Published:Updated:

கேரளக் கதைகள்-5 - ஆயுர்வேதமும் ஆலத்தியூர் நம்பியும்!

வி.அரவிந்த் சுப்ரமணியம்

பிரீமியம் ஸ்டோரி

கேரளத்தில் ஆயுர்வேதத்தின் பங்கு மிக முக்கியமானது. அதில் கைதேர்ந்தவர்களை அஷ்டவைத்தியர்கள் என்பார்கள். அப்படியான அஷ்டவைத்தியர் குடும்பங் களில் ஆலத்தியூர் நம்பியுடையதும் ஒன்று. நம்பி குடும்பம் ஆயுர்வேதத்தில் சிறப்படைந்த கதை சுவாரஸ்யமானது.

பல ஆண்டுகளுக்கு முன் நம்பி குடும்பத்தில், நாராயணன் என்று ஒருவர் இருந்தார். சிவபக்தரான அவர் தினமும் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று வழிபடுவார்.

ஒரு நாள் சிவாலய வாயிற்புறத்தில், இரண்டு பறவைகள் இவரைப் பார்த்து `கொருக்கே… கொருக்கே’ என்று கத்தின. வடமொழியில் `கொருக்கே’ என்றால் `யார் ஆரோக்கியமா னவர்’ என்று பொருள். இப்படி, தினமும் இவரைக் கண்ட தும் பறவைகள் கத்துவது வாடிக்கை ஆனது. ஒருநாள், பறவைகளுக்குப் பதில் சொல்ல தீர்மானித்தார் நாராயணன். ஆகவே, பதில் கூறினார்...

``அளவான உணவை உண்பவன், சரியான காலத்துக்கு உண்பவன், உணவு உண்ட பிறகு சிறிது தூரமாவது நடப்ப வன், இடது பக்கமாக ஒருக்களித்துப் படுத்து உறங்குபவன், இயற்கை உபாதைகளை அடக்காமல் சரியாகக் கழிப்பவன், முறையான உடலுறவு கொள்பவன் ஆரோக்கியமானவன்’’ என்றார். இந்தப் பதிலில் திருப்தி அடைந்த பறவைகள் எழுந்து பறந்து போயின.

இரண்டு நாள்கள் கழித்து நாராயணன் கோயிலுக்கு வந்தபோது பறவைகளைக் காணவில்லை. மூன்றாவது நாள் பிரம்மசாரிகள் இருவர் ஆயுர்வேதம் படிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் அவரிடம் வந்தார்கள்.

நாராயணன் மகிழ்ந்தார். குருகுல சம்பிரதாயப்படி அவர்கள் இருவரும் தன் இல்லத்திலேயே தங்கிக்கொள்ள அனுமதித்தார். அந்தச் சீடர்களின் பாடமும் கற்றலும் வித்தியாசமாக இருந்தன. அவர்கள் படிக்க வந்தவர்கள் போல் தெரியவில்லை. முதல் நாளிலிருந்தே பற்பல சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தார்கள்.

அந்தச் சந்தேகங்கள் நாராயணனுக்குப் பாடமாக இருந்தது. புதிதாகப் பார்ப்பவர்களுக்குச் சிறுவர்களே குரு போலவும் நாராயணன் சிஷ்யன் போலவும் தோன்றும்.

நாராயணனுக்கும் அவர்கள் மீது தனிப் பாசம் உண்டானது. ஆகவே, அவர்கள் என்ன குறும்பு செய்தாலும் அவர் பொருட்படுத்தவில்லை. சிலநேரம் அவர்களின் குறும்புத் தனம் எல்லை மீறவும் செய்தது!

ஒருநாள், அவர்கள் நாராயணன் வீட்டு முன்வாயிலைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். வெளியில் சென்றிருந்த நாராயணன் திரும்பியபோது வீட்டு வாயில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அப்போதும் அவர் சிறுவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.

நாராயணன்
நாராயணன்

மற்றொரு முறை நாராயணன் தன் தகப்பனாரின் திதிக்காக சமையல் செய்து வைத்திருந்தார். ஆனால் சீடர்களோ அந்த உணவை எடுத்துச் சென்று தெருவில் போகும் பிச்சைக்காரர்களிடம் கொடுத்துவிட்டார்கள்.

அதைக் கண்டவர்கள் பதறியபடி ஓடிவந்து நாராயண னிடம் புகார் சொன்னார்கள். அப்போதும் அவர் சீடர் களைக் கண்டிக்கவில்லை. மீண்டும் சமையல் செய்து தகப்பனாருக்கான திதியைச் செய்து முடித்தார்.

மற்றொருமுறை... அந்தச் சீடர்களுடன் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார் நாராயணன். திடீரென அவர்கள் இருவரும் இவரைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டார்கள். நாராயணன் நீந்தி கரை சேர்ந்தார். அப்போதும் அவர் அவர்களை ஒன்றும் சொல்லவில்லை.

சீடர்கள் மற்றும் நாராயணனின் போக்கும் செயலும் பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தன.

ஒருமுறை நாராயணன் ஊரில் இல்லாத நேரம். நோயாளி ஒருவர் வந்தார். தாள முடியாத தலைவலியோடு வந்தவர், `நான் எந்தநேரம் வேண்டுமானாலும் இறந்துவிடுவேன்’ என்று துடிதுடித்தார்.

குருநாதர் ஊரில் இல்லை என்பதால், சீடர்கள் இருவரும் எவரிடமும் எதுவும் பேசாமல் சில மூலிகைகளைப் பறித்து வந்தார்கள். அந்த நோயாளியுடன் ஓர் அறைக்குள் சென்று உள்ளே தாழிட்டுக் கொண்டார்கள். நாராயணனின் புதல்வர்களோ, சாளரம் வழியே உள்ளே என்ன நடக்கிறது என்று ரகசியமாகக் கண்காணித்தார்கள்.

சீடர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்த மூலிகை களைப் பிழிந்து அதன் சாறினை நோயாளியின் முகத்தில் இட்டார்கள். சிறிது நேரத்தில் எல்லாம், தொப்பியைக் கழற்றுவது போன்று நோயாளியின் தலைமுடியோடு கபாலத்தைக் கழற்றிவிட்டார்கள்.

உள்ளே சில நுண்ணுயிர்க் கிருமிகள் இருப்பதைக் கண்டு அவற்றை அகற்றினார்கள். பின்னர் மீண்டும் மற்றொரு மூலிகைச் சாறு பிழிந்து கபாலத்தைப் பழையபடியே பொருத்திவிட்டார்கள்.

சிறிது நேரத்தில் நோயாளி கண் விழித்து எழுந்தார். அவரது வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. தன் வேலையை முடித்து மதியம் திரும்பி வந்த நாராயணன் உணவருந்த அமர்ந்தார். அப்போதுதான், அவரின் புதல்வர்கள் நடந்த விஷயத்தை அவரிடம் விவரித்தனர். அப்போதும் நாராயணன் பதிலேதும் பேசாமல் புன்னகைத்தார்.

சற்று நேரத்தில் சீடர்கள் இருவரும் வந்தனர்.

“இனி நாங்கள் இங்கு தங்க முடியாது. நாங்கள் புறப்படும் வேளை வந்துவிட்டது. எங்களை இங்கு தங்க வைத்து பல நன்மைகளைச் செய்தீர்கள். பதிலுக்கு நாங்கள் அற்புதமான ஒரு வைத்திய நூலைத் தருகிறோம். அதை ரகசியமாகக் காப்பாற்றி வாருங்கள்’’ என்று கூறி அந்த நுலை நாராயணனிடம் வழங்கினார்கள்.

