Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 11: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

ங்கெல்லாம் அமைதியும் சந்தோஷமும் பொங்கும் சூழல் உள்ளதோ; எங்கெல்லாம் நற்குணங்களும் நன்னெறியும் கொண்ட குழந்தைகள் உள்ளனரோ; எங்கெல்லாம் மிகக் கடுமையான தோல்வி மற்றும் எதிர்மறைச் சூழலிலும் ஆண்கள் வலிமை கொண்டு போராடுகின்றனரோ; எங்கெல்லாம் அன்பு, அனுதாபம், கருணை போன்ற குணங்களைக் கொண்டு மற்றவருக்கு உதவும் சூழல் உள்ளதோ, அங்கெல்லாம் சர்வ நிச்சயமாக தாய்மையின் வடிவமும், அன்பும், கருணையும் கொண்ட பெண் துணை நிற்பதைக் காண முடியும் மக்களே.

அதனால்தான் ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் வலிமைமிக்க ஒரு பெண் உண்டு என்பதைப் பலரும் ஒப்புக் கொள்கின்றனர். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்... ஆண்களில் பலரும் அவர்கள் சொந்த சகோதரராகவே இருந்தாலும் சரி, அதிகாரம் செலுத்துவதை நிறுத்தமாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறேன். அதற்காக நாம் நம் கடமையையும் கருணையையும் விட்டுக்கொடுக்க முடியுமா?

உதாரணமாக... ‘பக்திப் பைத்தியத்தால் இரவெல்லாம் கூத்தடிக் கிறாயே’ என்று என்னைக் கேலி செய்த என்னுடைய இளைய சகோதரன், ஆஸ்துமா நோயா அவதிப்பட்டான். நோய்த் தாக்கம் மிகவும் கடுமையாகி மூச்சுவிடவும் சிரமப்படுவான்; சதா இருமிக் கொண்டே இருப்பான்.

நாளுக்குநாள் அவனுடைய உடல்நலம் மிகவும் மோசமானது. அக்கம்பக்கத்தினர் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தாரும் அவனருகில் சென்று அவனுக்கு உதவி செய்வதை விரும்பவில்லை. எல்லோரும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர் என்பதே உண்மை.

அவன் என் சகோதரன் என்பதால் மட்டுமல்ல, என்னுள் இருந்த பெண்மை அவன் செய்த கொடுமைகளை மறக்கச் செய்து, அவனுக்கு மனதார நல்லது செய்ய நினைத்தது. அவன் மூச்சு விட சிரமப்படும் போதெல்லாம் அவனை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் செல்வேன். அவனுக்கு வேண்டிய அனைத்துப் பணிவிடைகளையும் முகம் கோணாமல் செய்தேன்.

இதுதான் நாம் செய்யவேண்டியது. அவர்களின் செயலுக்கு அவர்களே வெட்கப்படும்படிச் செய்யும் காரியம் இது. இந்த நற்செயல், பிற்காலத்தில் அவர்களின் மனத்தை மாற்றும்; பெண்கள் பற்றிய அவர்களின் சிந்தனையையும் மாற்றும்.

ஆறு மனமே ஆறு! - 11: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

பொதுவாகவே ஆண்களால் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட உலகத்திலேயே பெண்கள் தற்போது வாழ்கின்றனர். அத்தகைய உலகம் பெண்களுக்குத் தேவையா மக்களே. பெண்கள் தன்னையும் உயர்த்திக்கொண்டு, வாழும் சமுதாயத்தையும் உயர்த்தும் எண்ணம் கொண்டால், அவர்களின் நிலையும் மாறும்.

அதேநேரம், ‘சுதந்திரம்’ என்ற பதத்தைப் பெண்கள் ஆண்களுக்கு எதிரான ஆயுதமென தவறாகப் புரிந்துகொள்ளவும் கூடாது. அடுத்தவரின் வலி மற்றும் நிலைமையைப் புரிந்துக்கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக வாழ்வதற்கான லைசென்ஸ்தான் ‘சுதந்திரம்’ என்று மட்டும் எண்ணி விடாதே மகளே. அப்படி எண்ணும்போதுதான் ஆண் - பெண் இருவரிடையே முட்டல் மோதல் ஏற்படுகிறது!

