திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 17 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

`கணவனும் பிரசவிக்கட்டுமே! அப்போதுதான் தெரியும் பிரசவ வலி என்றால் என்னவென்று...' இப்படித்தான் பெண்களில் சிலர் சவால் விடுகின்றனர். இங்ஙனம், பிரசவ வலியைப் பாரம் என்றும் வலியென்றும் சிலர் சொல்லலாம். ஆனால், லட்சக்கணக்கான பெண்களுக்கு அதுவே பரமசுகமாகும் மக்களே!

எதை வைத்துச் சவால்விடுவது என்று இல்லையா... இயற்கையின் விதியை யாரால் மாற்ற முடியும்? அதுமட்டுமா... ஒரு தாயால் மட்டுமே தாய்மையைச் சுமக்க முடியும். அவள் கருவுற்றிருக்கும் சிசுவுக்காக வேதனைகள் அனைத்தையும் அனுபவிப்பாள். நிறைவில், பெற்றக் குழந்தையை அணைத்துக் கொஞ்சிப் பரவசமடையும்போது, அவளுடைய முகத்தில் ஆயிரம் சூரிய சந்திரர்களின் ஒளியைப்போல் மகிழ்ச்சி பொங்கு வதைக் காண முடியும். அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஏங்குவோரும் உண்டு.

ஆறு மனமே ஆறு! - 17 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

உங்களுக்குக் கிடைத்துள்ள சுகமான உரிமை அது.

இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் உங்களுக்குப் புரியும்!

சோழப் பேரரசர் சுபதேவரின் மனைவி கமலவதி. அவர் கருவுற்றிருந்தார். அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அந்தக் காலத்தில் பொதுவாகவே நல்ல கிரக நிலையில் பிள்ளைப் பேறு நிகழ்வதை விரும்புவர். அப்போது தான் அந்தக் குழந்தையின் வாழ்க்கை சீரும் சிறப்புடன் அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை. அரசவை ஜோதிடர் வரவழைக்கப்பட்டார். அவரும் கிரக நிலையைக் கணக்கிட்டார்.

பின்பு “சோழ அரசியின் இந்தப் பிரசவம் இன்னும் ஒரு முகூர்த்த காலம் தள்ளி நிகழ்ந்தால், மிக உத்தமமான லக்னம் அமையும் என்றும், அந்த லக்னத்தில் நற்குணங்கள் அனைத்தும் பொருந்திய ஒரு மகன் பிறப்பான் என்றும், அப்படிப் பிறக்கும் ஆண் மகன் சகலகலாவல்லவனாக, ஞானமுள்ள மனிதனாக வாழ்வான். அவனால் நாட்டிற்கும், அதன் பிரஜைகளுக்கும் நன்மைகள் பல ஸித்திக்கும். பல காலம் நல்லாட்சி புரிந்து நற்புகழுடன் விளங்குவான்” என்று கணித்தார்.

அதைக்கேட்டு எந்தத் தாய்தான் ஆனந்தப்படமாட்டார். அரசியும் குறிப்பிட்ட அந்த லக்னத்தில்தான் பிள்ளை பிறக்கவேண்டும். அதற்கு முன்பு கூடாது என்று சங்கல்பம் மேற்கொண் டார். அதற்காக என்ன செய்தார் தெரியுமா?

உடனிருப்பவர்களை அழைத்து, தனது கால்களைக் கட்டித் தலைகீழாக அந்தரத்தில் தொங்கவிடுமாறு பணித்தார். விவரிக்க இயலாத வேதனையையும் தாங்கிக் கொண்டார். அந்த வலி பெரிய பொருட் டாகவே அவருக்குத் தெரியவில்லை.

குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்தின் போது அரசி இறந்துவிடுகிறாள். குழந்தையின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் மேன்மைக்காக இதைவிடப் பெரிய தியாகம் ஏதேனுமுண்டா?

அதுதான் தாய்மை!

