திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 13

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்அரங்கனை தரிசித்துப் பரவசமான ஆளவந்தாரிடம் ஓர் உறுதி தோன்றியது. `சோழன் அளித்த மாளிகை இனி தேவையில்லை. திருவரங்க ஆலயத்தை ஒட்டிய எளிய இல்லம் போதுமானது. நான் இனி பட்டுப் பீதாம்பரம் தரிக்கும் லௌகீக புலவன் இல்லை. வைணவ நெறியை பிசகாது பின்பற்ற விரும் பும் வைணவ சந்நியாசி!' என்ற முடிவுக்கு வந்து சந்நியாச துறவறம் மேற்கொண்டார்.

காலச்சக்கரமும் சுழலத் தொடங்கிற்று. ஆளவந்தாரின் பக்திச் சிறப்பும், பண்பு மிக்க செயல்பாடுகளும் பல்லோரை அவரை நோக்கி ஈர்த்தன.

பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருமலையாண்டான் திருக்கச்சிநம்பி, வானமாமலை யாண்டான், தெய்வவாரியாண்டான் - என்று பலரும் அவரின் சீடர்களாக தங்களை வரித்துக்கொண்டார்கள்.

இந்தக் காலத்தில் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, சம்வித்ஸித்தி, கீதார்த்த சங்க்ரகம், ஆகமப் பிரமாண்யம், சதுச்லோகி, ஸ்தோத்ர ரத்னம், மஹா புருஷ நிர்ணயம் என்று பல நூல்களையும் எழுதினார். ஆளவந்தாரின் சிறப்புமிக்க இக்காலம் ராஜராஜ சோழனின் இறுதிக்காலமாகவும், ராஜேந்திர சோழனின் காலமாகவும் இருக்கலாம் என்று கோயிலொழுகு கூறுகிறது. அதாவது கி.பி 985-ல் தொடங்கி 1054 வரை.

ஆளவந்தார் 125 நட்சத்திரக் காலம் வாழ்ந்ததாக தெரிகிறது. இவரது திருப்பள்ளி (அடக்கஸ்தலம்) வட திருக்காவிரி எனும் கொள்ளிடத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்தது. இன்றும் ஆளவந்தார் படித் துறை என்று வழங்கப்படுகிறது. வெள்ளப் பெருக்கில் திருப்பள்ளிக்கட்டடம் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது.

ஆளவந்தாரின் குமாரர் திருவரங்கப் பெருமாள் அரையர். இவர் ராமாநுஜருக்கு வாய்த்த ஐந்து ஆச்சார்ய புருஷர்களில் ஒருவர். நாதமுனிகளைப் போலவே இயல், இசை, நாடக நூல்களை நன்கு தெளிந்தவர். இவர் காலத்தில் திருமொழி, திருவாய்மொழி திருநாட்களில், தேவ கானத்தில் பாசுரங்களைப் பாடியதோடு அழகிய மணவாளனின் லீலாவிநோதங்களை வேடங்கள் புனைந்து நாடகமாகவும் நடத்திக்காட்டினார்.

இதனால் ‘கோயிலுடைய பெருமாள் அரையர்’ என்கிற பட்டத்துக்கு உரியவரானார். இவருக்கு பிறகே ராமாநுஜர் காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து, ஆளவந்தாரின் பூதத்திருமேனி கண்டு, அவரின் இறுதி விருப்பப்படி திருவரங்கத்தில் தங்கி, ஆளவந்தாரின் அடியைத் தொடர்ந்து பின்பற்றி வைணவ நெறியைச் செழிக்கவைத்தார்.

திருவரங்க வரலாற்றில் அறியவேண்டிய பெருமக்கள் பலர் உண்டு. திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி ஆகியோர் ஆளவந்தாரின் பூர்வாஸ்ரமப் புத்திரர்கள். இவர்கள் போக பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலையாண்டான், தெய்வ வாரியாண்டான், வானமாமலையாண்டான், ஈஸ்வராண்டான், ஜீயராண்டான், ஆளவந்தாராழ்வான், திருமோகூரப் பன், திருமோகூர் நின்றான், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாளரையர், திருக்குருகூர் தாசர், வகுளாபரணன் சோமையாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி வடமதுரை கோவிந்த தாசர், நாதமுனி தாசர், ரங்க சோழ பத்னியான திருவரங்கத்தம்மன், என்று இருபத்தி இரண்டு பேர்களை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரின் பின்னாலும் நாம் அறிந்திட ஒரு நெகிழ்வான சம்பவம் ஒன்று உண்டு.

இவர்கள் போக ராமாநுஜருடைய அணுக்கத் தொண்டரான வடுகநம்பி எனப்படும் ஆந்த்ரபூர்ணர் குறிப்பிடப்பட வேண்டியவர்.ராமாநுஜரின் திருப் பாதுகை களையே தன் திருவாராதன பொருளாகவும் பெருமாளாகவும் கொண்டவர்.

இவருக்கும் ராமாநுஜருக்கும் இடைப் பட்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு. அது `எது குருபக்தி' என்பதற்கு இலக்கணம் வகுத்த சம்பவம்!

ஒருமுறை ராமாநுஜர் காவிரி தாண்டி பஞ்சரங்க க்ஷேத்திர யாத்திரையை மேற்கொண்டார். அவர் முதலில் தரிசனம் செய்ய விரும்பியது அன்பில் எனும் க்ஷேத்திரத்தில் குடிகொண்டிருக்கும் சுந்தர்ராஜன் என்கிற வடிவழகிய நம்பியை. அடுத்து கோவிலடி அப்பக்குடத்தானை!

இடையிட்ட காவிரியின் கொள்ளிட ஆற்றைக் கடந்துதான் நடந்து செல்லவேண்டும். இன்று போல் பால வசதிகள் எல்லாம் அன்று ஏது?

எனவே, ஆற்றில் நீர் குறைவாகப் பாயும் கோடை நாளில் நடந்து செல்வர். மற்ற நாட்களில் பரிசல்களே பயணப்படுகை.

ராமாநுஜரும் தன் சீடர் குழாமுடன் பயணப்படலானார். திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டு பஞ்சக் ஷேத்திரங்களையும் தரிசித்துவிட்டு திரும்பி வர, எப்படியும் ஒரு வார காலமாகும். எனவே அதன் பொருட்டு பூஜா திரவியங்கள் முதல் உணவுப் பண்டங்கள் வரை சகலமும் கொண்டு செல்லப்பட வேண்டும். ராமாநுஜர் தன் நித்திய அனுஷ்டானங்களில் ஒன்றான திருவாராதன பூஜை நிமித்தம்... ஆளவந்தார் பூஜித்து வந்த சாளக்ராமங்களில் இருந்து தன் பங்கிற்கு வைத்திருக்கும் சாளக்ராமங்கள் மற்றும் சங்கு சக்கர உபயஹஸ்தங்கள், தவழும் கிருஷ்ணன் திருமேனி, உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் லஷ்மிநரசிம்மர் விக்ரகம் உட்பட ஏராளமானவற்றுக்கு நித்தியமும் பன்னீர் அபிஷேகம் செய்வித்து, சந்தன குங்குமம் இட்டு, மலர் தூவி அர்ச்சிப்பதை ஒரு நித்திய படியாகக் கொண்டிருந்தார்.

அவர் யாத்திரை மேற்கொள்ளும் தருணங்களில் இவை அனைத்தும் ஒரு மரப் பெட்டிக்குள்... பட்டு வஸ்திரம் பொதிந்த அடித்தளத்தில் வைக்கப்பட்டு மிக பவித்ரமாக எடுத்துச் செல்லப்படும். இந்தப் பெட்டியை எல்லோரும் தொட்டுத் தூக்கி விட முடியாது. மகா புனித சாளக்ராமங்கள் உடையதால், தூய்மையான உடலும் உள்ளமும் கொண்டோரே இதைத் தூக்கிச் செல்ல அனுமதி உண்டு. அந்த வகையில் வடுக நம்பிக்கு இந்தப் பொறுப்பை அளித்திருந்தார் ராமாநுஜர்.

வடுகநம்பி யாத்திரைக்கு முதல் நாளே அப்பெட்டியைத் தயார்படுத்தி, அதன் அத்தனை பக்கங்களிலும் திருமண் காப்பைப் பெரிதாய் இட்டு, அது பெட்டியா இல்லை அதுவே பெருமாளா என்று எண்ணுமளவிற்குத் தயார் செய்துவிடுவார். யாத்திரை புறப்படும் முன் அதில் அவ்வளவு சாளக்ராமங்களும், விக்ரகங்களும் எழுந்தருளச் செய்யப்படும். பின் கற்பூர ஆரத்தி காட்டி மூடிய நிலையில் அதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டால், நடுவில் எங்கும் இறக்கிவைப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை.

`அந்த ஆதிப் பரம்பொருள்தான் உலகைப் படைத்து, நம்மையும் படைத்து பூமாதேவி வடிவில் நம்மைச் சுமக்கிறது. அப்படி நம்மையெல்லாம் சுமக்கும் பெருமாளையே சுமக்கிறேன்' என்பதில் வடுக நம்பிக்கு சற்று செருக்கும் உண்டு. சொல்லப்போனால் அந்த வாய்ப்பை தனக்களித்த ராமாநுஜர் மேல் வடுகநம்பிக்கு மிக மேலான பற்றுண்டு.

திருவரங்க வரலாறு
திருவரங்க வரலாறு


இவரைச் சரண்புகப்போய் அல்லவா இப்படி ஒரு பாக்கியம் வாய்த்தது? யார் தருவார் இப்படி ஒரு வாய்ப்பை? இம்மட்டில், ராமாநுஜரை நினைக்கையில் எல்லாம் கண்ணீர் உகுப்பார் வடுக நம்பி. அப்படியே பஞ்சரங்க க்ஷேத்திர யாத்திரையிலும் ஆனந்தக் கண்ணீருடன் பெட்டியைச் சுமந்தபடி வடுகநம்பி நடக்கலானார்.

ராமாநுஜர் பல்லக்கு ஒன்றில் எழுந்தருளியவராய் இருக்க, அவருக்கு முன்பாக ஒரு வேத கோஷ்டி வேத பாராயணங்களை... குறிப்பாய் புருஷ சூக்தத்தைச் சொல்லியபடியே சென்றனர். அவர்களுக்கும் முன் னால் பெட்டியைத் தலையில் சுமந்துக்கொண்டு வடுக நம்பி நடந்தார். பல்லக்கின் பின்னேயும் சீடர் குழாம் ஆண்டாள் பாசுரங்களைப் பாடிய வண்ணம் வந்தது.

ராமாநுஜர் பல்லக்கில் இருந்தபடியே புருஷ சூக்தத்தையும் திருப்பாவையையும் செவிமடுத்தவராய் புளகாகிதமுடன் வீற்றிருந்தார். இந்நிலையில் கொள்ளிடக்கரை வந்தது. இனி அங்கு பரிசலிலோ, படகிலோதான் ஏறிப் பயணிக்க வேண்டும். படகுக் கரையில் திவ்ய திருமண் காப்புடன் ராமாநுஜரை மறுகரை சேர்க்கக் காத்திருந்தான் பரிசல்காரன். மேலும் பல பரிசல்களும் காத்திருக்க, எல்லோரும் அவற்றில் ஏறிக்கொண்டனர்.

இவ்வேளையில் ராமாநுஜர் வடுக நம்பியை அருகில் அழைத்தார். நம்பியும் பெட்டியைச் சுமந்து இருக்கும் நிலையில் ராமாநுஜர் முன் போய் நின்றார். அவ்வேளையில், ராமாநுஜர் தன் திருப்பாதுகைகளை வடுகநம்பி வசம் தந்து, ``இவற்றை எடுத்துக்கொள். மறுகரை சேர்ந்து ஆற்று மணல்வெளி கடந்ததும் திரும்ப தா'' என்றார்.

``உத்தரவு ஸ்வாமி'' என்று பெற்றுக் கொண்ட வடுகநம்பி, அவற்றை ஒரு கரத்தில் எடுத்துக்கொண்டு, மறு கரத்தால் பெட்டியைத் தாங்கியபடி நடந்தார். சிறிது தூரம் சென்றதும், பெட்டியைக் கீழே இறக்கினார். அதைத் திறந்து அதனுள் ராமாநுஜரின் திருப்பாதுகைகளை வைத்துக்கொண்டவர், மீண்டும் பெட் டியைத் தலையில் ஏற்றிக் கொண்டார்.

மறுகரை சேர்ந்து மணல்வெளியைக் கடந்ததும் ராமாநுஜர் நம்பியைத் தேட, நம்பியும் வேகமாக வந்து ராமாநுஜர் முன்னிலையில் பெட்டியை இறக்கித் திறந்தார். அதனுள் இருந்து பாதுகைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்ட பிறகு, ராமாநுஜரின் காலடியில் கிடத்தினார். வடுகநம்பியின் இச்செயல் ராமாநுஜரை மட்டுமன்றி, அருகில் இருந்த எல்லோருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அவர்மீது கோபத்தையும் உண்டாக்கியது.

ராமாநுஜர் கொந்தளிப்புடன் கேட்டார்...

``நம்பி! என்ன இது மடமை? என் பாதணிகளைப் பவித்திரமான இந்தச் சாளக்கிராமப் பெட்டிக்குள்ளா வைத்துச் சுமந்து வந்தாய்?''

``ஆம் ஸ்வாமி! தாங்கள்தான் பார்த்தீர்களே...''

``அதனால்தான் கேட்கிறேன். இது எவ்வளவு பாவமானச் செயல் தெரியுமா? எம்பெருமானும் பெருமாட்டியும் சாளக்ராம வடிவில் கோயில் கொண்டிருக்கும் தளத்தில் நான் அணியும் பாதணிகளா... மகாபாவம்... மகாபாவம்!''