பின்னர், அவரின் பதிலுக்குக்கூட காத்திருக் காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். நாராயணன் திகைத்தார்.

சாப்பிடாமல் எழுந்து கொண்டவர், அவர்களின் பின் ஓடினார்.

ஓட்டமும் நடையுமாகப் பின்தொடர்ந்தவர், அவர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வர, சிறுவர்கள் பதில் சொல்லிக்கொண்டே முன்னேறினர்.

``நீங்கள் சாமான்ய மனிதர்கள் கிடையாது!”

``ஆம்! நீ கூறுவது சரிதான்.”

``நீங்கள் ஏன் இங்கு தங்கினீர்கள்?”

“நீ நல்ல பக்தன். எனவே, ஆயுர்வேதத்தின் முக்கியமான ரகசியங்களை உனக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக வந்தோம்.”

``என் வீட்டின் வாயிலுக்கு நீங்கள் தீ வைத்தது எதனால்?”

``வீடு முழுவதுமே தீப்பிடித்து எரிய வேண்டும் என்பது விதி. அதிலிருந்து உன்னைக் காக்கவே வாயிலில் மட்டும் நாங்கள் தீ வைத்தோம்.”

``என் தந்தையின் திதிச் சாப்பாட்டினைப் பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்ததன் காரணம் என்ன?”

“அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் உன் முன்னோர்கள். ஏற்கெனவே காலதாமதம் ஆகிக்கொண்டிருந்தது. முன்னோர்களைக் காக்க வைத்தால் பாவம் சம்பவிக்கும் என்பதால், அவர்களுக்கு உணவு கொடுத்து, அவர்களின் சாபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றினோம்.”

``என்னைத் தண்ணீருக்குள் தள்ளி விட்டீர்களே... ஏன்?”

“அது ஓர் அற்புதமான முகூர்த்த வேளை. அப்போது அந்த நதியில் நீராடினால், திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிடைக்கும். அந்தப் புண்ணியமும் அம்பிகையின் அருளும் உனக்குக் கிடைக்க வேண்டும் என்பதால், தண்ணீருக்குள் தள்ளிவிட்டு நீராடச் செய்தோம்!’’

மேற்கொண்டு நாராயணன் கேள்வி கேட்பதற்குள், அவர்கள் இருவரும் அங்கிருந்த ஓர் ஆலமரத்தின் முன் சென்று மறைந்து விட்டார்கள்.

விக்கித்து நின்றார் நாராயணன் நம்பி. அப்போதுதான் அவருக்கு ஓர் உண்மை புரிந்தது.

பறவைகளாக வந்து தன்னிடம் கேள்வி கேட்டதும், சீடர்களாக வந்து தன் இல்லத்தில் தங்கியிருந்து லீலைகள் புரிந்ததும், கற்பது போல் வைத்திய சாஸ்திரத்தைத் தனக்குப் போதித்ததும், தேவலோக வைத்தியர்களான அஸ்வினி இரட்டையர்களே என்பதை அறிந்து சிலிர்த்தார்.

இங்ஙனம், அஸ்வினி தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட காரணத்தினால் எல்லா நோய்களையும் நீக்கும் வல்லமை ஆலத்தூர் நம்பி குடும்பத்திற்கு வந்தது!

- தொடரும்...

கேரளக் கதைகள்-5 - ஆயுர்வேதமும் 
ஆலத்தியூர் நம்பியும்!

பிரதோஷ வேளை!

ரவும் பகலும் சந்திக்கும் காலம் உஷத் காலம். அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் வேளை பிரத்யுஷத் காலம். இரவின் முகம் என்று பொருள். பொழுது சாயும் இந்த நேரத்தின் அத்தேவதை பிரத்யுஷா. `சாயா' என்றும் கூறுவர். குற்றமற்ற இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால், நம் தோஷங்கள், குற்றங்கள் யாவும் நீங்கும்.

- சி.மீனா, கடலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு