Published:Updated:

தோஷங்கள் நீங்கும்... குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்! - சுவர்ண கௌரி வழிபாடு

சுவர்ண கௌரி
பிரீமியம் ஸ்டோரி
சுவர்ண கௌரி

பி.சந்திரமௌலி

தோஷங்கள் நீங்கும்... குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்! - சுவர்ண கௌரி வழிபாடு

பி.சந்திரமௌலி

Published:Updated:
சுவர்ண கௌரி
பிரீமியம் ஸ்டோரி
சுவர்ண கௌரி

திசக்தியே பிரபஞ்சத்தின் சகல அம்சங்களிலும் உறைந்து கெளரி தேவியாக அருள்பாலிக்கிறாள். கெளரிதேவியை வழிபடுவது, சகல தெய்வங்களையும் ஒருங்கே வழிபடுவதற்குச் சமம். ஞானநூல்கள் விவரிக்கும் 16 வகை கெளரிதேவியரில், ஆபரணயோகம் அருளும் நாயகி சுவர்ண கெளரிதேவி.

வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை செல்வமாகும். அது, சமுதாயத்தில் நமது செல்வாக்கை உயர்த்துகிறது. செல்வம் மனை, வீடு எனப் பலவகையாக இருந்தாலும் அது பொற்கட்டிகளாகவும் பொற்காசுகளாகவும் இருப்பதே உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. பொன்னின் தேவியாக விளங்கும் கௌரியை ‘சுவர்ண கௌரி’ என்று அழைக்கின்றனர். இந்த தேவியின் மகிமைகுறித்து செவிவழிக் கதைகள் உண்டு. அவற்றில் ஒன்று...

ஒருமுறை, ஊழிக்காலம் முடிந்து உலகம் மீண்டும் படைக்கப்பட்டது. நீரின் மத்தியில் நிலமும் அதில் மலைகள், மரங்கள், செடிகொடிகள் முதலானவையும் தோன்றின. தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், மனிதர்கள் முதலான அனைத்து உயிர்களும் படைக்கப்பட்டன. அப்போது, சிவபெருமான் அலைகடலுக்கு நடுவில் சுவர்ண லிங்கமாகத் தோன்றினார்.

அந்த லிங்கத்தை இந்திரன் முதலான தேவர்களும், அசுரர்களும், முனிவர்களும், நாகர்களும் சிறப்பாகப் பூசித்தனர். அவர்களுக்கு அருள்புரிய சிவபெருமான் அந்த சுவர்ண மயமான சிவலிங்கத்திலிருந்து பொன்மேனி கொண்டவராக வெளிப்பட்டார். அவரைத் தழுவிய பொற்கொடியாகப் பராசக்தி உடன் தோன்றினாள். அவளை சுவர்ண வல்லி என்று தேவர்கள் போற்றினர்.

கடல் அரசனும், நாகலோக வாசிகளும் இந்த அம்பிகையைத் தங்கள் நாட்டுக்கு வந்திருக்கும்படி வேண்டினர். அதன்படியே அவள் பாதாள உலகம் சென்று தங்கினாள். அவள் அருளால் பூமியில் இரும்பு, தங்கம், வெள்ளி, ஈயம், செம்பு முதலிய உலோகங்கள் விளைந்தன.

நீண்டநாள்கள் தேவர்களும் முனிவர்களும் செல்வங்களை வேண்டி தவம் புரிந்தனர். அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த பராசக்தி பொன் மயமான பிரகாசத்துடன் பாதாளத் திலிருந்து கடல் நடுவே பெரிய மீன்மீது தோன்றினாள். கரங்களில் ஞானத்தை அளிக்கும் தாமரை, போகத்தை அளிக்கும் நீலோற்பல மலர், ஆயுளை விருத்திசெய்யும் அமுதக் கலசம், செல்வங்களின் வடிவமான பணப்பேழை ஆகியவற்றை ஏந்தியிருந்தாள். அவளைக்கண்டு அனைவரும் மகிழ்ந்து, `மீனாட்சி, சுவர்ண கௌரி, சாகரபுத்திரி’ ஆகிய திருப்பெயர்களைத் துதித்து வழிபட்டனர். அம்பிகை அவர் களுக்கு ஆசி மொழிந்தாள்.

அவளுடைய திருவருள் தங்களை விட்டு என்றைக்கும் நீங்காதிருக்கும் படியான வரத்தை வேண்டினார்கள் தேவர்கள். அம்பிகையும் அப்படியே வரம் அளித்தாள். அவ்வேளையில் சிவ பெருமான் தோன்றி அன்னையைத் தன் இடப் பாகத்தில் அமர்த்திக் கொண்டு கயிலைக்குச் சென்றார்.

தோஷங்கள் நீங்கும்... குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்! - சுவர்ண கௌரி வழிபாடு

பின்னர் அனைவரும், அம்பிகை மீன்மீது அமர்ந்து காட்சியளித்த கோலத்தைப் பொன்னால் செய்து வழிபடத் தொடங்கினர். அவள் அந்த வழிபாட்டை ஏற்று அனைவருக்கும் அருள்புரிந்தாள். அதுவே சுவர்ண கௌரி வழிபாடாக மலர்ந்துள்ளது.

அகஸ்திய மகரிஷி சுவர்ண கௌரி வழிபாட்டின் பெருமை களைப் பல்வேறு தருணங்களில் அருள்மொழியாக வெளிப் படுத்தியுள்ளார். அதன்படி சுவர்ண கௌரியை வழிபடுவதால் திருஷ்டி தோஷங்கள் விலகும், வறுமை நீங்கும், இனிய இல்வாழ்க்கை நடத்தலாம். குலதெய்வங்களின் அருள் கிடைக்கும்.

குல தெய்வத்தை மறந்து போனவர்களும் தம் குலதெய்வம் எது என்பதை அறியாதவர்களும், சுவர்ண கௌரியை வழிபட்டால் குலதெய்வங்கள் மகிழ்ந்து அருள் புரிவார்கள்.

சுவர்ணகௌரி விரதத்தை ஆவணி மாத வளர்பிறை திரிதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டுமென்று புராணங்கள் கூறுகின்றன என்றாலும், நடை முறையில், கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரணமான பலனை அடையலாம் என்று அனுபவத்தில் கூறுகின்றனர். மட்டுமின்றி, அனுதினமும் அம்பிகையை சுவர்ண கெளரி யாக தியானித்து வழிபட்டால், இல்லத்தில் செல்வம் செழித்தோங்கும். மீன் செல்வத்தின் அடையாளமாகும். அதன்மீது அமர்ந்து வலம் வரும் சுவர்ணகௌரி செல்வத்தினை அன்பர்களுக்கு தாராளமாக அளிக்கிறாள். பத்ம நிதியும் சங்க நிதியும் யக்ஷர் வடிவில் அவளுடன் உள்ளனர். இவள் அருளால் அன்பர்களுக்கு வேண்டிய செல்வம் நிறைவா கக் கிடைக்கிறது.

இந்த தேவியை வழிபடுவதால் திருஷ்டி தோஷங்கள் விலகும், வீண் விரயங்கள் குறையும் மன அமைதியும் நிறைவான எண்ணமும் கிடைக்கும். பாடுபட்டு சம்பாதித்த செல்வம் கையை விட்டுப் போகாமல் பயன் தந்து சுகமளிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism