Published:Updated:

கணபதியின் அருளால் கதகளி பிறந்த கதை!

கேரளக் கதைகள் `சாஸ்தா வியாசர்' வி.அரவிந்த்சுப்ரமணியம் ஓவியம்: ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி

கேரளம் என்றதும் எல்லோர் மனதிலும் இடம்பெறும் விஷயங்களில் கதகளியும் ஒன்று. இந்தக் கதகளி ஆட்டம் உருவானதும் ஒரு தெய்வ சங்கல்பத்தினால்தான்! கோழிக்கோடு மன்னர் மானவேதன் கண்ணனின் மீது அதீத பக்தி கொண்டவர். ஒருமுறை இவர் தன் குருவான வில்வமங்கள ஸ்வாமிகளிடம் ``நான் எப்படியேனும் கண்ணனை நேரில் தரிசிக்க வேண்டும்... வழிகாட்டுங்கள்’’ என்று கோரிக்கை வைத்தார்.

கணபதியின் அருளால் 
கதகளி பிறந்த கதை!

றுநாள் மன்னரைச் சந்தித்த வில்வமங்கள ஸ்வாமிகள், “உன் கோரிக்கைக்குக் குருவாயூரப்பன் சம்மதம் தெரிவித்துவிட்டான். கிருஷ்ணன் அனுதினமும் அதிகாலையில் இலஞ்சி மரத்தடி மேடையில் நடனம் ஆட வருவான். நீ என்னுடன் வந்தால் உனக்கு தரிசனம் செய்துவைக்கிறேன். ஆனால் ஒன்று... நீ மறைந்து நின்றுதான் அவனை தரிசிக்கவேண்டும். அவன் அருகில் செல்லவோ, தொடவோ முயற்சி செய்யக்கூடாது’’ என்றார்.

மன்னனும் ஒப்புக்கொண்டார். அடுத்த நாள் இருவரும் இலஞ்சி மரத்தடிக்குச் சென்றனர். குருவருளால் கண்ணன் நடனமாடுவதை ஆனந்தமாக தரிசித்தார் மன்னர். பாலகிருஷ்ணனின் நடனத்தில் மெய்ம்மறந்தவர், தான் மறைந்து நின்றிருந்த இடத்திலிருந்து வெளிப் பட்டு கண்ணனைத் தழுவிக்கொள்ளும் எண்ணத்தில் ஓடோடிச் சென்றார். ஆனால் மறுகணமே கண்ணன் மறைந்துவிட்டான்.

ஆனாலும் பகவானின் தலையிலிருந்து மயிலிறகு ஒன்று தரையில் விழுந்திருப்பதைக் கண்டார் மன்னர். அதை எடுத்து வந்தவர் பொக்கிஷமாகக் கருதி பாதுகாத்து வந்தார்.

நாட்கள் நகர்ந்தன. கிருஷ்ண தரிசனத்தின் வெளிப்பாடாக, புகழ்பெற்ற வங்காள அருட்கவி ஜெயதேவரின் கீத கோவிந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, `கிருஷ்ண கீதம்’ என்ற கலைவடிவம் கோழிக்கோடு மன்னர் மானவேதனால் உருவாக்கப்பட்டது. இதனை `கிருஷ்ணன் ஆட்டம்’ என்று மக்கள் போற்றினர். இதில் கண்ணன் பிறந்தது முதல் அவர் ஸ்வர்காரோஹணம் செல்லும் வரையிலான கதைகள் எட்டு பகுதிகளாகக் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் கலை நிகழ்வு எட்டு நாட்கள் நடத்தப்பட்டது.

கணபதியின் அருளால் 
கதகளி பிறந்த கதை!

கொம்பு, மத்தளம், தாளம் போன்ற கம்பீரமான இசைக்கருவிகள் ஒலிக்க, அலங்காரம் மற்றும் வண்ணமயமான உடைகளுடன் கலைஞர்கள் பங்கேற்க, மிகத் துடிப்பான நிகழ்ச்சியாக உருவான கிருஷ்ணன் ஆட்டம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஒரு முறை, கொட்டாரக்கரையின் தம்புரான் (மன்னர்), கோழிக்கோடு சாமோத்ரி ராஜாவான மானவேதனிடம், தன் பிரதிநிதியை அனுப்பி வைத்தார். கொட்டாரக்கரை ஆலயத்தின் திருவிழாவை ஒட்டி கிருஷ்ணன் ஆட்டம் நடத்த விரும்புவதாகவும், ஆகவே அந்த ஆட்டக் கலைஞர்களின் குழுவை கொட்டாரக்கரைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் ராஜபிரதிநிதி தன் மன்னரின் சார்ப்பாகக் கேட்டுக் கொண்டார்.

ஆனால் மானவேதன், ``இது பகவானின் லீலைகளை வெளிப் படுத்தும் தெய்விக நடனம். இறைவனுக்கு முன்பாகவே இதனை நடத்த முடியும். கிருஷ்ணன் ஆட்டத்தைப் புரிந்து ரசிக்கும் அளவுக்கு தெக்கன் கேரள மக்களுக்கு அறிவோ, ரசனையோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே...’’ என்று ஏளனமாகக் கூறி, குழுவினரை அனுப்ப மறுத்துவிட்டார்.

ராஜப் பிரதிநிதியின் மூலம் இந்த விஷயத்தை அறிந்த கொட்டாரக் கரை தம்புரான் கோபமும் வருத்தமும் அடைந்தார். மணிகண்டே ஸ்வரம் ஆலயத்துக்குச் சென்ற தம்புரான், தன் இஷ்ட தெய்வமான கொட்டாரக்ரை கணபதியின் முன்பு நின்று வணங்கினார்.

“நான் பட்ட அவமானத்தை நீர்தான் தீர்க்கவேண்டும்; இதற்கு ஒரு பதிலடி கொடுக்கவேண்டும்” என்று கணபதியிடம் பிரார்த்தனை செய்து திரும்பினார்.

அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு நாட்டியம் தோன்றியது. பல புராண நிகழ்ச்சிகளை இணைக்கும் கதைகளின் கோவையாக அந்த ஆட்டம் காணப்பட்டது. ஒளிரும் வண்ணக் கலவைகளில் வெவ்வேறு வடிவங்களைக் கண்டார் தம்புரான். நிறைவில் கோட்டாரக்கரை கணபதி காட்சி கொடுத்தார்.

“மகனே! நீ கேட்ட கேள்விக்குப் பதில் கொடுத்துவிட்டேன். மானவேதனும் சிறந்த பக்தனே. அவனைப் பழிவாங்க எண்ணுவது முறையல்ல. உன் அவமானம் நீங்கும் வகையில் நீயும் புதியதொரு கலை வடிவத்தை உருவாக்கு’’ என்று அருள்பாலித்தார்.

தம்புரான் திடுக்கிட்டு விழிக்கவும், ஆலயத்தில் கொட்டாரக்கரை கணபதியின் சந்நிதியில் கணபதி ஹோமத்துக்கான சடங்குகள் தொடங்கவும் சரியாக இருந்தது.

கனவில் கண்ட அனைத்தும் கணபதியின் அருள் கட்டளை என்று புரிந்துகொண்டார் தம்புரான். கனவுக் காட்சி அனுபவத்திலிருந்து, புதிய ஆட்டத்துக்கான புராணக் கதைகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார்.

கொட்டாரக்கரைக் கோயிலுக்கு அருகில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து அந்தக் கலைவடிவத்தை உருவாக்கினார். கனவில் கண்டது போலவே வண்ணமயமான ஆடை வடிவமைப்புகளை உருவாக்கினார்.கிருஷ்ணன் ஆட்டத்துக்குப் போட்டியாக ஒரு கலை வடிவம் உருவானது. அதற்கு ராமன் ஆட்டம் என்று பெயரிட்டார் தம்புரான். இந்தக் கலை கணபதியின் திருவருளால் பெரும் புகழ் பெற்றது. முதல் மேடையேற்றம் விநாயகருக்கு முன்பாக நடந்தது.

கிருஷ்ணன் ஆட்டம் கிருஷ்ணரின் கதை களை அடிப்படையாகக் கொண்டது. ராமன் ஆட்டம் ராமனின் கதையை விவரிக்குமாறு உருவானது. கிருஷ்ணன் ஆட்டம் சம்ஸ் கிருதத்தில் எழுதப்பட்டது. ராமன் ஆட்டம் சம்ஸ்கிருதமும் மலையாளமும் கலந்து மணிப் பிரவாளத்தில் எழுதப்பட்டது. ஆக, எல்லா தரப்பு மக்களையும் சென்றடைந்தது. பின்னர் ராமகதை மட்டுமல்லாமல், மற்ற புராணக் கதைகளையும் இணைத்து எழுதப்பட்டு, அது `ஆட்டக் கதை’ என்று அழைக்கப்பட்டது.

மிக அற்புதமான இந்தப் புதிய கலை வடிவம் மிக விரைவில் கேரளா எங்கும் புகழ்பெற்றது. புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நடனம் - ஆட்டம் (களி) என்பதால், இது கதைகளி - கதகளி எனும் சிறப்புப் பெயரைப் பெற்றது.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு