Published:Updated:

கணபதியே வருவாய் அருள்வாய்...

திருவண்ணாமலையின் கிரிவலப்பாதையில், முதன்மை ஆலயமாக அமைந்துள்ளது இரட்டைப் பிள்ளையார் கோயில்.

பிரீமியம் ஸ்டோரி

பௌர்ணமி தரிசனம்... மாம்பழம் சமர்ப்பணம்!

புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது நமன சமுத்திரம். இந்த ஊரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் மலையக்கோவில். புதுக்கோட்டையி லிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்துகள், மலையக்கோவில் வழியே செல்லும். இங்கேயுள்ள மலைக்கோயிலில் அருளாட்சி நடத்தி வருகிறார் ஸ்ரீகாளீஸ்வரர்!

கி.பி.7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் இது. மூலவர் ஸ்ரீகாளீஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீதர்மசம்வர்த்தினி. சிவாலயம் என்றாலும் ஸ்ரீவலம்புரி விநாயகர் கோயில் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். அவ்வளவு முக்கியத்துவம் இங்கிருக்கும் பிள்ளையாருக்கு!

பிள்ளையார்
பிள்ளையார்

கொட்டங்கச்சி சித்தர், அருணகிரிநாதர் ஆகியோர் வந்து ஸ்ரீவிநாயகரையும், ஸ்ரீமுருகரையும் போற்றி வழிபட்டதாகக் கூறுகின்றனர். ‘கல்யாண வரம் இன்னும் தகையலையே...’, ‘குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கலியே...’ எனக் கலங்கித் தவிக்கும் பெண்கள், விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, கொழுக்கட்டை, எள் உருண்டை படைத்து, ஐந்து அல்லது ஏழு சங்கடஹர சதுர்த்தி நாள்களில் விரதம் இருந்து வழிபட்டால், விரைவில் திருமண யோகம் கிடைக்கும்; பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழ்வர் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த வலம்புரி விநாயகருக்கு, பௌர்ணமி நாளில் மாங்கனி படைத்து வணங்கினால், இழந்த பதவியைப் பெறலாம்; வியாபாரம் சிறக்கும்; இல்லறத்தில் இனிமை நிறைந்திருக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

இரட்டைப் பிள்ளையார்

திருவண்ணாமலையின் கிரிவலப்பாதையில், முதன்மை ஆலயமாக அமைந்துள்ளது இரட்டைப் பிள்ளையார் கோயில். இரட்டை விநாயகர்களுடன் சேர்ந்து, ஸ்ரீசுப்ரமணியரும் திருக்காட்சி தருகிறார். விநாயகர்களுக்குப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும்போது, ஸ்ரீசுப்ரமணியருக்கும் சேர்த்தே நடைபெறுகின்றன.

இரட்டை விநாயகர்களை தரிசித்து, கிரிவலப் பிரதட்சிணத்தைத் தொடர்ந்தால், நினைத்தது நடக்கும்; மனதுள் நிம்மதியும் சந்தோஷமும் ஊற்றெடுக்கும் என்று சிலாகிக்கின்றனர், பக்தர்கள்!

இரட்டைப் பிள்ளையார்
இரட்டைப் பிள்ளையார்

மாதந்தோறும் பௌர்ணமியின் நான்காம் நாளில், இங்கே கணபதி ஹோமம் நடைபெறுகிறது. இந்த நாளில், இரட்டைப் பிள்ளையார்களை தரிசித்து வணங்குவதுடன், பொரி, கடலை, அவல், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணப் பாக்கியம் கைகூடும்; செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள், கிரிவலப் பாதையில் உள்ள இரட்டை விநாயகரை வணங்கி வழிபடுங்கள்; இரட்டிப்பு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நைவேத்தியப் பிரியர்

தென்னாடுடைய சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதும் பாற்கடல் உறையும் திருமால் அலங்காரப் பிரியர் என்பதும் நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும். அதேபோல், ஷண்மதங்களின் மற்ற தெய்வங்களுக்குப் பிரியமானது என்ன என்று ஞான நூல்கள் விவரிக்கின்றன. அவ்வகையில், அம்பாள் சங்கீதப் பிரியையாம். முருகப்பெருமான் நாமாவளிப்பிரியன். சூரியதேவனோ நமஸ்காரப் பிரியனாம்.

இந்த வரிசையில் விநாயகர் நைவேத்தியப் பிரியராம். அதனால்தான் விநாயகர் சதுர்த்தி தினத்தில் மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், கனிகள், லட்டு, கரும்பு, அவல் பொரி என விதவிதமான நைவேத்தியங்கள் சமர்ப்பித்து விநாயகரை வழிபடுகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு