Published:Updated:

சாய் ஆலிங்கனம் ஆத்ம சங்கமம்!

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
சாய் பாபா

திருவள்ளுவன்

சாய் ஆலிங்கனம் ஆத்ம சங்கமம்!

திருவள்ளுவன்

Published:Updated:
சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
சாய் பாபா

ஜென்ம ஜென்மமாய், எல்லா பிறப்பும் பிறந்து, பிரபஞ்ச நதிப்பிரவாகத்தில் மிதந்து வரும் ஒரு சராசரி மனிதன் நான். ‘மாயை’யின் அடிமையாகிக்கொண்டதே கோலமாக வீழ்ந்து கிடந்தவன். மனம் கறை படிந்து, குருட்டு வாழ்க்கையைக் கை பற்றியவன்.

ஆனால், எப்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ அறியேன். ஒரு தீபாவளித் திருநாளில் ஒரு புனித வேளையில் ஆத்ம தீபம் ஏற்றிட ஒரு தேவதை தோன்றினாள். மனத்தைத் தொட்டு, என்னுள் ஒன்றாகி, என் கரம்பிடித்தாள். ஒரு நீண்ட ஆன்மிகப் பயணத்துக்கு என்னை அழைத்துப் போக, அவள் அச்சாரம் போட்ட கதையைத் தான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1969 - தஞ்சை மாவட்டம், மாயவரத்துக்கு அருகில் அழகு குலுங்கும் ஒரு கிராமம். ஊரைச் சுற்றிப் பச்சைநிறக் கம்பளம் விரித்து மா, பலா, தென்னம் தோப்புகளாய் நிறைந்து நிற்கும் வளப்பமான பூமி. அல்லி, தாமரை மலர்கள் பூத்து, நீர் நிரம்பி வழியும் செழுமையானப் பிரதேசம். கிராமத்தை ஒட்டித் தென்திசையில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் காவிரித்தாய் மரம், செடி கொடிகளை அன்போடு அணைத்து அமுதூட்டி மகிழ்வாள்.

சாய் ஆலிங்கனம் ஆத்ம சங்கமம்!

அவ்வமுதை, ஆனந்தமாகப் பருகிய செடி, கொடி, மரங்களும், சரக்கொன்றை, பாரிஜாதம், மகிழும், மல்லிகை, முல்லை, நந்தியாவட்டை இன்னபிற, தம் மலர்களை நதிப்பிரவாகத்தில் நெகிழவிட்டு, காவிரி அன்னைக்கு அர்ப்பணம் செய்து ஆரவாரிக்கும். நதியின் ஒருபுறம், பிரமாண்ட அரச மரத்தடியில் பிள்ளையார் அருள்பாலித்துக் கொண்டிருப்பார். அந்தக் கோயிலின் எதிரே மண் பாதையில் இறங்கி நடந்தால், மனத்தைக் கொள்ளையடிக்கும் ஓர் அக்ரஹாரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அக்ரஹாரத்தின் விடியற்காலை பொழுதே இந்த பூமிப் பந்துக்கே விடியலாய் அமைவதுபோல அழகூட்டும். அதிகாலை நேரத்திலேயே அக்ரஹாரம் குளித்தெழும். ஆங்காங்கே அவரவர் பூஜை அறைகளில் ஒலிக்கும் சுப்ரபாதம் முதலான துதிப் பாடல்களின் சத்தம் விண்வெளியை நோக்கிப் பயணிக்கும்.

மாலை வேளையில் வீடுகள் தோறும் கை விளக்கேற்றி அழகூட்டும். ஏற்றி வைக்கப்படும் தசாங்கம், சாம்பிராணி, ஊதுபத்திகளின் நறுமணக் கலவை ஊருக்கே சுகந்தத்தைப் பரப்பும். அந்த அந்தி வேளையில் குடும்பம் குடும்பமாக வழிபாடு செய்திட தன்னிடம் நாடி வரும் ஊர் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் அளித்திடப் பிள்ளையார் ஆயத்தம் ஆவார். வீடுகளிலேயே பறித்த மலர்களை வாழை நாரில் லாகவமாகக் கோர்த்து பூமாலைகள் தொடுத்துப் பிள்ளையாருக்குச் சூட்டி, அடியார்களின் மனங்களில் மணம் கூட்டுவார்கள். வீட்டுக்கதைகளைப் பேசி அளவளாவ அடியார்களுக்குத் தாராளமாகத் தன் சந்நிதானத்தில் இடமளித்து பிள்ளையார் மகிழ்ந்து போவார்.

