மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 11

ஶ்ரீரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீரங்கம்

ஶ்ரீரங்கத்தின் சரித்திரம் 2-ம் பாகம் இந்திரா செளந்தர்ராஜன்

பாலிற் கிடந்ததவும் பண்டரங்கம் மேயதுவும்
ஆலிற் துயின்றதுவும் ஆரறிவார்?
ஞாலத்தொரு பொருளை வானவர் தம் மெய்ப்பொருளை
அப்பில் அருபொருளை யானறிந்தவாறு...

- நான்முகன் திருவந்தாதியில்
திருமழிசையாழ்வார்

ரங்க ராஜ்ஜியம் - 11

முனைத் துறைவர் முதல் கேள்வியை முன்வைத்தார். ``உங்களை ஈன்ற உங்களின் தாய் ஒரு மலடி என்கிறேன். இல்லை என மறுக்க முடியுமா?’’

சிவந்த முகத்துடன் ஆக்கியாழ்வான் விக்கித்துப்போன நிலையில், அரசன்- அரசி முதல் அவையோர் சகலரும்கூட யமுனைத் துறைவரின் கேள்வியால் அதிர்ந்து போனார்கள்.

ஆக்கியாழ்வான் தாய் மலடியா? எனில், ஆக்கியாழ்வான் எப்படிப் பிறந்திருக்க முடியும்... எல்லோருக்குள்ளும் கேள்வி!

எல்லோரும் இப்படிக் கேள்விக்குள் சிக்கியிருக்கும்போதே அடுத்தக் கேள்வியையும் யமுனைத்துறைவர் விடுக்கலானார்.

“நம் அரசர் பெரும் புண்ணியர் அல்ல!”

இந்தக் கேள்வி, ஆக்கியாழ்வானை முன்பை விட அதிகம் அதிரச் செய்தது.

புண்ணியன் அல்லவா... எனில், எதைவைத்து அதை அவையோர் ஒப்புக்கொள்ளும் வண்ணம் நிரூபிப்பது? இந்த இரண்டாவது கேள்வி அரசனையே ஒரு மிரட்டு மிரட்டிவிட்டது. இரண்டாம் கேள்விக்குள்ளும் எல்லோரும் சிக்கித் திணறிய வேளையில் 3-வது கேள்வியை யமுனைத்துறைவர் முன்வைக்கலானார்.

மகாகணம் பொருந்திய வாதப்பிரதிவாதப் பயங்கரரே... இதோ என் மூன்றாம் கேள்வி... `நம் அரசியார் பத்தினியல்ல?'

அவர் இப்படி இந்தக் கேள்வியை முன்வைக் கவும் அரசியும் பதறத் தொடங்கினாள். `எதை வைத்து நான் பத்தினியல்ல என்று கூறுகிறான். இந்த இளம்பிள்ளையைப் பெரும் புத்திசாலி எனத் தவறாகக் கருதிவிட்டோமோ... கேள்வி கேட்கத் தெரியாமல் கேட்கிறானோ... ஒரு கேள்விகூட முறையானதாக இல்லையே...

உன் தாய் ஒரு மலடி, அரசன் புண்ணியன் அல்ல, அரசி பத்தினியல்ல என்கிற எதிர்மறை களை எப்படி ஒருவர் நிரூபிக்க முடியும்?'

அரசிக்குள் எண்ண ஓட்டங்கள் ஓடத் தொடங்கிவிட்டன. அரசனும், `இந்தப் போட் டிக்கு ஏற்பாடு செய்து மேடை அமைத்துத் தந்தது தவறோ' என்று எண்ணிக்கொண்டிருக்க, அவையில் ஒரே சலசலப்பு. நிறைவில் ஒரு முடிவுக்கு வந்தவராக நடுவர்களில் ஒருவர் எழுந்து பேசலானார்.

``இளம்பிள்ளையே! உன்னை ஒரு மேதை யாகக் கருதியதை எண்ணி வெட்கப்படு கிறோம். நீ கேட்ட கேள்விகள் அதிகப் பிரசங்கித்தனமானவை மட்டுமல்ல... எண்ணிப் பார்க்கவே இயலாதவை. பொறுப்பின்றி நீ உனது விளையாட்டுத்தனத்தை இங்கே காட்டி விட்டதாகவே கருதுகிறோம். என்றார்.

அதைக்கேட்ட யமுனைத்துறைவர், ``இப்படி அவசரப்பட்டு கருத்து சொல்வது நடுவர்க்கு அழகல்ல. போட்டி விதிகளின்படி என் கேள்விகளை எதிர்கொள்ள இயலவில்லை என்றால், அதை ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி விமர்சிக்கக் கூடாது” என்றார்.

``எனில், உன்னால் மறுத்து நிரூபிக்க முடியுமா?''

``ஆக்கியாழ்வார் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளட்டும். பிறகு நிரூபிக்கிறேன்...''

யமுனைத்துறைவர் இப்படிச் சொன் னதும் அடுத்த நொடி எல்லோரின் பார்வையும் ஆக்கியாழ்வான் பக்கம் சென்றது.

``பித்துக்குளித்தனமான கேள்விகள்... சிறு பிள்ளையை ஏவி விட்டு என்னை அவமானப் படுத்த பார்த்திருக்கிறார் மகாபாஷ்ய பட்டர். இதற்கு முதலில் அவர் மன்னிப்புக் கோர வேண்டும்'' என்று ஆக்கியாழ்வான் யமுனைத்துறைவரின் குருவை சடுதிக்கு இழுத்தான். மகாபாஷ்யரும் கலங்கிப் போனவராக யமுனைத்துறைவரைப் பரிதாபமாகப் பார்த்தார்.

``அஞ்சாதீர்கள் குருவே! நான் சரியான கேள்விகளையே கேட்டுள்ளேன். இவர்களுக்கு விடை கூறத் திராணியில்லை. அதனால், என் தோற்றம் மற்றும் வயதை வைத்து சிறு பிள்ளை எனக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.''

``யமுனைத்துறைவா! நீயாக இது என் கருத்து என நிரூபிப்பதோ, மறுப்பதோ ஏற்கப்படாது. உரிய பிரமாணங்கள் வேண்டும்...''

``நிச்சயமாக... பிரமாணம் இல்லாத ஒன்றை நான் சிந்திக்கவே மாட்டேன்.''

``அப்படியானால் நிரூபி பார்க்கலாம்..''

``உங்களுக்குக் கூடவா என் மேல் அவநம்பிக்கை...?''

``எனக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான். ஆக்கியாழ்வாரை பெற்ற ஒரு தாய் எப்படி மலடியாவாள்? நம் மக்களையும் நாட்டையும் தர்மநெறி தவறாமல் ஆளும் அரசன் எப்படி பாவியாவான்? அந்த அரசனை தன் புருஷனாக பெற்று கற்பு தவறாமல் வாழ்ந்து வரும் அரசி எப்படி பத்தினி இல்லாது போவாள்? இப்படியெல்லாம் கேட்க உனக்கே தயக்கமாக இல்லையா?''

``விடை தெரிந்த நிலையில் ஏன் தயக்கம்?''

``யமுனைத் துறைவா! மீண்டும் சொல்கிறேன்... உன் விடை பிரமாணமுடையதாக இருக்க வேண்டும்; சான்றுடன் நீ நிரூபிக்க வேண்டும்.''

“நிச்சயம் நிரூபிப்பேன். என் கருத்து என்று ஒன்றே கிடையாது. சாத்திரமும் அறநெறிகளும் கூறியதையே கூறிடுவேன்...”

யமுனைத்துறைவர் இவ்வாறு சொன்ன தும் “அப்படியாயின் கூறு பார்க்கலாம்...'' என்று அரசர் குரல் கொடுத்தார். யமுனைத்துறைவரும் கூறத் தொடங்கினார்.

“அரசே! தனிமரம் என்றுமே தோப்பானதுஇல்லை. அந்த அடிப்படையில் ஒரே ஒரு பிள்ளையை மட்டுமே பெற்றவளும் தாயில்லை என்பதே சாத்திரக் கருத்து. அதை வைத்தே நான் ஆக்கியாழ்வான் தாயை மலடி என்று கூறுகிறேன். அதேபோல், ஒர் அரசன் எத்தனை தர்மவானாக இருந்தாலும் பயனில்லை. நாட்டு மக்கள் செய்யும் பாவங்களுக்கு அவனும் பொறுப்பேற்க வேண்டும். அவ்வகையில், எந்த அரசனும் புண்ணியனாக இருக்க இயலாது. இது அறநூல் கருத்து.

மூன்றாவதாக அரசியார் பத்தினியல்ல என்பதற்கும் பிரமாணம் உண்டு. அவருக்கு மணம் நிகழ்ந்தபோது முதலில் அவர் இந்திரன் முதலான தேவர்களுக்குத் தாரை வார்க்கப் பெற்று, பிறகு கணவனுக்கு வார்க்கப்படுகிறாள். தேவர்களோடு திரேகசம்பந்தம் கொள்ளா விடினும் மந்திர சம்பந்தம் ஏற்படுவதால், தேவ புருஷர்கள் ஒரு பெண் வகையில் மணாளன் ஸ்தானத்திற்கு வருகின்றனர். இதை வைத்தே அரசியார் பத்தினியல்ல என்றேன்.

இதில் என் விருப்பமோ, எனக்கென தனிக்கருத்தோ இல்லை. எல்லாமே நம் சாத்திரங்களும் அறநூல்களும் கூறியவையே. இப்போது நடுவர் பெருமக்களுக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்'' என்று முடித்தான்.

அடுத்தநொடியே நடுவர்கள் எழுந்து நின்று அந்தக் கருத்துகளை ஆமோதித்து கைகளைத் தட்டினர். அரசனும் அரசியும் அப்பாடா என பெருமூச்சு விட்டனர். மகாபாஷ்ய பட்டரும் மனம் குளிர்ந்து மெய்சிலிர்த்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 11

அதன்பின்னர் மொத்த அவையுமே யமுனைத்துறைவரை ஒப்புக்கொண்டு கை தட்டியது. ஆக்கியாழ்வான் முகம் மட்டும் இருண்டுபோனது. `ஆக்கியாழ்வான் தன் தோள்களில் யமுனைத்துறைவரைச் சுமக்க வேண்டும்' என்று நடுவர்கள் கட்டளை யிட்டனர். ஆக்கியாழ்வானும் வேண்டா வெறுப்பாக தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து யமுனைத்துறைவருக்குத் தோள் கொடுக்கத் தயாரானான்.

ஆனால், யமுனைத்துறைவர் தோளில் ஏறி அமர சம்மதிக்கவில்லை.

``ஆழ்வாரே! நீர் என்னிலும் வயதில் பெரியவர். கல்வி கேள்வி களிலும் நிறைந்தவர். நீர் என்னைச் சுமத்தல் கூடாது. நீர் இனி ஆணவமின்றி செயல்பட் டால் அதுவே போதும். `நானே பெரும் புலவன்' என்ற செருக்குடன் இனி எவரிடமும் வரி வசூலிக்காமல், எல்லோரின் ஆசியும் பெரிதென்று கருதி அதனைப் பெற்றிட முயலுங்கள்'' என்றார்.

ஆக்கியாழ்வான் மட்டுமன்றி மொத்த அவையே அதைக்கேட்டு சிலிர்த்துப் போனது. யமுனைத்துறைவரிடம் குறைவாய் இருப்பது வயதுதான். ஆனால் அவர் மனது மிக நிறைவாக இருக்கிறது என்று பாராட்டினர்.

அரசன் எழுந்து வந்து யமுனைத்துறைவரை அணைத்துக் கொண்டார். அரசியாரோ மெய்சிலிர்த்தவளாக ``இந்தப் போட்டியில் நீர் எம்மை எல்லாம் ஆண்டு வெற்றி கொண்டீர். அதனால் உம்மை நான் ஆளவந்தார் என்றே விளிக்க விரும்புகிறேன்” என்று ஒரு புதிய பெயரையே சூட்டினாள்!

கூடுதலாக ஓர் அரண்மனையோடு ஓர் ஊரையும் இன்னும்பல பரிசுகளையும் அளித்தாள். அதைக் கண்டு குருவான மகா பாஷ்ய பட்டரின் கண்களில் ஆனந்த நீர்ப் பெருக்கு!

``யமுனைத்துறைவா! உன்னால் சான்றோர் உலகம் தலைநிமிர்ந்து விட்டது. செருக்குடையோர்க்கு எல்லாம் நீ பாடம் கற்பித்துவிட்டாய்'' என்று உள்ளம் உருகினார்.

இத்தகைய யமுனைத்துறைவராகிய ஆளவந்தாரின் பெரும் வெற்றியைக் கேட்டறிந்த மணக்கால் நம்பி, இப்படிப்பட்ட ஒரு மேதையிடம் தானும் சீடனாகி மேன்மை அடையவேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன் நிமித்தம் ஆளவந்தார் இல்லம் நோக்கி அவர் சென்ற தருணத்தில், பெரும் கூட்டத்தின் நடுவில் காணப்பட்டார் ஆளவந்தார்!

மணக்கால் நம்பியால் அவரை நெருங்கி தன்னை அறிமுகம் செய்துகொள்ள இயல வில்லை. சொல்லப்போனால், மணக்கால் நம்பியைப் போலவே பலர் ஆளவந்தாரைத் தங்கள் குருவாகக் கருதி அவரிடம் மாணவனாக சேர்ந்திட அலைமோதிக் கொண்டிருந்தனர்.

இவ்வளவுபேருக்கு நடுவில் தன்னால் அவர் கவனத்தை ஈர்த்துச் சீடனாக முடியுமா என்கிற பெரும் கேள்வியும், ஒரு தயக்கமும் மணக்கால் நம்பிக்கு ஏற்பட்டது. அதனால் அவரின் மனம் சலனம் அடைந்தது. நேரே திருவரங்கப் பெருமானின் சந்நிதிக்குச் சென்று, தன் விருப்பம் நிறைவேறிட யாது வழி என்று பெருமாளிடம் கேட்டு மனம் கலங்கி நின்றார்.

அவ்வேளை அங்கு சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர், தன் வசம் எம்பெருமானின் பிரசாதமாய் திருத்துழாயையும் தாயார் பிரசாதமாய் மஞ்சள் காப்பையும் வைத்துக் கொண்டு, “யாம் இப்பிரசாதங்களுடன் தூதுவளைக் கீரையையும் பறித்துக்கொண்டு ஆளவந்தாரைக் காணச் செல்ல வேண்டும்” என்று பேசியது, மணக்கால் நம்பியின் காதில் விழுந்தது.

அதேபோல், ``ஆளவந்தாருக்கு அரங்கப் பிரசாதம் சரி... எதற்குத் தூதுவளைக் கீரை?'' என்று அந்த அன்பரிடம் வேறொருவர் கேட்பதையும் கண்டார்.

``ஆளவந்தார் அமுது செய்கையில், அன்றைய உணவில் நெய்யில் பொரித்த தூதுவளைக் கீரை இருந்தே தீரவேண்டும். ஞாபகத்திறன், செம்மையான ரத்த ஓட்டம், ஆழ்ந்த உறக்கம் ஆகியவற்றைத் தரவல்லதாயிற்றே இந்தத் தூதுவளை? தினமும் இதுபோல் ஒரு கீரையை உண்பவர், ஊரையே வெல்பவனாகத் திகழ்வான் என்று நீர் கேள்விப்பட்டதில்லையா?”

``ஓ... அதுதானா சங்கதி?''

``ஆம்! இப்பழக்கம் ஆளவந்தாருக்கு அவர் குருவான மகாபாஷ்ய பட்டரிடம் இருந்து வந்தது. ஆகையால் தூதுவளையை உண்ணும் போது குருவின் நினைவும் எழும். ஒரு நல்ல சீடன் அதை விரும்புவான் அல்லவா?''

இப்படி அவர்கள் பேசிக்கொண்டது மணக்கால் நம்பி முகத்தில் ஒரு பிரகாசத்தை உண்டாக்கியது. அவர் வீட்டுத் தோட்டத்திலும் தூதுவளைக் கீரை மிக உண்டு. எனவே, அதை ஆளவந்தாருக்குத் தினமும் தரும் சாக்கில் அவருடன் நெருக்கத்தை உருவாக்கிக்கொள்ள அரங்கனே வழிகாட்டி இருப்பதாகக் கருதினார் நம்பி.

நேராக தோட்டத்துக்குச் சென்று ஒரு கூடை நிறைய கீரையைப் பறித்து, துணுக்குகள் இன்றி ஆய்ந்துப் பிரித்து, பின்னர் ஈரவஸ்திரத்தில் அழகாய் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

இம்முறை, ஆளவந்தாரின் அரண்மனையில் சுலபமாக அடுக்களை வரை நுழைய முடிந்தது. அங்கு பரிசாரகராக இருப்பவரின் வசம் கீரை மூட்டையைத் தநந்தார் மணக்கால் நம்பி.

அத்துடன், “இனி தினமும் இப்படித் தருவது என் கடமை” என்றும் கூறினார்.

பரிசாரகர் அதைக் கேட்டு வியந்தார்.

- தொடரும்.