Published:Updated:

பார்த்தனை வீழ்த்திய பாண்டியன்!

மகாபாரதக் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
மகாபாரதக் கதை

மகாபாரதம் - தொடர்ந்து நிகழ்ந்த கதை...

``குந்தியின் மகனே! யாகம் செய்வதற்காக சித்ரா பௌர்ணமியன்று உனக்குத் தீட்சை அளிக்கப்படும்.

எனவே, அஸ்வமேத யாகத் துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்! உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை சாஸ்திரப்படி அனுப்பி வை. அது இந்த உலகத்தைச் சுற்றி வரட்டும்'’ என்றார் வியாசர்.

அதைக் கேட்ட தருமர் கூப்பிய கைகளோடு, ‘‘குருதேவா! யாகக் குதிரையுடன், காவலுக்கு யாரை அனுப்ப வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்’’ என்றார்.

‘‘அர்ஜுனன் போகட்டும். தெய்விக அஸ்திரங்கள், திவ்ய கவசம், உயர்தர வில், எடுக்க எடுக்கக் குறையாத இரு அம்பறாத் தூணிகள் ஆகியவற்றுடன் அர்ஜுனன் குதிரையின் பின்னால் போகட்டும். பீமனும் நகுலனும் தேசத்தைக் காப்பாற்றட்டும். குடும்பத் தேவைகளைச் சகாதேவன் கவனிக்கட்டும்’’ என்று வழிகாட்டினார் வியாசர்.

மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போர் முடிந்து, பரீட்சித்து பிறந்த பின்னர் நடந்த சம்பவம் இது. கண்ணனது கட்டளைப்படி, தருமபுத்திரர் அஸ்வமேத யாகம் செய்யத் தீர்மானித்தபோதுதான் மேற்கூறிய வழி முறை களைச் சொல்லி, வழிகாட்டினார் வியாசர்.

யாக தீட்சைக்கான காலம் வந்தது. சித்ரா பௌர்ணமி அன்று தருமருக்கு முறைப் படி தீட்சை அளிக்கப்பட்டது. உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரை, வியாசர் மூலம் சாஸ்திர முறைப்படி அனுப்பிவைக்கப் பட்டது. வியாசரையும் தருமரையும் வணங்கிய அர்ஜுனன், சந்தோஷத்துடன் ஆயுதபாணியாக யாகக் குதிரையைப் பின்தொடர்ந்தான்.

அவன் கிளம்பும் முன், ‘‘அர்ஜுனா! குருக்ஷேத்திரத்தில் ஏற்கெனவே உறவினர்களை இழந்த அரசர்களை, நீ போராடிக் கொன்று விடாதே. உயிர் வதை செய்யாமல் வென்று வா!’’ என்று கூறி வழியனுப்பினார் தருமர்.

பார்த்தனை வீழ்த்திய பாண்டியன்!

போன இடங்களில் எல்லாம் யாகக் குதிரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தரும புத்திரரின் யாகக் குதிரையை எதிர்த்து வேறு எவர் போரிடுவார்? அதுவும், கண்ணனின் அருள் பெற்ற அர்ஜுனன், குதிரையின் காவலனாக வரும்போது, எங்கிருந்தாவது போர் மூளுமா என்ன? குதிரையைக் கண்ட எல்லோருமே வணங்கி, மரியாதை செய்தனர்.

இருந்தாலும் ஒரு சில இடங்களில், ‘‘ஆஹா... இவன்தான் நம் உறவினர்களைக் கொன்றவன். கண்ணன் இல்லாமல் வந்திருக்கிறான். பிடியுங்கள்... அடியுங்கள்’’ என்று கூறி, போர் செய்தனர். அவர்களையெல்லாம் சுலபத்தில் வென்றுவிட்டு, சிந்து தேசத்தில் நுழைந்தான் அர்ஜுனன்.

சிந்து தேச வீரர்கள், ‘‘நம் அரசர் ஜயத்ரதனைக் கொன்ற பாவி இவன்தான். இவனைச் சும்மா விடக் கூடாது. வாருங்கள்’’ என்று கூவியபடி ஒட்டுமொத்தமாக அர்ஜுனன் மேல் பாய்ந்தனர். அர்ஜுனன் சர்வ சாதாரணமாக அவர்களை எல்லாம் வென்ற பிறகு, ‘இன்னும் யார் வருகிறீர்கள்’ என்பது போலப் பார்த்தான்.

