
ஆன்மிகச் சிறுகதை
‘அழகான மண்டபம் ஒன்று கட்டி யுள்ளேன். மனம் கலந்து சூதாடி மகிழ்ந்திருப்போம்... வாருங்கள்’ என்று தருமருக்கு அழைப்பு விடுக்க ஏற்பாடு செய்தான் துரியோதனன்.
அந்த அழைப்பு ஓலையில் திருதராஷ்டிரர் கையெழுத்திட்டிருந் தார். அழைப்பை விதுரரிடம் கொடுத்து தருமரிடம் சேர்க்க துரியோதனன் ஏற்பாடு செய்தான்.
அழைப்பு கிடைத்ததும் தருமர் தன் தம்பிகள் ஒவ்வொருவரிடமும் சென்றார். ‘‘திருதராஷ்டிரர் கையெழுத்திட்ட அழைப்பு ஓலையை விதுரர் மூலமாக அனுப்பியுள்ளான் துரியோதனன். புதிய மண்டபத்தைப் பார்க்க நாம் போகலாமா?’’ என்று தம்பிகளிடம் கேட்டார். அவர்கள் எவரும் பதில் கூறவில்லை. கடைசியாக சகாதேவனிடம் சென்றார் தருமர்.
அவர் சொன்ன விஷயத்தைக் கேட்ட சகாதேவன் திரும்பத் திரும்பக் கேட்டார்: ‘‘ஓலையில் கையெழுத்து இட்டது யார்? அனுப்பியது யார்? கொண்டு வந்தது யார்?’’
தருமரும் பொறுமையாக, ‘‘திருதராஷ்டிரர் கையெழுத்திட்டார். துரியோதனன் அனுப்பியுள்ளான். விதுரர் எடுத்து வந்துள்ளார். எதற்காக அதையே திரும்பத் திரும்பக் கேட்கிறாய்?’’ என்று கேட்டார்.
‘‘அண்ணா! கையெழுத்துப் போட்டது ஒருவர், அனுப்பியது ஒருவர், கொண்டு வந்தது மற்றொருவர். ஆக மொத்தம், மூன்று பேர் இந்தச் செயலைச் செய்துள்ளார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் ஒருவன்தான் செய்கிறான். அதோ பாருங்கள்... அவன் அரண்மனை வாசலிலேயே நிற்கிறான்!’’ என்றான் சகாதேவன் நிதானமாக. தருமர் திடுக்கிட்டு, ‘‘யார் அங்கு நிற்பது?’’ என்று கேட்டார்.
‘‘விதி!’’ என்ற சகாதேவன், தொடர்ந்து ‘‘கேடு ஒன்று விளையும் முன்னால் மதி கெடுகிறது. மதி கெட்ட நிலையில் விதி முந்திக் கொண்டு வருகிறது. மண்டபத்தைக் காணவும் ஆனந்தமாக சூதாடிக் களிக்கவும் மதி சொல்வதால், விதி வந்து வாயிலில் நிற்கிறது!’’
‘‘அந்த விதியை வெல்வது எப்படி?’’ என்று பதற்றத் துடன் கேட்டார் தருமர்.
‘‘விதி என்னும் இருட்டுப் பாதையில் இடறி விழாமல் இருக்க, கையில் ‘கடவுள் நம்பிக்கை’ என்ற விளக்கை ஏந்திச் சென்றால் போதும். அந்த அபாயப் பாதையிலிருந்து தப்பிக்கலாம்!’’ என்றார் சகாதேவன்.
ஆனால், நடந்தது என்ன. `சூதாடுவது கண்ணனுக் குத் தெரியக் கூடாது’ என்றல்லவா தருமர் வேண்டிக் கொண்டார். அதனால் விதியே வென்றது!
- எஸ்.புவனா, சென்னை-55