Published:Updated:

ஆறு மனமே ஆறு - 15 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

கணவன்-மனைவி உறவில் அவ்வப்போது பரஸ்பரம் இருவருக்குமே கருத்துவேறுபாடு ஏற்படுவது சகஜம்தான். ஆனாலும் பல தருணங்களில், மனிதர்கள் சிலர் ஆரம்பத்திலிருந்தே நிலைதாழ்ந்து நடந்துகொள்கிறார்கள். அதுபற்றிப் பார்ப்போம்.

திருமணப் பதிவு அலுவலகத்தில் திருமணம் ஒன்று பதிவு செய்யப் பட்டது. முதலில் மணமகன் தன் பெயரைப் பதிவு செய்து, கையெழுத் திட்டு உறுதிசெய்தான். அடுத்து மணமகளின் முறை. அவளும் அப்படியே பதிவு செய்தாள்.

அவள் கையெழுத்திட்டு முடித்ததும்தான் தாமதம் கணவன் கூச்சலிட ஆரம்பித்தான். “முடிந்தது... எல்லாமே முடிந்தது... வேறு வழியே இல்லை... இப்போதே எனக்கு விவாகரத்து வேண்டும்'' என்று கூச்சலிட்டான். அனைவருக்கும் அதிர்ச்சி. அவன் கூச்சலிட்டதற்கான காரணம் புரியாமல் தவித்தனர். பதிவாளர் மணமகனிடம் கேட்டார்:

“இப்போதுதான் திருமணம் முடிந்தது. அதற்குள் விவாகரத்தா... என்ன ஆயிற்று?”

“என்ன ஆயிற்றா... அவளுடைய கையெழுத்தைப் பாருங்கள். என் கையெழுத்தைவிட எவ்வளவு பெரிதாக இருக்கிறது. அது எப்படி இருக்கலாம். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அவள், ‘தான்தான் பெரியவள்’ என்று உணர்த்துகிறாள்... அது ஒருபோதும் நடக்காது. நடக்கவும் விடமாட்டேன்...” என்று குதித்தான்!

ஆறு மனமே ஆறு - 15 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

இப்படித்தான் சிலர்... வாழ்வின் முதலடியை எடுத்து வைக்கும் போதே, உண்மைத்தன்மையை புரிந்துகொள்ள தலைப்படாமல், வெட்கப்படும்படி நடந்துகொள்கிறார்கள். பித்தம் தலைக்கேறினால் கபாலம் வெடித்துவிடும் என்பார்கள். ஆணாக இருந்தாலும் சரி... பெண்ணாக இருந்தாலும் சரி... இந்த விஷயத்தில் ஒன்றே.

நிலைமை இப்படியிருக்க, காரணத்தை அடுத்தவர் மீதும் சூழலின் மீதும் சுமத்துவார்கள். சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்... `இருவரும் வேலைக்குப் போகிறோம். குழந்தைகள் சொல்பேச்சே கேட்பதில்லை' என்று குறைப்பட்டுக்கொள்வார்கள்.

அனுபவசாலிகளின் துணை, குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுவது, நல்லது-கெட்டதை சொல்லிக்கொடுப்பது... இந்த விஷயங்கள் குழந்தைகளைச் செம்மைப்படுத்தும்!

குழந்தைகள்... குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பலவித மான கொடுமைகள், வன்முறைகளைப் பற்றி நிறைய விஷயங்களைப் பார்க்கப் போகிறோம். இருந்தாலும் இப்போது `குழந்தைகள் சொல் பேச்சு கேட்பதில்லை' என்ற குற்றச்சாட்டுக்கு மட்டும் பதில் சொல்லி விடுகிறேன்.

குழந்தைகள் சொல் பேச்சு கேட்பதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் சரியாக நடந்து கொள் கிறீர்களா? அதை முதலில் சொல்லுங்கள்.

உங்களைப் பெற்றவர்கள் அல்லது அனுபவ சாலிகள் சொல்பவற்றில் சிலவற்றையாவது கேட்டதுண்டா... உங்களுடைய இன்றைய வாழ்க்கை முறை, வருமானம், நிதிச் சுதந்திரம் போன்றவை சில பல நல்ல பண்புகளை மறக்கச் செய்துவிட்டன என்றே சொல்ல வேண்டும் மக்களே!

