Published:Updated:

காசி தமிழ் சங்கமம்: சிவகாசியும் தென்காசியும் போற்றும் வடகாசியின் மகத்துவங்கள்!

'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி

காசி தமிழ் சங்கமம்: சரி காசிக்கு ஏன் தமிழகத்தில் அத்தனை முக்கியத்துவம்! ராமாயண, மஹாபாரதக் காலத்தில் இருந்தே இந்த இரு பகுதிகளும் இணைக்கப்பட்டு இருந்ததை இந்த புராணங்களின் வழியே காணலாம்.

காசி தமிழ் சங்கமம்: சிவகாசியும் தென்காசியும் போற்றும் வடகாசியின் மகத்துவங்கள்!

காசி தமிழ் சங்கமம்: சரி காசிக்கு ஏன் தமிழகத்தில் அத்தனை முக்கியத்துவம்! ராமாயண, மஹாபாரதக் காலத்தில் இருந்தே இந்த இரு பகுதிகளும் இணைக்கப்பட்டு இருந்ததை இந்த புராணங்களின் வழியே காணலாம்.

Published:Updated:
'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி
அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தேவாரங்களில் காசி வைப்புத் தலமாக உள்ளது. 'மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி' என்கிறது தேவாரம்.
காசி
காசி

வடக்கே வசிப்பவர்கள் ராமேஸ்வரத்துக்கு வர விரும்புவதும், தமிழகத்தில் வசிக்கும் இந்துக்கள் காசிக்கு செல்ல விரும்புவதும் தொன்றுதொட்ட வழக்கமாகவே உள்ளது. ராமாயண யாத்திரை செல்பவர்களுக்கு காசியும் ராமேஸ்வரமும் முக்கியத் தலங்களாக உள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி எனும் காசியில் 'காசி தமிழ் சங்கமம்' என்னும் ஒரு மாத கால நிகழ்ச்சி சென்ற நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்வை 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். தமிழகமும் காசியும் கொண்டுள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமைகளை மீட்டெடுத்து தொடர்வதுமே இந்த கலாசார விழாவின் நோக்கமாகும் என்றும் எடுத்துரைத்தார். சென்னை ஐஐடி நிறுவனமும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இந்த விழாவில் பல்வேறு திறன் கொண்ட தமிழகத்தின் 12 குழுக்கள் தொடர்ச்சியாக இந்த விழாவில் கலந்து கொள்ளும். அப்போது தமிழகத்தின் கலை, கலாசாரங்கள் காசி நகர மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.

சரி காசிக்கு ஏன் தமிழகத்தில் அத்தனை முக்கியத்துவம்! ராமாயண, மஹாபாரதக் காலத்தில் இருந்தே இந்த இரு பகுதிகளும் இணைக்கப்பட்டு இருந்ததை இந்த புராணங்களின் வழியே காணலாம். மயிலாப்பூர், ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தனுஷ்கோடி என தமிழநாட்டின் பல பகுதிகள் ராமாயணத்தில் வருகின்றன. அதேபோல மஹாபாரதத்தில் அரவான், பொன்னுருவி, ஆரவல்லி-சூரவல்லி பாத்திரங்கள் யாவும் தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்
காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்

குமரகுருபரர், தஞ்சை சரபோஜி மன்னர், அதிவீரராம பாண்டியர், கோடகநல்லூர் சுந்தர சாமிகள், காஞ்சி மகாபெரியவா, முத்துசாமி தீக்ஷிதர், பாரதியார் என பல ஞானியரோடு தொடர்பு கொண்டது காசி. இவர்களின் பங்களிப்போடு வளர்ந்த நகரம் காசி. காசியும் காஞ்சியும் 7 புண்ணிய நகரங்களில் ஒன்று. இவை இரண்டுக்கும் அநேக தொடர்புகள் உண்டென அறியலாம். இரண்டுமே சக்தி, சிவனுக்கான தலங்கள். அங்கே காமாட்சி, இங்கே விசாலாட்சி. அங்கே ஏகாம்பரேஸ்வரர், இங்கே விஸ்வநாதர். இரண்டுமே மண்ணுக்கான தலங்கள். இரண்டு இடங்களிலும் காஞ்சி மடம் உண்டு. இரண்டு இடங்களையும் தொடர்புப்படுத்தி பாரதி 'காசி நகர்ப் புலவர் பேசும் உரைதானை காஞ்சியில் கேட்க கருவி செய்வோம்' என்றார்.

