Published:Updated:

அற்புதங்கள் நிகழ்த்தும்`காயத்ரி மந்திரம்’ - சுவாமி சதேவானந்த சரஸ்வதி விளக்கம்

காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம்

கொரோனா சூழ்ந்திருக்கும் இத்தருணத்திற்குத் தேவையான மந்திரம் காயத்ரி. எக்காலத்திற்கும் பொருந்தும் இந்த மந்திரத்திற்கு ரிஷி விஸ்வாமித்திரர். (விஸ்வ - உலகம், மித்ர - நண்பன் / சிநேகிதன்).

இன்று காயத்ரி ஜபம். தினமுமே காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். ஆனால், காயத்ரி ஜப தினம் என்று சிறப்பாகச் சொல்லப்படும் இந்த நாளில் 1,008 முறை காயத்ரி மந்திர ஜபம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்படிப்பட்ட பெருமைமிக்க காயத்ரி மந்திரம் என்றால் என்ன? அதன் சிறப்புகளையும் பயன்களையும் விளக்குகிறார் சுவாமி சதேவானந்த சரஸ்வதி.

`காயத்ரி’ என்பது மந்திரத்தை உச்சரிக்கும் முறைகளில் ஒன்று. இதற்கு சந்தஸ் என்று பெயர். ஒவ்வொரு தெய்வத்திற்கும் காயத்ரி மந்திரம் உண்டு. இந்த காயத்ரி சந்தஸில் ஒவ்வொரு தெய்வத்தையும் 24 சம்ஸ்கிருத அக்ஷரங்களில் துதிக்கிறோம்.

உதாரணமாக:

தத் புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

- இது சிவ காயத்ரி

நாராயணாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

- இது விஷ்ணு காயத்ரி

ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்

- இது கணேச காயத்ரி

சுவாமி சதேவானந்த சரஸ்வதி
சுவாமி சதேவானந்த சரஸ்வதி

ஆனால், பொதுவாக காயத்ரி மந்திரம் என்று சொன்னால் அது :

ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்

என பலரும் நினைக்கிறோம். ஆனால், இந்த மந்திரத்திற்கு `சாவித்திரி’ என்று பெயர்.

வேத பாடசாலையில் முறைப்படி வேதம் படிக்காதவர்களும்கூட, தங்கள் குல வழக்கப்படி ருக் வேதி, யஜுர் வேதி, சாம வேதி, அதர்வண வேதி எனக் கூறுவதைக் கேட்க முடியும். குறிப்பிட்ட வேதத்தில் இருக்கும் வேறு எந்த மந்திரத்தையும் அறியவில்லை என்றாலும் கூட, குறிப்பிட்டவேதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்ல ஒருவருக்கு உரிமையுண்டு. ஏனெனில், அவர் நான்கு வேதங்களிலும் இருக்கும் காயத்ரி மந்திரத்தை அறிந்து இருப்பதால் அவ்வாறு சொல்லலாம். தவறில்லை. அதோடு எல்லா வேதங்களின் சாரம் இந்த காயத்ரி மந்திரம்.

மிகச்சிறு வயதில் (பொதுவாக 7, 9 வயதிற்குள்) இந்த மந்திரம் உபதேசம் செய்யப்படுகிறது. 9 வயதேயான குழந்தையின் பிரார்த்தனை என்னவாக இருக்கும்... கல்வி, செல்வம், வீரம் இவற்றில் எதைத் தேர்வு செய்வது என முடிவெடுப்பது கடினம். பெற்றோரின் தவறான முடிவினாலும்கூட குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். எனவே, அறியாமை மற்றும் குழப்பம் இவற்றை அகற்றி தெளிவாக முடிவெடுக்கும் சக்தி கொடு என பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம்.

பிரார்த்தனை செய்வது ஒரு குழந்தை. ஆனால் ‘எங்களுக்கு’ (தீமஹி) எனப் பன்மையில் பிரார்த்தனை இருக்கிறது. ஏனெனில் குடும்ப உறுப்பினர்கள், சமுதாயம், நாடு மற்றும் ஒட்டுமொத்த மனித குலமும் தெளிவாக முடிவெடுக்க பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் எடுக்கும் ஒரு தவறான முடிவினால், ஒட்டுமொத்த மனித குலமும் இன்னல்களை அனுபவிக்க நேரலாம். எனவே ஒட்டுமொத்த உலக நலத்திற்கு பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம்.

காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம்

சரியான நேரத்தில் சரியான இடத்தில் ஒரு செயலைச் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். நாம் எடுக்கும் சரியான முடிவுகளே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. எது சரி... எது தவறு... எனத் தீர்மானிப்பதில் குழப்பம் வரலாம். மேலும் இரண்டு சரியான முடிவுகளில் எது சிறந்தது எனத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகலாம். இனம் காண முடியாத குழப்பங்கள் சூழும்போது, காரணமற்ற பயம் நம்மை ஆட்கொள்ளும். எனவே, சரியான முடிவினைத் தீர்மானிக்க பிரார்த்தனை அவசியம். தனி ஒருவரது வெற்றியும் சாதனையும் பெரிதல்ல. உலக நலனை வலியுறுத்துவதே நம் தேசத்தின் கலாசாரம், பண்பாடு. நான், நீங்கள், மனித குலம் என எல்லோருக்குமான பிரார்த்தனை இது. இதுவே சாத்விக பிரார்த்தனை.

கொரோனா சூழ்ந்திருக்கும் இத்தருணத்திற்குத் தேவையான மந்திரம். எக்காலத்திற்கும் பொருந்தும் இந்த மந்திரத்திற்கு ரிஷி விஸ்வாமித்திரர். (விஸ்வ - உலகம், மித்ர - நண்பன் / சிநேகிதன்). எனவே, அற்புதங்கள் நிகழ்த்தும் காயத்ரி மந்திரத்தை அனுதினமும் ஜபித்து, சரியான முடிவுகளைத் தக்க தருணத்தில் எடுத்து இன்னல்களில் இருந்து விடுபடுவோம்.

காயத்ரி
காயத்ரி

ஓம் - பிரணவம்

பூர் புவ: ஸ்வ: - உலகில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுள்.

தத் - அவர்

ஸவிதுர் - ஒளி பொருந்திய சூரியனாகவும்

வரேண்யம் - வணங்கதக்கவராயும்

பர்கோ - அறியாமை மற்றும் குழப்பத்தை பஸ்மமாக்குபவரும்

தேவஸ்ய - ( ஆகிய அந்த ) தெய்வம்

யோ ந - நம்

தீமஹி - எல்லோருடைய

தியோ - முடிவெடுக்கும் திறனை

ப்ரசோதயாத் - பிரகாசப்படுத்தட்டும்

உலகைப் படைத்த, ஒளி பொருந்திய, வணங்கத்தக்க அந்தத் தெய்வம், நம் எல்லோருடைய அறியாமையை அகற்றி, அறிவைத் தூண்டி முடிவெடுக்கும் திறனை பிரகாசப்படுத்தப்படும்.

- சுவாமி சதேவானந்த சரஸ்வதி,

சுவாமி தயானந்த ஆஸ்ரமம்,

ரிஷிகேஷ்,

உத்தராகாண்ட் மாநிலம்.

அடுத்த கட்டுரைக்கு