திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஆறு மனமே ஆறு - 16 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

`மனைவி எனும் கேடயம்'

கணவன் என்னதான் மற்ற துறைகளில் கொடிகட்டி பறந்தாலும், குடும்பம் மற்றும் உறவுகள் தொடர்பான சில விஷயங்களில் மனைவி யைக் கேடயமாக முன்னிறுத்தி, பல சிக்கல்களிலிருந்து விடுபட்டு எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறான். இது சரியா?

இது மனித இனத்தின் பொதுவான குணமாகும். பெரும்பாலான கணவன்மார்கள்; பிள்ளைகள் வளர்ப்பு, குடும்ப நிர்வாகம் போன்ற எல்லா பொறுப்புகளையும் மனைவி சுமக்கட்டும்; நல்லது கெட்டது எல்லாவற்றையும் அவளே பார்த்துக்கொள்ளட்டும் நாம் நிம்மதியாக இருப்போம்; நம்மை எந்த விதத்திலும் குடும்பச் சுமை பாதிக்காமல் இருக்கட்டும் என்ற எண்ணம் கொள்கிறான்.

எல்லாவற்றையும் கணவன் பார்த்துக்கொள்ளட்டும் என்று சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இது பரம்பரை பரம்பரையாக மனிதனுள் ஊறியிருக்கும் ஒரு சுயநலம் மிக்கச் செயல்தான். ஓர் உதாரணத்தை வைத்து உங்களுக்குப் புரியவைக்க முடியும்.

ஆறு மனமே ஆறு - 16 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

அந்தக் காலத்தில் போர் என்பது ஒரு சாதாரண விஷயம். போர்ச் சூழல் மிக்க ஓர் ஊருக்குள் செய்திகளைச் சேகரிக்க நிருபர் ஒருவர் செல்கிறார். நிலைமையும் மோசமாகத்தான் இருந்தது. அந்த நகரில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஓரிடத்திலிருந்து வேறிடம் போவதைக் காண முடிந்தது. ஆண்கள் அந்தக் கூட்டத்தின் முன்னணியில் நடந்து சென்றனர். அவர்களுக்குப் பின்னால் கைகளில் சிறு குழந்தை கள், தோளில் பெரும் சுமையுடன் எல்லா வயதுப் பெண்களும் நடந்து வந்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் இதே நிலைதான்!

அந்த நிருபரின் மனம் வருந்தியது. ‘பெண்களுக்கு ஏன் இதுபோன்ற பரிதாப நிலை? அவர்களை இயக்கும் குடும்பத் தலைவர்கள் அவ்வளவு பழைமைவாதிகளா?’ என்றெல்லாம் எண்ணினார்.

சில நாள்கள் கழிந்தன. அந்த நாட்டில் நடைபெற்ற போரும் தற்காலிமாக ஓய்ந்து நிலைமை சீரானது. நிலைமையைக் கண்டறிந்து எழுதுவதற்கு அதே நிருபர் மீண்டும் அந்த பகுதிகளுக்குச் சென்றார். நிலைமை முற்றிலும் மாறியிருந்தது போன்றதொரு சூழல்!

அங்கு அவர் கண்ட காட்சியே அதற்குக் காரணம். பெண்கள் அனைவரும் முன் வரிசையில் எவ்விதச் சுமையும் இல்லாமல் நடக்க, அவர்களின் பின்னால் அவர்கள்

குடும்பத்து ஆண்கள் மூட்டை முடிச்சுகளுடன், குழந்தைகளையும் சுமந்துகொண்டு நடந்து வந்தனர்.

அந்த நிருபருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!

