Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 18 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆறு மனமே ஆறு

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

இயற்கையின் படைப்பிலே ஒன்று சிறியதாகவும் மற்றொன்று பெரியதா கவும் உள்ளன. சூரியன் கொதிக்கும் உலகில்தான் சில்லென்ற குளிர்ச்சியான காற்றும் வீசுகிறது. மானின் சாந்த குணமும் அதற்கு நேர்மாறான சிங்கத்தின் கர்ஜனையும் ஒரே காட்டில்தான் உள்ளன.

அவையனைத்தும், அவற்றின் விதிகளிலிருந்து மாறுபட்டுச் செயல்படுவது இல்லை. ஆறறிவு மிக்க மனிதர்களோ, காலத்தின் மாற்றம் என்ற பெயரில் தன்னுடைய குணாதிசயங்களை மறந்து மாற்றுப் பாதையில் பயணிப்பது இயல்பு என்கின்றனர். உங்களுக்கு மீண்டும் இதை எடுத்துச் சொல்வதற்குக் காரணம், இன்றைய நிலையைப் பாருங்கள்... விளங்கும்!

ஆண்களுக்குப் பெண் இணையாக இருக்கவேண்டும் என்ற கண்ணோட்டத் தில், பலரும் போட்டி போட்டுக்கொண்டு, இயல்பான நற்குணங்களை மறந்து செயல்படுகின்றனர். அதனால் பெண்களிலும் சிலர் புகைப்பிடித்தல், மது அருந்துதல் என வேறு சில துர்க்குணங்களையும் வேற்றுக் கலாசாரத் திலிருந்து கற்றுக்கொண்டு பாதை மாறுகின்றனர். அப்படிச் செய்வதனால் மட்டும் ஆணுக்குப் பெண் இணையாகி விடமுடியாமா என்ன... முடியாது மக்களே!

ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறுஇரண்டு இதயங்கள் ஒன்றோடு ஒன்று உண்மையாக நேசிப்பதைவிட அழகான, அற்புதமான விஷயம் இந்த உலகத்தில் ஏதேனும் உண்டோ... கிடையாது! அன்பானது அனுமதியின்றி நம் மனத்துள் நுழைய முடியாது. அதாவது நாம் அதனை அனுபவித்து, ஆராதித்து, அனுமதித்தால் மட்டுமே அது நமக்குள் ஆட்சி செய்ய முடியும். அப்படிப்பட்ட அன்பு மட்டுமே ஆண்-பெண் இருவரின் எண்ணப் போக்கில் மாற்றம் கண்டு, உறவு உய்வதற்கான அடித்தளமாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை செல்லங்களே!

ஆனால், தற்காலத்தில் இரு தரப்புக்கும் இடையே அன்பு என்பது பெரும்பாலும் வெறும் நடிப்பாகி விடுகிறது. மற்றவர் கண்களுக்கு அன்பு செலுத்துபவராகத் தெரிந்தாலும், பல நேரங்களில் உங்களுக்குள் உருவாகும் கருத்துவேறுபாடுகள் சண்டை, சச்சரவில் முடிவடைகின்றன. இத்தகைய நிலை எப்போது வருகிறது?

பணிந்து செல்ல வேண்டிய நேரத்தில் பணியாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டியதற்கும் விட்டுக்கொடுக்காமல் இருக்கும்போதும் நல்ல குணாதிசயங்கள் நம்மை விட்டு விலகும்போதும், அன்பு என்பது வெறும் முகமூடியாகிவிடுகிறது. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மிடையே அன்பு என்பது அழிந்து விட்டால், இந்த உலகம் முழுவதும் அழிந்துவிடும் செல்லங்களே!

அன்பு எனும் தீபம் நமக்குள் அன்றும், இன்றும், என்றும் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கும். அவ்வப்போது அந்த தீபத்தின் ஒளி சிறிதளவு மங்கவே செய்யும். அப்போதெல்லாம் திரியைத் தூண்டிவிட்டால் போதும், தீபம் நன்றாகப் பிரகாசிக்கும்.

ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறு

நிம்மதியைத் தின்றுவிடும் சந்தேகம்!

தீர்வு காணமுடியாமல், தீவிரமடைந்து, மருத்துவத்தினால் குணமாக்க முடியாத பெரும் நோய் சந்தேகம். இந்த நோயால் பீடிக்கப்பட்ட எவரும், தானும் நிம்மதியாக வாழ்வதில்லை; மற்றவரையும் நிம்மதியாக வாழ விடுவது இல்லை. இப்போதெல்லாம் கணவன் - மனைவி இருவருக்குமே `தான் பெரிய உளவுத்துறை' என்ற நினைப்பு. இதில் ஆண்கள் அதிகம் என்றாலும் பெண்களும் கணிசமாக உள்ளனர். எதைப் பார்த்தலும் சந்தேகம், எதைக் கேட்டாலும் சந்தேகம், எல்லோர் மீதும் சந்தேகம், எதற்கெடுத்தாலும் சந்தேகம்… இப்படியே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது மக்களே!

மனத்தையும் அது காணும் நிம்மதியையும் சந்தேகம் எனும் நோய் தின்று விடுகிறது. அதுமட்டுமா? மன நிம்மதியின்மை காரணமாக உடல் ஆரோக்கியம் கெட்டு, மெலிந்து, நோய்வயப்பட்டு வாழ்க்கை அழிந்துவிடுகிறது. ஒரு நாள் உயிரையும் இழக்க நேரிடலாம்! மிகைப்படுத்தவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன் செல்லங்களே!

மாதா அமிர்தானந்தமயி
மாதா அமிர்தானந்தமயிசந்தேகத்தால், ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசும் சக்தியை இழந்து விடுகிறீர்கள். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பர். அதுபோல், மனம் விட்டுப் பேசினால் பெரும்பகுதி சுமை குறையும் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டால் மனம் லேசாகிறது, புரிதலும் அதிகமாகிறது. உங்களுக்கும் இது தெரியும். ஆனால், ‘தான்’ என்ற அகங்காரம் இடையே புகுந்து காரியத் தைக் கெடுத்துவிடுகிறது; சந்தேக நோய்க்கு அடிமையாகிவிடுகிறீர்கள்.

ஆகவே, காலம் கடந்து புலம்பாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழப் பழகுங்கள். அப்போது நிம்மதி கிடைக்கும். அதன் காரணமாக வாழ்க்கை சுகமாகும்; இல்லறத்தில் இன்பமும் அமைதியும் நிறைந்திருக்கும். இதைப் புரிந்துகொண்டு வாழுங்கள் செல்லங்களே!

- மலரும்

அம்மாவின் ஆன்மிகப் பயணம்...

சுதாமணியின் தந்தை சுகுணானந்தருக்கும் தன் கண்களால் பார்த்த பிறகே, கிருஷ்ண பாவத்தில் நம்பிக்கை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, மீண்டும் தொடங்கிய ‘மாப்பிள்ளை தேடும்’ படலமும் சுதாமணியின் தீவிரமான எதிர்ப்பால் நின்று போனது.

இவை அனைத்தையும் கடந்து கிருஷ்ணபாவ தரிசனங்கள் தொடர்ந்த நிலையில், வேறொரு பிரச்னை உருவானது. பொதுவாகவே ஒருவர் பிரபலம் அடையும்போது ஏற்படும் சிக்கல்தான்.

ஒருவர் ஆன்மிக பீடம் ஏறி அப்பாதையில் பயணித்துப் புகழடையத் தொடங்கும்போது, சுயநலம் கலந்த சிலரும் அவர்களிடம் ஒட்டிக் கொண்டு செயல்படுவது இயல்புதான்.

சுதாமணியின் தெய்விகச் சக்தியின்மீது அதீத நம்பிக்கை கொண்டு பல இடங்களிலிருந்தும் தரிசனத்துக்குப் பக்தர்கள் குவிந்தனர். தங்களின் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள வந்தவர்களும் உண்டு. இங்ஙனம் கூட்டம் கூடுவதைப் பயன் படுத்திப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் சிலர் அம்மாவிடம் வந்து சேர்ந்தனர்.

`மீண்டும் மீண்டும் இந்த ஸித்துக்களை வெளிப் படுத்தினால் நிறைய பணம் பொருள் கிடைக்கும்' என்றெல்லாம் ஆசை காட்டினார்கள்.

ஆனால் சுதாமணியோ, “பணம், தங்கம், வெள்ளி இவற்றுக்காக ஸித்திகளை வெளிப்படுத்துவது என் நோக்கம் அல்ல. உங்களுக்குள்ளும் விலை மதிக்க முடியாத ரத்தினங்கள் பிரகாசிக்கின்றன. போலியான ரத்தினங்களுக்காக ஆசைப்பட வேண்டாம். சுயநலம் இல்லாமல் இறைவன்மீது அன்பு செலுத்துபவர் யார் என்பதை அறிந்து, அவர்களுக்கு அருள்வதே என்னுடைய நோக்கம்” என்றார்.

கடற்கரையில், இடமண்ணேல் இல்லத்தின் அருகே தெருவின் ஓரத்தில் பெரிய அரச மரம் ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் மலர்ச் செடிகள் புதர்போல் மண்டிக்கிடந்தன.

ஒரு காலத்தில் அந்த இடம் கிராமப் பொதுச் சொத்தாகும். அங்கு, கிராமத்து இளைஞர்கள் சிலரால் கோயில் கட்டும் முன்னோட்டமாக அரச மரம் ஒன்று நடப்பட்டது. அந்த மரம்தான் இவ்வளவு பெரிதாக வளர்ந்திருந்தது.

சுகுணானந்தரின் தாயார் மாதவி, ஒவ்வொரு நாள் மாலையிலும் அந்த மரத்தடியில் விளக்கேற்றித் தொழுதுவிட்டுச் செல்வது வழக்கம். சுதாமணியும் அவருடன் சென்று வழிபடுவார்.

அனைவரும் எளிதாகவும் சகஜமாகவும் வந்து போகும் இடமாக இருந்ததால், அந்த அரச மரத்தின் முன்பாக, ஒரு குடிசையைக் கட்டி, அதனுள் கண்ணன் மற்றும் காளி படங்கள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

அந்தக் குடிசையில்தான் தொடக்கக் காலத்தில் கிருஷ்ண பாவ தரிசனங்கள் ஸித்தித்தன. சில நேரங்களில் அந்த மரத்தின் கிளைகளின்மீது அனந்தசயனத்தில் கிருஷ்ணனைப் போல் காட்சி அளிப்பார் அம்மா.

அதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்தக் கிளைகள் தொட்டாலே முறிந்துவிடும் நிலையில் இருக்கும்.

இது எப்படி சாத்தியம்?

ஒருமுறை இதுகுறித்து அம்மாவிடம் கேட்ட போது, அவர் சொன்னார்:

“கிருஷ்ண பாவ நிலையில் உடல் லேசாகி விடும்!”