சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

‘குளிர் தேகத்திலே... இட பாகத்திலே...’ - தீபாவளி நோன்பு பிறந்த கதை

தீபாவளி நோன்பு பிறந்த கதை
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி நோன்பு பிறந்த கதை

ஆன்மிகம் - நமசிவாயம், ஓவியம்: ராஜா

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

இந்து தர்மம் விவரிக்கும் அறுவகை வழிபாட்டில் ஒன்று சைவம் எனப்படும் சிவ வழிபாடு. `சிவம்’ என்ற சொல்லுக்கு அன்பு, உயர்வு, கடவுள், பிரம்மம், மகிழ்ச்சி, நன்மை, மங்கலம் ஆகிய பல பொருள்கள் உண்டு. சிவன் எனும் பதம் சிவப்பிலிருந்து வந்திருக்கலாம் என்பது ஆன்றோர் கணிப்பு.

சிவப்பன்- சிவன். ‘செம்மேனி எம்மான்’ என்பது திருமுறைகள் சொல்லும் வாக்கு. ஆகமங்கள் முதலான ஞானநூல்கள் சிவபெரு மானை உருவம், அருவம், அருவுருவம் எனப் பலவகைகளில் வழிபட்டுப் போற்றும்படி வழிகாட்டுகின்றன.

அவ்வகையில் நம் சிந்தை மகிழும் விதம் 64 சிவவடிவங்களின் மேன்மையை விவரிக்கின்றன புராணங்கள். அவற்றில் ஒன்று தீபாவளித் திருநாளை ஒட்டி அனுஷ்டிக்கப்படும் கேதாரீஸ்வர விரதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. அதுவே அர்த்தநாரீஸ்வர திருவடிவம் ஆகும். எம பயம் போக்கும் மூர்த்திகளுள் அர்த்தநாரீஸ்வரரும் ஒருவர் என்கிறது மார்க்கண்டேயர் அருளிய மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்.

‘குளிர் தேகத்திலே... இட பாகத்திலே...’ - தீபாவளி நோன்பு பிறந்த கதை

ஆண்-பெண்; ஒளி- இருள்; தோற்றம்- அழிவு... என்று படைப்பின் மொத்த வடிவமாகத் திகழ்பவர் ஈசன். உலகம் உய்வடைய அவர் அருளிய திருக்கோலங்களில் ஒன்றுதான்... ஒரு பாதி ஆணும் ஒரு பாதி பெண்ணுமாக அமைந்த அர்த்தநாரீஸ்வர வடிவம்.

உலகின் எல்லா உயிர்களிடத்தும் ஆண்- பெண் என்று பாலினம் இரண்டு உண்டு. இவை பிரிந்திருக்கும்போது உலக வளர்ச்சிக்கு வழியில்லை. இரண்டும் ஒன்றுபடுவதில்தான் ஜீவராசிகள் உருவாகின்றன; இதில்தான் படைப்புத் தொழிலே அடங்கியுள்ளது. சிவம் - அமைதிநிலை; சக்தி - ஆற்றல் நிலை. உலகப்பொருள்கள் அனைத்தும் சிவமும் சக்தியும் ஆகும். இந்தத் தத்துவத்தையே, அம்மையப்பனின் அர்த்தநாரீஸ்வர திருவடிவம் விளக்குகிறது.

சரி... ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவத்துக்குப் புராணம் சொல்லும் திருக்கதை என்ன?

தலைசிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் சிவபெருமானைத் தவிர வேறெவரையும் வணங்காதவர். ஈசனும் தேவியும் திருக் கயிலாயத்தில் மகிழ்வுடன் நெருங்கி அமர்ந்திருந்தபோது, அங்கு சென்ற பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து, ஈசனை மட்டுமே வலம் வந்து வழிபட்டார்.

இதனால் கோபம் கொண்ட பார்வதிதேவி, முனிவரின் உடலில் சக்தியின் கூறாக உள்ள உதிரம், மாமிசம் முதலானவற்றை அகற்றினார். ‘இறைவன் ஒருவனே; அவர் சிவபெருமான் மட்டுமே’ என்று தீவிர பக்தியுடன் வாழ்ந்த பிருங்கி முனிவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தன. அவரால் ஓர் அடிகூட நகர முடியவில்லை.

‘குளிர் தேகத்திலே... இட பாகத்திலே...’ - தீபாவளி நோன்பு பிறந்த கதை

பிருங்கியின் சிவபக்தியையும் வைராக்கியத்தையும் உணர்ந்த ஈசன், அவர் நடப்பதற்கும் சிரமப்படுவதைப் பார்த்து மூன்றாவது கால் ஒன்றை வழங்கினாராம் (ஊன்றுகோல் என்றும் சொல்வர்).

பிருங்கி போன்றோர், தம்மை விலக்கி சிவனாரை மட்டும் வழிபட்டுச் செல்ல இனி இடம் கொடுக்கக் கூடாது என்று கருதினாள் பார்வதிதேவி. அதன்பொருட்டு பூலோகம் வந்தாள். கேதாரம் எனும் தலத்தில் - கங்கைக் கரையில் 21 நாள்கள் விரதம் இருந்தும் தவம் செய்தும் வழிபட்டாள். அதன் பயனாக சிவபெருமானின் குளிர்மேனியிலே இடபாகத்தைப் பெற்றாள். இப்படி அம்மையும் அப்பனும் சேர்ந்திருக்கும் கோலமே அர்த்தநாரீஸ்வர வடிவம்.