படபடத்தார் ராமாநுஜர். ஆனால் வடுகநம்பியிடம் எந்தப் ஒரு பதற்றமும் இல்லை. அதேவேளை கண்களில் மட்டும் லேசான கலக்கம்.

``கலங்கியது போதும்... இப்படி ஒரு பாவத்தை என் பிரதான சிஷ்யனாக இருந்துகொண்டு நீ செய்யலாமா? பதில் சொல்...”

``ஸ்வாமி... இப்போதும் நான் தவறு செய்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. பெட்டியில் உள்ள மூர்த்தங்கள் உங்கள் வழிபாட்டுக்குரியவை. உமது பாதணிகளோ... என்வரையிலும் அவை பாதரட்சை. அப்படிப்பட்ட குருவின் பாதரட்சையும் பூஜைக்குரிய ஒன்றுதானே?

தாங்கள் அப்படித்தானே ஆளவந்தாரின் பாதரட்சைகளைப் பூஜித்து எங்களுக்கு வழிகாட்டியுள்ளீர்கள். சொல்லப்போனால் திருவாராதனத்தில்கூட அவரின் பாதரட்சைக்கு அல்லவா முதல் தீர்த்தம்... முதல் புஷ்பம்! அப்படியிருக்க, உங்களைப் பின்பற்றும் நாங்களும் அவ்வாறு நடப்பதே தர்மம் எனும் அடிப்படையில், எனது பூஜைக்குரிய பாதரட்சைகளை, உங்கள் பூஜைக்குரிய மூர்த்தங்களுடன் சேர்த்தேன். அவற்றை வெறும் மரக்கட்டைகளாக மட்டுமே கருதியிருந்தால், கையில்கூட தொட்டிருக்கமாட்டேனே ஸ்வாமி..?

பூஜைக்குரிய ஒன்று பூஜைக்குரிய இன்னொன்றுடன் சேர்வது எனக்குத் தவறாகப்படவில்லை. அதனாலேயே அவ்வாறு நடந்து கொண்டேன். தவறென்று தாங்கள் கருதும் பட்சத்தில், தாங்கள் எந்தத் தண்டனையைத் தந்தாலும் ஏற்க சித்தமாக இருக்கிறேன்'' - என்ற வடுகநம்பி, அப்படியே ராமாநுஜரின் முன் மண்டியிட்டு தலைகுனிந்து விசும்பி அழலானார். சீடர்க்குழாமிடம் பெரும் விதிர்ப்பு. ஆனால்  ராமாநுஜரிடமோ பெரும் சிலிர்ப்பு.

``நம்பி.. எழுந்திரு'' என்றார். நம்பி எழவும் அவரைக் கட்டி அணைத்துக்கொண்ட ராமாநுஜர் உணர்ச்சி மேலிட பேசினார்.

``நம்பி நீ எனக்கே விளக்காகிவிட்டாய். உணர்ச்சிப்பாட்டில் நான் சிந்திக்க மறந்த ஒன்றை நீ சரியாக சிந்தித்து அதன்படியே நடந்திருக்கிறாய். உன்னைக் கோபித்துக்கொண்டதற்காக வருந்து கிறேன். என்னை மன்னித்துவிடு'' என்று மேலும் உருகினார்.

நம்பியோ ``இப்படி உங்கள் ஆலிங்கனம் கிடைக்குமென்றால், இதுபோன்ற சம்பவங்கள் என்வரையில் தொடரவேண்டும்'' என்றார். இந்தச் சம்பவம் மற்ற சீடர்களையும் வெகுவாக சிந்திக்க வைத்து, ஆச்சார்ய பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக ஆயிற்று.

- தொடரும்...

வலம் வரும்போது...

விநாயக கோயில்
விநாயக கோயில்
fortton

ஆலயத்தை வலம் வருவதால் கிடைக்கும் புண்ணியம் அதிகம். விநாயக கோயிலில், ஒரு முறை சுற்றி வலம் வந்தாலே போதுமானது. முருகப் பெருமான் கோயிலில், ஆறு முறை வலம் வர வேண்டும். அம்பாள் கோயில்களில், ஐந்து முறை கோயிலைச் சுற்றி வலம் வர வேண்டும். சிவபெருமான் கோயில்களில், ஐந்து முறை வலம் வர வேண்டும். மகாவிஷ்ணுவை மூன்று முறை வலம் வர வேண்டும். பக்தர்கள் வேண்டிக்கொண்டதற்கு ஏற்றார்போல், பக்தி செலுத்தும் விதமும் மாறுபடும்.