Published:Updated:

ஆறு மனமே ஆறு! - ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

ம்மா...

ஆன்மிக உலகம் அவரை வாழும் மகான் சத்குரு மாதா அமிர்தானந்தமயி என்றழைக்கிறது. உலகம் முழுவதுமுள்ள அவருடைய பக்தர்களோ `அம்மா... அம்மா...’ என்று அன்பையும், பாசத்தையும் கலந்தூட்டும் தாயாகப் போற்றி வணங்குகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் அம்மாவின் சென்னை வருகை என்றாலே கோலாகலக் கொண்டாட்டம்தான். சக்தி விகடன் குழு மூன்று ஆண்டு களாகத் தொடர்ந்து அம்மாவைச் சந்தித்து ஆசி பெற்று வந்தது. இந்த ஆண்டு (ஜனவரியில்) சந்திப்பின்போது, அம்மாவிடம் “சக்தி விகடன் வாசகர்களுக்காக அன்பும் ஆன்மிகமும் திளைக்கும் பிரத்யேக தொடர் கட்டுரை வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டோம்.

ஏற்கெனவே சக்தி விகடனில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற அம்மாவின் `இங்கே நிம்மதி’ தொடர் குறித்தும் நினைவூட்டினோம். மிகவும் மகிழ்ந்தார். “சக்தி விகடனுக்கா... சரி” என்றார். ஆனந்தம் அடைந்தோம்.

அதோடு முடியவில்லை... சென்னை கிளை மடத்தின் வைத்தி அவர்கள், எங்களை சுவாமி ராமகிருஷ்ணானந்தபுரி அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார். ‘வல்லிக்காவு மடத்தில் அம்மாவைச் சந்தித்து விளக்கமாகப் பேசுங்கள், அம்மா வின் பூரண சம்மதம் வேண்டும். நாங்கள் வேண்டிய ஒத்துழைப்பைத் தருகிறோம்” என்றார்.

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

அப்புறம் என்ன... நல்லதொரு சுப தினத்தில் கேரள மாநிலம், வல்லிக்காவு நோக்கிப் புறப்பட்டோம் (அந்தப் பயணம் பிப்ரவரி மாதத்தில் அமைந்தது).

அமிர்தபுரி நான்கு புறமும் நீர் சூழ்ந்த தீவு. ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் அரபிக் கடல், மறுபுறம் ஆரவாரம் இல்லாத கழிமுகம். அத்துடன் கொச்சி நீர் வழி. கழிமுகப் பரப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலப்பரப்பின் நடுவே எளிமையான, அமைதியே உருவாகத் திகழ்கிறது ‘அமிர்தபுரி’ மையம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காளி கோயில், தியான மண்டபம், களரி எனும் பூஜைப் பகுதி, மிகப்பெரிய சத்சங்க மண்டபம், வானளாவிய கட்டடங்கள், சிறு சிறு குடியிருப்புகள், அலுவலகங்களோடு திகழ்கிறது அமிர்தபுரி. அனுதினமும் தியானம், கேள்வி - பதில் நேரம், பஜன், ஆயிரமாயிரம் பக்தர்களுக்கு அம்மாவின் திருக்கரங்களால் அன்ன பிரசாத விநியோகம், அம்மாவின் தரிசனம் என சத்சங்கம் களை கட்டுகிறது. அவ்வளவு கூட்டம் இருந்தும் பிரசாதத் தட்டின் உரசல் ஒலிகூட கேட்கவில்லை. அப்படியோர் அமைதி!

யாருக்கும் வம்பு பேசத் தோன்றுவ தில்லை. இதை செய், அதைச் செய்யாதே என்ற அறிவிப்புகள் ஏதும் கிடையாது. ஆனால், எல்லாமே முறைப்படி நடக்கின்றன. யாரும் யாரையும் கண்காணிப்பதில்லை. அவ்வளவு சுயக் கட்டுப்பாடு. குப்பை கூளம்... மூச்! படுசுத்தமான வளாகம். இவை அனைத்தும் நம்மை வியக்க வைத்தன. அம்மாவின் உத்தரவுபடி, பிரம்மசாரி ஆத்மபிரகாச சைதன்யா மற்றும் அவருடைய சகாக்களின் உபசரிப்பும் உதவியும் அருமையோ அருமை.

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

அன்ன பிரசாதத்துக்குப் பின்னர் தரிசனம், மறு நாள் விரிவான சந்திப்பு என எங்களுக்கு உத்தரவு ஆனது.

தரிசித்தோம். புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்குமா... போட்டோகிராபரை அம்மாவிடம் நேரடியாக விண்ணப்பிக்கச் சொன்னார்கள். விண்ணப்பித்தார். அம்மாவின் ஒற்றை வரி அனுமதி கிடைத்தது... ‘நல்லா எடுத்துக்கோ’!

அப்புறம் என்ன... வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிவிட்டார் நம் போட்டோகிராபர். மறுநாள் பொது தரிசன தினம். பாதுகாப்புச் சோதனைகள் எல்லாம் முடிந்து, மேடைக்குச் சென்று அமர்ந்தோம்.

அங்கு அம்மாவின் தெய்விகப் பரிமாணங்கள் அனைத்தையும் தரிசிக்க முடிந்தது. ஒரு சிறு குழந்தை, தான் பெற்ற பரிசைக் காட்டி மகிழும்போது உச்சிமோந்து அன்பை வெளிப்படுத்திய ஒரு தாயாகப் பார்க்க முடிந்தது. அவரின் திருக்கரங்களால் பட்டம்பெற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ‘நீங்கள் படித்த படிப்பு இங்குள்ள மக்களுக்குப் பயன்பட வேண்டும்’ என்று வாழ்வியல் பாடம் எடுத்தபோது ஆசானாகப் பார்க்க முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பக்தன் தன் தோளில் சாய்ந்து அவனுடைய குறைகளைக் கொட்டும்போது, கட்டி அணைத்து `நீ என் செல்லப் பிள்ளை... செல்லப் பிள்ளை... எல்லாம் சரியாகிவிடும்...’ எனப் பரிவுடன் தேற்றும் ஒரு தாயாக ஆறுதல் கூறுகிறார். வெகு தொலைவிலிருந்து தரிசனத்துக்கு வந்திருந்த முதியவரைப் பார்த்து ‘இந்த வயதில் இது தேவையா? இருக்கும் இடத்திலிருந்தே தியானம் செய்யக் கூடாதா?’ என்று குருவாகப் பரிவு காட்டுகிறார்.

40 வயது பிரம்மசாரி... சுமார் 10 வருடங் களாக ஆசிரமத்தில் பணிபுரிபவராம், அவரைக்காண்பித்து ‘வெளிநாட்டில் நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம் - வருமானம். அங்கிருந்தே உன்னால் முடிந்ததைச் செய் என்றால் கேட்க மாட்டேன் என்கிறான்’ என்று ஒரு தலைவியாக அக்கறை காட்டுகிறார்.

பல்கலைக்கழகம், மடத்து நிர்வாகிகள், சீடர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், சேவகர்கள் என அனைவரிடமும், மேடையிலேயே எளிமையாக உரையாடி வழிகாட்டுகிறார். இவை அனைத்தையும் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

இது இப்படி என்றால், “தரிசனம் என்பது குறிப்பிட்ட நேரக் கணக்கு இல்லை. எத்தனை ஆயிரம் பேர் காத்திருந்தாலும் ,அனைவரையும் தனித்தனியாக சந்திக்கும் வரை தரிசனம் தொடரும். விடிய விடிய அமர வேண்டும் என்றாலும் சரி... அம்மா சளைக்காமல் அதே இடத்தில் அமர்ந்து, உறக்கம் இன்றி... சில நேரம் உணவுமின்றி தரிசனம் அளிப்பார்” என்று பக்தர்கள் பூரிப்புடன் சொல்லும்போது, நாம் வியப்பின் உச்சிக்கே சென்றோம்.

ஆறு மனமே ஆறு! - ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

இப்படி பரிபூரணமான தன்னலமற்ற அன்பும், சமூக அக்கறையும் கலந்த ஆன்மிகம் எனும் அமிர்தம் நிறைந்திருக்க... அந்த இடத்துக்கு `அமிர்தபுரி’ எனும் திருப்பெயர் அமைந்தது மிகப் பொருத்தமே.

சுவாமி அம்ருதாத்மானந்த புரியுடன் உரையாடும்போது “20 வயது இளைஞனாக முதன்முறை என் பெற்றோருடன் இங்கு வந்தேன். வசதி, பணம், நண்பர்கள் என எதற்கும் குறைவில்லை. சொர்க்க வாழ்க்கைதான் எனக்கு. ஆனால், என்ன நடந்ததென்று தெரியவில்லை... அம்மா அழைப்பது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி வந்துவிட்டேன். சுத்தமான அன்பும் ஞானமும் கிடைக்கும் என்றால், சொர்க்கபுரி வேண்டாம்; இந்த அமிர்தபுரியே போதாதா?” என்றார்.