அது அப்படியே இருக்கட்டும்… இன்றைய நிலையைப் பார்ப்போம்!

குழந்தை அழத்தொடங்கும்போதே, ஏதோ ஒரு கார்ட்டூனை செல்போனில் ஓடவிட்டு, குழந்தையின் கையில் கொடுத்துவிடுகிறீர்கள். உங்கள் அரட்டையோ அல்லது அவரவர் வேலையோ அப்படியே தொடர்கிறது. `என் குழந்தை தானாகவே வீடியோகாலில் பேசு கிறது' என்றெல்லாம் வீண் பெருமை வேறு! ஆக, உங்களுக்கு எல்லாமே ‘செல்’ பேச்சுதான்... அப்புறம் குழந்தை எப்படி உங்கள் சொல்பேச்சைக் கேட்கும்?

ஆறு மனமே ஆறு - 15 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

அதுமட்டுமா?

குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, உங்கள் நிம்மதி பறிபோய்விடக்கூடாது என்பதற்காக, ஆளை விட்டால் போதுமென்று, அவர்கள் கேட்டவற்றுடன் கேட்காதவற்றையும் கூடுத லாக வாங்கிக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.

நிலைமையை அவர்களிடம் பேசிப் புரிய வைப்பதற்கு மனமும் இல்லை பொறுமையும் இல்லை. ஆகவே, குழந்தைகள் அடம்பிடிப்பது அதிகமாகிறது. ஆனால் `குழந்தைகள் சொல் பேச்சே கேட்பதில்லை' என்ற நம் புலம்பல் தொடர்கிறது.

அருளுரையில் நான் பலமுறை சொன்னதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

அந்தக் காலத்தில் தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என உறவுப்பட்டாளமே இருக்கும். அதைத்தான் கூட்டுக் குடும்பம் என்பர்.

நிலவைக் காட்டி சோறு ஊட்டுவார்கள், பாட்டுப் பாடி, நன்னெறிக் கதைகளைச் சொல்லித் தூங்கவைப்பார்கள்.

குழந்தைகள் அழும்போது தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்வார்கள்; படி தாண்டும்போது உட்காரவைத்துப் புரியவைப்பார்கள். அதனால் குழந்தைகள் நல்ல சிந்தனையுடன் சமர்த்தாக வளர்ந்தார்கள்.

அதேபோல், முன்பெல்லாம் குடும்பத்தில் ஒருவர் திட்டினால், சமாதானப்படுத்த மற்றவர் இருப்பர். அண்ணன், தம்பி, தங்கை என ஒரு பட்டாளமே இருக்கும். விளையாடு வதற்கு இடத்துக்கும், சக குழந்தைகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை.

இன்று நிலைமை எப்படி என்று யோசித்துப் பாருங்களேன் மக்களே!

குடும்ப உறவுகள், வேலை இந்த இரண்டை யும் சமமாக பாவித்துக் கையாள முடிவதில்லை எனும் பரிதாப நிலை!

ஊதியம் அதிகம் வேண்டும், அதற்காக வீட்டை மறந்து கடுமை யாக உழைக்கவேண்டும். வீட்டுக்கு வந்தால் குடும்பத்தைச் சமாளித் தாக வேண்டும். முடிய வில்லை எனும்போது கோபம் - வெறுப்பு மிகுந்து விடுகின்றன.

உதவிக்கு ஆள் வேண்டும், ஆனால் உறவு களைப் பிடிக்காது; அவர்கள் கூடாது. பின் எப்படிச் சமாளிக்க முடியும்? கணவன் - மனைவி இருவருக்கு இடையிலும் சண்டை - சச்சரவுகளே மிஞ்சும்.

அத்துடன், ‘நியூக்ளியர் ஃபேமிலி’ என்கிற ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற கொள்கை யும் சேர்ந்துகொள்கிறது. பல குடும்பங்களில் ‘நமக்கு ஒருவர்’ என்றும் ஆகிவிடுகிறது. சில குடும்பங்களில் அதுவும் இல்லை.

தீப்பெட்டி போல் வீடு; விளையாடுவதற்கு அண்ணன் தம்பி கிடையாது; அக்கம் பக்கம் விளையாடப் போகத் தடை; விளையாடுவதற்கு இடமும் கிடையாது; விளையாட்டு காட்டுவதற்குத் தாத்தா பாட்டி உறவுகளும் கிடையாது. இப்படி இருக்கும்போது குழந்தை களின் வளர்ச்சி எப்படி முழுமையாகும்?

சரி அதற்கு என்ன செய்யலாம்...

முதலில் நீங்கள் அனுபவஸ்தர்களின் துணைகொள்ள வேண்டும்.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.

நல்லது - கெட்டதைச் சிறு வயது முதலே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடித் தால், குழந்தைகளும் செம்மையாக வளர்வார்கள்; உங்கள் சொல்பேச்சைச் செவ்வனே கேட்டு நடப்பார்கள்.

அதுவே பிற்காலத்தில் அவர்களுக்கு, நல்லது - கெட்டதைத் தரம் பிரித்து அறிந்து வாழ்வதற்கான வழிகாட்டியாக அமையும்.

தவறினால், காலம் நம்மைக் கலங்கவைக்கும் என்பது நிச்சயம். மேலும் தொடர்வோம் மக்களே!

- மலரும்...

கலியுக அற்புதம்

அற்புதம் நிகழ்ந்த நாள் அது. ஆம்! 22 வயது கூட பூர்த்தியாகாத, பார்ப்பதற்கு ஒரு சிறுமி யைப் போல் காட்சியளித்த சுதாமணியின் வாழ்வில் மிகமிக முக்கியமான நாள்: 1975-ம் ஆண்டு; மார்ச் 3.

`சுதாமணி' என்று பெற்றோரால் பெயரிடப்பட்டவர், பின்னாளில் உலகமே அன்புடன் ‘அம்மா... அம்மா...’ என்று அழைக்கும்படி போற்றுதலுக்கு உரியவரானார் எனில், அதற்கான தொடக்க நாளாக அது அமைந்தது. அம்மாவை ஆன்மிகத் தலைவியாக உருவாக் கும் ஆண்டவனின் கட்டளை நிறைவேறப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று உணர்த்திய நாள் அது.

அன்று மாலையில் புற்களைக் கட்டித் தலையில் சுமந்துகொண்டு, இளைய சகோதரன் சுதீஷுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அம்மா. அந்தப் பகுதிகளில் அநேகமாக அனைவரின் வீடுகளிலும் பாகவத பாராயணம் நடை பெறும். அம்மாவின் வீட்டிற்கு வடக்கே `புத்தன் பறம்பு' என்ற வீடு இருந்தது.

அந்த வீட்டில் பாகவதம் முடிந்து பஜனை நடந்துகொண்டிருந்தது. பஜனைப் பாடல் களைக் கேட்ட அம்மா, இவ்வுலக நினைவை விட்டகன்று, ஆழ்நிலை பக்தியில்... தம்மையும் அறியாமல் அந்த வீட்டின் உள்ளே சென்றார். உள்ளே சென்ற அம்மா பகவான் கிருஷ்ண ரின் முத்திரையைத் தாங்கி நின்ற கோலம், அங்கிருந்தோரைச் சிலிர்க்கவைத்தது. சாட்சாத் கிருஷ்ணனே பூலோகம் வந்துவிட் டானோ என்று எண்ணத்திலும் பக்திப் பரவசத்திலும் அவர்களைத் திளைக்கவைத்தது.

அதுவே அம்மாவின் அற்புதமான முதல் கிருஷ்ண பாவ தெய்விக தரிசனம். அதைக் கண்டவர்கள் பெரும் பாக்கியசாலிகள். கிருஷ்ண பாவத்திலிருந்து தன்னிலை திரும்பியதும், அருகிலிருந்த ஒருவரிடம் தண்ணீர் எடுத்து வரும்படிப் பணித்தார். கொண்டு வரப்பட்ட தண்ணீரை அனைவரின் மீதும் தெளித்தார். அங்கிருந்தோர் அதனைப் புனித நீராக பக்தியுடன் ஏற்றுக்கொண்டனர்.

விஷயம் அறிந்து ஊர் கூடியது. இந்த அற்புத நிகழ்வை பக்தியுடன் பலர் ஏற்றுக் கொண்டலும் எதிர்க்கும் கூட்டமும் இருக்கும் அல்லவா?

அப்படியே சிலர், அம்மாவின் அந்தக் கிருஷ்ணபாவத்தின் புனிதத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்பினார்கள்; கேலியும் செய்தார் கள்!

மேலும் தொடர்வோம் மக்களே!