தாயைத் தொங்கவிட்டதால் குழந்தையின் முகமெல்லாம் ரத்தம் ஏறியிருந்தது. கண்களில் ரத்தம் கட்டி சிவப்பாகிவிட்டது. அதன் காரணமாக அந்த இளவரசனுக்கு ‘கோச் செங்கண் சோழன்’ என்று பெயரிட்டனர்.

அவன் வளர்ந்து பேரரசை ஆண்ட போது, நாட்டு மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டான். பல பிரமாண்டமான, அழகான ஆலயங்கள் அமைத்தும் புகழ் பெற்றான். வானம் பொழிந்தது, பூமி செழித்தது, மக்கள் மகிழ்ச்சியுடனும் அமைதி யுடனும் வாழ்ந்தனர்.

அதுமட்டுமல்ல, கோச்செங்கண் பிற்காலத் தில் 63 நாயன்மார்களில் ஒருவரானார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்போது சொல்லுங்கள், தாய்மையின் பெருமைக்கு இதைவிடச் சிறந்த வேறு உதாரணம் உண்டா உங்களிடம். “பிரசவ வலியை அவர்களும் அனுபவிக்கட்டுமே” எனும் வாதம் எவ்வளவு சிறுபிள்ளைத் தனமானது மக்களே!

யாருடனும், யாரையும் சமமாக ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, சேவலைப் போல் கோழி கூவ முடியுமா... கோழியைப்போல் சேவல் முட்டையிடமுடியுமா... கருடன் கோழிக் குஞ்சுடன் சேர்ந்து இருவரும் குப்பையைக் கிளறி உணவு சாப்பிடமுடியுமா... அதைப் போல ஆண் பெண் இருவருக்கும் வெளிப் படையான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படி இருந்தாலும் மனத்தால் இருவரும் ஒன்றாக முடியும். அதுவே மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம்.

மின்சாரம்... இதனைக் கொண்டு குளிர் சாதனப் பெட்டியின் மூலம் அறையைக் குளிரூட்ட முடிகிறது; ஹீட்டரின் மூலம் ஓர் அறையை வெதுவெதுப்பாக வைத்திருக்க முடிகிறது; மின் விளக்கையும் பிரகாசிக்க வைக்க முடிகிறது.

ஒன்றின் செயல்பாட்டையோ, இயல்பையோ மாற்ற முடியாது. இருந்தாலும் அனைத்தும் ஓர் ஆற்றலின் அடிப்படையிலேயே இயங்குவதுபோல் அமைகிறது.

அதுபோலவே கணவன், மனைவி இருவருக்குள் குடியிருக்கும் அன்பு, ஞானம் முதலியவை ஆன்மிக மார்க்கத்தை அடைய வழிகாட்டும் நிலைகள்.

அந்தப் பரிபூரணமான நிலையைப் பெறும் போது யாரும், எத்தனை விதங்களில் வேறு பட்டிருந்தாலும் மனதளவில் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என் மக்களே!

- மலரும்

ஆறு மனமே ஆறு! - 17 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

அம்மாவின் ஆன்மிகப் பயணம்...

ம்பிக்கை இல்லா நாத்திகர் ஒருவர் மூலமாகவே கிருஷ்ண பாவத்தின் உண்மையை நிரூபித்தார் அம்மா. அதைப் பற்றி அவர் சொல்லும்போது...

“கிருஷ்ண பாவத்தின்போது யாரும் சொல்லாமலேயே அவர்களுடைய சங்கடங்கள் மற்றும் குறைகள் நன்றாக விளங்கின. சிலருடைய வாடிய முகத்தைக் கண்டபோது என் மனம் உருகியது. என் சிந்தனையெல்லாம் இவர்களுடைய துயரங்களை எப்படித் தீர்த்து வைப்பது என்பதில்தான் இருந்தது. இதற்கு முன்பும் பல முறை எனது கிருஷ்ணபாவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் அதனை வெளியில் உள்ளவர்கள் யாரும் பார்த்ததில்லை. அப்போதெல்லாம் கண்ணனுடன் பரிபூரணமாக ஐக்கியமாகிவிட வேண்டும் என்று என் மனம் விரும்பியது, ஆனால் அசரீரி ஒன்று...

`உனக்கு நீண்டதொரு ஆன்மிகப் பயணம் சித்தமாயுள்ளது. உலகில் உன் வழியாக பல நல்ல காரியங்கள் நிகழ வேண்டும். மக்கள் பலர் செய்வதறியாது, திக்கற்று துன்பத்தில் உழல்கின்றனர். அவர்களைத் தேற்றி, ஆறுதல் அளித்து, அவர் துயர் தீர்ப்பதற்கென்றே ஏற்பட்டது உன் ஜனனம். அதை நிறைவேற்றும் பணி உன் மூலமே நிறைவேற வேண்டும். அதற்கானதே இந்த ஆன்மிகப் பாதை' என்று ஒலித்தது'' என்றார்.

து நிகழ்ந்த மறுநாளே புத்தம் பறம்பு வீட்டில் கிருஷ்ண பாவத்தை ஊரே கண்டு அதிசயித்தது. ஊரில் சிலர் நம்பவில்லையென்பது பரவாயில்லை. அது இயல்பு. அலுவல் காரணமாக இரண்டுமுறையும் கிருஷ்ண பாவத்தை தரிசிக்கும் பாக்கியம் சுகுணானந் தருக்குக் கிட்டவில்லை. அதனால் அவருக்கு அந்தச் சந்தேகம் இருக்கத்தானே செய்யும்? சோதிக்க நினைத்தார். தன் வீட்டிலேயே பாகவத பாராயணத்திற்கு ஏற்பாடு செய்தார். அன்று கிருஷ்ணபாவத்தைக் கண்ட சுகுணானந்தர் உண்மையை முழுமையாக நம்பினார்.

அதேநேரம், ‘கிருஷ்ணபாவம் எதேச்சையாக நடந்த ஒன்றுதானே... எப்போது வரை தொடரும்? எப்போது நிறைவடையும்? சிறிது காலம் மட்டுமேதான் இந்த தரிசனங்கள் சாத்தியமா...’ எனறெல்லாம் யோசிக்கத் தொடங்கினார். தெய்வம், பூஜை அறையிலும், ஆலயங் களிலும் இருப்பதாக மட்டுமே குடும்பத்தார் நம்பினர். அவர்கள் அம்மாவின் தெய்விக சக்தியைப் பற்றி அறியவே இல்லை என்பதே உண்மை. ஒரு முடிவுக்கு வந்தனர். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது என்று சொல்வார்களே, அது போல சுகுணானந்தரும், வீட்டில் மற்ற மூத்தவர்களும் சுதாமணிக்குத் திருமணம் செய்துவைக்கத் தீர்மானித்து மீண்டும் மாப்பிள்ளை தேடத் துவங்கினர். அத்தகைய முயற்சிகள் ஒவ்வொன்றும் நடைபெறாமல் போனது.

சுதாமணி அவற்றையெல்லாம் கடந்து வேறு நிலைக்குச் சென்றுவிட்டார், இனி அவருக்கு இல்லற வாழ்க்கை சாத்தியமா எனும் குழப்பம் ஏற்பட்டது. வேறு வழியறியாமல், சுதாமணியின் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் எடுத்துச் சென்றனர்.

அந்த ஜோதிடர் மிகவும் தெளிவாகச் சொன்னார்:

“இனி, இவருக்குத் திருமணம் செய்து வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டாம், அது நடப்பதற்கான சாத்தியமே இல்லை.

இந்த ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் ஒரு பெரிய மகானின் லட்சணங்களைக் கொண்டவர். அவரால் கோடான கோடி மக்கள் பலன் அடைவது நிச்சயம். கட்டாயப் படுத்தினால் கெடுதல் ஏற்படுவதற்கான சாத்தியமே எஞ்சியிருக்கும்” என்றார்!