் செய்பவர் யார் என்று தெரிந்துகொண்டான். பரப்பிரம்மத்தையே சோதிக்க நினைத்த தன் தவற்றுக்காக வருந்தினான்.

கொல்லாபுரத்தில் பத்தாண்டுகள் தவம் செய்தவர், சேஷாசலத்திலும் பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையான தவத்தைப் புரிந்தார். பெருமாள் தவமிருக்கும் செய்தி கபில முனிவரின் ஆசிரமத்தில் இருந்த தாயாருக்கு எட்டியது. தாயார் செய்வதறியாது திகைத்தார். எப்போதும் மலர்ந்த தாமரைபோல் ஒளிவீசும் தாயாரின் முகம் கவலையால் வாடியிருப்பதை அறிந்த கபில முனிவர் அதன் காரணம் என்னவென்று வினவினார்.

``முனிவரே, நான் எப்போதும் திருமாலின் திருமார்பில் வாசம் செய்பவள். ஒருமுறை பிருகு முனி கோபம்கொண்டு அந்த விஷ்ணுவின் மார்பில் உதைக்கும் நிலை உண்டானது. ஆனால் அதுகுறித்து ஹரி எந்தவிதக் கவலையும் கொள்ளவில்லை. மாறாக முனிவரின் பாதங்கள் நோகுமோ என்று வருந்தினார். நான் விரும்பி வாசம் செய்யும் மார்பை எட்டி உதைத்தவரைக் கண்டிக்காத ஹரியை நான் ஊடல் கொண்டு பிரிந்தேன். இப்போது அவர் என்னை நோக்கித் தவம் செய்து அழைப்பது ஏன்? நான் என்ன செய்யட்டும்? வழிகாட்டுங்கள் முனிவரே'' என்று கேட்க கபில முனிவர் சிரித்தார்.

``தாயே! இந்த சகல லோகங்களையும் படைத்தவரைப் பதியாகக் கொண்ட உமக்கு நான் வழிகாட்ட இயலுமா? ஆனாலும் நான் அறிந்த சில நியதிகளை முன்வைக்கிறேன். பிருகு முனிவர் திருமாலின் மார்பில் பாத ஸ்பரிசம்படும்படிச் செய்தது தவறுதான். ஆனால் பிருகு யார்? திருமாலின் பேரன் தானே... உலகத்தில் பேரன் மார்பில் உதைத்தான் என்று எந்தத் தாத்தாவோ பாட்டியோ கோபித்துக் கொள்வார்களா... மேலும் பிருகு மேன்மையான ஒரு நோக்கத்தோடு அந்த சோதனையைச் செய்தார். அதை அறிந்ததால் திருமாலுக்கும் அது பிரியமாய் இருந்தது. கணவனுக்குப் பிரியமானது மனைவிக்கும் பிரியமாகத்தானே இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனதும் அவர் லீலைதான். அவரே உன்னைப் பிரிய அனுமதித்தார். இப்போது அவரே உம்மை அழைக்கிறார். நீ போக மறுப்பது தவறு.

அவரின் செயல்கள் அனைத்துமே இந்தப் பிரபஞ்ச நன்மைக்கானவை. அப்படியிருக்க நீ அதில் குறை காணவேண்டிய அவசியமே இல்லை. இப்போதே தாமதிக்காமல் சென்று அவரோடு சேர்வாயாக'' என்று பணிவுடன் கூறினார். இதைக் கேட்ட தாயார் மகிழ்ந்தார். ஆனாலும் அவருக்குள் ஒரு குழப்பம் இருக்கவே செய்தது.

``முனிவரே! நான் அனைத்தையும் ஏற்கிறேன். அவரோடு நான் இணைந்திருப்பதே சரி. ஆனால் தற்போது பத்மாவதி அவரோடு வாழ்கிறாள். நான் எப்படி அவர் மார்பில் சென்று வாசம் செய்வேன்'' என்று கேட்டாள்.

``தாயே! இந்த உலகில் வாழும் சாதாரணப் பெண் போலக் கேட்கிறீர்களே... அவர் சர்வ ஜகந்நாதர். அவரின் லீலைகளை நீங்கள் அறியமாட்டீர்களா..?

