திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

காளியம்மனுக்கு மாவிளக்கு!

காளியம்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
காளியம்மன்

அம்மன் தரிசனம்!

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் கீர்த்தி பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் சில, அங்கு கோயில் கொண்டிருக்கும் தெய்வத்தின் பெயரிலேயே சிறப்புற்றுத் திகழும். அப்படியான ஓர் ஊர்தான், மயிலாடுதுறை அருகேயுள்ள ‘காளி’ கிராமம்.

இங்கே பக்தர்களால் போற்றி வணங்கப் படும் காளியம்மன் பெயராலேயே அழைக்கப் படுகிறது இவ்வூர். இங்கு, ஶ்ரீநிவாஸ பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. ஆகவே, முன்பு சீனிவாசபுரம் என்றே அழைக்கப்பட்டதாம்.

காளியம்மனுக்கு மாவிளக்கு!

ருமுறை வரலாறு காணாத கடும் புயலும், வெள்ளமும் ஏற்பட்டு, கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள் மக்கள். பலருக்கு வைரஸ் காய்ச்சல் தொற்றிக்கொண்டது.

இயற்கை சீற்றம், பிணி படுத்திய பாடு என அல்லல்பட்ட மக்கள் செய்வதறியாது திகைத் தனர். இந்த நிலையில், பெரியவர் ஒருவர் கனவில் தோன்றிய பெருமாள், `உங்களுக்கு உதவ காளியின் திருவுருவம், ஆற்றுத் தீரத்தில் மந்தக்கரையில் காத்திருக்கிறது. அந்தக் காளியைக் கொண்டுவந்து வழிபடுங்கள்; அவள் சகல நோய்களிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் உங்களைக் காப்பாள். உங்களின் அனைத்துக் குறைகளும் நீங்கும்’’ என்று அருள்பாலித்தார்.

கனவில் பெருமாள் இட்ட உத்தரவுப்படியே விடிந்ததும் மந்தக்கரைக்குச் சென்ற ஊர்க் காரர்கள், காளியம்மன் சிலையை எடுத்து வந்து ஊருக்குள் எழுந்தருளச் செய்து, அபிஷேகம் ஆராதனையுடன் வழிபட்டு குறைகள் தீர மனமுருகி வேண்டினர்.

அதன்பிறகு புயலும் வெள்ளம் வடிந்தது; விஷக் காய்ச்சலும் கட்டுக்குள் வந்தது. மனம் மகிழ்ந்த மக்கள், இவையாவும் காளியின் திருவருளால் நடைபெற்றது என்பதால், அன்றுமுதல் தங்கள் ஊருக்கு ‘காளி' என்று பெயரிட்டு அழைத்து வருகிறார்கள் என்கிறது கோயில் குறித்த கதை.

காளியம்மனுக்கு மாவிளக்கு!
காளியம்மனுக்கு மாவிளக்கு!

மற்றொரு கதையும் உண்டு. சிவனார் - பார்வதிதேவியின் திருமண வைபவம், இந்த ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருமணஞ்சேரியில் நடைபெற்றதாக கூறப் படுகிறது. இந்தத் திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க வந்தாள் காளி. அப்போது இவ்வூரில் கிடா தலையுடனும் அரக்க உடலுடனும் பலருக்கும் தாங்க முடியாத துன்பத்தைத் தந்து வந்ததான் மகிஷாசுரன்.

அவனை சம்ஹாரம் செய்ய முடிவெடுத்த காளி, மகிஷாசுரன் முன்பு அழகிய பெண்ணாக உருவெடுத்துக் காட்சி தந்தாளாம். அவளை அடையும் நோக்குடன் மகிஷாசுரன் நெருங்கும் வேளையில், விஸ்வரூபம் எடுத்த காளி, அசுரனை சம்ஹாரம் செய்தாள்.

இதன் காரணமாகவே இவ்வூருக்குக் `காளி' என்ற பெயர் வந்தது என்றும் கூறுகிறார்கள். இந்தக் கிராமத்தின் அருகே மகிஷாசுரனின் தலை விழுந்ததாகச் சொல்லப்படும் ஊர், `கிடாத்தலைமேடு' என்ற பெயரில் திகழ்கிறது.

காளியம்மனுக்கு மாவிளக்கு!
காளியம்மனுக்கு மாவிளக்கு!

காளியம்மன் கோயிலில் பூஜை செய்து வரும் ராமனிடம் பேசினோம்.

“சில ஆண்டுகளுக்குமுன் மாலை வேளையில் எங்கள் வீட்டுக்கு அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென கையில் சூலம் ஏந்தியபடி, சர்வ அலங் காரத்துடன் பெண்ணொருத்தி வந்தாளாம்.

குழந்தைகள் மருண்டு ஓடத் தொடங்கினார் கள். அந்தப் பெண்ணோ, `பயப்படாதீர்கள். நான் காளி வந்திருக்கிறேன். என்னால் எல்லோருக்கும் நல்லதுதான் நடக்கும்; எவருக் கும் கெடுதல் செய்யமாட்டேன்' என்று கூறிவிட்டு மறைந்துபோனாளாம்.

இந்த விவரத்தைக் குழந்தைகள் சொன்ன வேளையில் அங்கிருந்த பெண் ஒருவர் அருள் வந்து ஆடினார். அவர், `குழந்தைகளுடன் விளையாட வந்தது நம்மூர் காளிதான். யாரும் அச்சப்பட வேண்டாம். அம்மன் காட்சி கிடைத்ததே பெரும் பாக்கியம். அவளைத் தினமும் வழிபட்டு நலம் பெறுவோம்' என்று அருள்வாக்கு சொன்னார். அதன்படி, காளி தோன்றிய இடத்திலும் சிறு கோயில் அமைத்து வழிபட்டு வருகிறேன். பக்தர்கள் இங்கும் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

மந்தக்கரை காளியம்மன் கோயிலில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமை களில் திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், குடும்பப் பிரச்னைகள் தீரவும் பக்தர்கள் திரளாக வந்து அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

அம்பாள் அருளால் விரைவில் தங்களின் குறைகள் தீர்ந்த பிறகு மீண்டும் கோயிலுக்கு வந்து, அம்மனுக்குப் பட்டுப் புடவை சமர்ப் பித்து, மாவிளக்கு ஏற்றி வைத்து மனமுருக வழிபட்டுச் செல்கிறார்கள்.

தன்னைத் தேடி வந்து வணங்கும் அன்பர்களின் குறைகளைத் தீர்த்து, அவர்கள் வேண்டும் வரம் அருள்பவள் காளியம்மன். ஒருமுறை தரிசித்தாலே போதும், எவ்வித தீய சக்திகளும் நம்மை அணுகாமல் காத்து நிற்பாள்!'' என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்.

நீங்களும் ஒருமுறை மந்தக்கரை காளியம் மனை தரிசித்து, மகிமைமிகு வாழ்வை வரமாகப் பெற்று வாருங்கள்.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறையிலிருந்து மேற்கில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது `காளி' எனும் கிராமம். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து, சிற்றுந்து, கார் மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு.