திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

குகன் தடுத்தது ஏன்?

துளசிதாசர்
பிரீமியம் ஸ்டோரி
News
துளசிதாசர்

துளசி தாசரின் சிலிர்ப்பூட்டும் கதை இது! பாலா ஓவியம்: மாருதி

ஶ்ரீராமனும், சீதையும், இலக்குவனும் கங்கையைப் படகில் கடந்ததைச் சாதாரணமாகவே வர்ணிக்கிறது வால்மீகி ராமாயணம். இதையே ராமபக்த கவிஞர் ஒருவர் மிக அற்புதமாகச் சித்திரிக்கிறார். எப்படித் தெரியுமா?

குகன் தடுத்தது ஏன்?

தம்பியுடனும் தாரத்துடனும் கானகத்துக்கு வரும் ராமனை உள்ளன்புடன் உபசரிக்கிறான் குகன். அவனது வேண்டுகோளை ஏற்று, கங்கைக் கரையில் இரவைக் கழிக்கும் அவர்கள், காலையில் கங்கையைக் கடப்பதற்காக குகனின் ஓடத்தை நெருங்குகின்றனர்.

அப்போது, ‘`ஐயா, மன்னியுங்கள். என் படகில் ஏறத் தங்களை அனுமதிக்க இயலாது’’ என்று தடுக்கிறான் குகன். அதைக் கேட்டு ராமன் அதிர்ச்சியுற, குகன் தொடர்ந்து கூறுகிறான்...

‘`ஓடங்களை நம்பியே பிழைப்பு நடத்தும் ஏழைகளான நாங்கள், உங்கள் பாததூளி பட்டுக் கல்லும் பெண்ணாக மாறிய அற்புதத்தை அறிவோம். பாறைகளையே பெண்ணாக உருமாற்றும் உங்கள் கால் தூசியின் சக்திக்கு முன்னால், எங்களின் மர ஓடங்கள் எந்த மூலைக்கு?! எனவே ஐயனே, புழுதியில் நடந்து தூசு படிந்திருக்கும் தங்களின் திருப்பாதங்களை நீரினால் கழுவிவிடாமல், என் படகில் கால் பதிக்கத் தங்களை அனுமதிக்க இயலாது!’’

சாபத்தால் கல்லாகிப்போன அகலிகை, ராமனின் கால் தூசு பட்ட மாத்திரத்திலேயே விமோசனம் பெற்றதைச் சுட்டிக்காட்டி, அப்பேற்பட்ட பாதங்களைத் தொட்டு நீராட்டி பாத பூஜை செய்யும் பாக்கியத்தைத் தனக்கு அளிக்கவேண்டும் என்பதைத்தான் அப்படி அழகாக வேண்டுகிறான் குகன்!

இவ்வாறு வளமான கற்பனையுடன், ராமனின் மேன்மையை மிக அற்புதமாக வர்ணித்த அந்தப் பக்த கவிஞர் யார் தெரியுமா?

அவரின் பால்ய பெயர் - துலா ராம். உத்திரபிரதேச மாநிலம் ராஜாபூரைச் சேர்ந்தவர். பண்டிதர் நரஹரிதாஸ் மூலம் ராம மகிமைகளை அறிந்தார். கல்வி ஞானத்தில் சிறந்தார். குருவின் ஆசியோடு துலாராமுக்கு இல்லறம் வாய்த்தது. வாழ்க்கைச் சுகத்தில் மூழ்கிப்போனார்.

ஒருநாள் அவரின் மனைவி பிறந்தகம் சென்றிருந்தாள். ஓர் இரவுப்பொழுதுகூட அவளின் பிரிவைத் தாங்க முடியாமல்... பெரும் புயல்- மழையையும் பொருட்படுத்தாது, பிணத்தைப் பிடித்து நீந்தியும், கருநாகத்தைக் கயிறாகப் பற்றிக்கொண்டு சுவரேறிக் குதித்தும் அவளைத் தேடிச்சென்றார்.

கணவனின் காதலை நினைத்து ஒரு கணம் சிலிர்த்தாள் மனைவி. ஆனால், அடுத்த கணமே கோபம் பீறிட்டது! `‘என்ன மனிதர் நீங்கள்? அழியப்போகும் இந்த உடலின்மீது கொண்ட ஆசையில் ஒரு துளியாவது, அழிவே இல்லாத இறைவன் மீது வைத்திருந்தால் உமக்கு முக்தியே கிடைத்திருக்குமே!’’ என்று கத்தினாள்.

பேரிடியாய் விழுந்த மனைவியின் வார்த்தைகள், துலாராமின் கண்களைத் திறந்தன. மாயையின் வசத்தால், சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு வழிதவறிப் போனதை உணர்ந்து தெளிந்தார்.

‘மூலாதாரமான ஶ்ரீராமனின் பாதங்களைத் தவிர, வேண்டுவது யாதுமில்லை’ என அனைத்தையும் துறந்து, அவன் நாமங்களிலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்டார். ஆம் துலாராம் கோஸ்வாமி துளசிதாசராகப் பரிமளித்தார். அனுமன் அருளால் அவருக்கு ராம தரிசனமும் கிடைத்தது! ராமசரித மானஸ், வினய பத்ரிகா, கவிதாவளி, கீதாவளி, கிருஷ்ணா வளி ஆகிய நூல்கள் உலகுக்கு அவர் அளித்த பொக்கிஷங்கள்!