அடுத்தது எங்கள் முறை. அம்மாவின் அருகில் அமரவைத்தார்கள். நீண்ட உரையாடல்... தொடர் பற்றி விரிவாக எடுத்துரைத்தோம். எங்களிடம் பேசிக் கொண்டே பக்தர்களின் தரிசனமும் தொடர்ந்தது.

தொடருடன் வாசகர்களின் சந்தேகங் களுக்கும் பதிலளித்து வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினோம். மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். முத்தாய்ப்பாக நிகழ்ந்த ஒன்று... “ரயிலைப் பிடிக்க நேரமாகிவிட்டது” என்று நினைவூட்டினார் சுவாமி ராமகிருஷ்ணானந்தபுரி.

சட்டென்று திரும்பிய அம்மா, “நேரமாகி விட்டதா? பத்திரமாக காரில் ஸ்டேஷனுக்கு அனுப்பிவையுங்கள்” என்றார். என்ன அக்கறை பாருங்கள்!

`தாயினும் சாலப்பரிந்து...’ என்பார்களே அப்படியான அன்பையும் பரிவையும் அனுபவித்து மகிழ்ந்தோம். அவ்வகையில் நாங்கள் பெரும் பேறுபெற்றவர்களே.

இதோ, வாசகர்களுக்கும் அந்தப் பேறு வாய்க்கப்போகிறது. வரும் இதழ்களில் பெண்மை, யுவ யுவதிகள் பற்றிய சிந்தனை, ஆன்மிகம், கல்வி, சுத்தம் - சுகாதாரம், புது யுகம்... என சகலமும் குறித்த அம்மாவின் அருள் பிரவாகம் ஆரம்பமாகிறது.

கருணை மழையில் திளைப்போம். அருள் திவலைகளை ஏற்று மனத்தில் மகிழ்ச்சிப் பூக்களை மலரச்செய்வோம்.

- மனம் மகிழும்...

தெய்வத்தின் கட்டளை!

புராண, இதிகாச காலங்களில் கடவுள் தம்முடைய அவதாரங்களால் மக்களுக்கு வழிகாட்டினார். கலியுகத்தில் கடவுள் நேராக வருவதில்லை. இனம், மதம், காரணம் அனைத்தும் கடந்த அவதாரப் புருஷர்களைத் தோற்றுவிக்கிறார்.

அவ்வகையில், பாரதத்தின் தென்கோடியில் கடவுளின் தேசமான கேரள மாநிலத்தில், சமூக எல்லைகளைக் கடந்து சீர்திருத்த நோக்கத்துடன் தோன்றிய ஜகத்குரு நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் ஆகியோரின் வரிசையில் தோன்றியவர் தான் உலகமே `அம்மா... அம்மா...’ என அழைத்து உருகும் ஜகத்குரு ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி.

பறயகடவு, கேரளாவில் கொல்லம் மாவட்டத்தின் கடலோர மீன்பிடி கிராமம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல், உப்பளங்கள், மீன்பிடி படகுகள். கொச்சி நீர் வழி, சுனாமியைக் கண்டு மீண்ட கிராமம் என்று இதன் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்தக் கிராமத்தில் கி.பி. 1953-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ல் சுகுணானந்தர் - தமயந்தி தம்பதியின் மகளாக அவதரித்த இவருக்குச் சுதாமணி என்று பெயரிட்டனர். குழந்தை அழாமல் சிரித்த முகத்துடன் பிறந்தது. பிறக்கும்போது பத்மாசன வடிவில் கால்கள், திவ்ய முத்திரை தாங்கிய கை விரல்கள், மருத்துவர்களுக்கே வியப்பூட்டிய கருநீல நிற மேனி, ஆறு மாதத்தில் குழந்தை எழுந்து நடந்து பேசத் தொடங்கியது... அனைத்தையும் கண்ட தாயாரும், மற்றவரும் சுதாமணியைத் தெய்விகக் குழந்தையாகவே கருதினர். ஆம், அதுவே தெய்வத்தின் கட்டளையும் ஆகும்!