Published:Updated:

ஆறு மனமே ஆறு! - ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

தாய்மைதான் ஒரு பெண்ணின் முதன்மை வடிவம். அனைவரிடமும் அன்பு செலுத்துபவள் தாய். அந்த நற்குணம்தான் தாய்மை என்று பார்த்தோம். இப்போது உங்களுக்குள் சில கேள்விகள் எழலாம்.

பெண் எப்படிப்பட்டவள், அவளுடைய சக்தி என்ன... என்றெல்லாம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகள், நீங்கள் கேட்காமலேயே என் காதில் விழுகின்றன குழந்தைகளே. இதோ உங்களுக்குப் புரியும் வகையில் சொல்கிறேன்...

பெண் இயல்பாக எப்படிப்பட்டவள்?

பெண்ணின் மனம் பெருகி வரும் ஆற்றுக்கு நிகரான ஆற்றல் கொண்டது. ஆற்றல் எனும் நதியிடம் தயக்கம் கிடையாது; தேக்கமும் இருக்காது. பெண் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஈடுபாடும் முழுமையும் இருக்கும். தன்னை ஒருமுகப்படுத்தி செயல்களில் நளினமும் அழகும் சேர்ப்பது அவள் இயல்பு. குடும்பம் மற்றும் இதர விஷயங்களுக்கு இடையே சிக்கி சிதைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதில், பெண் இயல்பாகவே சாமர்த்தியசாலி.

ஓர் அன்பான தாயாகக் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் விவேக புத்தியையும் கற்றுக் கொடுப்பதுடன், குடும்பத்தின் தலைவியாக அதன் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு போன்ற வற்றின் கடிவாளத்தைத் தன் கையில் வைத்துக் கொள்பவள்தான் பெண் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

பெண்கள் எந்தவொரு சூழலிலும் மேற்சொன்ன பண்புகளை இழக்கக் கூடாது.அவைதான் உங்களுடைய முன்னேற்றப் பாதையின் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

பெண்ணின் சக்தி எப்படிப்பட்டது?

பெண்கள்தான் பிரபஞ்சத்தின் ஆதார சக்தி. நாம் பிறந்து, வளர்ந்து, வாழ்வதற்கு அடிப்படையே அந்த சக்திதான். பெண் தன் உண்மை வடிவத்தையும் பண்பையும் இழக்கும்போது இந்த உலகில் அழிவு ஏற்பட்டு ஒற்றுமையும் நல்லிணக்கமும் காணாமல் போய்விடுகின்றன.

அதனால்தான், ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய இயல்பான குணங்களை மீட்டெடுக்க முயற்சி செய்வது மிகவும் அவசியமாகிறது. அதன் மூலம்தான் உலகைக் காக்க முடியும்... சரிதானே செல்வங்களே!

ஆனால், அந்தக் காலத்துச் சமூகத்தின் சட்டத்திட்டங்களும் குருட்டு நம்பிக்கைகளும் பெண்ணின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்ததும் உண்மைதான். இன்றும் பல இடங்களில் அவை பெண்ணுக்கு எதிராகத் தொடர்வதும் உண்மைதான். பல நேரங்களில் பெண்கள் மாயை எனும் சிலந்தி வலையில் சிக்கித் தத்தளிக்கின்றனர். அந்த நிலையிலிருந்து வெளியே வரவேண்டுமானால், தான் யார் என்பதை உணர்ந்து, தன் சக்திகளை மீட்டெடுத்து, முன் நோக்கிச் செல்லும் எழுச்சிப் பாதையைத் தேட வேண்டும். அதற்குண்டான மனப்பக்குவம் ஏற்பட வேண்டும். இதைத் தவிர வேறு வழியே கிடையாது.

இப்போதைய நிலை என்ன?

பெண்கள் இப்போது உறக்கத்தில் இருக்கின் றனர். எப்படிப்பட்ட உறக்கம்? இன்றைய சூழலுக்கேற்ப சிந்தித்து செயல்படும் நிலையில் பெண்கள் இருக்கிறார்களா என்று யோசித்துப் பார். கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே பெண்களையும் அவர்கள் சார்ந்த கலாசாரத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுமா என்ன?

`கொண்டு செல்லும்' என்றுதான் பலரும் நம்புகின்றனர். உண்மையில் அது சரியா? நிச்சயமாக இல்லை! அப்படிக் கருதுவது குறுகிய கண்ணோட்டமே எனும் படிப்பினையைக் காலம் மீண்டும் மீண்டும் நமக்குக் கொடுத்த வண்ணம் இருந்தாலும், உண்மையை உணர்ந்து பெண்கள் விழிப்படைவது இல்லை.

விழிப்படைவது எப்படி?

பெண்களை யார் விழிப்படையச் செய்ய முடியும்? இதற்குப் பதில் தேடுமுன் உங்களிடம் ஒரு கேள்வி. முதலில் பெண்ணின் எழுச்சியைத் தடுப்பது யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

உண்மையைச் சொல்லப்போனால் வெளியிலிருந்து வந்து யாரும் தடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆம், பெண்ணின் மனது மட்டுமே இதற்குத் தடையாக நிற்கிறது. பெண்ணே அதனை உணர வேண்டும். அந்த உணர்வு வரும் வரையிலும் மனிதன் ஏற்படுத்திய பழைமைவாத பழக்கவழக்கங்கள் பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்கும்.

இன்றும்கூட, பெண்கள் மாயை எனும் வலையில் சிக்கித் தத்தளிப்பது ஏன்? வரலாறு முழுவதிலும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் நினைவலைகள் மனத்தில் மிகவும் ஆழமாக பதிந்துவிட்டதால்தானே... ஆக, பெண்ணின் மனமே அவளின் எண்ணங் களைக் கட்டிப்போடும்போது, அதற்கு அடுத்தவர் எப்படி பொறுப்பாக முடியும்? இந்த நிலை மாற வேண்டும். அதுமட்டுமே பெண் முன்னேற்றத்துக்கு உன்னதமான வழியாகும்.

குட்டிக் கதையொன்று சொல்கிறேன் கேளுங்கள்...

காட்டில் பிறந்த யானைக் குட்டியை நகரத்துக்கு அழைத்து வந்து மனிதனுடன் வாழ்வதற்குப் பழக்கப்படுத்துவார்கள். அது குட்டியாக இருக்கும்போது, கனத்த சங்கிலி கொண்டு மரத்தில் கட்டிப்போட்டு தப்பிப்போகாத வண்ணம் பார்த்துக்கொள்வார்கள். அந்தக் கட்டுத்தளையிலிருந்து விடுபடவோ அல்லது மரத்தைச் சாய்த்துத் தப்பிக்கும் பலமோ யானைக் குட்டிக்கு இருக்காது. பலமுறை முயற்சி செய்து பலன் இல்லாமல், விதியே என்று அமைதியாகிவிடும்.

யானை வளர்ந்ததும் அது பல மடங்கு பலம் பெற்றிருக்கும். மரத்தையே சாய்த்து விடும் அசாத்திய பலம் இருந்தும்... அந்த யானையை ஒரு மெல்லிய சங்கிலியால் கட்டிப்போட்டிருந் தாலும் அது தப்பிக்க நினைக்காது.

காரணம், சங்கிலிப் பிணைப்பிலிருந்து தன்னால் விடுபட முடியாது என்று அதன் ஆழ்மனத்தில் பதிந்துவிட்ட எண்ணம்தான். கட்டுண்டு பழகிய வாழ்க்கை மனத்தை விட்டு அகலாமல் மனிதனுடன் இணைந்துவிட்டதால், தப்பிக்க விரும்பாத சூழ்நிலைக் கைதியாகிவிடும். அதுபோலவே பெண் விஷயத்திலும் அவளுடைய ஆத்ம சக்தியைக் கட்டிப் போடும் நடைமுறைகள் காலங்காலமாக இருந்துவந்தன; இன்றைக்கும் தொடர்கின்றன.

ஆறு மனமே ஆறு! - ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

பெண்ணே, அன்பு மகளே... இதை நீ உணர்ந்து செயல்பட வேண்டும்.

என்ன செய்யலாம்?

`மீண்டெழுவது எப்படி... அப்படியே மீண்டெழுந்தாலும் செயல்படுவது எப்படி' என்று கேட்கிறீர்களா.

முதலில், பெண்கள் தங்களின் மனத்தில் ஆழமாக பதிந்துள்ள அடிமைத்தனம் நிஜமல்ல நிழல்தான் என்பதை உணர வேண்டும். பயமும் சந்தேகங்களும் வெறும் மாயத் தோற்றம். அப்படியான மாயையை விட்டு விலகி, தன்னுள் இருக்கும் சக்தியை உணர்ந்து செயல்பட்டால், பெண்கள் ஒரு மாபெரும் சக்தியாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!

நல்ல கல்வியோடு, சுயமாகச் சிந்தித்து நெஞ்சுரத்துடன் செயல்பட்டு, அழிவில்லா ஆன்மிக ஞானத்தை உள் வாங்கிக்கொண்டால், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ஆற்றல் விழித்தெழுந்து, பன்மடங்கு வீரியத்துடன் அவளைச் செயல்பட வைக்கும்.

பெண் செல்வங்களே! மீண்டும் சொல்கிறேன், நீங்கள் நினைத்தால் பெரும் சக்தியாகலாம். முயற்சி செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே!

- மனம் மகிழும்...

அம்மா... சிறு வயதில்!

மழலை மாறாத மயக்கும் குரலில் பாடுவது, வீட்டில் இருக்கும் தயிர், மோர், வெண்ணெய் என்று அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு மகிழ்வது, தேங்காய்ச் சில்லும், சர்க்கரையும் இருந்தால் படுகுஷியோடு தின்று தீர்த்துவிடுவது என சுதாமணியின் பால லீலைகள் தொடர்ந்தன.

அது மட்டுமா? அக்கம் பக்கத்தில் இருப்பவரோ அல்லது தெரிந்தவரோ கஷ்டப்பட்டால் மனம் ஒப்பாது! வீட்டு உண்டியலை உடைத்தாவது பணம் எடுத்து அவர்களுக்கு உதவி செய்துவிடுவாள் சுதாமணி. பிடிபடும்போது திட்டும் அடியும் தாராளமாகக் கிடைக்கும். புன்னகையுடன் ஏற்றுக்கொள்வாள். உடன் பிறந்தவர்கள் செய்யும் தவறுக்கும் சேர்த்து சுதாமணியே தண்டனை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்படும். அதையும் மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வாள்.

சுதாமணி பாடுவதைக் கேட்டு அனைவரும் மனம் மயங்கி நிற்பர். சில நேரங்களில் கண்ணனைத் தேடி மனசு அலைபாயும். கண்ணுக்குத் தெரியவில்லையென்றால் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டும். அழுதுத் தீர்த்துவிடுவாள். இரவில் தூக்கம் வராது, சோகமே உருவாக இருப்பாள். அக்கம்பக்கத்தில் இருப்பவர் ஆறுதல் சொன்னாலும் மனம் சமாதானம் அடையாது. மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு