மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம்-78

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

அருணோதயமும் அதைத் தொடர்ந்த காலைப் பொழுதும் அன்றைக்கு மிக அற்புதமாய் அமைந்தது பாண்டிய தூதர்களுக்கு. இயல்பையொட்டி, அருணனைத் தொடர்ந்து கீழ்த் திசையில் ஓர்ஆதவனை எதிர்பார்த்தவர்களுக்கு, மூன்று சூரியரின் தரிசனம் கிடைத்தால், அவர்களின் மனோபாவம் எப்படியிருந்திருக்கும்?!

சிவமகுடம்-78

றைகள் போற்றிய அந்த ஊரில் அதிகாலையில் அப்படியான வாய்ப்பு கிடைத்தது கோச்செங்கணுக்கும் இளங்குமரனுக்கும். ஆம்! ஏக காலத்தில் விண்ணில் ஒரு சூரியனையும் மண்ணில் அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரையும் தரிசிக்கும் பேறு கிடைத்தது அவர்களுக்கு.
பாண்டிமாதேவியார் தமது தூதுப்பணிக்கு மிகப் பொருத்தமாகவே அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். `கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ என்பார்கள் பெரியோர்கள். தலைவன் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கும் பட்சத்தில், அவரின் முகக்குறிப்பைக் கொண்டே அந்த விஷயங்களை யூகித்தறிந்து அதற்கேற்ப செயல்படும் மனிதர்கள் இந்த உலகுக்கே பொக்கிஷங்கள் என்பார்கள். தேவியாரின் தூதர்களும் அப்படியே.
அரசமுறை அழைப்பு என்பது மன்னரின் கவனத்துக்குட்பட்டது. அவரோ தீவிர சமணர். அப்படியிருக்க, சிவச்செல்வமான ஞான சம்பந்தப் பெருமானின் மதுரை விஜயத்தைச் சாத்தியப்படுத்துவது என்பது எளிய காரியம் அல்ல. ஆயினும் எப்படியேனும் இதைச் சாதித்தாகவேண்டும்.
பாண்டிமாதேவியாரின் இந்த விருப்பத்தைச் செவ்வனே நிறைவேற்ற, தக்கபடி காரியமாற்றினார்கள் இருவரும். மாமதுரையிலிருந்து பல காத தூரம் பயணித்து, நீர்நாடாகிய சோழமண்டலத்தை ஊடறுத்து, வனப்புறங்களையும் நதிதீரங்களையும் கடந்து திருமறைக்காட்டை அடைந்தார்கள்.
அருணோதயத்தில் எல்லையைத் தொட்டவர்கள் ஆதவக் கிரணங்கள் செங்கிரணங்களைப் பாய்ச்சும் தருணத்தில், திருமடத்தை அடைந்தார்கள். `வளவர்கோன் புதல்வி தென்னவர் தேவியாரும் குலச்சிறையாரும் அறிவுறுத்தியபடி பிள்ளையின் பொற்பாதங்களைப் பணிய வந்துள்ளோம்’ என்று வாயில் அணுக்கர்களிடம் தெரிவித்தார்கள். அணுக்கர்கள் உள்ளே சென்று விவரம் சொல்ல, இருவரையும் உள்ளே அழைத்து வரும்படி அருள்பாலித்தார் திருஞானசம்பந்தர்.
இருவரும் வந்து வணங்கி நிற்க, அவர்களிடம் ``மன்றல் அம் குழலியாராம் மானியார் தமக்கும் மானக்குன்றென நின்ற மெய்ம்மைக் குலச்சிறையார் தமக்கும் நன்றுதானே?’’ என்று கேட்டார் சம்பந்தர்.
``எம்பிரானின் திருவருளால் இருவரும் மிக்க நலம்’’ என்று பதிலுரைத்த கோச்செங்கணும் இளங்குமரனும் பாண்டிய நாட்டின் நிலையை, சமணர்களின் ஆதிக்கத்தை எடுத்தியம்பினர்.

சிவமகுடம்-78

திருஞானசம்பந்தப் பெருமான் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்தார் எனினும், அவர் உள்ளம் `மதுரைக்கு விரைக’ என கட்டளையிடுவதாகவே அவருக்குத் தோன்றியது. தூதுவர்கள் இருவரும் விவரத்தைச் சொன்னபோது பிள்ளையின் அருகிலிருந்த தொண்டர்களுடைய எண்ணமும் கருத்தும்கூட அவ்வண்ணமே இருந்தன.
மிக முக்கியமான காரியம் இது. தீர்க்கமானதொரு முடிவை இறையின் திருமுன்னே அல்லவா எடுக்கவேண்டும். தவிரவும் இதுபோன்ற காரியங்களில் பெரியோர் சொல் கேட்பதும் மரபு அல்லவா? ஆகவே திருநாவுக்கரசர் தங்கியிருக்கும் திருமடத்துக்கு விரைந்தார் சம்பந்தர். அந்த வேளையில்தான் அங்கே பூக்குடலைகளின் மத்தியில் தானும் ஒரு பூ போல் அமர்ந்திருந்து,

காலை வழிபாட்டுக்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தார் அப்பர். அவரை வணங்கி, தூதுவர்கள் விவரித்ததையும் மதுரைக்கு எழுந்தருளப் போகும் தன் எண்ணத்தையும் கூறினார்.
அப்பரும் உடனே பதிலுரைக்கவில்லை. அவருக்குள் ஏதோ தயக்கம். `நடப்பதெல்லாம் நன்மையாகட்டும்’ என்ற பிரார்த்தனையோடு வழிபாட்டை முடித்து வந்தார்.

சீர்காழிப் பிள்ளை மீண்டும் கேட்டார் ``அப்பர் பெருமானே! தங்களுக்கு இதில் உடன்பாடு இல்லையா?’’
``அமண் கையர் வஞ்சனைக்கோர் அளவில்லை. மட்டுமன்றி கோளும் நாளும்கூட உவப்பாக இல்லையே...’’ என்றார் திருநாவுக்கரசர்.

திருஞானசம்பந்தர் புன்னகைத்தார். அவர் அப்பர்
பெருமானிடம் ``நாம் போற்றிப் பரவுவது எம்பெருமானின் கழல்கள் என்றால் நம்மிடம் பழுது அணையாது. சிவத்துணை அடியார்களுக்கு வலிமை சேர்க்கும். ஆகவே, எவ்வித தீங்கும் நம்மை அண்டாது’’ என்றார்.
மேலும் நாளும்கோளும்கூட சிவபக்தர்களுக்கு நன்மையே செய்யும் எனும் விளக்கும் விதமாக `வேயுறு தோளிபங்கன்...’ எனத் தொடங்கி திருப்பதிகமும் பாடியருளினார்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே...’

`மூங்கில் போன்ற தோளினை உடைய உமையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான், சந்திரனையும் கங்கையையும் திருமுடிமேல் தரித்து மகிழ்ந்தவராக, வீணையை மீட்டிக்
கொண்டு என் உள்ளத்தில் புகுந்து குடியிருப் பதால், நாளும் நவகோளும் மிக்க நன்மையையே எமக்கு அளிக்கும்’ எனும்படியாக பதிகத்தின் முதல் பாடல் விளக்கம் சொல்கிறது.
அடுத்தடுத்த பாடல்களில்... மக்களுக்குத் துன்பம் விளைக்கும் மற்ற விஷயங்களையும் பட்டியலிட்டு, அவையும்கூட சிவனடியார்
களுக்கு நல்லனவாகவே அமையும் என்று நம்பிக்கையும் தைரியமும் அளிக்கிறார் திருஞானசம்பந்தர்.

அற்புதமான இந்தப் பதிகத்துக்குக் `கோளறு பதிகம்’ என்று பெயர். ‘எண்சீர் சந்த விருத்தத்தில் பியந்தைக் காந்தாரம் எனும் பண் அமைத்துப் பாடியருளியுள்ளார் திருஞானசம்பந்தர். `பியந்தை’ என்ற சொல்லை, பியல் - தந்தை என இரண்டாகப் பிரித்து பொருள் கொள்ளலாம். `பியல்’ என்றால் முதுகின் பின்புறம் அல்லது பிடரி என்று பொருள். ஆதலால், பியந்தை என்ற சொல் ‘தந்தையின் பிடரி’ என்று பொருள்படும் என விளக்குவார்கள் ஆன்றோர்.

திருஞானசம்பந்தர் குழந்தையாக இருந்தபோது அவரின் தந்தையார் சிவபாத இருதயர் தம் மகனாரின் கால் நோகா வண்ணம் தம் பிடரியில் ஏற்றிச் சுமந்து செல்வார். அப்போது சம்பந்தர் இறை வனைக் காந்தாரப் பண்ணில் பாடினார். பியந்தையில் (தந்தையின் பிடரியில்) இருந்தபடி பாடிய காந்தாரம் பியந்தைக் காந்தாரம் எனப் பெயர் பெற்றதாகச் சொல்வார்கள்.
காலையில் பாடத் தகுந்த எட்டு மங்கலப் பண்களில் ஒன்றாக காந்தாரப் பண்ணைக் குறிப்பிடுகின்றன ஞானநூல்கள். மட்டுமன்றி, இறைவனின் இசைவடிவமே பியந்தைக் காந்தாரம் என்றும் போற்றுவார்கள்.
ஆக, இல்லங்களில் - வழிபாடுகளில் மங்கல நிகழ்வு களில் காந்தாரப் பண்ணில் அமைந்த பாடல்களைப் பாடினால் சகல மங்கலங்களும் பொங்கிப் பெருகும்.

கோளறு பதிகத்தின் கடைக்காப்புப் பாடலில் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துவது என்ன தெரியுமா?
`சொல்மாலையாகிய இந்தப் பதிகத்தை ஓதும் அன்பர்கள் வானில் அரசராகக் கருதப் பெறுவார்கள். இது நமது ஆணை’ என்கிறார்.

வீடுகளில் தினமும் காலை-மாலை இருவேளையும், பயணத்துக்கு முன்பாகவும், நற்காரியங்களைத் தொடங்குமுன்பும், தீராத பிரச்னை களால் நம் மனம் பரிதவிக்கும் நிலையிலும், பிள்ளைகள் படிக்க அமரும் போதும், வழிபாடுகளிலும் இந்தப் பதிகத்தைப் பாடி வணங்குவது மிகவும் சிறப்பு. இதனால் கஷ்டங்கள் அனைத்தும் விலகுவதோடு; சகலவிதமான நன்மைகளும் நமக்கு உண்டாகும்.
பதிகம் அருளப்பட்ட அந்த வேளையில், அதைச் செவிமடுத்த திருநாவுக்கரசர் கண்ணீர் மல்கக் கசிந்துருகி நின்றார். சீர்காழிப் பிள்ளையைப் போற்றி வாழ்த்தினார். அத்துடன் ``நானும் தங்களுடன் மதுரைக்கு வர சித்தமாகவுள்ளேன்’’ என்றும் கூறினார். திருஞானசம்பந்தரோ, ``அப்பர் பெருமானே தாங்கள் சோழநாட்டிலேயே உறைந்திருக்க வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டார்.

திருஞானசம்பந்தர் திருஆலவாய் நகருக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்றன.

சிவமகுடம்-78

லகுக்கே வழிகாட்டும் பைந்தமிழ் அற நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?
உலக இயற்கையை நிலைநிறுத்தி நாட்டில் செலுத்தப்படும் நாடுகாவல் ஆகிய சகடத்தைச் செலுத்தும் தலைவனானவன், மாட்சிமை உடையவனாக இருத்தல் வேண்டும்.
அப்போதுதான் உலக வாழ்வு கேடுகள் ஏதுமின்றி சான்றோர் வகுத்த நெறி வழியே நன்கு நடக்கும். இல்லையெனில், எப்போதும் பகை என்னும் சேற்றில் அழுந்தி அவன் கெடுவதுடன் அவனுடைய குடிமக்களும் துயரைச் சந்திப்பார்கள் என்கின்றன.
அவ்வகையில், அறம் செழித்த மதுரையம்பதி மிக மாட்சிமை பொருந்தியவரைத் தலைவனாகப் பெற்றிருந்தது.
அதனாலன்றோ... உலகின் தொன்மை மிக்க ஒரு பேரரசின் ராஜதானியான அந்த நகரம், பகைவரிடம் இருந்தும் துரோகியரிடம் இருந்தும் ஒரு பொக்கிஷம் போல் பாதுகாக்கப்பட்டது.

அற்புதமான அந்த நகரத்தின் வீதிகள் அல்லங்காடிகளின் விற்பனைச் சந்தடிகளில் மூழ்கியிருக்க, பாண்டிய பேரரசரின் மந்திராலோசனை மண்டபம் பெரும் ரகசியங் களை உடைக்கப் போகும் ஒரு விவாதத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தது!

- மகுடம் சூடுவோம்....