ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

ரம்பொருளை அடைய வேண்டும் என்றால் அதை அறிந்தவர் உரிய வழிகாட்ட வேண்டும். இறைவனின் திருவடிகளை அடையும் மார்க்கத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். நம் குற்றங்களை நீக்கி அதற்கு நம்மைத் தகுதிப்படுத்துபவராக இருக்க வேண்டும். அவ்வாறு நமக்குப் பரம்பொருளோடு சம்பந்தம் ஏற்படுத்தி வைப்பவரே குரு. அவர் இல்லாமல் ஒருவர் நேரடியாக அந்தப் பரம்பொருளை அடையமுடியாது.

காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்தவர் திருக்கச்சி நம்பிகள். பெருமாள் அவரோடு நேருக்கு நேராகப் பேசுவாராம். ஒருநாள் அவர் பெருமாளிடம், 'தனக்கு வைகுண்டப் பிராப்தி உண்டா' என்று கேட்டார்.

அதற்கு, 'யார் ஒருவர் குருவிடம் உபதேசம் பெற்று அவருக்கு சேவை செய்கிறார்களோ அவர்களே வைகுண்டம் அடைய முடியும்' என்று பதில் உரைத்தாராம் பெருமாள். உடனே திருக்கச்சி நம்பிகள் குருவினைத் தேடி ஶ்ரீரங்கம் கிளம்பினார் என்கிறது ஆசார்யப் பரம்பரை நூல்கள்.

அன்னமய்யா
அன்னமய்யா
processஅன்னமய்யா இளம் வயதிலேயே திருப்பதி பெருமாள் மீது பக்தி கொண்டார். அவரை அடைவதையே தன் வாழ்வின் லட்சியமாகவும் நினைத்து வாழ்ந்தார். யாரும் எதிர்பாராத நாளில் திருமலைக்கும் புறப்பட்டும் விட்டார். குரு வழிகாட்டப் பெருமாளின் திருவடியை அடைய வேண்டியது அல்லவா மோட்ச சாதனம்...

அன்னமய்யாவுக்கு குரு யார்? கல்வி கற்பித்த குரு ஒருவர் இருக்க ஞான மார்க்கத்தைக் காட்டும் குரு என்று ஒருவர் இல்லை. அப்படியிருக்க அவர் அந்த வைகுண்ட வாசனை அடைவது எப்பது? அதற்குத்தான் தாயுள்ளம் தயையுடன் இறங்கிவந்தது.

பெருமாள் அருகில் இருந்து நித்தியமும் பக்த ஜனங்களுக்காகப் பரிந்து பேசுபவர் தாயார் . அப்படிப்பட்டவர் அன்னமய்யாவின் பக்தியையும் முயற்சியையும் கண்டு மனம் இறங்கி வராமல் இருப்பாரா என்ன? வந்ததோடு மட்டுமல்ல அன்னமய்யாவுக்குப் பிரசாதமும் தந்து திருமலைக்கு வழியும் காட்டினார். அன்னமய்யாவுக்கு அலர்மேல் மங்கையே குரு என்றால் அது மிகையாகாது.

அதற்காகத்தானோ என்னவோ அன்னமய்யாவும் குரு கீர்த்தனத்தோடு தன் சங்கீர்த்தனத்தைத் தொடங்கும் பாவனையில் தாயாரை நினைத்து நூறுபாடல்கள் பாடித் தன் ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்தார் என்றும் சொல்லலாம்.

திருமலை திருப்பதி
V. Belyaevஅன்னை வழங்கிய அருட்பிரசாதம் உண்டு தன் களைப்பு தீர்ந்த அன்னமய்யா புத்துணர்ச்சியோடு திருமலையேறினார். விரைவிலேயே புஷ்கரணிக் கரையை அடைந்தார். குளிர்ந்த அந்தத் தீர்த்தத்தில் நீராடினார். திருக்கோயிலின் விமானத்தைக் கண்டு வணங்கினார்.

கரையேறி ஈர உடையோடு அமர்ந்து பெருமாள் மீது பாடல்கள் பாடத் தொடங்கினார். அவர் அணிந்திருந்த உடை காய்வதற்குள் திருவேங்கடமுடையான் மீது நூறு பாடல்கள் பாடினாராம். பாடப் பாட அவனைக் காணும் ஆவல் மிகுந்தது.

'வேங்கடவா... கோவிந்தா கோவிந்தா ' என்று குரல் எழுப்பிக்கொண்டு அவன் சந்நிதி நோக்கி ஓடினார்.

பக்தர்களோடு விளையாடுவதுதான் அந்தப் பரந்தாமனுக்குப் பிடித்ததாயிற்றே. அன்னமய்யா சென்ற நேரம் வேங்கடமுடையான் சந்நிதி மூடியிருந்தது. ஆசையோடு ஓடிவந்தவருக்கு ஏமாற்றமும் அழுகையும் பொங்கியது. அங்கேயே நின்று பெருமாளைத் துதித்து, திருவேங்கடமுடையான் சதகத்தைப் பாட ஆரம்பித்தார். அவரின் சங்கீதமும் சாகித்யமும் கேட்பவரை உருக்கின. வேங்கடவனும் மனம் உருகினான்.

திருமலையப்பனின் சந்நிதிக் கதவுகள் திறந்தன. பெருமாளின் தரிசனமும் அன்னமய்யாவுக்குக் கிடைத்தது. எந்தத் திருவடியை தரிசிக்க ஓடிவந்தாரோ அவற்றை தரிசித்து மகிழ்ந்தார். இனி தன் வாழ்க்கை முழுமைக்கும் திருமலையே சாஸ்வதம் என்று எண்ணிக்கொண்டார். அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

அன்னமய்யாவைப் பொறுத்தவரை தாயார், பெருமாளை அடையும் வழியைக் காட்டிக் கொடுத்தார். அதன்வழி வந்து அன்னமய்யாவும் தரிசனம் செய்து மகிழ்ந்தார். ஆனாலும் அன்னமய்யா பெருமாள் அடியவராகத் தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ள பஞ்ச சம்ஸ்காரங்களையும் ஏற்க வேண்டும் அல்லவா... அதற்கும் ஒரு திருவிளையாடல் நடந்ததாகச் சொல்வார்கள்.

அன்று இரவு அன்னமய்யா ஒரு வீட்டின் திண்ணையில் படுத்திருந்தார். மறுநாள் துவாதசி. அந்த நாளின் அதிகாலைப் பொழுதில் அன்னமய்யாவை ஒருவர் தொட்டு எழுப்பினார். திருமண் காப்பும் துளசிதளமுமாகக் காண்பதற்கு அந்த வேங்கடவனே மானுட உருக்கொண்டதுபோன்று விளங்கினார். அவர் பெயர் கணவிஷ்ணு.

அன்னமய்யா அவரைக் கண்டதும் துள்ளி எழுந்து அவரைப் பணிந்துகொண்டார். உடனே கணவிஷ்ணு அன்னமய்யாவை சமாதானம் செய்து அமரவைத்து,

"அப்பா... சற்றுமுன் என் கனவில் அந்த வேங்கடமுடையான் தோன்றினார். என் பிரியத்துக்குரிய அன்னமய்யா இந்தத் தலத்தில் இருக்கிறான். நீ அவனிடம் சென்று அவனுக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களையும் செய்விப்பாயாக என்று கட்டளையிட்டார். பெருமாளே சொன்னபிறகு தாமதிக்க என்ன இருக்கிறது? ஓடிவந்துவிட்டேன்" என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் அன்னமய்யாவின் உடல் சிலிர்த்தது. தனக்காக ஏழுமலையானே பரிந்து பேசினார் என்பதைக் கேட்டு நெகிழ்ந்தார். அடுத்த கணம் பஞ்ச சம்ஸ்காரங்களையும் பெற கணவிஷ்ணுவிடம் பணிந்து நின்றார். கணவிஷ்ணு அன்னமய்யாவுக்கு சங்கு சக்கரம் பொறித்து, சரணாகதித் தத்துவத்தை உபதேசித்தார்.

அதன்பின் அன்னமய்யா திருமலையில் தங்கிவிட்டார். தினமும் புஷ்கரணியில் நீராடுவது, வேங்கடவனை தரிசனம் செய்வது அவனுக்குக் கைங்கர்யம் செய்வது, அவனைக் குறித்துக்கீர்த்தனைகள் பாடுவது என்று தன் நாள்களைக் கழித்தார். அதன் மூலம் தன் ஆன்மாவுக்குள் களித்தார். வீடு குறித்தோ அல்லது பெற்றோர் குறித்தோ அவருக்கு மறந்தேபோனது.

திருமலை திருப்பதி

பிள்ளை மறந்துபோகலாம் ஆனால் பெற்ற தாய் மறப்பாளா... சுமந்து வளர்த்த தந்தை மறப்பாரா... வைக்கோல் கொண்டுவரப்போன அன்னமய்யா என்ன ஆனார் என்னும் கவலை அவர்களை வாட்டி வதைத்தது. நாலு திசைகளிலும் ஆள் அனுப்பித் தேடினர். ஆனால் எந்தத் தகவலும் வரவில்லை. வேறு வழியின்றி அவர்களே ஊர் ஊராகத் தேடிக்கொண்டு சென்றனர்.

அப்போது திருமலையிலிருந்து சென்ற பக்தர்கள் குழாம் ஒன்றை வழியில் சந்தித்தனர். அவர்களிடம் அன்னமய்யாவின் அடையாளங்களைச் சொல்லி விசாரித்தனர்.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர், "தாங்கள்தான் அந்த அற்புதக் குழந்தையின் பெற்றோர்களா..." என்று விசாரித்து அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினர். உடனே அன்னமய்யாவின் தாய், "நீங்கள் எங்கள் செல்வனைப் பார்த்தீர்களா...?" என்று கேட்டார்.

"ஆம் அம்மா, அவரைப் பார்த்தது மட்டுமில்லை... அவர் பாடியதையும் கேட்டோம். அவர் இசையில் திருமலையில் உள்ளவர்கள் மட்டுமல்ல அந்தத் திருமலையப்பனே சொக்கிக் கிடக்கிறான். உங்கள் குழந்தை பாடப் பாட மூடியிருந்த சந்நிதிக் கதவின் தாழ்ப்பாள் தானே திறந்தது. அப்படிப்பட்ட அந்த பாகவதோத்தமனைப் பெற்ற நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். தாங்கள் திருமலை சென்றால் அங்கு நிகழும் அற்புதங்களை நேரில் காணலாம் " என்று சொல்லிப் பாராட்டி மீண்டும் வணங்கி விடைபெற்றனர்.

தன் குழந்தை கிடைத்துவிட்டான் என்பது ஒரு மகிழ்ச்சி என்றால் அவனை மற்றவர்கள் புகழக் கேட்டது மேலும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆவலோடு திருமலை நோக்கிக் கிளம்பினார்கள் அன்னமய்யாவின் பெற்றோர்கள்.

திருமலையப்பன் சந்நிதியில் கீர்த்தனம் செய்துகொண்டிருந்த அன்னமய்யாவைக் கண்டு வியந்தனர். பெருமாளை சேவித்து முடித்து அவர் வெளியே வரும்வரைக் காத்திருந்தனர். அன்னமய்யா வெளியே வரும்போது அங்கே பெற்றோர் நிற்பதைக் கண்டார். அவருக்கு அப்போதுதான் ஊரும் உறவும் நினைவுக்கு வந்தது.

பெற்றோர் அன்னமய்யாவை உச்சிமுகர்ந்து ஆரத்தழுவி வரவேற்றனர். அன்னமய்யாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மீண்டும் வீடு, சொந்தம், உறவு, உழவு என்று வாழப்போகிறோமா என்னும் கவலை அதிகரித்தது. பதில்பேசாமலேயே இருந்தார்.

அன்னமய்யாவைத் தங்களுடன் ஊருக்கு வருமாறு அழைத்தனர். அன்னமய்யா செய்வதறியாது திகைத்தார். மீண்டும் அந்த வேங்கடவன் சந்நிதிக்குச் சென்று வேண்டிக்கொண்டார். அப்போது அவர் மனத்துள் பெற்றோரோடு செல்ல வேங்கடவன் சம்மதிப்பது போன்ற சமாதானம் தோன்றியது. உடனே வேங்கடவனை வணங்கிவிட்டு அன்னமய்யா பெற்றோரோடு ஊருக்குக் கிளம்பினார்.

- தரிசிப்போம்...