Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்!

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
News
வீர பிரம்மேந்திரர்

`பாபா மாமி' ரமா சுப்ரமணியன்

சித்தய்யாவுக்கு சுவாமி வீரபிரம்மேந்திரரின் குரு உபதேசம் நிகழ்ந்தது. சீடனின் தன்மை எத்தகையதாக இருக்க வேண்டும் என்று உபதேசித்தார் ஸ்வாமி.

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்!

“சித்தய்யா! சீடராக இருக்க விரும்புவோர், குரு சேவையில் தம்மையே அர்ப்பணிக்கவேண்டும். குருவின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை, பக்தி, அமைதி, பொறுமை ஆகியவையே குருபக்திக்கான அடிப்படைப் பண்புகள். தனது கர்மாவின் நற்பலன்கள் அனைத்தையும் குருவுக்குக் காணிக்கையாக்க வேண்டும். முக்தி அடைவதைத் தவிர, வேறு எந்த ஆசைகளும், விருப்பு - வெறுப்புகளும் சீடனுக்கு இருக்கக் கூடாது. அத்வைத வேதாந்தத்தில் கூறப்பட்டுள்ளவாறு, குருவையே தன் உலகமாகவும், இறைவனாகவும், சர்வமுமாகவும் எண்ணவேண்டும்’’ என்ற ஸ்வாமி, அடுத்து குருவின் தன்மையை விவரித்தார்.

``அன்புக் குழந்தையே! உண்மையான குரு என்பவர் நீதி - நியாயம் மற்றும் தர்மத்தின் வழியில் நடக்கவேண்டும். குரு எனும் பதவியின் மீது பெருமையோ, கர்வமோ கொள்ளக் கூடாது. தம்மை எவர் அவமதித்தாலும் புகழ்ந்தாலும் இரண்டையும் சமமாக ஏற்கும் பக்குவத்தைப் பெற்றவராக இருக்கவேண்டும். எல்லோரிடமும் அன்பையே வெளிப்படுத்த வேண்டும். சகல உயிர்களையும் ஒன்றாகக் கருதி நேசிக்கவேண்டும்.

அன்புள்ள சித்தா! குரு என்பவர் ஆகாயத் திலிருந்து குதிப்பவர் அல்ல. இல்லறத்தில் இருந்தாலும் ஒருவர் தூய்மையான உள்ளம் கொண்டிருப்பவர் எனில், அவரும் `குரு' எனும் தகுதியைப் பெறலாம். ஆண், பெண், இனம் மற்றும் மத பாகுபாடுகள் குருவுக்கு இல்லை.

பிரம்மத்தைக் குறித்து ஆத்ம விசாரணை செய்யும் எவரும் குருவாகும் தகுதியைப் பெறுகிறார்கள். பிரம்மத்தை அறிந்த அத்தகைய குரு எவராக இருந்தாலும் சரி... ஆணோ, பெண்ணோ... அவரைக் குருவாக மனதார ஏற்று சேவை செய்யலாம்.

பிரம்ம ஞானத்தை அடைய விரும்புவோர், கடந்த காலத்தை எண்ணிக் கவலைகொள்ளத் தேவையில்லை. ஒருவர் கடந்த காலத்தில் எப்படி இருந்தாலும், மனம் திருந்தி ஆத்ம விசாரணையில் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால், நிச்சயமாக அவரும் குருவாகும் தகுதியை அடையலாம். பிரம்ம ஞானம் என்பது குலம், இனம், மதம், ஆண், பெண், குழந்தைகள், பெரியவர் என்ற வேறுபாடுகள் எல்லாவற்றையும் கடந்த ஒன்று!’’

குருதேவரின் உபதேசத்தால் மகிழ்ந்த சித்தய்யா, ``ஸ்வாமி! பிரம்ம ஞானத்தை அடை யவே தங்களிடம் வந்துள்ளேன். தயவுகூர்ந்து எனது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற நான் செய்யவேண்டிய காரியங்கள் குறித்து கூறுங்கள்’’ என்று வேண்டிக்கொண்டான்.

ஸ்வாமி புன்னகையுடன் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார். அதற்கான விளக்கத்தையும் உபதேசமாக எடுத்துரைத்தார்.

``நாம் எப்போதும் ஏதோ ஒருவித பயத்துட னேயே இருக்கிறோம். ஆம்! நமது வாழ்வை பயம் எனும் மாயை தின்று விடுகிறது. ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொருவித பயம் உண்டு. சிறியதோர் உதாரணம் மூலம் சத்தியத்தை உணர்த்துகிறேன், கேள்...

ஒரு காட்டில் `மாயா’ எனும் வேட்டைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ஆசை என்பதாகும். அவன் `அறியாமை' எனும் இருளில் மூழ்கியிருப்போரை மட்டுமே வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டவன். வேட்டைக்கு முன் `பந்தம்' எனப்படும் குழிகளை நிறைய இடங்களின் தோண்டிவைப்பான்.

இரைகள் பந்தமாகிய குழிகளில் விழுந்து அவனிடம் மாட்டிக் கொள்ளும். அவற்றின்மீது `விருப்பம்' ஆகிய வில்லின் மூலம் `கர்வம்' எனும் அம்பை தொடுப்பான். அதுமட்டுமா? அந்த வேட்டைக்காரன் தனக்கு இரை கிடைத் தாலும் முடிவில் அவற்றை யமதர்மனுக்கே அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவான்!

இதை உணராமல் உலகத்தவர் அனைவரும் வீடு, மனைவி, மக்கள், கெளரவம், அந்தஸ்து, பெருமை, பதவி ஆகியவற்றின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான ஞானத்தைக் கொண்டவனோ, நடப்பவை அனைத்தும் கர்மபலன்களே என்பதை உணர்ந்துகொள்வான். தாம் சாட்சி யாக மட்டும் நின்று நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பான்.

சந்தோஷத்தையும் துக்கத்தையும் நம் சரீரம் மட்டுமே அனுபவிக்கும். அவை ஆத்மாவை நெருங்காது. இத்தகைய உணர்வுகளுக்கும் ஆத்மாவுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த உண்மையை ஒருவன் உணர்ந்து கொண்டால், உடலுக்கு என்ன நேர்ந்தாலும் அவன் அதைப் பொருட்படுத்த மாட்டான். அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பான். அப்படியானவர்களே சத்தியத்தை அறிந்தவர்கள். அவர்களால் மட்டுமே அமைதி யையும் நிம்மதியையும் அனுபவிக்க முடியும்’’ என்று விவரித்தார் வீரபிரமேந்திரர்.

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்!

தொடர்ந்து, ``சித்தய்யா! நான் இப்போது ரத்தமும் சதையுமாக மாமிசப் பிண்டமாக இருக்கும் உன் சரீரத்தைத் தெய்விக அதிர்வு கொண்ட மந்திர பிண்டமாக மாற்றுகிறேன். இப்போது முதல் உடலைப் பற்றிய உணர்வுகள் நீங்கி, ஆத்மாவைப் பற்றிய சிந்தனையே உன்னுள் இருக்கும். நான் உபதேசித்த மந்திரம் உனக்கு ஆத்மசக்தியை வழங்கும்.’’ என்று அருள்பாலித்தார்.

மிகவும் மகிழ்ந்த சித்தய்யா, தாரக யோக உபதேசங்களையும் தனக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டான்.

யோக மார்க்கத்தில் நுழையுமுன் புலன்களை அடக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டும். புலன்களை அவற்றின் போக்கில் சென்று வெல்லவேண்டும். பஞ்சமுத்ரா எனப்படும் ஐந்துவித முத்திரை கலைகளை அறிந்து பக்தியுடன் அவற்றைப் பயிலவேண்டும். கேச்சரி, பூச்சரி, மத்யமா, சண்முகா மற்றும் சாம்பவி. இவையே பஞ்சமுத்திரைகள் ஆகும். இவற்றைப் பயிலும் அன்பர்களுக்கு சிட்டி, சின்னி, கண்டா முதலான தசவித ஓசைகள் உள்ளத்தில் ஒலிக்கத் தொடங்கும்.

`தான் இறைவனின் உறைவிடம்; தனக்கும் இறைவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை' என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்கு ஐந்துவித முத்திரைகளும் கட்டுப்படும். தொடர்ந்து, பத்துவித புனித ஓசைகளும் உள்ளத்தில் ஒலிக்கும்!

இவ்வகை முத்திரைகளைக் கையாளும் முறைகளை, தசவித ஓசைகளின் மேன்மையை சித்தய்யாவுக்கு விரிவாக உபதேசித்தார் வீரபிரம்மேந்திர ஸ்வாமிகள்.

பின்னர், ‘`சித்தா! நான் உனக்கு லட்சிய த்ரயம்பகம் என்பது குறித்து பிறிதொரு நாளில் விளக்குகிறேன். நாளை விடிந்ததும் நாம் புனித யாத்திரையாக பல இடங்களுக்குச் சென்று வருவோம். யாத்திரை முடிந்து திரும்பும்போது இன்னொரு சீடர் என்னைத் தேடி வருவார். லட்சிய த்ரயம்பகம் குறித்து உபதேசிக்க வேண்டுவார். அவருக்கும் உனக்கும் அதுபற்றி உபதேசிப்பேன்’’ என்று கூறிவிட்டு, தவத்துக்காக தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

மறுநாள் அதிகாலையில் புனித யாத்திரை தொடங்கியது. ஆந்திர பிரதேசத்தில் பல கிராமங்களுக்கும் அங்குள்ள புனித ஆலயங் களுக்கும் சென்று தரிசனம் செய்தார்கள். பின்னர் விஜயவாடாவில் புனித கிருஷ்ணா நதியில் நீராடினார்கள். தொடர்ந்து `இந்த்ர கீலாத்ரி’ மலைப்பகுதியில் அமைந்த தேவி கனகதுர்கா மாதாவை தரிசித்தனர்.

அங்கு ஸ்வாமியின் உத்தரவின் பேரில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து விட்டு, வேறுபல தலங்களுக்குச் சென்றனர். ஸ்வாமி சென்ற இடங்களில் எல்லாம் பக்தர்க் கூட்டம் திரண்டு வந்து அவரை தரிசித்து, ஆன்மிக ஐயம் நீங்கிச் சென்றது.

ஸ்வாமியின் குழு ஹைதராபாத் பகுதியை அடைந்தது. விஸ்வகர்மா குலத்தவர் ஸ்வாமியை மகிழ்ச்சியோடு வரவேற்று உபசரித்தனர். புண்ணிய யாத்திரை முடிவடையும் தருணத்தில் - ஒரு மாலைப் பொழுதில், விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் ஸ்வாமியை தரிசிக்க வந்தார்.

வெகுகாலமாக தன் மனத்திலிருந்த விருப்பத்தை ஸ்வாமியிடம் தெரிவிக்க விரும்புவ தாகவும், தன்னுடைய சந்தேகங்களுக்கெல்லாம் ஸ்வாமியிடமே விடை கிடைக்கும் என்றும் கூறி, அதற்கான அனுமதியை வேண்டினார்.

ஸ்வாமி புன்னகையோடு கூறினார்:

``லட்சிய திரயம்பகம் குறித்து அறிய வேண்டும் அப்படித்தானே? தெளிவாக விளக்குகிறேன்!’’

உள்ளத்தில் உள்ளதைப் படித்தறிந்தவர் போல் ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் கூறியதைக் கேட்டு வியந்து நின்றார் அந்த அன்பர்!

- தொடரும்...