திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

சுக்கிர யோகம் உண்டாகும்

திருவெள்ளியங்குடி
பிரீமியம் ஸ்டோரி
News
திருவெள்ளியங்குடி

சுக்ர பரிகாரக் கோயில் திருவெள்ளியங்குடி

நல்ல ஆரோக்கியத்துடனும் சகல செல்வ சுகபோகங்களுடனும் வாழ வேண்டும்’ என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். இப்படியான நம்முடைய விருப்பங்களை அருளும் கிரக மூர்த்தியே சுக்கிர பகவான். உலகின் சுகங்கள் அனைத்தையும் வழங்குபவர் அவர்.

திருவெள்ளியங்குடி
திருவெள்ளியங்குடி


சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்... ‘அவனுக்கென்ன சுக்கிர தசை, யோகம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது’ என்பார்கள். ஆம், வாழ்வில் நல்ல திருப்பங்கள் அதிர்ஷ்ட யோகங்கள் ஒருவருக்குக் வாய்க்கிறது எனில், அதற்குக் காரணம் சுக்கிரபகவானே.

குருபகவான் தேவகுரு என்றால், சுக்கிரன் அசுர குரு. இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். ஜோதிடத்தின்படி, ஒரு மனிதன் வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய சுகங்களையும், சொகுசான வசதிகளையும் தரக்கூடிய கிரகமாகச் சுக்கிர பகவான் குறிப்பிடப்படுகிறார். காதல், அன்பு, பாசம், ஆசை போன்ற உணர்வுகளுக்கும் சுக்கிரனே மூலகாரகன். சுக்கிரனை களத்திரகாரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இல்லறம் எனும் நல்லறத்தில் நம்மை இணைய வைப்பது கல்யாணம். அந்தச் சுப வைபவம் நல்லபடியே நடந்தேற-மனதுக் கினிய வாழ்க்கைத் துணை அமைந்து, நம் இல்வாழ்க்கை இனிக்க சுக்கிரனின் அருள் தேவை. ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் உரிய தருணத்தில் தடங்கலின்றி கல்யாணத்தை நடத்தி வைப்பார்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, களத்திர காரகன் சுக்கிரன் ஜாதகத்தில் பலமாக இருக்கிறாரா என்பதைப் பார்த்து முடிவு செய்வார்கள். ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ஆம் இடம் களத்திர ஸ்தானம் எனப்படும். அந்த ஸ்தானத்தில் சுக்கிரன் அமைந்திருந்தால், அவரது உச்ச, நீச நிலைகளை ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.

இயல், இசை, நாடகம், நாட்டியம் முதலான கலைத்திறமை, சரீர சுகம், சயன சுகம், சிம்மாசன யோகம், அழகு, ஆரோக்கியம், இளமை, வீடு, வாகன வசதி, லட்சுமி கடாட்சம், புகழ், வெளிநாட்டுப் பயணம் ஆகிய சௌபாக்கியங்களுக்கு சுக்கிரனே காரகன். மனித உடலில் ஜனன உறுப்புகளைக் காப்பவன் சுக்கிரன். அதனால் புத்திர பாக்கியம் தரும் அனுக்ரஹதேவன் சுக்கிரனே!

அருள்மிகு க்ஷீராப்திநாதர்
அருள்மிகு க்ஷீராப்திநாதர்


ஜாதகத்தில் சுப கிரகங்களோடும் - அவற்றின் பார்வை பட்டும், சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், வாழ்நாள் முழுவதும் இன்ப மயமாக வாழலாம். அதேநேரம், முன்வினைகளுக்கேற்ப அவர் பாதகமான நிலைகளிலும் இருப்பது உண்டு.

லக்னத்திலிருந்து, 7-வது வீடு களத்திர ஸ்தானம். அங்கே, விவாக காரகனான சுக்கிரன் இருந்தால், களத்திர சுகத்தைப் பலவீனமாக்கு வார். விருச்சிகம் 7-ம் பாவமாக அமைந்து அதில் சுக்கிரன் வீற்றிருந்தால் வரம்பு மீறிய சிற்றின்பத்தைத் தேடச் செய்து, துயரத்தில் ஆழ்த்திவிட வாய்ப்பு உண்டு. அவர் சூரியனுடன் இணைந்து, 9-வது இடத்தில் அமர்ந்தால் தாம்பத்திய ஈடுபாடு குறையும் நிலை உருவாகும். பாப கிரகங்களுடன் இணைகிற சுக்கிரன், தனது இயல்பை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பார்.

மகர லக்னம், துலாத்தில் சுக்கிரன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மகர லக்னத்துக்கு 10-ம் வீடு துலாம். அங்கே சுக்கிரன் அமர்ந்தால் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும். அப்போது வேலையில் இடையூறு ஏற்படவும் பொருளாதாரப் பற்றாக்குறை உண்டாகவும் வாய்ப்பு உண்டு.

சுக்கிரதசை நடைபெறும் அன்பர்களுக்குக்கூட சந்திர புக்தி, செவ்வாய் புக்தி, கேது புக்தி நடைபெறும் தருணங்களில் சிற்சில சிரமங்கள் உண்டாகலாம். இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து மீள்வதற்கு இறை வழிபாடு துணை செய்யும்.

`இறையருள் இருந்தால் நவகோள்களும் நன்மையே செய்யும்’ என்று அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள். ஜாதகத்தில் சுக்ரனின் நிலை எப்படியிருந்தாலும், அவரால் விளையக்கூடிய நற்பலன்களை தங்குதடையின்றி பெறுவதற்கு தெய்வ வழிபாடுகள் துணைநிற்கும்.

அவ்வகையில் சுக்கிரனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் தலங்களில் ஒன்று திருவெள்ளியங்குடி.

கோயில் நகரமாம் கும்பகோணத்திலிருந்து சோழபுரம் செல்லும் வழியில், அணைக்குடி சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். சுக்கிரன் பெருமாளை வழிபட்டு அருள்பெற்ற புண்ணிய க்ஷேத்திரம் இந்த ஊர். சுக்கிரனை வெள்ளி என்றும் போற்றுவர். அவ்வகையில் சுக்கிரன் வழிபட்ட இந்தத் தலமும் பொருத்தமான பெயருடன் திகழ்கிறது.

மூலவர் அருள்மிகு க்ஷீராப்திநாதர், புஜங்க சயனத்தில் அருள்கிறார். அவரின் தலைமாட்டில் மார்க்கண்டேய மகரிஷியும், கால்மாட்டில் பூதேவியும் தரிசனம் தருகிறார்கள். இவரையே ராமபிரானாக தரிசித்து மகிழ்ந்து, ‘கோலவில்லி ராமர்’ என்கிற பெயரில் மங்களாசாசனம் செய்தார் திருமங்கை ஆழ்வார். உற்சவரின் திருப்பெயர் சிருங்கார சுந்தரர். தாயாரின் திருநாமம் மரகதவல்லித் தாயார். அசுரகுலச் சிற்பி மயனால் எழுப்பப்பட்ட ஆலயம் இது என்கின்றன புராணங்கள். இங்கே பார்வைக் குறைபாடுகளை அகற்றும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் எம்பெருமான்.

பெருமாள் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது சங்கு சக்கரம்தான். ஆனால் இந்தத் தலத்தில் சங்கும் சக்கரமும் இல்லாமல் அருள்பாலிக்கிறார் பகவான். இங்கே கருடாழ்வாரும் மிக வித்தியாசமான திருக்கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்.

கருடாழ்வார்
கருடாழ்வார்

ஆம், பெருமாளின் சங்கு - சக்கரங்களைத் தாங்கியபடி... நின்ற நிலையிலும் இல்லாமல், அமர்ந்த நிலையிலும் இல்லாமல், ஒரு காலை மண்டியிட்டு, மற்றொன்றை குத்துக்காலிட்டபடி அமர்ந்திருக்கிறார். காரணம் என்ன?