``காசியில் கோயில்களை மட்டுமல்ல. அந்த நகரையே அழகாகப் புனரமைத்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார். தேசமெங்கும் சென்று திரட்டிய பொருளைக் காசி விஸ்வநாதருக்கே அர்ப்பணித்தவர்கள் நகரத்தார். இங்கே காசி விஸ்வநாதர் கோயிலில் அவர்களுக்கென்றே தினசரி பூஜையில் இரண்டு வேளை பூஜைகள் இவர்களுக்கானவை. இன்னமும் காசியில் உள்ள பல ஆலயங்கள் நகரத்தார் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. உண்மையில் பர்மா, மலேயா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்ந்து பொருள் ஈட்டிய நகரத்தாருக்கு தமிழ்ச் சொந்தங்களை சந்திக்கும் மையமாகவே காசி நகரம் இருந்து வந்துள்ளது" என்கிறார்கள் பெரியோர்கள்.

காசி
காசி

காசியில் இறப்பது புண்ணியம் என்ற காரணத்தால் தொன்றுதொட்ட காலத்தில் இருந்தே வயதான காலத்தில் அங்கு சென்று வாழ்வது நமமவர்களின் விருப்பமாக இருந்தது. முதியவர்களுக்கு மட்டுமல்ல, திருமணமாகவிருக்கும் மாப்பிள்ளை கூட கோபித்துக் கொண்டால் போக நினைப்பது காசிக்கு தான் என்பதை இன்றைய திருமணங்களில் காசி யாத்திரை சடங்குகளில் காணலாம். இதன் உண்மையான பொருள் பிரம்மச்சாரியாக காசிக்கு செல்ல வேண்டாம் என்று பெண்ணின் தந்தை தடுத்து, தனது மகளை விவாகம் செய்வித்து கிரகஸ்தனாகக் காசிக்கு போகச் சொல்வார் என்றும், கிரகஸ்தனாக காசிக்குச் செல்வதே அதிக பலன் தரும் என்பதுமே என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

அந்த காலங்களில் காசிக்கு சென்று தரிசனம் செய்வது என்பது மிக மிக சிரமமானது. பொதுமக்களுக்கு மட்டுமல்ல, அரசர்களுக்கும் அதுவே. காசிக்கு செல்வதில் சிரமம் இருந்த காரணத்தால் பாண்டியர் அதிவீரராம பாண்டியர் தென்காசி என்று தலத்தை உருவாக்கி அங்கே விஸ்வநாதரை எழுந்தருளச் செய்தார். அதேபோல 16-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியன், காசிக்கு செல்ல விரும்பியதால் ஈசனின் ஆணைப்படி சிவகாசி என்ற தலத்தை உருவாக்கி அங்கு காசி விஸ்வநாதரை எழுந்தருளச் செய்தான் என்கிறது வரலாறு.

காசி பைரவர்
காசி பைரவர்

குமரகுருபரர் காசியில் ஆரம்பித்த திருமடம் காசி மடம் என்றே வழங்கப்பட்டது. பின்னாளில் அவர்கள் வழிவந்த குருமார்கள் திருப்பனந்தாளில் உருவாக்கிய மடமும் இன்றும் காசி மடம் என்றே வழங்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காசி நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தேவாரங்களில் காசி வைப்புத் தலமாக உள்ளது. 'மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி' என்கிறது தேவாரம்.

5000 ஆண்டுகளாகப் போற்றப்பட்டுவரும் காசியின் வளர்ச்சி, புனிதம் எல்லாவற்றிலும் தமிழ், தமிழர்களின் பங்கு மகத்தானது. அதை நினைவு கூறும் விதமாகவே இந்த காசி தமிழ் சங்கமும் நடத்தப்படுகிறது.