ராமாவதாரத்தில் ஏகபத்தினி விரதனாக இருந்தவர்தான் கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளோடு வாழ்ந்தார். அதற்காக அவரை நீ வெறுத்தாயா என்ன? அவருக்கு ஸ்திரிகளுடனான சம்பந்தம் என்பது இந்த உலகியல் பூர்வமான சரீர சம்பந்தம் போன்றது அல்ல என்பதை நான் உனக்குச் சொல்லவும் வேண்டுமா. மேலும் பத்மாவதி பதிவிரதை. உன்னையும் அவரையும் அரியணையில் அமரவைத்துப் பூஜிக்கும் பேறுபெற்றவள். அப்படிப்பட்டவளை எண்ணி நீ பிரிந்திருத்தல் ஆகாது'' என்று சொல்ல லட்சுமி தேவி தன் குழப்பம் நீங்கியவளாக சேஷாசலம் நோக்கிப் புறப்படத் தயாரானாள்.

தன் தவக்கோலத்தை விடுத்து திவ்ய சரீம் எடுத்து சேஷாசலத்தில் ஸ்வர்ணமுகி தீரத்தில் தோன்றியிருந்த ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் மீது சுகாசனத்தில் அமர்ந்தாள் தேவி லட்சுமி. ஸ்ரீநிவாஸர் அந்தக் காட்சியைக் கண்டு மனம் குளிர்ந்தார்.

- தரிசனம் தொடரும்...

பத்மாவதி
பத்மாவதி
TTD PHOTO

திருச்சானூரில் பத்மாவதி நாட்டுப்புறக் கதை

ஸ்ரீநிவாஸன் பத்மாவதி திருமணத்தைக் காண தேவர்களும், முனிவர்களும், சித்த புருஷர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். சேஷாசலத்திலிருந்து சைலம்வரை திருமண பந்தி நடைபெற்றது என்கிறது புராணம். அப்படிப்பட்ட கல்யாணத்தில் குறையொன்றும் இல்லை என்றாலும் நாரதர் சும்மாயிருக்கவில்லை.

பிரமாண்டமாகத் தன் மகனின் திருமணத்தை நடத்திய வகுளாதேவிக்கு அதில் சிறு ஆணவம் ஏற்பட்டது. வகுளாதேவியின் கர்வத்தைப் போக்க நினைத்த நாரதர், பத்மாவதித் தாயாரிடம் சென்று, `நிவாஸ கல்யாணத்தில் கறிவேப்பி லையும் கனகாம்பரப் பூவும் சேர்க்கப்படவில்லை' என்று தெரிவித்தார். வகுளாதேவி இதை ஒரு குறையாகப் பின்னர் ஒருநாள் சொல்லிக்காட்ட, பெருமாளுக்கும் பத்மாவதிக்கும் அன்னைக்கும் ஊடல் உண்டானது. இந்த ஊடலே பெரிதாக, பத்மாவதி தாயார் பிரிந்து சென்று திருச்சானூரை அடைந்து தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார். மேலும் இதனால்தான் திருமலை ஆலயத்தில் இன்றும் எந்த விதத்திலும் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் சேர்ப்பதில்லை என்றும் சொல்கிறார்கள்.

திருமகள் ஹரியை ஊடல் காரணமாகப் பிரிந்திருந்தாள் என்பதுபோல் பத்மாவதி தாயார் தனியாகக் கோயில்கொண்டிருப்பதையும் ஊடல் என்று சாதாரண ஜனங்கள் புரிந்துகொண்டதன் விளைவு இக்கதை என்கிறார்கள்.

ஆன்மிகப் பெரியவர்களோ நாராயணபுரம் தாயார் அவதரித்த திருத்தலம் என்பதால் அங்கே அவருக்குக் கோயில் அமைந்திருக்கிறது என்கிறார்கள். திருச்சானூரில் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யாமல் திருமலை திருப்பதிக்குச் செல்லக் கூடாது என்பது விதி. அதன்படி தாயாரை முதலில் தரிசித்து திருமலை சென்று பெருமாளை தரிசித்து பலன் பெறுவோம்.