அப்போது, திருதராஷ்டிரனின் பெண்ணான (ஜயத்ரதன் மனைவி) துச்சலை, ஒரு குழந்தை யுடன் அழுதபடி ஓடி வந்தாள்.

அவள், ‘‘அர்ஜுனா! இந்தக் குழந்தையைப் பார். உன்னால் கொல்லப்பட்ட ஜயத்ரதனின் பேரன் இவன். ஏற்கெனவே தந்தையை இழந்த துக்கத்தில் இருந்த இவனின் தகப்பன், இப்போது நீ இங்கு வந்திருப்பதை அறிந்ததும், பயத்திலேயே இறந்துவிட்டான். இந்த நாட்டுக்கு இப்போது அரசனும் இல்லை; இந்தக் குழந்தைக்குத் தந்தையும் இல்லை. உன் சகோதரியான எனது பேச்சைக் கேள். கோபத்தை விடு. போரை நிறுத்து’’ என்று வேண்டினாள். போர் நின்றது.

அர்ஜுனனை வீழ்த்திய அருமை மகன்!

அதன் பிறகு அந்த யாகக் குதிரை, தமிழ் நாட்டில் மதுரைக்கு அருகிலிருந்த மணலூரு புரத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது மதுரை நகர் கடம்ப வனமாக இருந்தது. அருகில் இருந்த மணலூருபுரத்தில் இருந்தபடி, பாண்டிய மன்னர் அரசாண்டு வந்தார். அவர் மகளான சித்ராங்கதையைத் திருமணம் செய்து கொண்டிருந்தான் அர்ஜுனன். அவள் மூலம் பிறந்த ‘பப்ருவாகனன்’ என்ற குழந்தையைப் பாண்டிய மன்னருக்குத் தத்துக் கொடுத்திருந் தான். யாகக் குதிரை அங்கு வந்த நேரத்தில், பப்ருவாகனனே மணலூருபுரத்தை ஆட்சி செய்து வந்தான். யாகக் குதிரை வந்திருக்கும் தகவல், பப்ருவாகனனை எட்டியது.

பார்த்தனை வீழ்த்திய பாண்டியன்!

உடனே அவன், ‘பெரியப்பா நடத்தும் யாகம். அதுவும் யாகக் குதிரைக்குக் காவலாக என் தந்தை வந்திருக்கிறார். அவருக்கும் குதிரைக்கும் சகல மரியாதைகளையும் செய்யவேண்டும்’ என்று மகிழ்ச்சியுடன் வந்து அர்ஜுனனை வணங்கினான். அதைக் கண்டு அர்ஜுனன் மகிழாமல் கோபப்பட்டான்.

`‘பப்ருவாகனா! என் மகனான நீ க்ஷத்திரிய தர்மத்தை மீறலாமா? என்னுடன் சண்டை போட்டிருக்க வேண்டாமா? இப்படி கோழையாக நீ வாழ்வதைவிட இறப்பதே மேல்'’ என்று அவமானப்படுத்தினான். தந்தையின் தகாத வார்த்தைகளைக் கேட்டு, பப்ருவாகனன் தலைகுனிந்து நின்றான்.

அப்போது அங்கு வந்த நாகக் கன்னியான உலூபி, ‘‘மகனே... உன் தந்தையின் மனைவியரில் ஒருத்தியான நான், உனக்குத் தாய் முறை ஆவேன். எனது பேச்சைக் கேள்... உன் தந்தையுடன் போரிடு. அதுவே அவருக்கு மகிழ்ச்சி தரும்’’ என்று பப்ருவாகனனைத் தூண்டிவிட்டாள்.

பப்ருவாகனன் போருக்குத் தயாரானான். குதிரையைப் பழக்கப்படுத்துவதில் தேர்ச்சி பெற்ற சிலரை அழைத்து, ‘‘இந்த யாகக் குதிரை யைப் பிடித்துக் கட்டுங்கள். நடப்பதைப் பார்த்துவிடலாம்’’ என்று ஆணையிட்டான். இதைக் கண்டு மகிழ்ந்த அர்ஜு னன், ‘இவன் சரியான வீரன்தான்’ என்று மகிழ்ந்து மகனுடன் போரிட ஆயத்தமானான்.

கடும் போர் மூண்டது. அர்ஜுனன், தலை சிறந்த அம்புகளை ஏவி, பப்ருவாகனனது தேரில் பறந்த அன்னக்கொடியை அறுத்ததுடன், அவனுடைய தேர்க் குதிரைகளையும் கொன்றான். வேறு வழியின்றி தேரை விட்டு கீழே இறங்கிய பப்ருவாகனன்.

