Published:Updated:

கீர்த்தி தரும் தை கிருத்திகை!

தை கிருத்திகை
பிரீமியம் ஸ்டோரி
News
தை கிருத்திகை

இந்த வருடம் பிப்ரவரி 3-ம் நாள் தை கிருத்திகை திருநாள்.

கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் இணைந்து முருகப்பெருமானை வளர்த்ததால், அவர்களின் தியாகத்தைப் போற்றி அன்னை சக்தி ஆசீர்வதித்து வரமருளினார். அதன்படி மாதம்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாள், முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினமானது.

அதிலும் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வரும் கார்த்திகை தினங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை: உத்தராயனத்தின் தொடக்கமான தை மாத கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த வருடம் பிப்ரவரி 3-ம் நாள் தை கிருத்திகை திருநாள். இந்த நாளில் முறைப்படி விரதமிருந்து முருகனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் சேரும் என்பார்கள். உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு தை கிருத்திகை விரதம் இருந்தால் உவப்பான செய்தி வரும்; குறிப்பாக திருமண வரன் தொடர்பான நல்ல செய்தி விரைவில் தேடி வரும் என்பது நம்பிக்கை.

தை கிருத்திகை
தை கிருத்திகை

பிள்ளைச்செல்வம் வேண்டும் பெண்கள் தை கிருத்திகையில் பாலமுருகனை வழிபட்டால் கந்தவேளின் கருணை கிட்டும்; குழந்தை வரம் கிடைக்கும் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் திருநாளில் முருகப்பெருமானின் தலங்களில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். இதை தரிசிப்பதும் அபிஷேகத்துக்கான பால், விபூதி, பன்னீர், தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதும் சிறப்பானது.

கிருத்திகை விரதத்துக்கு முதல் நாளான பரணி நட்சத்திர நாளின் இரவன்று கொஞ்சமாக சைவ உணவு உண்டு விரதம் தொடங்க வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலை நீராடி, கந்தபுராணம் முதலான ஞானநூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.

‘அபிஷேகத்துக்குப் பழநி; அலங்காரத்துக்குச் செந்தூர்’ என்பார்கள் பக்தர்கள். இந்த நாளில் இந்தத் தலங்களை தரிசிப்பது வெகு விசேஷமானது. கிருத்திகை விரதம் கீர்த்தியை அளிக்கும். செவ்வாய்க் கிரகத்தால் உண்டாகும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ பிரச்னைகள், சொத்து பிரச்னைகள், எதிரிகளால் உண்டாகும் சங்கடங்கள் யாவும் இந்த விரதத்தால் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் சேரும்.

`உன்னையே திட்டிக்கொள்!’

மண மகரிஷியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட இளைஞன் ஒருவன் ஒருநாள் அவரிடம் வந்து, தன்னை ஒருவர் அடிக்கடி திட்டுவதாகவும், அதனால் தனக்குக் கோபம் வருவதாகவும், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டான். ரமணர் அதற்கு, ‘‘நீயும் அவனோடு சேர்ந்து உன்னையே திட்டிக்கொள்!’’ என்றார்.

கீர்த்தி தரும் தை கிருத்திகை!

வாலிபன் திகைத்தான். அதற்கு பகவான் அவனைப் பார்த்து, ‘‘உன்னைத் திட்டுபவன் உன் உடம்பைப் பார்த்துத்தானே திட்டுகிறான். கோபதாபங்களுக்கு இடமான இந்த உடலைவிட நமக்குப் பெரிய விரோதிகள் யார் இருக்கிறார்கள்?! ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் அவர் நம்மைத் தட்டி எழுப்புகிறார், உஷார்படுத்துகிறார் என்று அர்த்தம். அப்போது நாமும் அவருடன் சேர்ந்துகொண்டு இந்த உடம்பைத் திட்டித் தீர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு திட்டியவரை நாம் திரும்ப திட்டுவதால் என்ன பயன்? நம்மைத் திட்டுபவர்கள் நமது நண்பர்களே. திட்டுபவர்களின் மத்தியில் நாம் இருப்பது நல்லது. அப்படியில்லாமல் நம்மைப் புகழ்பவர்கள் மத்தியில் இருந்தால், நாம் ஏமாந்துதான் போக வேண்டும்!’’ என்று கோபத்தை வெல்லும் வழியைக் கூறினார் பகவான் ரமணர்.

விதிமுறைகளும் வழிபாடும்!

குரு ஒருவர் தன் சீடனுடன் மாட்டுவண்டியில் போனார். அவருக்குத் தூக்கம் வந்தது. ‘வண்டியிலிருந்து ஏதாவது விழுகிறதா என்று பார்’ என சீடனுக்கு உத்தரவு போட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார்.

கொஞ்சதூரம் போனதும் வண்டி தடதடவென தூக்கிப்போட்டது. உள்ளேயிருந்து புத்தக மூட்டை, தானிய மூட்டை என ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. சீடன் எல்லாவற்றையும் பார்த்தபடி வந்தான். சிறிது நேரம் கழித்து குரு கண்விழித்தார். சீடன் முகம் வெளிறியிருந்தது. காரணத்தை விசாரித்தார் குரு.

கீர்த்தி தரும் தை கிருத்திகை!

``ஒரு மைலுக்கு அப்பால் புத்தக மூட்டை விழுந்தது. சமீபத்தில் தானிய மூட்டை விழுந்தது” என்றான்.

“ஏன் எடுக்கவில்லை?” கோபத்தோடு கேட்டார் குரு.

“பார்த்துக்கொண்டிரு என்றுதானே சொன்னீர்கள்” என்றான் சீடன்.

முட்டாள் சீடனிடம் விளக்கமாகச் சொல்லாதது தன் தவறே என்று நினைத்த குரு, “வண்டியிலிருந்து எது விழுந்தாலும் எடுத்து வந்து வண்டியிலேயே வை” என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினார். கொஞ்சதூரம் போனதும் மாடு சாணம் போட்டது. சீடன், உடனே கீழே இறங்கிப்போய் அதை எடுத்து வண்டிக்குள் போட்டான். அது குருவின் முகத்தில் விழுந்தது. நாற்றம் சகிக்காத குரு எழுந்து பார்த்தார்.

“மாடு சாணத்தைக் கீழே போட்டது. அதான்” என்றான் சீடன். குருவுக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கோபம் வந்தது. தன் தலையில் தானே அடித்துக்கொண்ட வராய் ஒரு பேப்பரில் எல்லாப் பொருள்களின் பெயரையும் எழுதி, “இவற்றில் எது விழுந்தாலும் திரும்ப வண்டியில் எடுத்துவை” என கர்ஜித்து திரும்பவும் தூங்கினார்.

அடுத்துவந்த திருப்பத்தில் மாடு எதிர்பாராமல் வேகமாக நகர, வண்டி தடுமாறி குரு தூக்கியெறியப்பட்டு, சாலையோரம் இருந்த வைக்கோல் போரில் விழுந்தார். சீடன் தவித்தான். தன்னிடம் இருக்கும் சீட்டைப் பதற்றமாகப் பார்த்தான். அதில் குருவின் பெயர் இல்லை. வண்டி தன் பயணத்தைத் தொடர்ந்தது. இந்த சீடனைப் போல பலர் விதிமுறைகளின்படி மட்டுமே செயல்படுகின்றனர்; வழிபடுகிறார்கள். பக்தி, விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அது மனத்தின் அடி ஆழத்திலிருந்து வருவது!

- மாணிக்கவாசகன், திண்டிவனம்.