சாய் ஆலிங்கனம் ஆத்ம சங்கமம்!

இரவில், வெகு விரைவாகவே எல்லா வீடுகளும் நித்ரா தேவியின் அன்பு அரவணைப்பில் மயங்கி மெள்ள அமைதியில் ஆழ்ந்து தூங்க ஆரம்பிக்கும். அங்குமிங்கு மாக மொட்டு அவிழும் மலர்கள், நறுமணம் பரப்பி இனிமையாக்கும். இந்த தெய்விகச் சூழ்நிலையில்தான், ஒரு தீபாவளித் திருநாளில் விடிந்தும் விடியாத ப்ரம்ம முகூர்த்த வேளையில் அவள் என் முன் தோன்றினாள்.

அன்று அதிகாலையிலேயே எழுந்து, குளித்து விட்டுப் பிள்ளையாரை தரிசனம் செய்ய எண்ணி, படிகளில் இறங்கி, தெருவில் காலடி எடுத்து வைத்தேன். அக்ரஹாரமும் அப்போதுதான் குளித்து எழுகிறது. மலர்ந்த மலர்களின் நறுமணத்தைத்தவிர வேறெந்தச் சலனமுமே இல்லை. எங்கும் பரிபூரண அமைதி. அந்த நேரத்தில்தான் அவள்... என் மனசுக்கு உகந்த புது பட்டாடை உடுத்தி, சர்வ மங்கலமாய், சர்வ லக்ஷணமாய் அழகுப் பெட்டகமாய், தாழை, மல்லிகை, முல்லை மலர்களைச் சூடி, மெல்லிய இடையில் ஒட்டியாணம் மின்னக் கால்களில் கொலுசு எழுப்பும் கிண்கிணி ஓசை கட்டியங்கூற, களங்கமிலாக் கருணையை நயனங்களில் தேக்கி, பவளச் செவ்வாயில் புன்முறுவல் வழிந்தோட, தகதகவென ஒளிரும் சொர்ண விக்கிரகமாய் ஒய்யார நடைபோட்டு வருகிறாள்.

அவள் சற்றே என் அருகில் வந்தவுடன் ஒரு கனம் நடை தளர்த்தினாள். மந்தகாச புன்னகை யோடு, உலகளாவிய அன்பை விழிகளில் தேக்கி, தன்பார்வையால் என் பார்வையில் கலந்து என்னை நயன ஆலிங்கனம் செய்து கொண்டாள்.

சாய் ஆலிங்கனம் ஆத்ம சங்கமம்!

இந்த தெய்விக சங்கமத்தில் மயங்கிப் போனேன். தடுமாறித் தவித்தேன். யார் இவள்? இப்படி ஜொலிக்கும் ஒரு மோகனாங்கியை இதுவரை தரிசித்தது இல்லையே! பாலாம்பிகையாய், அகிலாண்டேஸ்வரியாய், அவயாம்பிகையாய், வனதுர்கையாய், அபிராமியாய், லலிதாம்பிகையாய்! ஆஹா என்ன திவ்ய தரிசனம்! இது கனவா அல்லது நினைவா... இப்படி அமானுஷ்ய விடியற்காலையில் எனக்கே எனக்கான அவளது திருக்கோல தரிசனம் ஏன்? இதோ, அவள் நயன பாஷை பேசி எதையோ உணர்த்த வருகிறாளோ! இதென்ன மாயம்! அவளது அன்பு அணைப்பில் முழுவதுமாய் மூழ்கிப் போனேனோ! அவள் என்னிடம் என்ன சொல்ல வருகிறாள் எனப் புலப்படவே இல்லையே! என்ன செய்ய?

ஒரே ஒரு நொடிதான். அதுவே யுகயுகமாய்த் தோன்றியது. சட்டென அவளது அருட்பார்வையை விலக்கி நடக்க ஆரம்பித்தாள். அவளது வண்ணத் திருவடிகள் மெள்ள மெள்ள என் பார்வையில் இருந்த மறைய ஆரம்பித்தது. காற்றிலே பறந்து வந்த இந்த குயில், என் மனக்கூட்டில் கூடு கட்டிக் குடும்பம் நடத்த வந்தாளோ... தன் விழிகளில் பிரேம தீபம் ஏற்றி என் மனதை வதம் செய்ய வந்தாளோ... ஆன்மிக அரிச்சுவடியை எனக்குப் பாடம் சொல்ல வந்தாளோ... மீண்டும் மீண்டும் அவளது தரிசனம் எனக்குக் கிட்டியது !