‘‘தந்தையே! இனியும் உங்களை விடப் போவதில்லை. என் அம்புகள் வருகின்றன. தயாராகுங்கள்’’ என்றபடி அர்ஜுனன் மீது அம்பு மாரி பொழிந்தான். மகன் மேல் கொண்ட பாசத்தால், அர்ஜுனன், அந்த அம்புகளைத் தடுத்தானே தவிர, பப்ருவாகனனை அதிகம் துன்புறுத்தவில்லை.

ஆனால், கோபவயப்பட்ட பப்ரு வாகனன், பாம்பைப் போல் சீறி, தீ போல் ஜொலித்து- அழிவை உண் டாக்கும் ஏராளமான அம்புகளை ஏவி, அர்ஜுனனின் மார்பைத் தாக்கினான்.

சக்தி மிகுந்த அந்த அம்புகள், அர்ஜுனனின் மார்பைப் பிளந்தன. எதிர்த் தாக்குதல் நடத்தக்கூட நேரம் இல்லாத அர்ஜுனன் இறந்து கீழே விழுந்தான்.

அதைக் கண்ட பப்ருவாகனன், தந்தையின் முடிவை எண்ணி மயங்கி, தானும் கீழே விழுந்தான். இந்தத் தகவல் மணலூருபுரம் முழுவதும் பரவியது. அர்ஜுனன் மனைவியான சித்ராங்கதை போர்க்களத்துக்கு ஓடி வந்து, கணவனின் உடல் மீது விழுந்து கதறினாள். மற்றொரு மனைவியான நாக கன்னிகை உலூபியோ, எல்லாவற்றையும் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த சித்ராங்கதைக்கு மனது பொறுக்கவில்லை. ‘‘நாக கன்னிகையே! தேவர்களாலும் வெல்ல முடியாத வீரர், இன்று தரையில் கிடக்கிறார் பார். இவர் உனக்கு என்ன தீங்கு செய்தார். பிள்ளையின் மூலம் தந்தையைக் கொன்று, பெரும் பாவம் செய்து விட்டாய். எனினும் சிறிதும் துக்கப்படாமல் இருக்கிறாயே... இதுதான் உனது பதிவிரதா தர்மமா? இவரை உயிருடன் வரச் செய். இல்லையெனில், நானும் உயிர் துறப்பேன்’’ என்று அர்ஜுனன் பக்கத்தில் வந்து படுத்து விட்டாள்.

அதே நேரம் மயக்கம் தெளிந்து எழுந்த பப்ருவாகனனுக்கு, தந்தையின் முடிவும் தாயின் நிலையும் மிகுந்த துயரை உண்டாக்கின. உலூபியின் பக்கம் திரும்பினான்.

‘‘நாக கன்னிகையே! உன் பேச்சைக் கேட்டு, என் தந்தையும் குருவும் ஆனவரைக் கொன்றுவிட்டேன். இதற்குப் பிராயச் சித்தமே கிடையாது. இதோ, நானும் என் தாயுடன் சேர்ந்து உயிர் துறக்கப் போகிறேன்!’’ என்று புலம்பினான்.

அப்போதும் உலூபியிடம் எந்த வித மாற்றமும் தெரியவில்லை. சொல்லி வைத்தாற்போல், அந்த நேரத்தில் கண்ணன் அங்கு வந்தார்.

அவரும், அர்ஜுனன் உடல் அருகில் உட்கார்ந்து அழத் தொடங்கினார். ஆனால், அவர் பார்வை முழுவதும் உலூபியின் மீதே இருந்தது.

பார்த்தனை வீழ்த்திய பாண்டியன்!

அதைப் பார்த்த உலூபி, ‘‘கண்ணா! என்ன இது? அர்ஜுனனுக்கு இப்படி ஆகி விட்டதே என்று மற்றவர் அழலாம். நீங்கள் அழலாமா? அழுகையை நிறுத்துங்கள். நீங்கள் உத்தரவிட்டால், அர்ஜுனனை உயிருடன் எழச் செய்கிறேன்!’’ என்றாள். கண்களாலேயே உத்தரவு தந்தார் கண்ணன். உலூபி தன் மனத்தில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவன மணியை நினைத்தாள்.

உடனே அவள் கையில் வந்து சேர்ந்தது மணி. அதை அர்ஜுனன் மீது வைத்தாள் உலூபி. மறு கணம் தூக்கத்தில் இருந்து எழுபவனைப் போல எழுந்தான் அர்ஜுனன்.

