Published:Updated:

எல்லாம் சிவமென நின்றாய் போற்றி!

ஆன்மிகச் சிறுகதை: ச.பா.முத்துகுமார்

பிரீமியம் ஸ்டோரி

பாண்டிய மன்னர் ஒருவர் தீவிர சிவபக்தர். ஒருநாள்கூட, சிவபூஜை செய்யாமல் அவர் உணவு உட்கொண்டதே இல்லை.ஒருநாள் வேட்டையாட வனத்துக்குச் சென்றார். அங்கு மான் ஒன்றை வேட்டையாட துரத்தினார். ஆனால் அவரால் மானைப் பிடிக்கமுடியவில்லை. ஓடி வந்த களைப்பில் மூச்சுவாங்க தவித்த மன்னரை, உணவு எடுத்துக் கொள்ளும்படி தெரிவித்தனர் அமைச்சர்கள்.

எல்லாம் சிவமென 
நின்றாய் போற்றி!

ஆனால் மன்னரோ, `சிவ பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன்’ என உறுதியுடன் தெரிவித்து விட்டார். களைப்பு மற்றும் பசியின் காரணமாக சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். செய்வதறியாது அமைச்சர்கள் தவிக்க, தளபதிக்குச் சட்டென்று ஓர் யோசனை தோன்றியது.

மரத் துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஊன்றினார். ``அரசே எழுந்திருங்கள்... அதோ பாருங்கள், சுயம்புலிங்கமாகக் காட்சி தருகிறார் சிவனார்'’ என்று கூவினார். சட்டென்று விழித்த மன்னர், அந்த மரத்துண்டை பரவசத்துடன் தரிசித்து, லிங்கமூர்த்தம் என்று நினைத்து பூஜைகள் செய்தார். பிறகு திருப்தியுடன் சாப்பிட்டார்.

பின்னர் அவர் சகஜ நிலைக்கு வந்ததும்தான் தான் பூஜித்து வழிபட்டது மரத்துண்டு என்பதை அறிந்தார். ஆனாலும் `மரத் துண்டாக இருந்தால் என்ன... என் சிவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான்' என்று கருதினார். ``இவ்வளவு காலமும் நான் செய்த பூஜைகள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்யப்பட்டதாக நீ கருதினால், இதோ... இந்த மரத்துண்டில் எழுந்தருளி, காட்சி தருவாயா!’ என்று இறைவனைப் பிரார்த்தித்தார். பிரார்த்தனை பலித்தது.

மரத்துண்டில் லிங்க மூர்த்தமாகக் காட்சி தந்தார் இறைவன். அந்த இடத்தில் அழகிய ஆலயம் கட்டப்பட்டது. மண்ணில் ஆப்பு அடித்ததுபோல் அழுத்தமாக நின்ற மரத் துண்டு லிங்க மூர்த்தமாகக் காட்சியளித்த இடம்... மதுரையம்பதியில் `ஆப்பனூர்' என்று அழைக்கப்பட்டது. இறைவனின் திருநாமம்-திருவாப்புடையார் ஆனது.

ஐப்பசி அன்னாபிஷேகம் இங்கே விசேஷம். அந்த நாளில் பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சார்த்துவர். தொடர்ந்து அலங்காரம் நிகழும். கருகு மணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என அணிந்தபடி காட்சி தரும் சிவலிங்கத் திருமேனியை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்!

வழிபாடுகள் முடிந்ததும் வழங்கப்படும் அன்னாபிஷேக சாதத்தைச் சாப்பிட்டால், பிணிகள் நீங்கும்; வியாபாரம், விளைச்சல் பெரு கும்; குபேர யோகம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு