திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சுவாமிமலை அற்புதங்கள்

சுவாமிமலை அற்புதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சுவாமிமலை அற்புதங்கள்

விசாக தரிசனம்

னத்தில் கவலைகள் குடிகொள்ளும் போதெல்லாம் கந்தன் குடியிருக்கும் மலை நோக்கிச் சென்றுவிடுவது வழக்கம்.

அலைவந்து கரையில் மோதிக் கொண்டிருப்பதைப் போல கவலைகள் வந்து மனத்தில் மோதிக் கொண்டேயிருக்கின்றன. கொஞ்சம் மேடாகப் போய்விட்டால் அலை மோதும் கரைக்கும் நமக்கும் தொடர்பில்லை என்று தோன்றுவதைப்போல கந்தன் குடிகொண்டிருக்கும் மலைமீது ஏறிவந்து விட்டால் கவலைகளுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று தோன்றிவிடுகிறது. அப்படிக் கவலை அலைகள் மனத்தில் அடித்த ஒரு நாளில்தான் சுவாமிமலைக்குப் போனேன்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சுவாமிமலை அற்புதங்கள்

சுவாமிநாதன் குடியிருக்கும் கட்டு மலையில் கால் பதிப்பதற்கு முன்பு அங்கிருந்த கோயில் குளத்தில் இறங்கி கொஞ்சம் நீரெடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டேன். சில்லென்ற துளிகள் மேலேபட்டதும் மனமும் உடலும் பவித்ரமாகிவிட்ட உணர்வு. திருத்தலங்களின் தீர்த்தங்களுக்கென்று ஒரு மகிமை இருக்கிறது. அதிலும் இது அந்த சுவாமிநாதன் தெப்போத்சவம் காணும் தீர்த்தக் குளமல்லவா...

முருகனின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே மலையேறினேன். மொத்தம் 60 படிகள். படியேற ஏற படிப்படியாய்க் குறைந்தது மனத்தின் சஞ்சலம். சுவாமிநாதனின் சந்நிதிக்கு முன்பாக வழக்கமாக மயிலிருக்கும். ஆனால் இங்கு யானை வாகனம். கொஞ்சம் முன் நகர்ந்து சுவாமிநாதனை தரிசனம் செய்தேன். மனத்தில் அனைத்துக் கவலைகளும் ஒரு கணம் மின்னல்போலத் தோன்றி மறைந்தன. `முருகா, உன் சந்நிதிக்கு வந்த பின்னுமா கவலைகள்' என்று எண்ணியபோது பெருமழைபோலக் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

சந்நிதானத்தில் இருந்த குருக்கள் தீபாராதனை காட்டினார். அதில் ‘அஞ்சேல் அஞ்சேல்’ என்பதுபோல சுவாமிநாதன் புன்னகை பூத்து நின்றான். தீப ஒளியில் அவன் திருமேனி ஜொலித்தது. கண்ணீர்விட்ட என்னை நினைத்து நானே வெட்கம்கொள்ள, மேனி சிலிர்த்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு அவன் அழகைக் கண்ணாரக் கண்டேன்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சுவாமிமலை அற்புதங்கள்

தீபாராதனை தரிசனம் முடித்துப் பிற பக்தர்கள் வேறு சந்நிதிக்குக் கலைந்துபோக நான் சுவாமிநாதனை விட்டு நகர மனமின்றி நின்றேன். குருக்கள் என்னைப் பார்த்து சிரித்தார். “நல்லா தரிசனம் பண்ணிக்கோங்கோ... இவன் கண்கண்ட தெய்வம். நீங்க கண்ணீர்விட்டதைப் பார்த்தேன். இவன் சந்நிதிக்கு வந்த பின்னாடி எந்த வினையும் பின்னாடி வராது. நம்புங்கோ” என்றார்.

அவர் வார்த்தைகள் அங்கு எதிரொலித்து மீண்டும் செவிகளுக்குத் திரும்பியது போல இருக்க ஒரு கணம் சிலிர்ப்பு ஏற்பட்டது. நான் அவரை நோக்கிப் புன்னகைத்தேன். “என்ன அப்படிப் பார்க்கிறேள்... நான் சொல்றதுல நம்பிக்கை வரலியா...” என்றார். அப்படியில்லை என்பதுபோல அவசரப்பட்டு தலையாட்டினேன். முதிர்ந்த பழம்போல் கனிவோடு இருந்த அவர் மனம் புண்பட்டுவிடக் கூடாதே என்று பதறினேன். அவர் என் அருகே வந்தார்.

“பெரியவங்க தப்பா நினைக்காதீங்க... நான் நூறு சதவிகிதம் அந்த முருகனை மட்டும்தான் நம்புறேன்” என்றேன்.

“அப்போ சரியான ஸ்தலத்துக்குத்தான் வந்துருக்கீங்க. ஏன்னா, இது முருகனே சகலமுமா இருக்கிற ஸ்தலம். இங்கே சுப்ரமண்யன்தான் பிரதானம். அவன் இங்கே எல்லாமுமாக இருக்கிறான். அதுக்கு ஓர் உதாரணம் சொல்லவா... பொதுவா எல்லாக் கோயில்களிலும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கும். சோமாஸ்கந்தர், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வருவாங்க. ஆனா, இங்கே வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், சண்முகர், பால தண்டாயுதபாணி, விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர்தான் வருவாங்க. இங்கே அம்மையும் சுப்ரமணியன்தான் அப்பனும் சுப்ரமண்யன்தான்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சுவாமிமலை அற்புதங்கள்

இங்கே நடராஜரா இருக்கிறதும் சுப்ர மணியன்தான். இடப்பதம் தூக்கி ஆடும் கோலத்துல இல்லாம சபாபதி பாகுலேய சுப்ரமணியரா காட்சி கொடுக்கிறார். திருவாதிரை அபிஷேகம் இங்கே அவருக்குத்தான். இங்கே காவிரி ஓடுறதே... அதன் பேரு என்ன தெரியுமோ குமாரதாரை. இங்கே எல்லாமே அந்த சுவாமிநாதன்தான் என்கிறதுக்கு வேறு என்ன ஆதாரம் வேணும்... இதோ, இந்த விநாயகருக்குப் பேரு நேத்ர விநாயகர். முன்னொரு காலத்துல பார்வையில்லாமல் இருந்த ஒருத்தருக்கு இந்த விநாயகர் பார்வை கொடுத்ததா ஐதிகம். சுவாமிநாதனுக்கும் இதே சுபாவம்தான். தன்கிட்ட வந்து உடல் சுகமில்லைன்னு யாராவது வேண்டினா கையோட அவங்களுக்கு சுகம் அளிக்கும் வைத்தியநாதன் இவன். என் வாழ்க்கைல நான் கண்ணாரக் கண்ட ஓர் அற்புதம் சொல்றேன் கேளுங்கோ'' என்றவாறு விவரிக்க ஆரம்பித்தார். நானும் செவிமடுக்க ஆரம்பித்தேன்.

சுவாமிநாதன் சந்நிதானத் துக்கு வந்து நின்னுட்டா காலம் நமக்குக் கீழே இருக்கும்.

``இது நடந்து ஒரு முப்பது வருஷங்கள் இருக்கும். ஒரு குடும்பம் பாம்பேல இருந்து வந்தாங்க. கணவன், மனைவி, ஒரு குழந்தை. தங்க விக்கிரகமா இருந்தது அந்தப் பெண் குழந்தை. இப்போ மாதிரி அப்போ கூட்டம் கிடையாது. சுவாமி சந்நிதி முன்னாடி உட்கார்ந்தாங்க. ரெண்டு பேரும் கண்களிலிருந்து தாரை தாரையா கண்ணீர். எனக்கு மனசு பொறுக்கலை. அவங்க கிட்டப்போய் என்ன ஆச்சுன்னு விசாரிச்சேன். அவங்க சொன்னதைக் கேட்டு என் ஹார்ட் ஒரு நிமிஷம் நின்னே போச்சு.

அவங்களுக்கு அந்தப் பெண் ஒரே குழந்தை. ரொம்பச் செல்லம். ஆனா பாருங்கோ, அதுக்குப் பொறந்ததுலேர்ந்து ஹார்ட்ல ஓட்டையாம். எவ்ளோ சீக்கிரம் ஆபரேஷன் பண்றோமோ அவ்ளோ சீக்கிரம் நல்லதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. ஆபரேஷனும் கொஞ்சம் ரிஸ்கான ஆபரேஷன்னு சொன்னாங்களாம். ஆபரேஷனுக்கு முன்னாடி சுவாமி நாதனை தரிசனம் பண்ணலாம்னு வந்திருக்காங்க.

நான் எதுவுமே பேசலை. அன்னிக்கு சுவாமிக்கு சந்தனக் காப்பு. சுவாமி மார்புல இருந்த சந்தனத்தைக் கொஞ்சம் எடுத்தேன். அவங்ககிட்ட கொடுத்து ஊருக்குப் போனதும் 11 நாள்கள் இந்த சந்தனத்தைக் கொஞ்சம் கொஞ்சமா இரவில் பால்ல கலந்து கொடுங்க. அப்புறம் போய் டாக்டரைப் பாருங்கன்னு சொல்லி அனுப்பிச்சேன். நான் ஏன் அப்படிப் பண்ணினேன்னு எனக்குப் புரியலை. ஏதோ ஆவேசம் வந்தமாதிரி இதைப் பண்ணிட்டேன். அப்புறம் அதை மறந்தும் போயிட்டேன். ஆனா, அடுத்த மாசம் பாம்பேல இருந்து ஒரு கடிதம் வந்தது.

‘நாகராஜ குருக்களுக்கு நமஸ்காரம் (அதுதான் என்னோட பேரு). பாம்பே வந்த நாளிலிருந்து நீங்கள் சொன்னதுபோல் தினமும் மகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக சந்தனம் கொடுத்து வந்தேன். சரியாக 11 நாள்கள் கழித்து டாக்டரிடம் செக்அப் அழைத்துச் சென்றோம். ஆபரேஷனுக்கு அட்மிட் ஆக வேண்டும் என்று சொல்லி, அதற்கு முன்பு சில பரிசோதனைகளை எழுதிக் கொடுத்தார்கள்.

நாங்கள் பாரத்தை சுவாமி நாதன் மேல் போட்டுட்டுப் பரிசோதனைகளை முடித்து அட்மிட்டும் ஆகிவிட்டோம். பரிசோதனை முடிவுகள் வந்தன. அதை எடுத்துக்கிட்டு சீஃப் டாக்டரும் சில டாக்டர்களும் எங்கள் அறைக்கு வந்தார்கள்.

எப்போ ஆபரேஷன்னு சொல்லுவார் என்று நினைச்சோம். ஆனா, அவர் சிரிச்சார். ‘சார் எங்களால நம்பவே முடியலை. இப்போ எடுத்த எந்தப் பரிசோதனையிலும் குழந்தைக்கு ஹார்ட்டுல ஓட்டை இருக்கிறதாவே இல்லை. எப்படி சரியாச்சுன்னு தெரியலை. நீங்க வீட்டுக்குப் புறப்படலாம். ஆல் தி பெஸ்ட்’ என்று சொல்லிக் கை குலுக்கினார். நாங்கள் கனவா நனவா என்று திண்டாடிப் போனோம். அந்த அறையிலேயே சுவாமிநாதான்னு சத்தமா அழுதேவிட்டேன். அந்த டாக்டர் எங்களை வித்தியாசமாப் பார்த்துக்கிட்டே போனார். அப்புறம்தான் தெரிஞ்சது அந்த டாக்டரோட பேரும் சுவாமி நாதனாம். சுவாமிநாதன் எங்களுக்கு வாழ்க்கையையே திரும்பக் கொடுத்திட்டார்’னு அந்தக் கடிதத்துல இருந்தது. இப்போ சொல்லுங்கோ இதைவிடவா உங்களுக்குப் பிரச்னை அதிகம்.

இதோ, இந்த சுவாமிநாதன்கிட்ட என்ன வேணுமோ கேளுங்க. இல்லைன்னு சொல்லவே மாட்டான். வரப்பிரசாதி. எத்தனை பேர் இங்க வந்து எங்களுக்குக் குழந்தை வரம் கொடுன்னு கேட்டுக் கதறியிருக்காங்க தெரியுமா... அப்படிக் கண்ணீர்விட்டவங்க கைல குழந்தையோட அடுத்த வருஷமே வந்து, அந்தக் குழந்தை காச்மூச்சுன்னு கத்துறதை என் சர்வீஸுல நிறைய்ய பார்த்துட்டேன்!

சுவாமி மலைல படிகள் மொத்தம் அறுபது. அவை 60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும். அப்படின்னா என்ன அர்த்தம்... காலங்களைக் கடந்து இருக்கிறவன் இந்த சுவாமி. அவன் சந்நிதானத்துக்கு வந்து நின்னுட்டா காலம் நமக்குக் கீழே இருக்கும். இதோ சந்நிதிக்கு முன்பாக இருக்குதே நாலு படிக் கட்டுகள் அந்த நாலும் நாலு வேதங்கள். இவனே வேதங் களின் உட்பொருளாகவும் அந்த வேதங்களைக் கடந்த பரம் பொருளாக நிற்கிறவன்.

சுவாமிநாதன் இங்கே குருவா அருள் புரிகிறான். தகப்பனுக்கே உபதேசம் பண்ணின தலம். பொதுவா குருவோட சுபாவம் என்னன்னு தெரியுமோ... தன்னைச் சரணடைகிற ஜீவாத்மாக்களோட தகுதி என்னன்னு பார்க்காம சகலமுமா இருக்கிற தன்னுடைய தகுதியினால அவங் களுக்கு கிருபை செய்றது. அதனாலதான் அருணகிரிநாதர் முருகனைக் கூப்பிடுறப்போ, ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ன்னு கூப்பிடுறார். நீங்களும் அவனைச் சரணடைந்து நமஸ்காரம் பண்ணிட்டுப் போங்க. சகலமும் வெற்றியாகும்” என்றார்.

பெரும் பலம் அவர் சொற்களின் வழியாக என் நெஞ்சில் நிறைந்திருந்தது. சுவாமிநாதன் ரட்சிப்பான் எனும் நம்பிக்கையோடு விடைபெற்றேன்,.