Published:Updated:

`அனுமன் நம்மைக் காப்பான்!'

ஶ்ரீஅனுமன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீஅனுமன்

சி.மகேஷ்குமார், சென்னை-5

நம் மனம் எப்போதும் பழகியதை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும். புதிய பிரச்னைகளுக்கும், பழைய சவால்களைச் சந்தித்தது போன்றே தீர்வு காண நினைக்கும்.
ஆனால் வாழ்க்கை என்பது எப்போதுமே புதிய புதிய சிக்கல்கள், சவால்களோடு புலப்படுவது. நம் இளைய தலைமுறை அதை எதிர்கொள்ளும் வகையில், அறிவைக் கூர்தீட்டிக்கொண்டு விடைகாணும் பக்குவத்துடன் திகழ்வது அவசியம். கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சியை அழகாக விவரிக்கிறார் கம்பர்.

`அனுமன் நம்மைக் காப்பான்!'

நீண்டான் உடனே சுருங்கா நிமிர்வாள் எயிற்றின்

ஊண்தான் என உற்று ஓர்உயிர்ப்பு உயிராத முன்னா

மீண்டான் அதுகண்டனர் விண்உறைவோர்கள் எம்மை

ஆண்டான்வலன் என்று அலர் தூஉய்நெடிது ஆசி சொன்னார்

சுரசை எனும் அரக்கியை ஏமாற்றி, கடல் கடந்து சென்ற அனுமனின் தீரச் செயலை விவரிக்கும் பாடல் இது.

சமுத்திரத்தைத் தாண்டி சென்று அன்னை சீதை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து வர புறப்படுகிறார் அனுமன். அது அவரால் இயலுமா என்று யோசித்த தேவர்கள், அனுமனின் வலிமையை அறிய விரும்பினார்கள். அதற்கு `சுரசை’ என்பவளின் உதவியை நாடுகிறார்கள்.

சுரசை, அகன்று திறந்த வாயோடு அரக்கியின் உருவம் தரித்தாள். அனுமனை விழுங்க வழிமறித்து நின்றாள். வானத்தைத் தலை முட்டும்படி விசுவரூபம் எடுத்து நின்றாள்.

அனுமனோ, ‘ராமனின் செயல் முடித்து வருவேன். அப்போது என்னை விழுங்கிக் கொள்!’ என்று விண்ணப்பித்தார். சுரசை மறுத்துவிட்டாள். உடனே அனுமன், ‘சரி, உன் கோரமான பெரிய வாயின் வழியே புகுந்து செல்கிறேன். வல்லமை இருந்தால் என்னை விழுங்கிக் கொள்!’ என்கிறார்.

சுரசை, அண்டங்கள் பல புகுந்தாலும் நிரம்பாத அளவுக்குத் தன் வாயை அகலத் திறந்தாள். அனுமனோ, எல்லாத் திசைகளிலும் பரவிய அவளின் வாய் கடுகளவே எனும்படி, வானளாவ வளர்ந்து நின்றார். அதற்கேற்ப சுரசை, மேலும் தன் வாயை அகலப்படுத்தினாள்.

அடுத்த நொடியே, மிகச் சிறிய வண்டின் உருவம் எடுத்து, சுரசை எதிர்பார்க்காத நேரத்தில் அவள் வாயினுள் புகுந்து, அவள் சுவாசிக்கும் முன்னர் காதின் வழியே வெளி வந்தார். தேவர்கள் அசந்துபோனார்கள்.

‘இந்த அனுமன் நம்மைக் காப்பான்’ எனப் பூமாரி பொழிந்தார்கள். அனுமனின் இந்தச் சிந்தனையும் செயல்பாடும் அற்புதமானது அல்லவா?

நம் முன்னோர், மரபுவழியில் மட்டும் சிந்தித்தல் பயன் தராது என்பதைக் கதைகள் - படைப்புகள் மூலம் எடுத்துச்சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அப்படி, நமக்குப் பாடம் தரும் கதை இது. நொடிப் பொழுதில் முடிவெடுக்க வேண்டிய தருணங்களைச் சிந்தனைச் செழுமையுடன் எதிர்கொள்ளும் திறனை வளர்க்க, இதுபோன்ற கதைகள் உதவும். ஆக, புராணங்கள் நம் பிள்ளைகளுக்கான பாடங்களும்கூட!