ஆம், நான் கொடுத்து வைத்தவன்தான். மறுநாளே அவள் கனவில் வந்தாள். மௌன மொழி பேசி, புன்முறுவல் காட்டி மறைந்து போனாள். என் மனம் அவளது மொழிக்கு வடிவம் வரைந்தது.

‘நல்லா இருந்ததா? பிடிச்சியிருந்ததா?’ என அவளது மௌன மொழியின் விளக்க உரை எனக்கு அன்று தெரிவிக்கப்படவில்லை.

இவளைத்தான் ஹயக்ரீவர், ஸ்ரீலலிதாம்பிகையாய் பாவித்து பாதாதி கேசமாய் வர்ணித்து சகஸ்ர நாமாவளி புஷ்பாஞ்சலியை அவள் காலடியில் சமர்ப்பித்தாரோ...

எனக்கே எனக்கான இந்த திவ்ய தரிசனம் ஏன்? இந்த மகா புண்ணிய புருஷர்கள் எங்கே... நானெங்கே! நாயினும் கடையேன். மாயையில் சிக்கி ஞானம் பெற முடியாத அற்ப ஜீவி.

இவள்தான் எனக்கு ஸ்ரீபாலாம்பிகையாய், தரிசனம் தந்து விழிகளாலேயே பேசாமல் பேசி, தீட்சை அளித்து ஆத்ம விசாரணைக்கு அடிக்கோடிட்டுச் சென்றாளோ இந்தப் பிரபஞ்ச மூங்கில் காட்டில், தெய்விக ராகம் இசைக்கும் புல்லாங்குழலாக என்னை செதுக்கி எடுக்க வந்தாளோ...

அவள் அண்டமெல்லாம் பூத்துக்குலுங்கும் மாதரசி, நானோ மனிதப்பிறவி தரிசனம் தந்து என்னுடன் கலந்து ஞான ஒளியை ஏற்றிவைத்து, தூய்மைப்படுத்த வந்தாலும், அந்த தீபத்தை அக்கணமே அணைத்துப் போட்டவன் நான்.

பெற்ற தாயை விடப் பசியறிந்து அவள் என்னிடம் நீட்டும் ‘ஞானப்பாலை’ பருகத் தெரியாத பாவி நான்.

காலம் விரைந்தோடியது. என் கனவுலகில் ராஜ்யப் பரிபாலனம் செய்ய வந்த அவளைப் பற்றிய நினைவுகளும் வினாக்களும் என் மனத்தில் விதைக்கப்பட்டு, முளைத்து எழுந்து, செழித்து வளர்ந்து மரமாகி உயர்ந்து நின்றன.

2001 வரை பேசா மடந்தையாக இருந்தவள் ஞான மார்க்கத்தின் அரிச்சுவடியை எனக்கு அறிமுகப்படுத்த வந்தாள். ஒரு நாள் கனவிலே வந்து நினைவிலே நின்றாள். புன்னகைத்துச் சொல்லுகிறாள்.

‘தொலைந்தது கிடைக்க, தொலைந்த இடத்தில்தானே தேட வேண்டும். எங்கெங்கோ வெளியில் தேடித்தேடி அலைகிறாயே! உன்னுள்ளும் தேடிப் பாரேன்’ என்று சொல்லி நினைவை விட்டகன்றாள். அவளைத்தேடித் தேடி அலைந்த எனக்கு அவளே குருவாகிப் போனாள். என் வீட்டு மொட்டை மாடியே, அவள் அமர்ந்து எனக்கு ஞானபோதனை செய்யும் போதி மரமாயிற்று. நடுநிசியைக் கடந்த நேரங்களே அவளைத் தேடும் நேரமாக ஆயிற்று. உலகமே உறங்கும் அந்த அமானுஷ்ய வேளையில் நானும் அவளும் மட்டுமே தனித்துவிடப்பட்டிருந்தோம். அவளிடம் மையல் கொண்டேன். கொஞ்சினேன். ஊடல் கொண்டேன். என்னிடம் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் போக்குக் காட்டி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி, ஓடி ஒளிந்து கொள்கிறாள். ஆனால், அவள் மட்டுமே என மன பொந்தில் என்னைக் காதலித்து வாசம் செய்து, முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து குடும்பம் நடத்த வேண்டும் என பேராசைக் கொண்டேன். என்னை மயக்கும் அந்த மனமோகினியை நான் மயக்க ஆரம்பித்தேன்.

