திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

`அகத்தை வேரறுப்பாய் அருணாசலா!'

ஶ்ரீரமணர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீரமணர்

- கே.எம்.வேதபுரி

திருவண்ணாமலை... ஆன்மாக்களை வசீகரிக்கும் ஆன்மிக பூமி. இரும்புத் துகள்களை ஈர்க்கும் காந்தம்போல ஒருமுறை சென்று வந்தால் மீண்டும் மீண்டும் தன் வசம் இழுக்கும் அற்புத நிலம். மகான்களும் சித்தர்களும் வாழ்ந்து மறைந்து, மறைந்து வாழ்ந்து அருள் செய்யும் திருத்தலம்.

நானும் திருவண்ணாமலைக்கு அருகிலேயே பல ஆண்டுகள் வாழ்ந்தும் அதன் மகிமை குறித்து எதுவுமே அறிந்திருக்கவில்லை. கார்த்திகை தீபம் என்றால் பெரும் கூட்டம் கூடும் என்பதைத் தவிர வேறும் எதுவும் தெரியாது. சென்னைக்குக் குடிபெயர்ந்து வேலையே வாழ்க்கையாகி விட்டது.

2004-ம் ஆண்டு ஒரு நாள் திருவண்ணாமலையில் வாழ்ந்து சமாதி அடைந்த மகான் ஒருவரைக் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கப் படிக்க என்னுள் பெரும் மாற்றம். அதுவரை எழுந்திராத ஒரு பெரும் ஆன்மிக தாகம் எழுந்தது. அந்த மகான் வாழ்ந்த புண்ணிய பூமியை தரிசிக்கும் ஆர்வம் பிறந்தது. ஒரு கணமும் தாமதியாமல் கிளம்பிவிட்டேன்.

முன்வினைப் பயன் என்பதா.. குருவருள் திருவருள் என்பதா... நான் அந்த மண்ணில் கால் பதித்ததுமே என் மனம் உருகியது. ஈடில்லாப் பேரின்பம் மனதில் தோன்றியது. அந்த சிலிர்ப்பும் மகிழ்ச்சியும் இன்றுவரை தொடர்கிறது. அந்த மகான் வேறு யாரும் இல்லை பகவான் ஶ்ரீரமணர்.

‘நான் யார்’ என்ற கேள்வியோடு திருவண்ணாமலை வந்து 54 ஆண்டுகள் வாழ்ந்து இங்கேயே சமாதி அடைந்தார் ரமண மகரிஷி. இந்த 54 ஆண்டுகால வாழ்க்கையில் அவர் அறியாமை இருள் விலக்கும் அற்புத ஒளியாகத் திகழ்ந்தார். அன்பே அவரின் வேதமாக இருந்தது. தன்னைக் காண வந்த பக்தர்களிடம் ஜாதி மத பொருளாதார ஏற்ற தாழ்வுகள் பார்க்காமல் அனைவரையும் சமமாக பாவித்தார். வேதங்களின் சாரமாக அற்புதமான அருந்தமிழ் நூல்களை எழுதிக் குவித்தார். இவரின் பக்தர்கள் இவரை நாடி வந்து ஆசி பெற்றுச் சென்றனர்.

ஶ்ரீரமணர்
ஶ்ரீரமணர்

மனிதர்கள் மீது மட்டுமல்ல, அணில், குருவி, மயில், குரங்கு, பசு என்று சகல ஜீவன்களும் அவர் மேல் அன்பு பூண்டு ஒழுகின. அவரின் பார்வையில் அவை தம்மை மறந்து அவர் சந்நிதியில் நின்றன. தேடிவரும் உயிர்களுக்கெல்லாம் அன்னமிடும் அவர் அவற்றுக்கும் உணவிட்டு அவை உண்ணும் அழகுபார்த்து ரசிப்பார்.

சகலமும் துறந்து வாழும் ரமணரைத் தேடி அவர் அன்னை வந்து வீட்டுக்கு வந்துவிடும்படி அழைத்தார். கறந்தபால் மீண்டும் மடிபுகுமா... முக்தியின் கதவுகளை அறிந்துவிட்ட ஞானி மீண்டும் இல்லறம் புகுவாரா? மறுத்துவிட்டார். மகனைப் பிரிய விரும்பாத அன்னையும் அங்கேயே தங்கிவிட்டார். பிற்காலத்தில் தாயார் காலமானபோது, சங்கரரும் பட்டினத்தடிகளும்போலவே ரமணரும் தன் தாய்க்கு இறுதிச் சடங்கை செய்து அங்கு மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தை எழுப்பினார்.

சகல பேதங்களையும் கடந்து நின்றவர் ரமண மகரிஷி. அவர் அருளிய அருணாசல அக்ஷரமண மாலை, `அருணாசலமென அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணாசலா’ என வேண்டுகிறது. ஆணவம் கெடுதல் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் அதனின்று மீண்டு வர நாம் முயற்சி செய்வது இல்லை. `நான்’ எனும் அகந்தை கெடும்போது ஆனந்தம் ஸித்திக்கும்.

அன்பர்கள் அனைவருக்கும் `நான் யார்?’ எனும் எளிய தற்சோதனை முறையை அருளியவர் ரமண மகரிஷி. `நான் யார்’ என்பதை அறிய முற்படும் எண்ணம், மற்ற எண்ணங்களை நினைவுகளை எல்லாம் அழித்துவிடும். ஶ்ரீரமண மகரிஷி அற்புதமாய் விளக்குகிறார். `பிணத்தைச் சுடும் தடி எல்லாவற்றையும் சுட்டு எரித்துவிட்டு தானும் இறுதியில் அழிந்துபோகும். அப்படியே, `நான் யார்’ எனும் நினைவும் நிறைவில் முழுமையாய்க் கரைந்துபோய், சாந்தி கிட்டும்’ என்கிறார்.

அன்பர் ஒருவர் ஶ்ரீரமணரிடம் கேட்டார்: ``நாம் நம்மைச் சார்ந்தோரிடம் அன்பும் பரிவும் காட்டுகிறோம். பிறரைக் குற்றம் காண்கிறோம். ஏன் அப்படி?’’

இதற்கு ஶ்ரீரமணர் ``நீ மற்றவனை ஏன் வேறொருவனாக நினைக்கிறாய்? அவனும் நீயும் வேறில்லை; அவன்தான் நீ என்று நினை!’’ என்று பதில் தந்தார்!

ஶ்ரீரமண மகரிஷி கலியுகத்தில் பக்தர்களைக் கரைத்தேற்ற வந்த மகான். அவரின் 71-வது நினைவு நாள், வரும் சித்திரை திங்கள் முதல் தேதி (ஏப்ரல் 14, 2021) அன்று வருகிறது. அந்தத் திருநாளில் ஶ்ரீரமணரைத் தியானித்துத் திருவருளும் குருவருளும் ஒருங்கே பெறுவோம்.

`சகலமும் பகவானின் திருவருள்!’

ரமண மகரிஷியை அண்டியவர்களின் மன அகந்தை அகலும். யாரையேனும் அறியாமை பீடித்தால் அது அவரின் தரிசன மாத்திரத்தி லேயே தீர்ந்துவிடும்.

ரமணாஸ்ரமப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணம். டைனிங்ஹால் மற்றும் கிச்சன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்தப் பொறுப்பு அண்ணாமலை சுவாமி என்பவரிடம் ஒப்படைக் கப்பட்டிருந்தது. அண்ணாமலை சுவாமிக்கு சில நாள்களாக மனதில் ஒரு எண்ணம். தானே முன்னின்று அனைத்தும் நடத்துகிறோம் என்றும் தான் இல்லை என்றால் அவை நடைபெறாது என்னும் எண்ணமும் தோன்றியது.

ஒருநாள் பகவான் கட்டடவேலையைப் பார்ப்பதற்காக அங்கு வந்தார். பகவான் அருகில் வந்து அண்ணாமலை சுவாமியைப் பார்த்த போது அண்ணாமலை சுவாமி தன் உடம்பிலிருந்து கறுப்பான உருவம் ஒன்று வெளியேறி மறைவதைக் கண்டார். அடுத்த கணம் அவர் மனம் தெளிவடைந்தது. சகலமும் தன்னால் என்று நினைத்த சிந்தை தற்போது மாறி சகலமும் பகவான் திருவருள் என்று எண்ணத் தொடங்கியது.

சூரியனின் கதிர்கள் பட்டதும் பனி மறைவதுபோலத் தன்னுள் இருந்த அகந்தை இருள் மறைந்தது எப்படி... இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி என்று தனக்குள் எண்ணிக்கொண்டார். அப்போது பகவான் புன்னகைத்தபடியே, ‘நல்ல பூசாரியைப் பார்த்தா ஆடுறபேய் ஓடும்’ என்று சொல்லி நகர்ந்தார்.