சமுதாயத்தில், ஒரு பெண்ணின் - அவளுக்கே உரித்தான வளர்ச்சியை ஆண் தடுக்கக்கூடாது. உலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பெண்ணின் பங்கு மிகவும் இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொண்டால், இருவருக்கும் இடையே புரிதல் ஏற்படும். ஆக, ஒன்று பெண்ணின் வளர்ச்சிப் பாதையில் தடையாக நிற்காமல் விலகியிருக்கவேண்டும் அல்லது அவர்களுக்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். சரிதானே செல்லங்களே!

பெண் என்பவளும் சமூகம் தனக்கு என்ன கொடுக்கிறது என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், சமுதாயத்திற்கு தன்னுடைய பங்களிப்பு என்ன என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்துச் செயல்பட்டால், அவள் வளர்ச்சியடைவதுடன் சமுதாயத் துக்கும் நல்ல விஷயங்களைச் செய்யமுடியும். அதன் மூலம் அவளுக்குக் கிடைக்கவேண்டிய அனைத்தும் கிடைக்கும் அல்லவா?

ஆண் - பெண் இருவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குவதுடன், பரஸ்பரம் அனுசரித்து நிறைவான ஆற்றல் கொண்டவர்களாக உருவாகும்போது மட்டுமே பூரணத்துவம் பெறுகின்றனர். உண்மை என்னவென்றால், ஆண் என்பது பெண்ணின் ஒரு பாகம் என்று எண்ணுங்கள். இருவருமே தங்களுக்கே உரிய பொறுப்புகள், தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் அப்படிச் செயல்படுவதன்மூலம் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க முடியும்!

ஆண், பெண் இருவருக்கும் இயற்கையாய் அமையப்பெற்ற எல்லையற்ற ஆற்றல் ஒன்றே ஆகும்.

பெரும்பாலான ஆண்கள் பெண்ணை எப்படிப் பார்க்கிறார்கள் தெரியுமா? ஒரு டேப் ரெகார்டர் போலத்தான். டேப் ரெகார்டரில் ஒரு பட்டனை அழுத்தினால் பாடத் தொடங்கும். இன்னொன்றை அழுத்தினால் நின்று விடும். விரும்பும் இடத்துக்குப் பின்னோக்கிச் செல்ல ஒரு பட்டன், இடைவெளி விட்டு வேண்டும் இடத்திற்கு முன்னோக்கி செல்ல ஒரு பட்டன். இப்படித்தான் பெண்ணைத் தன் இஷ்டத்துக்குக் கட்டுப்படும் இயந்திரமாக்க நினைக்கிறார்கள்.

இந்த வகையில், `பெரும்பாலான ஆண்கள் தங்களின் உதவியின்றி பெண் வாழ முடியாது என்ற தவறான எண்ணம் கொண்டு அகங்காரத்துடன் வலம் வருகின்றனர்’ என்று சொல்லப்படுவது பெரும்பாலும் உண்மைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தலைமைப் பொறுப்பு என்பது, ஒருவர்மீது ஒருவர் ஆளுமை செலுத்துவதோ அல்லது ஒருவரை மற்றவர் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதோ அல்ல. இருவரும் பரஸ்பரம் சிநேகத்துடன் அடுத்தவருக்கு உதாரணமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

வளர்ச்சியடைந்த நாடுகளிலும், அரசியல் போன்ற துறைகளில் சமநிலை என்பது இன்றளவும் வெறும் பேச்சளவில்தான் உள்ளது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெண்களே அரசியல் களத்தின் உச்சத்தில் திகழ்வதைக் காணமுடிகிறது.

பெண்ணின் மனது தங்கு தடையற்ற நீரோட்டம் என்றால், ஆண் மகனின் மனது தேங்கி நிற்கும் நீராகிறது. பெரும்பாலான ஆண்களுக்கு ஒன்றில் மனத்தைச் செலுத்தினால் வேறு எதிலும் மனத்தைச் செலுத்தும் பக்குவம் இல்லை. அதாவது, தொழிலையும் குடும்பத்தையும் தனித் தனியாகப் பிரித்துவைத்து சமாளிக்கும் திறன் இருப்பதில்லை. தொழிலில் ஏற்படும் அழுத்தத்தை, வீட்டில் இருப்போரின்மீது காண்பிப்பது, வீட்டிலிருக்கும் கோபத்தை அலுவலகத்தில் காண்பிப்பது எல்லாமே இடியாப்பச் சிக்கல்தான். இரண்டையும் தனித் தனியாக பிரித்துப் பார்க்க முடிவதில்லை.

ஆனால், பெண்கள் எதிர்மாறானவர்கள். ஒவ்வொன்றையும் அதனதன் நிலையில் கையாளுவதில் திறமைசாலிகள். எனினும் அவர்களும் `ஆண் - பெண் இருவரும் ஒன்று’ என்று மனத்தளவில் தன்னைத் தயார்செய்து கொள்வதால் மட்டுமே நினைத்தது நடக்கும்; கேட்டது கிடைக்கும் மக்களே! அம்மாவின் பார்வையில் ஆண் - பெண் இருவரும் சமம்தான் மக்களே!

- மனம் மலரும்...

அம்மாவின் சிறு வயதில்...

ரவில் உரத்தக் குரலில் கிருஷ்ண கானம் பாடினால் இருப்பவர் களுக்குத் தொந்தரவு. அதன் பொருட்டு அவர்கள் கடிந்துகொள்ள, அதனால் அவர்களுக்குப் பாவம் ஏற்பட்டு

விடக்கூடாது. ஆகவே, மெல்லிய குரலில் பாடும் பழக்கத்தைக் கொண்டார் சுதாமணி.

அவ்வப்போது, வாய்விட்டு பாடமுடியவில்லையே என்ற ஏக்கம் எழும். அதன் காரணமாக அழுகையும் வரும். அப்போது வீட்டார், `அழுதால் வீட்டிற்கு ஆகாது’ என்று திட்டுவார்கள். ஆக, இப்படியும் போக முடியாது; அப்படியும் போக முடியாது... திரிசங்கு நிலை! ‘துன்பப்படுபவருக்குத் துணையும் தைரியமும் தெய்வமே’ என்பதற்கு ஏற்ப, இடர் வரும்போதெல்லாம் சுதாமணி கிருஷ்ண னையும் தேவியையும் தனக்குத் துணையாக அழைத்துக்கொள்வது வழக்கம்.

ஆறு மனமே ஆறு! - 11: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

மீனவக் குடும்பங்கள் வாழும் கிராமம் என்பதால், அங்குள்ள தேவாலயங்களின் சார்பில் பெண்களுக்காகப் பல வாழ்வாதாரப் பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம். அம்மா தனது 17-வது வயதில், அருகிலுள்ள தையற்கலை பயிற்சி மையத்தில் சேர்ந்தார். ஆர்வம், உழைப்பு என்று இணைந்து எளிதாகவும் விரைவாகவும் தையல் கலை நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றார்.

ஏற்கெனவே அவர் பெற்றோரின் அரைகுறை சம்மதத்தையே பெற்றிருந்தார். ஆகவே, அவர்களிடம் பயிற்சிக் கட்டணம் கேட்க முடியாத சூழ்நிலை. தான் தைத்துக் கொடுக்கும் துணிக்கு, வசதி உள்ளவர்களிடம் மட்டுமே கட்டணம் வாங்கி, அதன் மூலம் பெறும் வருவாயில் பயிற்சிக் கட்டணத்தைக் கட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு