Published:Updated:

நாராயணத்து ப்ராந்தன்!

நாரணத்து ப்ராந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாரணத்து ப்ராந்தன்

கேரளக் கதைகள் - 19 `சாஸ்தா வியாசர்' வி.அரவிந்த் சுப்ரமணியம்

`சிந்தையற்ற சித்தராயினும் பித்தர் போல திரிந்திடுவார்' என்று சித்த நிலையைக் குறிப்பிட்டு விளக்குவார்கள் பெரியோர்கள். இதுபோன்று வெளித்தோற்றத்தில் பைத்தியக் காரன்போன்று திகழ்ந்த மாபெரும் தத்துவ ஞானி நாரணத்து ப்ராந்தன்.

நாராயணத்து ப்ராந்தன்!

ரருசியின் மகன் இவர். நம்பூதிரி பிராமணர்களின் உட்பிரிவான ‘இளையது’ என்ற பிரிவினரால் வளர்க்கப்பட்டவர். இவர்கள் கோயில்கள் தொடர்பான சடங்குகளைச் செய்யாது, பிதுர்க் காரியங்களை நடத்துவதைக் கடமையாகக் கொண்டவர்கள்.

நாரணத்து ப்ராந்தன் வேதங்களைக் கற்க திருவேகப்புறை எனும் ஊருக்கு வந்தார். அருகே இருந்த ராயிரநெல்லூர் என்ற மலைக்குன்று அவருக்குப் பிடித்தமான வாசஸ்தலம் ஆனது. வேதங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உணர்ந்த நாரணத்து ப்ராந்தன், இந்த மலையில் பல காலம் தவமிருந்தார்.

அதன் பலனாக அவருக்கு தேவியின் தரிசனம் கிடைத்தது. அம்பிகையின் தரிசனம் ஆத்ம தரிசனமன்றோ?! அதனால் அவர் புற உலகில் நாட்டத்தை இழந்து, அகத்துக்குள் ஆனந்தத்தில் லயிக்கலானார்.

வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த நாரணத்து ப்ராந்தன் எந்தத் தொழிலையும் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, கிராமத்துத் தெருக்களில் இலக்கின்றி அலைவதையே விரும்பினார். ஸித்திகள் பல பெற்றிருந்தாலும் உலக வாழ்வில் பற்று இல்லாமல் இருந்தார்.

பைத்தியம் போன்று பல செயல்களைச் செய்ததால் மக்கள் இவரை `ப்ராந்தன்' (பைத்தியம்) என்றே அழைத்தார்கள். இவரது இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை. நாரணத்து இல்லத்தில் வளர்ந்த காரணத்தால், நாரணத்து ப்ராந்தன் என்று அழைக்கப்பட்டார்.

நாராயணத்து ப்ராந்தன்!

ருநாள் கால்போன போக்கில் பிராந்தன் பயணப்பட்டவர், அம்பலப்புழை எனும் ஊரை அடைந்தார். அவ்வூர் ஆலயத்தில் ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது.

அது கிருஷ்ணன் ஆலயம். சந்நிதியில் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ய அஷ்ட பந்தன மருந்து சாற்றி வைத்திருந்தார்கள். ஆனால் எவ்வளவு முயன்றும்... அஷ்டபந்தனம் இளகிப் போவதால் விக்கிரகம் சரிந்தது; பிரதிஷ்டை செய்ய இயலவில்லை.

நாரணத்து ப்ராந்தன் `நான் முயன்று பார்க்கிறேன்' என்று முன்வந்தார். விக்கிரகத் தைச் சரிசெய்ய முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் அது கீழே விழுந்தது.

பார்த்தார் நாரணத்து ப்ராந்தன்... எவரும் எதிர்பாராதவாறு தான் வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலைப் பாக்கு குதப்பலை அஷ்டபந்தனத்தில் துப்பினார். அத்துடன், “அடேய்... இனி உட்காரடா” என்று கூறி விக்கிரகத்தை அமர்த்தினார். எந்தச் சிக்கலும் இல்லாமல் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, `நாரணத்து ப்ராந்தன் சாதாரண பைத்தியம் இல்லை. அவர் இறையம்சம் நிறைந்த ஜீவன் முக்த ஞானி' என்று மக்கள் உணர்ந்தார்கள். ஆனால் அவரோ, எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் தன் போக்கிலேயே இருந்தார்.

நாரணத்து ப்ராந்தனுக்கு ஒரு வழக்கம் இருந்தது. தான் இருக்கும் குன்றின் உச்சிக்கு பெரிய பாறையை உருட்டுக்கொண்டு செல்வார். உச்சையை அடைந்ததும் பாறையைக் கீழே உருட்டிவிடுவார். அது கீழே உருண்டு விழும் காட்சியைக் கண்டு சத்தமாகச் சிரிப்பார். இது அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு.

ஒரு காரியத்தைச் சாதிப்பது மிகவும் கடினம்; அதேநேரம் தோல்வியடைவது ஒன்றும் பெரிதில்லை என்ற தத்துவத்தைத் இந்தச் செயலால் எல்லோருக்கும் உணர்த்தினார் என்பார்கள்.

தினமும் மதியம் வரையிலும் இதுபோன்று ஏதாவது செய்துவிட்டு, அதற்குப்பின்னர் பிக்ஷை எடுப்பார். அக்காலத்தில் மக்கள் பிச்சைக்காரர்களுக்கு அரிசி, காய்கறிகள் போன்ற பொருட்களைக் கொடுப்பார்கள்.

அவ்வாறு பிக்ஷை ஏற்ற பொருள்களைச் சேகரித்து வரும் நாரணத்து ப்ராந்தன்... சூரிய அஸ்தமனப் பொழுதில் எங்கு இருக்கிறாரோ, அந்த இடத்தையே அன்றைய தங்கும் இடமாக மாற்றி, அங்கேயே சமைத்துச் சாப்பிடுவார். அங்கேயே உறங்குவார்.

ரு நாள் சூரிய அஸ்தமன வேளையில் ஒரு சுடுகாட்டை அடைந்தார். அன்றைய தினத்தை அங்கேயே கழிக்க முடிவு செய்தார். சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்த சிதையி லிருந்து சில மரக்கட்டைகளை எடுத்து வந்து விறகாக பயன்படுத்தினார். அங்கேயே சமைத்து உண்டவர், உறங்க ஆரம்பித்தார்.

நள்ளிரவில் அங்கே விசித்திரமான சத்தங்கள்... காட்டுக் கூச்சல்கள், அலறல்கள், கர்ஜனைகள் என மனிதரைப் பயமுறுத்தும் சத்தங்கள் எழுந்தன. நாரணத்து ப்ராந்தன் எழுந்தார். அங்கே கோரமான பேய்களும் பூதங்களும் நிற்பதைக் கண்டார். ஆனால் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் உறங்கத் தொடங்கினார்.

`இப்படியும் ஒருவரா' என்று வியந்த பூதங்களுக்கு பயமும் ஏற்பட்டது. அவை காளி தேவியிடம் சென்று முறையிட்டன.

அது சுடலைப் பத்ரகாளி ஆனந்த நடனம் செய்யும் இடமாகவும் இருந்தது. அவள் ஆயிரம் பேய்கள் சூழ அங்கே வந்தாள். அவளின் கண்கள் நெருப்பை உமிழ்ந்தன, அவளின் கேசம் கருமேகங்களுக்கு ஒப்பாக இருந்தன. செவிகளில் யானைகளே தோடுகளாகத் தொங்கின. கழுத்தில் மண்டை ஓடுகளின் மாலை. ஒரு கரத்தில் புதிதாக வெட்டப்பட்ட தலையுடனும் மறு கரத்தில் வாளை ஏந்தியும் வந்தாள் காளி.

ஆனால் நாரணத்து ப்ராந்தன் அவளை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. பூதங்கள் அவரிடம் சென்று, ``இது நாங்கள் நடனமாடும் இடம். நீ உடனடியாக இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடு'' என்று வலியுறுத்தின.

அவற்றின் பேச்சைச் செவிமடுத்த நாரணத்து ப்ராந்தன் நிதானமாக பதில் சொன்னார்:

``எனக்கும் சில வழக்கமான நடைமுறைகள் உள்ளன. நான் சூரிய அஸ்தமனம் அடையும் நேரத்தில் எங்கு இருக்கிறேனோ, அங்கு தங்குவது அழக்கம். நான் என் நடைமுறையை மாற்ற இயலாது. நீங்கள் வேறு சுடுகாட்டுக்குச் செல்லலாம் அல்லது இங்கேயே நடனமாடலாம். அதேநேரம், உங்கள் நடனத்தில் எனக்கு ஆர்வம் இல்லை, உங்கள் நடனத்தைப் பார்ப்பதற்காக என் தூக்கத்தை இழக்கமாட்டேன்” என்றார்.

அவரின் பதில் பூதங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. ஆனால், காளிதேவியோ மிகவும் ஆனந்தம் கொண்டாள்.

“என்னைப் பார்த்து உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டாள்.

“இல்லையே “ என்றார் ப்ராந்தன்.

``யார் நீ?” எனக் கேட்டாள் அம்பிகை.

“நான் யார் என என்னிடம் கேட்கிறாயா? நான்தான் நீ; நீதான் நான். அங்கே நான் பயங்கரமான காளியின் வடிவில் இருக்கிறேன். இங்கே நீ நாரணத்து ப்ராந்தன் வடிவில் யானைக்கால் நோயுடன் அமர்ந்து இருக்கிறாய்” என்றார்.

காளிதேவி மேலும் மகிழ்ந்தாள். அட்டஹாச மாக சிரித்தாள். “உனக்கு ஏதும் வரம் வேண்டுமா?”

“எதுவும் தேவையில்லை”

``உண்மைதான்... எல்லாம் ஒன்றே என்ற பாவத்தைச் சுவைத்தவருக்கு எவராலும் எதையும் கொடுத்துவிட முடியாது. ஆனாலும் நாராயணத்துப் பிராந்தனைச் சந்தித்துவிட்டு அவருக்கு எதுவும் கொடுக்காமல் போய் விட்டாள் காளி என்று எவரும் சொல்லக்கூடாது அல்லவா. அதற்காகவாவது கேள்...'' என்றாள் காளி.

ப்ராந்தன் யோசித்தார். ஒரு குழந்தை தன் தாயைப் பார்த்து சிரிப்பது போல சிரித்த படியே, யானைக்கால் நோயால் வீங்கிய தனது இடது காலைப் பார்த்தார். பிறகு அன்னை யிடம் கேட்டார்: “அம்மா! என் இடது காலில் உள்ள யானைக்கால் நோயை வலது காலுக்கு மாற்றிவிடு. அதுபோதும்.''

“அப்படியே ஆகட்டும்” என்று கூறிய காளிதேவி அந்தப் பிள்ளையை நினைத்துப் பெருமிதம் கொண்டாள்.

மனம் விட்டு சிரித்தாள்!

பேய்களின் அலறலும் பூதங்களின் ஓலங் களும் நிறைந்திருந்த அந்த இடம், இப்போது காளியின் பேரானந்தச் சிரிப்பால் அதிர்ந்தது. ப்ராந்தனும் சேர்ந்து சிரித்தார்!

(நிறைவுற்றது)