தன்னைச் சுற்றியிருந்த சித்ராங்கதை, கண்ணன் ஆகியோரைப் பார்த்தான். ‘‘இது போர்க்களம். நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்’’ என்றான். பிறகு உலூபியின் பக்கம் திரும்பி, ‘‘உலூபி! என் மகனை விட்டே என்னைக் கொல்லச் செய்து, பிறகு என்னை உயிர் பிழைக்கச் செய்திருக்கிறாயே, ஏன்’’ எனக் கேட்டான்.

‘சொல்லலாமா?’ என்பது போல கண்ணனைப் பார்த்தாள் உலூபி. கண்ணன் தலையசைத்து அனுமதி கொடுத்தார். உலூபி சொல்லத் தொடங்கினாள்:

‘‘நாக கன்னிகையான நான் கங்கையில் இருந்த போது, வசுக்கள் (தட்சனின் மகளான ‘வசு’ என்ப வளுக்குப் பிறந்த புதல்வர்கள் எட்டுப் பேர் வசுக்கள். இவர்களுள் இளையவரான பிரபாசனே பூமியில் பீஷ்மராக வந்து பிறந்தார்.) எல்லோரும் ‘நம்மில் ஒருவரான பீஷ்மரை, அர்ஜுனன் முறை தவறிக் கொன்றுவிட்டான்!’ என்று உங்கள் மீது கோபம் கொண்டு சபித்து விட்டனர்.

இதை அறிந்த என் தந்தை அவர்களிடம் போய் உங்களுக்காக வேண்டினார். அவர்களும் மனமிரங்கி, ‘அர்ஜுனனுக்கு மணலூருபுரத்தில் மகன் ஒருவன் இருக்கிறான். அவன் அர்ஜுனனைப் போர்க்களத்தில் வீழ்த்துவான். அப்போது நீ உன்னிடம் இருக்கும் சஞ்ஜீவன மணியால் அர்ஜுனனைப் பிழைக்கச் செய்!’ என்றார்கள்.

அதனால்தான் நான் இப்படி செய்தேன். இல்லையெனில், நீங்கள் கொடுமையான நரகத்தில் விழுந்து இருப்பீர்கள்’’ என்று சொல்லி முடித்தாள்.

உலூபி சொன்னதை ஆமோதிப்பது போல கண்ணன், ‘‘அர்ஜுனா! காரணம் விளங்கியதா’’ எனக் கேட்டார்.

அர்ஜுனன், ‘‘கண்ணா! நடந்ததைவிடு. இனி நடக்கப் போவதைக் கவனிக்கலாம். எப்போதும் உன்னுடன் இருக்கும் நான், உன் துணை இல்லாமல் தனியே வந்தது தவறு. பிடி பொறுப்பை. இனி, எங்களை வழி நடத்துவது உனது பொறுப்பு’’ என்று கண்ணனை வணங்கினான். உலூபியும் சேர்ந்து வணங்கினாள்.

அதன் பிறகு யாகக் குதிரையின் பயணம் தொடர... கண்ணன் அருளால் அஸ்வமேத யாகம் சிறப்பாக நடைபெற்றது.

(17.4.2007 இதழிலிருந்து...)

சிராத்தத்தில் உணவு மிஞ்சினால்...

தில், தர்மசாஸ்திரத்தின்படியே செயல்பட வேண்டும். சிராத்தம் செய்த ஒருவன், `சிராத்தத்தில் மிஞ்சியதை என்ன செய்வது?' என்று தன் முன்னோரிடம் கேட்டான் (அன்னசேஷை கிம் கிரயதாம்). `பங்காளிகளுடன் பகிர்ந்து கொள்' என்று பதில் வந்தது.

பார்த்தனை வீழ்த்திய பாண்டியன்!

எனவே, சிராத்த உணவை பங்காளி களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். அன்றைய உணவு முன்னோர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. அன்று மிச்சமாகும் உணவு நமக்குரியவை அல்ல; முன்னோருக்கு உரியது. எனவே, அவர்களது அனுமதியைப் பெற்ற பின்னரே நாம் உணவை ஏற்க வேண்டும். மிச்சம் இருப்பதைப் பெற்றுக் கொண்டு கௌரவிக்க வேண்டும். இதையே சாஸ்திரமும் விரும்புகிறது. ஆகவே, சிராத்தத்தில் மிஞ்சிய உணவை முன்னோரது அனுமதியுடன், பங்காளிகளுக்குப் பகிர்ந்து கொடுத்து, முன்னோர்களது அருளைப் பெற வேண்டும்.