கேதாரீஸ்வர புராணம், சிவமகா புராணம், மச்ச புராணம் முதலியவற்றில் கேதார கௌரி வரலாறும் கேதாரீஸ்வர விரத மகிமையும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கேதாரத்தில் அம்பிகை மேற்கொண்ட விரதத்துக்குக் கேதாரீஸ்வர விரதம் என்று பெயர். அந்த விரதத்தின் பயனைப் பெற்ற கௌரிதேவி யிடம்... அவளைப் போலவே தாமும் கணவனை விட்டு நீங்காதிருந்து சுகமான இல்லறத்தையும், வளமான வாழ்க்கையையும் வரமாகப் பெறும் பொருட்டு, பெண்கள் வேண்டிக் கொண்டாடும் நோன்பே கேதார கௌரி விதமாகும்.

விரதம் இருப்பது எப்படி?

சுகமான இல்வாழ்வு வேண்டியும், ஒளிமயமான எதிர்காலத்தை வேண்டியும் ஐப்பசி மாத அமாவாசையன்று கௌரி நோன்பு நோற்கின்றனர். பெரும்பாலும் தீபாவளி நாளில் நோற்கப்படுவதால், இது தீபாவளி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. புராணங்கள் இந்த விரதத்தை `கேதார கௌரி நோன்பு’ என்று அழைக்கின்றன.

முற்காலத்தில், கேதார கௌரி விரதத்தின்போது, நீர்நிலைகளின் கரைகளில் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது கோயில் வளாகங்களிலும், வீடுகளிலும் இந்த வழிபாட்டை நிகழ்த்துகிறார்கள்.

பூஜை செய்யும் இடத்தில் ஒரு மேடை அமைத்து, அதன்மீது பூரணக் கும்பத்தை அமைத்து, வெள்ளைத் துணியை அணிவித்து, வெள்ளைக் கற்கள் இழைத்த ஆபரணங்களால் அலங்கரித்து, வெண்மையான மலர்களைச் சூட்ட வேண்டும்.

அந்தக் கௌரி கலசத்தின் மீது 21 முடிச்சுகளைக் கொண்ட நோன்புக் கயிற்றை வைத்துப் பூஜிக்க வேண்டும். வெண்தாமரை மலர்கள் (அ) 21 வகையான வெண் மலர்களால் பூஜிப்பது சிறப்பு. கேதாரத்தில் தேவி 21 நாள்கள் பூஜித்துச் சிவனருள் பெற்றதன் நினைவாக. அவளுக்கு வெற்றிலை பாக்கு, முறுக்கு என்று எல்லாவற்றையும் இருபத்தொன்றாகவே படைக்க வேண்டும்.

அம்பிகையை வழிபட்ட பின்பு, அவளுடைய 21 பெயர்களைக் கூறி, நோன்புக் கயிறுகளை பூஜித்து வந்து மணிக்கட்டில் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அனைவரும் கூடி நீர்நிலைகளுக்குச் சென்று அகல் விளக்குகளை நீரில் விட்டு கௌரி கங்கையை பூஜிக்க வேண்டும். தொடர்ந்து, வீட்டில் குலதெய்வத்தை முறைப்படி பூஜித்து வணங்க வேண்டும்.

அதன்பின்னர், திருமணமான பெண்கள் தம் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் நோன்புக் கயிறுகளைக் கட்டிவிட வேண்டும். திருமணமாகிச் சென்றுள்ள பெண்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து அதிரசமும் நோன்புக் கயிறுகளையும் அனுப்பிவைப்பது மரபு.

இந்த விரதத்தால் கல்யாண வரம் கிடைக்கும், மாங்கல்ய பலம் உண்டாகும்; இல்லத்தில் சுபிட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.

‘குளிர் தேகத்திலே... இட பாகத்திலே...’ - தீபாவளி நோன்பு பிறந்த கதை

`தோடுடைய செவியன்’

கொங்கு நாட்டின் புகழ்பெற்ற தலம் திருச்செங்கோடு எனும் கொடிமாடச் செங்குன்றூர். இங்குள்ள மூலவர், அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்கிறார்; உற்சவ மூர்த்தியும் அப்படியே. அருகில் பிருங்கி முனிவர் உள்ளார்.

இந்தத் தலம் குறித்து, ‘வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ் மார்பில் நல்ல பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி...’ என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

அம்சுத்பேதாகமம், காமிகாகமம், சுப்ரபேதாகமம், காரணாகமம் ஆகியனவும் சில்ப ரத்னம், காச்யபசில்ப சாஸ்திரம், மயமதம், ஸ்ரீதத்வநிதி ஆகிய சிற்ப நூல்களும் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் பற்றிக் குறிப்பிடுகின்றன. திருஞானசம்பந்தர் பாடியருளிய முதல் தேவாரப் பாடலின் முதல் வரியே, ‘தோடுடைய செவியன்’ என்று அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தையே விவரிக்கிறது.

‘பாதியோர் மாதினன்’, ‘உமையொரு பாகர்’ ‘மங்கை தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்துகந்த வடிவம்’ என்கிறார் நாவுக்கரசர். உமையொரு பாகனாக விளங்கும் இந்தக் கோலத்தை, ‘தொன்மைக் கோலம்’ என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர்.