ஆம்... மெள்ள மெள்ள அவளைத் தியானிக்க ஆரம்பித்தேன். அவளும் என்னிடம் வயப்பட ஆரம்பித்தான். என் உடலை, பெயரை, மனத்தை, ஏன் என்னையே மறந்தேன்.

இந்த காலகட்டத்தில்தான் ‘நான்’ இறந்து போய், அப்போதே புதிதாய் பிறக்க ஆரம்பித்தேன். இதையெல்லாம் தாண்டி ஒரு சுபயோக வேளையில் இத்தனை வருடங்களாக என்னுடன் கனவுலகில் பயணித்தவந்த அந்தப் பரமேஸ்வரி, தான் போட்ட வேஷங்களை கலைத்துப் போட்டாள்.

அவளே சாயி ஆனாள். ஒரு புனித நாளில் என்னுள் குடியேறினார். “நான் உன்னை ஜென்ம ஜென்மங்களாய் தொடர்ந்து வருகிறேன். இனியும் வருவேன். உன் அன்பிற்குரிய பணியாளராக உன் ஆத்மாவின் கறைகளை துடைத்துக்கொண்டே இருப்பேன். ஒரு குருவாக உன் வாழ்க்கையை நல்வழிப்படுத்துவேன்.”

“நீ என்னை விரும்புவதைவிட நான் உன்னை எவ்வளவு அதிகம் விரும்புகிறேன்” என்றெல்லாம் கூறி என்னை ஆறுதல் சொல்லி அணைத்துக் கொள்கிறார்.

இப்போதெல்லாம் நான் அவரை பூரணமாக என் மனத்தில் வரித்துக் கொண்டேன். என் மனக்கோயிலில், அவர் தினமும் துணியை ஏற்றி வைத்து என் ஆத்மாவை ஆகுதி செய்து ஒளிரச் செய்கிறார். என் மனதில் அவ்வப்போது தோன்றும் காமம், கோபம், பொறாமை, அகங்காரம், சுயநலம், பண பதவி வெறி அசுரர்களை எல்லாம் விரட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரால், இனிவரும் ஜென்மங்களில் நான் பிறந்து பிறந்து புடம் போடப்படுவேன். இனிவரும் பிறப்புகளின் உரிமை எனக்கல்ல. அவை சாயிக்கே சமர்ப்பணம். அவரே என் எஜமானர். அன்று நடந்த குருக்ஷேத்ரப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியவர் ஸ்ரீகிருஷ்ண பகவான்.

இன்று என்னுள் நடக்கும் வாழ்க்கைப் போரில் தேரோட்டிக் கொண்டிருப்பவரே சத்குண சாயி.

அவரே என் தாய், தந்தை, குரு, தோழன்... இன்னும் சொல்லப் போனால் அவரே என்னுயிர் தோழி. என்னுள் அடங்கும் அர்த்தநாரீஸ்வரர்.

இனிவரும் ஜென்மங்களில் என்றோ ஒரு நாள் என்னுள் ‘நான்’ மறையும். அந்நாளே ஒரு பொன்னாளாகிப் போகும். அந்த நாளிலேதான் ‘நீயே நானாக நானே நீயாக, ஓர் உயிராய், சங்கமித்துக் கொள்வோம்.’

கருணைக்கடலே, சாயியே... கருணை புரியுங்கள்.

'அகம் பிரம்மாஸ்மி; அதுவே நான், நானே அது'

சாய் ஆலிங்கனம் ஆத்ம சங்கமம்!

இந்த தெய்விக சங்கமத்தில் மயங்கிப் போனேன். தடுமாறித் தவித்தேன். யார் இவள்? இப்படி ஜொலிக்கும் ஒரு மோகனாங்கியை இதுவரை தரிசித்தது இல்லையே!

சாய் ஆலிங்கனம் ஆத்ம சங்கமம்!

சாயி பக்தர்கள் அவசியம் கேட்கவேண்டிய உள்ளம் உருகச் செய்யும் அற்புதத் துதிப்பாடல்! வீடியோ வடிவில் காண...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism