Published:Updated:

ஆறு மனமே ஆறு - 12 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

- தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

வயதில் சிறியவளோ அல்லது பெரியவளோ, பெண்ணுக்கு எதிரான ஒர் அராஜகமான சம்பவம் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம், அப்போது ஊடகங்கள்தான் முன் நிற்பதாக அமையும். அது நல்லதுதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களை ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்புடைய அத்தகைய நிகழ்வுகளை விவரிக்கும்போது, சில ஊடகங்கள் குறிப்பிட்ட செய்தியின் தலைப்புகளைக் கிளர்ச்சியூட்டு வதாகவும், படிப்பவர்களை ஈர்க்கும் வண்ண மும் வெளியிடுவது உண்டு.

பெண்ணைப் பொதுவாக பலவீனமானவள், துணை அற்றவள் என்று பொருள்படும் வகையிலும் ‘இரை’ என்று அஃறினையாகவும் வர்ணிப்பது ஒரு கலாசாரமாக உள்ளது. இது ஊடக விற்பனை மதிப்பை வேண்டுமானால் அதிகரிக்கும். ஆனால் அந்தப் பெண் பற்றிய விவரங்கள் சமூகத்தில் பரவி, அவமானத்தை ஏற்படுத்துவ தாக அமைந்துவிடுகிறது.

இது சரியா? ஆகவே, ஊடகங்கள் நிலைமையை உணர்ந்து கடமை உணர்ச்சி யுடன் செயல்பட்டால், இந்த நிலை நிச்சயமாக மாறும்.

`ஆண் மகனின் பார்வையில்...'

ஆண்களில் சிலர், பெண்களை வெறும் சதைப் பிண்டமாகவே பார்க்கின்றனர். பெண் என்பவள் அனுபவிப்பதற்கான ஒரு போகப் பொருள் என்பதே அவர்களின் மனநிலையாக உள்ளது. விலங்குகள் கூட சில விதிமுறைகளை கடைப்பிடிக்கும்போது, மனிதர்களில் சிலர் இப்படித் தரம் தாழ்ந்து செயல்படுவது ஏன்? இதுதான் என் கேள்வி!

மனிதன் எல்லா பெண்களையும் சகோதரி யாகவோ தாயாகவோ போற்ற வேண்டுமானால், சில நடைமுறைச் சிக்கல் இருக்கத்தான் செய்யும். அதற்காக, பெண்ணை ஒரு காட்சிப் பொருளாகவும், அழகை வெளிப்படுத்தும் வடிவமாகவும் கருதி செயல்படுவதும், அவமதிப் பதும், தீங்கிழைப்பதும் சரியா?

மனக்கட்டுப்பாட்டை இழந்து செயல்படும் மனிதன் பித்தனாகிவிடுகிறான். இந்த நிலை தொடர்ந்தால், உலகமே விரைவில் மன நோய் விடுதியாகிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை மக்களே!

`ஆண் அளிக்கும் பெண் சுதந்திரம்'

முன்பெல்லாம், உலகம் என்பது ஆண்கள் பயணிக்கும் `ஒரு வழி' பாதையாக மட்டுமே இருந்தது. அவன் பின்னால் பெண் சென்றாகவேண்டும். ஆனால் அது சமூக ஹைவே போன்று, அதாவது இருவழிப் பாதையாக ஆண், பெண் இருவரும் பயணிக்கும் சம வழிப் பாதையாக மாறவேண்டும். அப்போதுதான் பெண்கள் முன்னேற முடியும்.

`நாங்கள் பெண்களுக்குச் சுதந்திரம் அளித் துள்ளோம்' என்று ஆண்கள் தரப்பில் கூறுகின் றனர். அது எப்படிப்பட்ட சுதந்திரம் என்று பார்ப்போம்.

ஒரு மனிதன் தன்னிடம் உள்ள விலை மதிப்பற்ற வைரக்கல் ஒன்றைத் தன்னுடைய நண்பனுக்குப் பரிசாகக் கொடுத்தான். அப்படி அவன் பரிசளித்தபிறகு `இப்படிச் செய்து விட்டோமே. அதை கொடுத்திருக்கக் கூடாதோ? என் புத்தி ஏன் இப்படியானது... விலையுயர்ந்த பொருளைக் கொடுத்துவிட்டேனே...' என்று மனத்துக்குள் புலம்பித் தீர்த்தான்.

ஆறு மனமே ஆறு - 12 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

அதுமட்டுமல்ல, பரிசாகக் கொடுத்த வைரத்தை எப்படியாவது தன் நண்பனிடமிருந்து மீட்டுவிடவேண்டும் என்றும் பிரயத்தனப் பட்டான். `எப்படி மீட்பது' என்று யோசிக்கவும் ஆரம்பித்தான்.

அதாவது, பரிசாக கொடுக்கும் எண்ணம் முதலில் இருந்தது; கொடுத்தும்விட்டான். ஆனால் அந்த எண்ணம் நிலைக்கவில்லை!

பெண்களுக்கு ஆண்கள் அளிக்கும் சுதந்திரமும் இப்படித்தான்! பெண்ணுக்குச் சுதந்திரம் அளித்துவிட்டோம் என்று சில விஷயங்களில் அனுசரனையாக இருக்கிறான்; சுதந்திரமும் கொடுக்கிறான். ஆனால், காலப் போக்கில் அது அவனுக்குச் சரிப்பட்டு வராமல் போகும்போது, `அடடா, தவறு செய்து விட்டோமா' என்று மனம் மாறி, பழையபடி கொடுமைகள் செய்வதைத் தொடர்கிறான்.

மனித மனம் ஒரு குரங்கு என்பார்களே, அதைப் போலத்தான்... பரிசாகக் கொடுத்த அந்த மனிதனின் மனமும் மாறுகிறது.

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள், அதிகாரம் என்பது யாரும் யாருக்கும் கொடுத்துப் பெறுவதில்லை. பெண்ணின் சுதந்திரம் என்பது அவளுடைய பிறப்புரிமை. அதை கொடுக்காமல் இருக்க எவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

`ஏன் இப்படிப் படைத்தாய் இறைவா?'

தானே அறிவாளி, உயர்ந்தவன், முதலாளி என்பது ஆண்களின் எண்ணமானால், அதற்கு இறைவனோ அல்லது இயற்கையோ எப்படிப் பொறுப்பாக முடியும். இதில் இறைவனைக் குறை சொல்லக்கூடாது!

ஆணுக்கு நிகரான பெருமையும், மதிப்பும், அங்கீகாரமும் பெண்ணுக்குக் கிடைக்கும் பொற்காலம்; அலுவலகத்தில், வீதியில் மற்றும் சமூகத்தில் பெண்கள் மரியாதையுடன் நடத்தப் படும் பொற்காலம்; கல்வி அறிவே பெறாத பெண் இல்லை என்ற சமூகத்தை வலியுறுத்தும் பொற்காலத்தைக் காண வேண்டும் என்பதே அம்மாவின் கனவாகும்.

எண்ணங்கள் மாறலாம், செயல்கள் மாறலாம், வேற்றுக் கலாசாரம் நம்முடைய கலாசாரத்தில் பெரியளவிலான சேதாரத் தையும், சோதனையையும் ஏற்படுத்தியிருக்க லாம். அதேநேரம், நம் ரிஷிகள் நம் மண்ணுக்கே உரித்தான ஆற்றலையும் சங்கல்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். அவற்றை யாரும் திருடவோ, அழிக்கவோ முடியாது!

தூங்குவது போல் நடிப்பவரை எழுப்புவது கடினம். ஆனால், தூங்கிக் கொண்டிருப்ப வர்களை விழிப்புறச் செய்வதற்கான முயற்சிகள் தொடரவேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே!

`ரோபோ உருவாக்கத்திலுமா?'

‘உடல் மற்றும் உணர்ச்சிகளால் ஏற்படும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டுமே இந்த வாழ்க்கை’ என்ற எண்ணம் வேரூன்றியவர்களுக்கு ஆண்-பெண் உறவு என்பது காம வடிவமாகவே உள்ளது.

இத்தகைய எண்ணம் கொண்டவர்கள், பெண்கள்மீது மட்டுமல்ல, யார் மீதும் அன்பு செலுத்தவும் மதித்துச் செயல்படும் தகுதியையும் இழந்துவிடுகிறார்கள் என்பதே உண்மை!

`மனிதன் - ரோபோ' என்ற ஆய்வு கட்டுரை ஒன்றைச் சமீபத்தில் படித்தேன்.

அதில் ‘மனித வடிவிலான ஆண் ரோபோ விடம் பெண்களைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டபோது, அது பெண்களின் உடல் அங்கங்கள் மற்றும் அழகைப் பற்றி மட்டுமே விவரித்து கூறுவதாக அமைந்திருந்தது.

இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை!

எப்படி என்கிறாயா?

ரோபோவின் மூளையில் பதிவு செய்யப் பட்டுள்ள அனைத்து தகவல்களும் மனிதனின் கைவண்ணமே என்கிறது ஆய்வறிக்கை!

ரோபோ உருவாக்கத்திலும் இப்படியா…?

- மனம் மலரும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறு வயதில் அம்மா...

சுதாமணியின் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்களின் காரணமாக அவள் புற வாழ்வில் இருந்து விடுபட்டு, பக்தியின் மார்க்கத்தில் செல்லச் செல்ல... அவளுக்குப் பாகவதம் கேட்பதில் ஆர்வம் ஏற்பட்டது.

ஆறு மனமே ஆறு - 12 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

நேரம் கிடைக்கும்போதெல்லாம் அருகில் உள்ள குழந்தைகளை அழைத்துவைத்து கண்ணனைப் பற்றிய நல்ல கதைகளை சொல்வது உண்டு. சிலநேரங்களில் ``கண்ணா! உனக்குச் சேவை செய்ய உன் திருவடியில் தேவி இருப்பதால்தான் இந்த எளியவளின் சேவையை ஏற்க மறுக்கிறாயோ” என்றெல்லாம் அவள் முறையிடும்போது, கிருஷ்ண தரிசனம் காண்பாராம்!

அந்தக் காலகட்டத்தில் அவளின் தந்தை சுகுனானந்தருக்கு மீன்பிடித் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், குடும்பப் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்தது. குடும்பத்தினர் அனைவரும் நிலைகுலைந்து போயினர்.

அந்தத் தருணத்தில் தமயந்தி அம்மா சுதாமணி யிடம் “கடவுள் ஏன் நம்மை இவ்வளவு சோதிக்க வேண்டும். இந்தக் கஷ்டத்துக்கு விடிவே இல்லையா. அப்பாவின் நிலைமை சரியாக, கடவுளிடம் பிரார்த்தனை செய்” என்பார்.

ஆனால் சுதாமணியோ “இதற்கெல் லாம் காரணம், தமயந்தி அம்மா சுகமாக வாழ்வதற்கு, தந்தையிடமிருந்து எதிர்பார்க்கும் வருவாய்தானே. இப்படி வாழ்பவர்களின் மத்தியில் வாழ்வதெல்லாம் துன்பத்துக்கே இடமளிக்கும். இதிலிருந்து விடுதலையளித்து சதா உன் தரிசனம் காணும் பாதையைக் காட்ட மாட்டாயா கிருஷ்ணா” என்று முறையிடுவாள்.

இதற்கிடையே, சுதாமணிக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தனர். ஒரு மகளுக்காவது திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தமயந்தி அம்மா எண்ணினார். தந்தையும், தமையனும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை அழைத்து வந்து பெண் பார்க்கச் செய்தனர். சுதாமணியும் தனது பாணியிலேயெ அவர்களை நிராகரித்து அனுப்பிவிடுவார்!