இங்கே பூமிதேவி, பிரம்மன், இந்திரன், மார்க்கண்டேயர், பராசரர், சுக்கிரன், மயன் முதலானோர் வழிபட்டு பெருமாளின் தரிசனமும் திருவருளும் பெற்றுள்ளார்கள். அசுரகுலச் சிற்பியான மயனின் தவத்தாலும் பிரார்த்தனையாலும் மகிழ்ந்த மகாவிஷ்ணு, சங்கு சக்ரதாரியாக அவனுக்குக் காட்சியளித்தார். அவனோ, `கல்யாணக் கோலத்தில் காட்சிதர வேண்டும்’ என்று பிரார்த்திக்க, மகாவிஷ்ணு வும் தமது சங்கு- சக்கரங்களைக் கருடனிடம் கொடுத்துவிட்டு, மணக்கோலத்தைக் காட்டியருளினாராம்.

ஆக, பெருமாள் எப்போது வேண்டுமானாலும் சங்கும் சக்கரமும் கேட்பார் என்பதால், சட்டென்று எழுந்து அவற்றை வழங்கும் நிலையில் - விசேஷ கோலத்தில் அருள்கிறாராம் கருடாழ்வார்.

சரி, சுக்கிர பகவான் இங்கு வந்து வழிபட காரணம் என்ன?

பெருமாள், வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் தானம் வேண்டி வந்தார். அவருக்குத் தானம் வழங்குவதைத் தடுக்க நினைத்தார் சுக்ராச்சார்யர். எனவே, ஒரு வண்டாக உருவெடுத்து வந்து, மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேறும் துவாரத்தை அடைத்துக்கொண்டார்.

அவரது சூது எண்ணத்தை அறிந்த பகவான், தர்ப்பைப் புல்லை எடுத்து, கமண்டல துவாரத்தில் நுழைத்துக் கிளறினார். அதனால், சுக்கிராசார்யரின் பார்வை பறிபோனது. தவற்றை உணர்ந்து வருந்திய சுக்கிராசார்யர் இந்தத் தலத்துக்கு வந்து இந்திர தீர்த்தத்தில் நீராடி, ஒரு மண்டல காலம் தவமிருந்து பெருமாளை வழிபட்டு, கண்ணொளி பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இந்த அற்புதத்தைக் குறிக்கும் வகையில், இன்றைக்கும் இந்த ஆலயத்தில் அணையா விளக்கு (நேத்திர தீபம்) சுடர்விடுவதைக் காணலாம்.

சுக்கிர பரிகாரத் தலம்
சுக்கிர பரிகாரத் தலம்


சுக்கிர பரிகாரத் தலம் அல்லவா? அதன் பொருட்டு வழிபட விரும்பும் அன்பர்கள், வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்துக்குச் சென்று, கோலவில்லி ராமரையும் மரகதவல்லித் தாயாரையும் தரிசித்தால் சுக்கிர தோஷம் விலகும்; அவரால் ஏற்படக்கூடிய பலன்கள் பெருகும். மேலும், கருவறையில் அணையா விளக்காகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தீபத்தில் சேர்க்க நல்லெண்ணெய் வழங்கலாம். இதனால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். தடைகள் நீங்கி கல்யாணம் கூடிவரும். குழந்தை இல்லாத தம்பதியருக்குப் பெருமாள் அருளால் குழந்தைச் செல்வம் வாய்க்கும் என்கின்றன ஞானநூல்கள்.

அதேபோல் 48 நாள்கள் தொடர்ந்து இங்கு வந்து வேண்டிக் கொண்டால், கண் பார்வைக் குறைபாடுகள் நீங்கும் என்பது ஐதிகம். சங்கு, சக்கரத்துடன் காட்சிதரும் கருட பகவானை வணங்கி வழிபட்டுச் சென்றால், வாகன விபத்துகள் நேராது. இங்குள்ள யோக நரசிம்மரை பிரதோஷ நாளில் வந்து வணங்கினால், சகலவிதமான நோய்களும் தீரும்.

நீங்களும் ஒருமுறை திருவெள்ளியங்குடிக்குச் சென்று வாருங்கள். பெருமாளின் திருவருளால் உங்கள் வாழ்வும் உங்கள் பிள்ளைகளின் வாழ்வும் ஒளிமயமாகும்; சுக்கிரபகவானின் அருளால் செல்வம் பெருகும்; கடன் பிரச்னைகள் எல்லாம் நீங்கும்; சுகபோக வாழ்வு அமையும்.

எப்படிச் செல்வது? : கும்பகோணத்தில் இருந்து சோழபுரம் செல்லும் வழியில், அணைக்குடி சாலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெள்ளியங்குடி. காலை 8 முதல் 12 மணி வரை; மாலை 4 முதல் 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

எங்கேயும் தரிசிக்கலாம்!

திருப்பதியில், வெங்கடாசலபதிக்கு மாலை அணிவிப்பதற்காக, திருமலை நம்பி பூப் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று தீண்டியது. ஆனாலும், மாலையை கட்டிக் கொண்டு பெருமாளை தரிசித்தார் திருமலை நம்பி. ''பாம்பு தீண்டியும் கூட என்னைக் காண வந்துள்ளாயே நம்பி'' என்றார் பெருமாள். உடனே ''நாராயணா! பாம்பு தீண்டியதில் விஷமில்லையெனில், தங்களை இங்கே தரிசிப்பது... விஷமுள்ள பாம்பு தீண்டியிருந்தால் தங்களை வைகுண்டத்துக்கே வந்து தரிசிப்பது என்ற வைராக்கியத்துடன் இருந்தேன்'' என்றாராம் திருமலை நம்பி!

- இல. வெங்கட்ராமன், கும்பகோணம்-1சுக்கிரனின் அருள் பெற...

சுக்கிரன் 64 கலைகளுக்கும் அதிபதி. அதிகாலை உதயமாகி வானில் ஒளிவீசும் இவரை விடிவெள்ளி என்றும் குறிப்பிடுவர். கிழக்கு திசை இவருக்குரிய திசை. வெள்ளி உலோகமும், வெள்ளை வஸ்திரமும் இவருக்கு உகந்தவை.

இந்திராணி அல்லது துர்கை இவருக்கு அதிதேவதை. இந்திரன் மருத்துவன். பிரத்யதி தேவதை. வைரம் இவருக்குரிய ரத்தினம். ரிஷப லக்னக்காரர்களுக்கு அவரே லக்னாதிபதி. கும்பம், மகர லக்னங்களுக்கு சுக்கிரன் யோக காரகன் ஆவார்.

மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய வித்தைகளின் அதிபதி சுக்கிரன். இவரது நக்ஷத்திரம் பூசம். பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது பத்தினி சுகீர்த்தி. கருடன் இவரது வாகனம். மனித வாழ்க்கையின் மிக அத்தியாவசியமான விஷயங்களை ஆதிக்கம் செய்யும் சுக்கிரன் மாதா மாதம் ஒரு ராசியில் சஞ்சரிப்பதால், அவரவர் ஜாதகத்துக்கேற்ப இன்ப-துன்பங்கள் நிலைத்து நிற்காமல் மாறி மாறி வருகின்றன.

சுக்ரனுக்கான அதிதேவதையர்-லட்சுமிதேவி, இந்திரன், வருணன் ஆகியோர். இவர்களை வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். குறிப்பாக, செல்வத்தின் அதிபதியாம் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலமும் சுக்ர பகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற முடியும். அவ்வகையில் ஸ்ரீசூக்தம், லட்சுமி பஞ்சகம், கனகதாரா ஸ்தோத்திரம், திருமகள் அந்தாதி முதலான துதிநூல்களைப் பாராயணம் செய்து, அனுதினமும் அலைமகளை வழிபடுங்கள்; உங்கள் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீங்காது நிறைந்திருக்கும்.

சுக்கிரனின் அனுக்ரஹத்தைப் பூரணமாகப் பெறவும், சுக்கிரனால் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷத்தை நீக்கவும், வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கேற்றி அம்பாளை வழிபடுவது நல்லது.