Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 10: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

இதயத்தின் மொழி என்பது அன்பு மட்டுமே! நம்மிடத்தில் அன்பு நிறைந்திருந்தால்... அதுவே நிரந்தரமாகவும் குடிகொண்டு விட்டால், வேறு என்ன தேவை. அஹங்காரம், போட்டி, பொறாமை இவையெல்லாம் காணாமல் போய்விடுமே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்போது ஆணா, பெண்ணா என்ற கேள்விக்கே இடம் இல்லை. அது மட்டுமல்ல, கண்களில் வலது கண்தான் முக்கியம்; அல்லது இடது கண்தான் முக்கியம் என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியுமா? இரண்டு கண்களைக் கொண்டுதான் ஒரு காட்சியைப் பூரணமாகக் காணமுடியும்.

அதுபோன்றே ஆணும் பெண்ணும். இருவரும் ஒன்றுக்குள் ஒன்றாக அடங்கிய சக்திகள் என்பதைச் சரியாக புரிந்துக்கொள்ள வில்லை என்றால், வாழ்வில் இனிமை என்பது நம்மைவிட்டுப் போய்விடும் மக்களே!

பொதுவாகவே சமூகத்தில் ஆண்களின் ஆளுமை சற்று ஏறுமுகமாகவே இருக்கும். அப்பா, அண்ணன், தம்பி அல்லது வேற்று மனிதராக இருந்தாலும் சரி... அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால், குடும்பம் என்று எடுத்துக்கொண்டால், அங்கு பெரியவர்களே ஆண் பிள்ளைகளுக்கே அதிகப்படியான செல்லமும் முக்கியத்துவமும் கொடுத்து அவர்களை உயர்நிலையில் வைப்பார்கள்.

ஆறு மனமே ஆறு! - 10: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆகவே, இயல்பாகவே ஆண் பிள்ளைகளுக்கு ‘தான்’ என்ற எண்ணம் ஏற்பட்டு, பெண்களை ஒரு நிலை கீழ் வைத்து பார்க்கும் எண்ணம் தானாகவே உருவாகிவிடுகிறது.

நானும் ஒரு பெண் என்பதால், அம்மாவும் இளம் வயதில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வை சந்தித்தது உண்டு.

பெண்கள் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத காலம் அது. என்னுடைய மூத்த சகோதரன் சுபகன் எனக்கு நிறைய கட்டுப் பாடுகளை விதிப்பார். நிச்சயமாக ஆண்கள் யாரிடமும் பேசக்கூடாது. தண்ணீர் எடுக்கச் செல்லும்போது, வேறு பெண்களிடம் பேசுவதும் அவருக்குப் பிடிக்காது.

இரவில் தனியாக அமர்ந்து கிருஷ்ண கானத் தைப் பாடினால், “ஏன் இப்படி கத்துகிறாய். உன் தெய்வத்திற்கு காது செவிடா அல்லது உன் குரல் சொர்க்கத்திற்கு எட்ட வேண்டுமா” என்றெல்லாம் கடிந்துகொள்வார்.

பளிச்சென்று ஆடையுடுத்திச் சென்றால், `‘எதற்காக இந்த அலங்காரம்?’’ என்று கண்டிப்பார். அதுமட்டுமல்ல, அவருக்குப் பிடிக்காத எந்தச் செயலைச் செய்தாலும் கண்டிப்பாக திட்டு விழும்; சில நேரங்களில் அடித்ததும் உண்டு!

அவ்வப்போது எனது இளைய சகோதரனும் அவனது பங்கிற்கு “உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா... இப்படியெல்லாம் இரவில் கூத்தடிக்கிறாயே?” என்பான். பெற்றோரும் இதையெல்லாம் கண்டும் காணாதது போல இருப்பார்கள்.

ஏழைகளுக்கு நான் செய்யும் உதவி... அதுவும் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு உதவுவதைக் கண்டால், என் தந்தைக்கு ஏகத்துக்கும் கோபம் வந்துவிடும். ஒரு முறை அவர் என்னை மரத்தில் கட்டிவைத்து தண்டனை கொடுத்ததும் நினைவில் உள்ளது.

ஆறு மனமே ஆறு! - 10: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆண் வடிவிலான என்னுடைய `கிருஷ்ணபாவ’த்தை ஆண்கள் நிச்சயமாக அங்கீகரித்ததே இல்லை. கிண்டலும் கேலியுமாகப் பேசுவார்கள். அதாவது பரவாயில்லை, பெண்களில் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் நடந்துள்ளது. பிற்காலத்தில் அந்த ‘கிருஷ்ணபாவ’ தரிசனம் காண்பதற்கு அனைவரும் காத்திருந்ததும் நடந்தது! இது ஆண்டவனின் கட்டளை... யார்தான் தடுக்க முடியும்?

இவை அனைத்தையும் சகித்துக்கொண்டுதான் எனது தேடலை தொடர வேண்டியிருந்தது. என்னுடன் கிருஷ்ணனும் தேவியும் இருந்து வழிகாட்டினார்கள்.

ஆகவே ஆண் - பெண் எனும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் நிலைமை மாற வேண்டும் என உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன். ஆணும் பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும், என் செல்லங்களே!

- மனம் மலரும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அம்மாவின் கருணை!’  - எஸ்.ஆர்.மீரா, விரிவுரையாளர், சம்ஸ்கிருதம்

நான், தாய் இருந்தும் இல்லாத குழந்தையாகவே வளர்ந்தேன். நான் பிறந்ததிலிருந்தே என் தாய் புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆகவே, உறவினரிடம் வளரும் நிலை எனக்கு! யாரும் என்னைத் தன் வீட்டுப் பிள்ளைபோல் வளர்த்ததில்லை. யாராவது ‘மகளே’ என்று அழைக்க மாட்டார்களா என்று ஏங்கியது உண்டு.

எனக்கு அப்போது 5 வயது. அன்றுதான் முதலும் இறுதியாகவும் சிகிச்சை பலனின்றி இறந்தபோன என் தாயைக் கண்டேன். அக்காட்சி என் மனத்தில் இன்றளவும் ஆழமாகப் பதிந்ததுள்ளது.

அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, தனித்து விடப்பட்ட என் மனம் விரக்தியின் உச்சத்தை அடைந்து, மன வலி தாங்கமுடியாமல் தற்கொலைக்கும் முயற்சி செய்தேன்.

என்னுடைய 11 வயதில் எனக்குக் கிடைத்த அம்மாவின் முதல் தரிசனம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. என்னை அணைத்து ‘செல்ல மகளே’ என்று அம்மா அழைத்தபோது, நெகிழ்ந்துபோனேன். என் மனம் எதற்காக ஏங்கியதோ, அது கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றேன்.

அம்மா, என்னை ஆசிரம விடுதியில் சேர்த்துக்கொண்டார். படிப்பும் முடிந்தது. என் வாழ்வை மாற்றியமைத்த அம்மாவின் திருவடி சேவையில் ஐக்கியமாகிவிட நினைத்தேன். ஆனால், எப்போதும் பெண்களின் வாழ்வு சிறக்கவேண்டும் எனப் பணியாற் றும் அம்மாவின் சித்தம் வேறாக இருந்தது.

அவர் என்னைப் பார்த்து “மின்னும் நட்சத்திரம் போல் நீ ஜொலிக்கவேண்டும். சம்ஸ்கிருதம் படி” என்றார். எனக்கோ `சம்ஸ்கிருதமா?’ என்று தயக்கம்; மலைப்பு. எனினும் அம்மாவின் கட்டளைக்கு அடிபணிந்தேன். பெயருக்குப் பின்னால் M.A., M.Phil என அனைத்து பட்டங்களையும் சம்ஸ்கிருதத்தில் பெறுவதற்கும், கல்லூரியில் பணியாற்றவும் வழிகாட்டியது அம்மாதான். இவை அனைத்தும் அம்மா இட்ட பிக்ஷைதான்.

வறுமையில் வாடும் ஏழைகள், திக்கற்றவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் நிலையை மாற்ற, எது தர்மமோ அதைச் செய்வதற்கு அம்மா என்றுமே தயங்கியதில்லை. அம்மாவின் எல்லையில்லா கருணையினால் போராடி வெற்றி பெற்ற மீராவையே இங்குள்ளவர் காண்கின்றனர். இன்றும் என்றும் அம்மாவின் கைப்பற்றி நடப்பதே என் கடமை!