இது எப்படிச் சாத்தியமானது? போர் என்பது மனிதர்களின் மனதை இந்த அளவிற்கு மாற்றிவிட்டதா அல்லது பெண்களின் புரட்சி ஏற்பட்டுள்ளதா என்றெலாம் சிந்தனை. எது எப்படியோ பெண்களின் நிலைமை மாறி விட்டது என்ற மகிழ்ச்சியில், அங்கு சென்றுகொண்டிருந்த நகரத்துப் பெண் ஒருத்தியிடம் மாற்றத்திற்கான காரணத் தைக் கேட்டார்.

அப்போது, கூட்டத்தில் நடந்து செல்லும் பெண் ஒருத்தி, கண்ணிவெடி மீது அறியாமல் கால் வைத்து விடுகிறாள் அந்த வெடியும் வெடித்து அவள் உயிரைப் பலி வாங்கிவிடுகிறது.

நிருபரிடம் பேசிக்கொண்டிருந்த பெண் , “இப்போது தெரிந்ததா இந்த மாற்றத்துக்குக் காரணம் என்னவென்று?” என்றாள்.

தொடர்ந்து அவள், ``நீங்கள் கண்டது எல்லாம் உண்மையான மாற்றம் கிடையாது! மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக இங்கும் அவர்கள் வீட்டுப் பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தித் தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறான். அதாவது போருக்குப் பின்னர், வெடிக்காமல் புதைந்து கிடக்கும் கண்ணி வெடிகளால் தமக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று எண்ணி, வீட்டுப் பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் சுயநலவாதியாகவே இருக்கிறான். இது அவர்களுடைய தந்திரமாகும்'' என்றாள்.

இப்படியும் மனம் சிந்திக்குமா என்று மீண்டும் வேதனையுறுகிறார் அந்த நிருபர். இது ஓர் உதாரணம்தான் என் செல்லங்களே!

அந்தக் காலத்திலேயே ஆப்பிரிக்கக் கண்டத்தில் சில அசாதாரணச் சூழலால் கணவனை அல்லது குடும்பத் தலைவரை இழந்து குடும்பப் பொறுப்பையும் சுமந்து சாதித்த பெண்களைப் பற்றியும் உங்களுக்குச் சொல்லத்தான் வேண்டும் மக்களே!

ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல பகுதிகளில் உள் நாட்டுக் கலவரங்கள், அண்டை நாட்டுட னான போர் காரணமாக, ஆண்கள் போரில் ஈடுபட்டு உயிர்ப் பலி அதிகம் ஏற்பட்டிருந்த நிலை. அதுமட்டுமன்றி, பஞ்சமும் தலைவிரித் தாடியது. குறிப்பிட்ட சம்பவம் நடந்த அந்த ஊரில் ஒரு விசித்திரமான பிரச்னை.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 70% பேர் பெண்கள். ஆண்கள் போர்களிலும், இனக் கலவரத்திலும் மடியும்போது, அங்குள்ள பெண்களின் தோளில்தான் குடும்பத்தின் சுமை முழுவதும் விழுந்தது. ஆனால், யாரும் அது கண்டு அச்சம் அடையவில்லை. தைரியமாக, அவர்கள் அனைவ ரும் தனியாகவோ, சில பல குழுக்களாகவோ ஒன்றிணைந்து கைத்தொழில் மற்றும் வியாபாரம் செய்து வளர்ச்சி அடைந்தனர். அந்தப் பகுதியும் முன்னேற்றம் கண்டது. தத்தம் குழந்தைகளை மட்டுமல்லாது, அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கினர். காலத்தின் நெருக்கடியால் கணவனை இழந்தாலும் வாழ்க்கையை சீர்படுத்தி, பெண்கள் வளர்ந்தனர்.

இப்போது புரிகிறதா... கணவனுக்கு மனைவி எப்போதுமே கேடயமாக விளங்கவேண்டும்; பழியையும், பொறுப்புகளையும் சுமக்க வேண்டும்.அது ஆணின் குணத்தினாலோ அல்லது காலத்தின் கட்டாயத்தினாலோ அமையலாம்.

எப்படி இருந்தாலும் வெற்றி பெண்களுக்கே. இதுதான் வாழ்க்கை மக்களே!

-மலரும்...

ஆறு மனமே ஆறு - 16 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

அம்மாவின் ஆன்மிகப் பயணம்!

அம்மாவின் கிருஷ்ண பாவத்தை எதிர்த்த வர்களில் ஒருவர், மீண்டும் கிருஷ்ணபாவம் நிகழ்த்திக் காட்டும்படி சவால் விடுத்தார்.

அதற்கு அம்மா “கிருஷ்ணன் என்னுள் இருப்பதை நான் உணர்கிறேன்; நம்புகிறேன். மக்களும் நம்பிக்கையுடன் வந்தால் நல்லது நடக்கும். ஸித்திகளைக் காண்பித்துதான் மக்களை நம்பவைக்கவேண்டும் என்றால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்படி ஓர் அவசியமும் இல்லை. அதோடு ஒரு முறை காண்பித்தால் மீண்டும் மீண்டும் காண்பிக்கச் சொல்வீர்கள், அது தெய்விகமாகாது. வெறும் கேலிக்கூத்தாகும்” என்றார்.

``இருந்தாலும் மீண்டும் ஒரு முறை மட்டும் நிகழ்த்துங்கள். அது போதும் எங்களுக்கு'' என்று அவர்கள் வற்புறுத்தினர்.

அம்மா “அடுத்து வரும் கேட்டை நட்சத் திரத்தில் இங்கு நடைபெறவிருக்கும் பாகவத பாராயணத்திற்கு வாருங்கள். அந்தக் காட்சி யைக் காணலாம்” என்றார்.

கேட்டை நட்சத்திரமும் வந்தது. வீட்டின் முன்பு கட்டுக்கடங்காத கூட்டம். ஆகவே பாகவதத்தை வீட்டிற்கு வெளியே ஏற்பாடு செய்தனர். பஜனையின் முடிவில் கிருஷ்ண பாவத்தில் அம்மா காட்சியளித்ததை அனை வரும் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

அம்மா தண்ணீர் கொண்டு வரச் சொன் னார். பின்னர் அங்கிருந்த ஒரு நாத்திகரை அழைத்து, அந்தப் பாத்திரத்திலிருந்த தண் ணீரை எடுத்து எல்லோருக்கும் விநியோகம் செய்யச் சொன்னார். அப்போது அந்த நீர் பாலாக மாறியிருந்தது! நாத்திகர் மட்டுமல்ல அங்கிருந்த அனை வரும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போயினர்!

வேறு ஒருவரை அழைத்துப் பாத்திரத்தில் கை விட்டுப் பார்க்கச் சொன்னார். அதில் பஞ்சாமிர்தம் கிடைத்தது. அள்ள அள்ளக் குறையாமல் அங்கிருந்த அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. பஞ்சாமிர்தம் விநியோகம் செய்தவரின் கையில் அந்த மணம் பல நாள்கள் மாறாமல் இருந்ததைக் கண்டு அவர் மட்டுமல்ல மக்களும் அதிசயித்தனர்.

நிகழ்வதெல்லாம் தன் சித்தம் அல்ல; அது தெய்வத்தின் திருவிளையாடல் என்பதை அனைவருக்கும் நிரூபிக்கவே, அம்மா, தண்ணீரைத் தம் கையால் விநியோகம் செய்யாமல் நாத்திகர்களைக் கொண்டே செய்யச் சொன்னார்.

கிருஷ்ண பாவத்தில் அம்மா இருந்தபோது, அக்கம்பக்கத்து மக்கள் அனைவரும் அவரிடம் தங்களுடைய குறை, துக்கங்களை இறக்கி வைத்துப் பிரார்த்தனை செய்தனர். அதுவே வழக்கமாகி விட்டது. அம்மாவும் அவர்களின் துயர் நீக்கக் கடவுளிடம் வேண்டினார்.