கந்தசஷ்டிக் கவசம் - உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அருந்தமிழ்ப் பாமாலை. அதுதான் அனைவரும் அறிந்த கந்தர் சஷ்டி கவசம். இதனைப் பாடியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர்.
இவர் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்த வர். அவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை என்றும், அவர் கணக்கர் வேலை பார்த்தவர் என்றும் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன. வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் தேவராயர் பிறந்தார். இவர் இக்கவசத்தைப் பாடிய பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சென்றார் தேவராயர். மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். அங்குள்ள மண்டபங்களில் உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற்றோர் எனப் பலர் அழுவதும் அரற்றுவதும் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நலம்பெற ஞானபண்டிதன் வழிகாட்ட வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார். பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் துயில் கொண்டார். அன்றிரவு அவரது கனவில் பழநியப்பரமன் பிரசன்னமானார்.
‘‘உன் எண்ணம் ஈடேற அருளினோம். பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!’’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார்.
உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். மகிழ்வுடன் கந்தனைப் போற்றி வணங்கினார். முருகன் திருவருளை வியந்து போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற தோத்திரம்.
சஷ்டிக்கவசம் பாடப்பட்டது எந்த ஊரில்?

தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது. தற்போது அனைவரும் பாராயணம் செய்யும் கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்று கூறுகிறார்கள்.
ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் ‘பழநிமலையின் மீது’ கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்று பாடியுள்ளார். எனவே இக்கவசம் பழநியில் பாடப்பெற்றது என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றையும், இவ்வரிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.
மேலும் ‘எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் (156, 157) மைந்தன் என்மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்! (198, 199) எனைத்தடுத்து ஆட்கொள் எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் ‘வேலவா போற்றி’ (227,228) என்ற வரிகள் மூலம் பழநிப் பரமன் ஆட்கொண்டு இக்கவசம் பாட வைத்ததை உறுதியாகக் கூறலாம். இப்பாமாலையை சிரகிரி எனப்படும் சென்னிமலையில் அரங்கேற்றியதாகச் சிலர் கூறுவர். ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் காணப்பெறவில்லை.
கந்த சஷ்டிக் கவசததைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும்; நவகிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தேவராயர்.

‘சரவணபவ’ எனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார் என்பது சிறப்பம்சம்!