வீயெஸ்வி
நடனக்கலைஞரும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான ஜாகிர் உசேன், நம்மாழ்வார் பாசுரங்கள் சிலவற்றைத் தேர்வுசெய்து `வகுளாபரணம்' என்ற நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம், நடனமணி ரமா வைத்தியநாதனுக்கு `நாட்டியச் செம்மல்' விருதும், மதுசூதனன் கலைச்செல்வனுக்கு `இலக்கியச் செம்மல்' விருதும் வழங்கினார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``எனக்கு எதுக்கு இலக்கியச் செம்மல் விருது..? சமகாலத்தில் சிவசங்கரிக்குப் பிறகு எழுதப்பட்ட எந்த இலக்கியத்தையும் நான் படித்தது கிடையாது...’’ என்று பின்வாங்கப் பார்த்திருக்கிறார் மதுசூதனன்.
``அது பரவாயில்லை... நூற்றாண்டுகள் கடந்த இலக்கியங்கள் பலவற்றை நீங்கள் வசப்படுத்தியிருக்கிறீர்கள்... விருதுக்கு நீங்கள் பொருத்தமானவர்தான்...’’ என்று சமாதானம் சொல்லி சம்மதிக்கவைத்திருக்கிறார் ஜாகிர் உசேன்.
அன்று விருதுக்குப் பிறகான தெளிவான ஏற்புரையிலும், நடனத்துக்கு ஜாகிர் குழு எடுத்துக் கொண்ட நம்மாழ்வார் பாசுரங்களுக்குப் புரியும்படியான வகையில் தந்த விளக்க உரையிலும் கவனம் ஈர்த்தார் மதுசூதனன்.
இலக்கியச் செம்மலைச் சந்திக்க, அவரது திருவான்மியூர் இல்லம் சென்றேன். நெருங்கிய நண்பரின் தாயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தார் மதுசூதனன். குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடியே வந்தவர்,
`மின்னின் நிலை இல
மண் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து
இறை உன்னுமின் நீரே' என்ற பாசுரத்தைச் சொன்னபடியே அமர்ந்தார். கண்மூடித் திறக்கும் முன் சாலை விபத்தொன்றில் மரித்துவிட்ட நண்பனின் தாயின் பரிதாப முடிவை விவரித்தவர், ``தோன்றிய மறுகணம் மின்னலின் முடிவை அறிந்துவிட முடிகிறது. ஆனால், எப்போது இறப்போம் என்பது தெரியாமலேயே ஆணவம் பிடித்து அலைகிறான் மனிதன்’’ என்று தான் படித்த வியாக்கியானம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார்.
முப்பதுகளின் நடுப்பிராயத்தில் இருப்பவர் மதுசூதனன் கலைச்செல்வன். முகத்தை மறைத்திருக்கும் கறுப்பு தாடி வயதைக் கூட்டுகிறது. கலைச்செல்வன், இவரின் தந்தையின் பெயர். வங்கிப் பணியிலிருந்துவிட்டு ஓய்வுபெற்றவர்.
மதுசூதனின் வீட்டில் ஆடம்பரமில்லாத பூஜை அறையில் ஓவிய மேதை சில்பி வரைந்த தெய்வ ஓவியங்கள் வரிசைப்படுத்தி மாட்டப்பட்டிருக் கின்றன. ஸ்ரீ வித்யா உபாசகர் இவர். சிதம்பரத்தில், மறைந்த நாகராஜ தீட்சிதரிடம் தீட்சை பெற்றவர். சிவ பூஜை செய்கிறார். தினமும் சூரியன் உதயமாகும் முன்னர் பூஜைகளை முடித்துவிடுகிறார்.
``ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோது கோயிலில் காலட்சேபம் கேட்க நேரிட்டது. ஒன்றிவிட்டேன். எங்கள் குடும்பத்தில் தமிழ்ப் பண்டிதர்கள் நிறைய இருந்ததாலோ என்னவோ, பிரபந்தங்கள்மீது எனக்கு ஈடுபாடு அதிகமானது’’ என்கிறார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீரங்கம் அரங்கன் கோயில் பிராகாரத்தில் அரையர் சேவை பார்த்திருக்கிறார். வைணவ இலக்கியத்துக்கு அடிமையானார். பாசுரங்களைத் தேடித் தேடி, திரும்பத் திரும்பப் படித்தார். நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் உள்ளிட்ட பலவும் மனப்பாடம் ஆகின.
இன்னொரு பக்கம், வைணவம் மாதிரியே சைவ இலக்கியத்திலும் கவனம் திருப்பினார் மதுசூதனன். மனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவாநிலை அடையவும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பதிகங்களிடம் தஞ்சம் புகுந்தார். சிவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழ்ந்தார்.

மடை திறந்த வெள்ளமென வெவ்வேறு விஷயங்களைப் பாசுரங்கள் மேற்கோள் காட்டி அலசுகிறார், அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த இந்தக் கட்டடக் கலைப் பட்டதாரி. சத்யபாமாவில் முதுநிலை முடித்து, தங்கப்பதக்கத்துடன் வெளியேறியவர்.
இப்போது, `அரங்கன் ஸ்டூடியோஸ்' என்ற நிறுவனம் ஒன்றைச் சொந்தமாக நடத்திவருகிறார் மதுசூதனன். கோயில் கட்டடக் கலை தொடர்பான வரைபடங்களும், ஆலோசனைகளும் வழங்கிவருகிறார்.
தமிழ்நாடு அறநிலைத்துறையின் சிறப்புத் திருப்பணி கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார். மற்ற உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முழுவதும் `கோயில் விசிட்' செய்து, புனரமைப்புப் பணிகளில் ஆலோசனை வழங்கியும், மேற்பார்வை செய்தும் வருகிறார்.
பெங்களூரிலிருந்து வெளிவரும் `ஸ்வராஜ்யா' மாத இதழில் `Heritage Vertical Senior Curator'-ஆகப் பணியில் உள்ளார். தினமும் அப்டேட் ஆகும் இந்தப் பத்திரிகையின் ஆன்லைன் இதழிலும் பங்களிப்பு செய்துவருகிறார்.

இசைக்கலைஞர் ஒருவரை அருகில் அமர்த்திக்கொண்டு, திவ்யப் பிரபந்த உரைகள் நிகழ்த்துகிறார். அழைத்தால், நாட்டிய நாடகங்களில் சிறு பாத்திரம் ஏற்பதும் உண்டு. அண்மையில், அனிதா ரத்னம் மேடையேற்றிய `நாச்சியார் நெக்ஸ்ட்' நாட்டிய நாடகத்தில் அரையராகவும், குறத்தியாகவும் இரட்டை வேடமேற்றிருக்கிறார்.
மியூசிக் அகாடமியில் வயலின் ஏ.கன்னியாகுமரி `சங்கீத கலாநிதி' பெற்ற வருடம் (2016), காலைநேர மாநாட்டு நிகழ்வுகளில் 40 நிமிட லெக்சர் செய்திருக்கிறார் மதுசூதனன். மட்டுமல்லாமல், அந்த வருட லெக்சர்களில் இவருடையது முதல் பரிசுக்குரியதாகத் தேர்வானது!