திருத்தலங்கள்
Published:Updated:

இனிதே நடைபெற்றது சுயம்வர பார்வதி ஹோமம்!

சுயம்வர பார்வதி ஹோமம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுயம்வர பார்வதி ஹோமம்!

சுயம்வர பார்வதி ஹோமம்!

அம்மையும் அப்பனுமாக விளங்கும் சக்தி தேவியும் ஈசனும் திருமணக் கோலம் கொண்ட தலங்கள் அநேகம் என்கின்றன புராணங்கள். அவற்றில் திண்டிவனம் அருகில் உள்ள வெள்ளிமேடுப்பேட்டை திரிபுரசுந்தரி சமேத நாகேஸ்வரர் ஆலயமும் சிறப்பானது என்கிறார்கள் பெரியோர்கள்.

சுயம்வர பார்வதி ஹோமம்!
சுயம்வர பார்வதி ஹோமம்!

இங்கு உமையவள் கௌரியாக திருமாங்கல்யம் ஏற்று, இந்தத் தலத்தை திருமண வரம் அருளும் பரிகாரத் திருத்தலமாக மாற்றினாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

வெள்ளிமேடுபேட்டை திரிபுரசுந்தரி சமேத நாகேஸ்வரர் ஆலயம்
வெள்ளிமேடுபேட்டை திரிபுரசுந்தரி சமேத நாகேஸ்வரர் ஆலயம்
நாகேஸ்வரர்
நாகேஸ்வரர்
திரிபுரசுந்தரி
திரிபுரசுந்தரி
சிவ-சக்தி திருக்கல்யாணம்
சிவ-சக்தி திருக்கல்யாணம்


`வெள்ளிமேடுபேட்டை’ என்ற இந்த ஊர் ஆதியில் ‘புத்தனந்தல்’ என்று அழைக்கப் பட்டது. 2500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம், முற்கால பாண்டியர்களின் காலத்தில் உருவானது என்கிறது வரலாறு. சுக்கிரன் வழிபட்டு நலம் அடைந்த ஆலயம் என்பதால், இது சுக்கிர பலம் ஸித்திக்கும் பரிகாரத் திருத்தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு ஈசன் சதுர வடிவ ஆவுடையுடன் திகழ்கிறார். சதுர ஆவுடை எனில், பிரம்மன் அமைத்த லிங்கத்திருமேனி என்பர்.

லிங்கத்தின் மீது நாகத்தின் செதில்கள் போன்ற அமைப்பு இருப்பது விசேஷ அம்சம்! இந்த நாகேஸ்வர ஸ்வாமியை வழிபட்டால், நாகதோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கும், திருமண வரம் கிட்டும் என்கிறார்கள். அம்பாள் திரிபுரசுந்தரி தெற்கு நோக்கி அருள் கிறாள். மங்கல வாழ்வும், மாங்கல்ய பலமும் அளிக்கும் தேவி இவள்!

திருக்காளத்திக்கும் திருநாகேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்த மத்திய ராகு - கேது தலம் இது. மேலும் இங்கே ஈசனை (மேற்கு) நோக்கியபடி சனிபகவான் அருள்கிறார். ஆகவே, இது சனி பகவானுக்குரிய பரிகாரத் தலமாகவும் விளங்கு கிறது. இப்படி ஒரே தலம் சனி, ராகு-கேது, சுக்கிரன் என்று பல கிரகங்களுக்கான பரிகாரத் தலமாக இருப்பது, வெகு அபூர்வம்!

திருமகள் திருமாலை எண்ணித் தவமிருந்த தலங்களில் இதுவும் ஒன்றாம். மங்கல வாழ்வு அளிக்கும் ஊர் என்பதால் காஞ்சி மகாபெரியவர் இந்த ஊருக்கு வந்து தங்கி நாகேஸ்வரப் பெருமானைப் பூசித்து மகிழ்ந்திருக்கிறார் என்பதும் ஒரு விசேஷத் தகவல்.

இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இந்த ஆலயம் - திருப்பணிகளின் அவசியம் குறித்த கட்டுரை 27.8.19 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் வெளியானது. தொடர்ந்து, வழக்கம்போல் நம் வாசகர்கள் பலரும் பங்களிப்பை வழங்கிட, இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு, திருப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. வரும் தை மாதம் கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்த ஆலயத்தில்தான் சுயம்வர பார்வதி ஹோமம் இனிதே நடந்தேறியது.

சுயம்வர பார்வதி ஹோமம்
சுயம்வர பார்வதி ஹோமம்


சக்தி விகடன் மற்றும் ட்ரீம் அலைன்ஸ் மேட்ரிமோனியல் இணைந்து நடத்திய இந்த ஹோமம், 23.7.22 - ஆடிக்கிருத்திகை (சனிக்கிழமை) அன்று காலை 10:30 மணியள வில் தொடங்கி அற்புதமாக நடந்தது. பெருந் திரளான பக்தர்களும் வாசகர்களும் கலந்து கொண்டு, வழிபட்டு மகிழ்ந்தனர்.

அபிஷேக ஆராதனைகள், சுயம்வர பார்வதி ஹோமம், தமிழ் முறைப்படி திருமுறைகள் முழங்க சிவ-சக்தி திருக்கல்யாணம் ஆகிய ஒவ்வொன்றும் சிறப்பாகவும் சிலிர்ப்பாகவும் நடைபெற்றது. திருக்கோயில் நிர்வாகமும் ஊர் மக்களும் விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்புற செய்திருந்தார்கள்.

பல்வேறு ஊர்களில் இருந்து நேரில் வந்திருந்த வாசகர்கள், திருமண வேண்டுதல் குறித்துப் பிராத்தித்து சங்கல்பம் செய்து கொண்டனர். மட்டுமன்றி முன்பதிவு செய்திருந்த அனைத்து வாசகர்களின் பெயர் நட்சத்திரம் கூறி, அவர்களின் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய சங்கல்பத்தோடு ஹோம வைபவ வழிபாடுகள் நடந்தேறின.

விழாவின் நிறைவில் அன்னதானமும் அளிக்கப்பட்டது. வாசகர்கள் அனைவரும் நெகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் விடை பெற்றனர். ஆலயத்தின் திருப்பணிக்குப் பங்களிப்பு செய்த வாசகர்களுக்கு ஊர்மக்கள் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

மேலும், ``கோயிலில் தரை வேலைகள், ராஜகோபுரச் சிற்ப வேலைகள், முன் மண்டபப் பணிகள் ஆகியன நிறைவுறாமல் உள்ளன. அன்பர்கள் தொடர்ந்து இயன்ற பங்களிப்பை வழங்கினால், அந்தப் பணிகளும் விரைவில் முழுமை பெறும். அதற்கு இறைவன் நிச்சயம் அருள்வார்'' என்று நம்பிக்கையோடு தங்கள் கருத்தைப் பகிர்ந்தனர்.

நாமும் `அவர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்; எதிர்பார்த்தபடி திருக்கோயில் குடமுழுக்கு சிறப்புற நடைபெறட்டும்' என்று அந்த ஈசனை வேண்டி வணங்கி விடைபெற்றோம்.

வங்கிக் கணக்கு விவரம் :

V.Subramanian - A.S.Kulasekaran - 90471 25445

Bank of Baroda A/C : 69790100001290

IFSC : BARB0VJTIND605012015

BRANCH : TINDIVANAM