Published:Updated:

ஆறு மனமே ஆறு! - ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

கொரோனா! இந்தச் சொல்லைக் கேட்டாலே உலகமே பதறுகிறது. இது, மனிதனைத் திருத்த ஈசன் நிகழ்த்தும் திருவிளை யாடலா அல்லது இயற்கையின் சீற்றமா? உலகம் அழியத்தான் போகிறதா?

பல மாதங்கள் கழிந்துவிட்டன. இன்னும் எவ்வளவு காலம்தான் இந்தப் பாதிப்பு தொடரும்? கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் போராடிக்கொண்டிருக்கிறோம். உலகமே மருத்துவமனையாக மாறி வருகிறது; கொத்து கொத்தாக மக்கள் மடிகின்றனர். இதற்கெல்லாம் எப்போது விடிவு காலம் ஏற்படும் என்று உலகமே விசாரப்படுவது தெரிகிறது.

ஆறு மனமே ஆறு! நாம் இந்த தேடலைத் தொடங்கிய சில வாரங்களிலேயே கொரோனா தொற்றின் தாக்கம் நம்மைத் தீவிரமாக ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டது!

காலத்தின் கட்டாயம்... இந்த உலகை உலுக்கும் நோய்த்தொற்றின் பரவல் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆகவே, முதலில் அதுபற்றி அறிவோம். பின்னர், நம் மனத்தை ஆற்றுப்படுத்தும் தேடலைத் தொடர்வோம். சரிதானா செல்வங்களே!

அனைவரும் கொரோனா தொற்று அச்சத்தில் வாழ்வது தெரிகிறது மக்களே. இந்தச் சூழலில் நாம் அனைவரும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும். இந்த நேரத்தில் சுயக் கட்டுப்பாடு, ஒற்றுமை,தைரியம் ஆகியவையே நம் ஆயுதங்களாகும்.

தைரிய லட்சுமியின் துணையுடன், அவளின் அருளால் இந்தப் பிரச்னைகளை எதிர்கொள் ளும் ஆற்றலையும் துணிச்சலையும் பெற்று, தடைகள் அனைத்தையும் சமாளித்து இந்த இக்கட்டான காலத்தைக் கடந்து மீள்வோம்.அச்சம் தவிர்த்து, தைரியத்துடன் போராடுவதே வைரஸை சமாளிக்கக்கூடிய வலிமையான எதிர்ப்பு சக்தியாகும்.

நம் பாட்டிமார்கள் `மருந்தையும் சாப்பிடு அதோடு மந்திரத்தையும் ஜபி. எல்லாம் சரியாகிவிடும்' என்பார்கள். மருந்து கிடைக்கும் வரை மந்திரமே கதியாகிறது. அதாவது கடவுளின் கருணை அவசியம் என்கிறேன். அரசாங்கமும், அறிஞர்களும் சொல்வதைக் கேள். அதோடு இறைவனையும் மனமுருகி வேண்டிக்கொள்.

உலக படைப்புகளில் ஒரு சீரான பிரமாணம் உண்டு. பிரபஞ்சம் என்பது, படைப்புகள் அனைத்தும் ஓன்றோடு ஓன்று இணைந்த இணையதளமாகவும் அவை அனைத்துக்கும் இடையே ஓர் அசைக்க முடியாத பந்தம் கொண்டு திகழ்வதுமாகும். உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்…

ஒரு வலையின் நான்கு முனைகளையும் நான்குபேர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். வலையின் ஒரு முனையை ஒருவர் அசைக்கும் போது வலை முழுவதிலும் ஏற்படும் அதிர்வை அனைவரும் உணர முடியும். அதுபோலவே, நமக்குத் தெரிந்தோ , தெரியாமலோ, தனியாகவோ அல்லது கூட்டாகவோ நாம் செய்யும் செயல்கள், அனைத்தும், படைப்புகள் அனைத்திலும் எதிரொலிக்கவே செய்யும்.

`நாம் தனித் தீவு அல்ல. ஒரு சங்கிலியின் இணைப்புகள் ஆவோம்.

அடுத்தவர் முதலில் மாறட்டும் என்று எண்ணாதே. அவர்கள் மாறவில்லையென்றாலும் பரவாயில்லை; உனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினால், வெளியே மாற்றம் தானாக ஏற்படும்'
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

என்று நான் உங்களுக்கு அடிக்கடி சொல்வதை மனத்தில் கொள்ளுங்கள்.

முதலில் இந்தத் தொற்று சீனாவில் தொடங்கியபோது, பிரச்னை சீனாவில்தானே; நமக்கு இல்லை என்று நினைத்தோம். அது உலகம் முழுவதும் தொற்றியபோது, அனைவரின் பிரச்னையாக மாறியதையும் கண்டோம். தொற்றைச் சீனா பரப்பியதா... கட்டுப்படுத்தியதா, இல்லையா... என்று நாம் ஏன் விவாதிக்கவேண்டும். விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இந்தப் பாதிப்பை எப்படிச் சமாளிப்பது என்பதை கண்டறிந்தால் போதும்.

உதாரணம் ஒன்றைக் காண்போம். பத்து மாடிக் கட்டடம் ஒன்று. அதன் முதல் மாடியில் தீ பிடித்தது. 10-வது மாடியில் வசிப்பவன், `முதல் மாடியில்தானே தீப்பற்றியுள்ளது. என்னை ஒன்றும்செய்யாது' என்று அசட்டையாக இருந்தால், அது முட்ட்டாள்தனம் அல்லவா.

பற்றிய தீ பத்து தளங்களுக்கும் பரவாதா? அந்தத் தீ நம் இடத்தைப் பற்றவும் வாய்ப்பு உண்டு என்ற முன்னெச்சரிக்கை யுடனும் அடுத்தவருக்கு ஏற்பட்டது நம்மை அடைய வெகு நேரம் ஆகாது என்ற எண்ணத்துடனும், நிலைமையைச் சமாளிக்கும் யுக்தியுடனும் நாம் தயார் ஆகவேண்டும்.

நம்மில் பலருக்கு `வீட்டிலேயே அடைபட்டிருக்கிறோம்' என்று பெரும் குறை! நானும் வல்லிக்காவில் அடைபட்டுத்தானே இருக்கிறேன். சரி... ஒரு விபத்தில் கால் எலும்பு முறிந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.என்ன செய்வோம். மருத்தவரிடம் சென்று கட்டு போட்டுக் கொள்கிறோம். சில வாரங்களோ அல்லது மாதங்களோ வீட்டிலேயே இருந்து ஒய்வெடுத்துக் குணப்படுகிறோம்.

குணமாவதற்கு ஓய்வு தேவை என்பதால், அதைப் பெரும் சுமையாக எடுத்துக் கொள்வதில்லை. அதுபோலவே இன்றைய சூழலும். எச்சரிக்கை உணர்வு, சுத்தம், சுகாதாரம் ஆகியவை அவசியமாகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்டவர் பயப்படத் தேவையில்லை. தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு. அதுவும் உன் அறையில் இரு அவ்வளவுதான்!

அப்படி இருந்தால், மற்றவருக்குப் பரவாது. நீயும் பாதுகாப்பாக இருப்பாய்! தொற்றின் அறிகுறி தோன்றினால், தவிப்போ, தயக்கமோ தேவையில்லை. உடனே மருத்துவ மையத்தைத் தொடர்பு கொண்டால் மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இந்தத் தொற்று மேலும் பரவாமல் இருக்க விழிப்புடன் இருப்பதுடன், ஆண்டவனிடமும் உள்ளன்போடு பிரார்த்தனை செய்வோம்.

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

நீங்கள் யுத்தக் களத்தில் உள்ள வீரனைப் போன்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்படுங்கள். தொற்று மேலும் நம்மிடையே பரவாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள். தொற்று கண்டவருக்கு ஆறுதல் சொல்லுங்கள். அரசாங்கம், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோரின் அறிவுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றச் சொல்லுங்கள்; நீங்களும் பின்பற்றுங்கள். இது ஒன்றே சிறந்த மார்க்கமாகும்.

உலகம் முழுவதும் களத்தில் முன் நின்று பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடன் இணைந்து நீங்களும் தலைவணங்குங்கள். அவர்களுடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டி மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம். அதுபோல, இந்தத் தொற்றினால் இறைவனடி சேர்ந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

சென்னை, கேரள யாத்திரை நிறைவடைந்து வல்லிக்காவு ஆசிரமம் திரும்பியபோது, குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பதர்களை ஆசிரமத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியது. ஆசிரமத்தில் ஆயிரக் கணக்கானோர் வசிக்கின்றனர். அரசின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, இங்குள்ள எவரும் வெளியே செல்வதில்லை; வெளியே எவரேனும் சென்றிருந்தால், சில காலத்துக்கு அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை எனவும் முடிவெடுத்தோம்.

அமிர்தபுரியில் மார்ச் மாதம் நடைபெற்ற `சந்நியாச தீக்ஷை' வைபவத்திலும் தீக்ஷை பெற்றவர்களைத் தவிர வேறு எவரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நான் முடிவைக் கண்டு அஞ்சுவதில்லை. அடுத்தவர் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டலை அனுசரித்து, அவர்களுடைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்கிறேன்... புரிகிறதா?

ஏன், எதற்கு, எப்படி, என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்தடுத்து சொல்கிறேன் செல்லங்களே!

- மனம் மகிழும்...

அம்மா சிறு வயதில்...

ரு நாள் பாட்டி வீட்டுக்குச் செல்லும் வழியில், மக்கள் படும் துயரத்தைக் கண்டபோது, சுதா மணியின் மனத்தில் `இவர்கள் ஏன் இப்படித் துன்பப்படவேண்டும். கர்ம வினையா, கடவுள் இருக்கிறாரா, இல்லையா... இவற்றுக்கெல்லாம் விடிவே கிடையாதா...' என்று பல கேள்விகள் எழுந்தது.

அப்போதுதான், தான் வணங்கும் கிருஷ்ணன் தனக்குள் இருப்பதை அவர் உணர்ந்தார். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவவேண்டும்; அவர்களைக் கைகொடுத்துத் தூக்கி விடவேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது. இதுதான், அம்மா ஆன்மிகத் தலைமைப் பொறுப்பு ஏற்பதற்கான பட்டாபிஷேக வைபவத்தின் முதல் படியா? ஆண்டவனின் சித்தத்தை யாரால் அறிய முடியும்?

முதலில் பாட்டி வீட்டுக்குச் செல்ல படகு சவாரிக்கு பணம் கொடுத்து வந்த தமயந்தி, சுதாமணி பிறருக்கு உதவுவதைப் பொறுப்பற்ற செயலாக எண்ணி, படகுக்குக் காசு கொடுக்க மறுத்ததால், தினமும் 12 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டியதாயிற்று. அதுவும் அவருக்கு ஒரு வேள்வியாகவே தோன்றியது!