Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

கடப்பா எனும் நகரை அடைந்த வீரபிரம்மேந்திரரையும் அவரின் சீடர்களையும் பெருமகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அவ்வூர் நவாபு. அத்துடன், `இங்கேயே சிறிது காலம் தங்கி அருள் பாலிக்கவேண்டும்’ என்றும் சுவாமியிடம் வேண்டி சம்மதம் பெற்றார் நவாபு. ஒருநாள் ஸ்வாமியை தன் தர்ப்பாருக்கு வரும் படியும் அழைப்பு விடுத்தார் நவாபு.

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்


அதை ஏற்றுக்கொண்ட ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், குறிப்பிட்ட நாளில் நவாபுவின் தர்பாரை அடைந்தார். ஏற்கெனவே தண்டோரா அறிவித்து மக்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் நவாபு. அவர்கள் அனைவருக்கும் ஸ்வாமியை அறிமுகம் செய்துவைத்தார். அத்துடன், ``ஏற்கெனவே நம் தர்பாரின் அற்புதம் நிகழ்த்திய ஸ்வாமி சித்தய்யாவின் குரு இவர். இவரை தரிசிப்பதே பெரும் பேறு’’ என்றதுடன் ஸ்வாமியின் அருளுபதேசங்களையும் வேண்டினார் நவாபு.

அனைவரையும் ஆசீர்வதித்த ஸ்வாமி வீரபிரம்மேந்திர, ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும்பல அறவுரைகளையும் வழங்கினார். இந்தத் தருணத்தில் நவாபு எழுந்து ஸ்வாமியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அந்த வேண்டுகோள் அவரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவதாக இருந்தது. `சீடரின் மகத்துவத்தை நேரில் கண்ட நாம், குருவின் மகிமையையும் காண வேண்டும்’ என்பதே நவாபுவின் உள்ளக் கிடக்கை ஆகும்.

ஸ்வாமியிடம் அவர், ``ஸ்வாமி! எனது அரண்மனையில் பெண் குதிரை ஒன்று இன்னும் சிறிது காலத்தில் பிரசவிக்கும் நிலையில் உள்ளது. தாங்கள் தயைகூர்ந்து அந்த குதிரை பிரசவிக்கவுள்ள குட்டி ஆணா, பெண்ணா என்பதை இங்குள்ள எல்லோருக்கும் உணர்த்தும் வகையில் ஏதாவது ஓர் அற்புதத்தை நிகழ்த்த வேண்டுகிறேன்’’ என்றார்.

ஸ்வாமி புன்னகையோடு நவாபுவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். அந்தக் குதிரையை தர்பார் மண்டபத்துக்குக் கொண்டுவரும்படி பணித்தார். விரைவில் குதிரை வந்து சேர்ந்தது. அதைப் பரிவுடன் நோக்கினார் ஸ்வாமி. பின்னர் ``நவாப், இந்தக் குதிரை ஓர் அழகான ஆண் குட்டியை ஈனவுள்ளது. அந்தக் குட்டியின் அனைத்துப் பாகங்களையும் என்னால் தெளிவாகக் காண முடிகிறது!’’ என்றார்.

உடனே நவாபு, ``ஸ்வாமி! தங்களின் ஆற்றலை நான் அறிவேன். இந்த ஊர் மக்களும் இங்கு கூடியுள்ளோரும் அதை உணரும் வகையில் ஏதேனும் அற்புதம் நிகழ்த்துங்கள். இன்னும் சில மாதங்களில், இந்தக் குதிரையானது குட்டியை ஈன்றெடுக்கும்போது நான் ஜீவித்திருக்கிறேனோ இல்லையோ! ஆகவே, இப்போதே நாங்கள் எல்லோரும் அந்த ஆண் குட்டியைக் காணும் வகையில் ஏதேனும் செய்யுங்களேன்’’ என்றார்.

உடனே வீரபிரம்மேந்திரர், ``சரி! உன் வீரர்களிடம் சொல்லி, இந்தக் குதிரையின் நான்கு புறமும் வெள்ளைத் துணியால் திரைகள் அமைக்கச் சொல். நான் உனக்கு இந்தக் குதிரையின் குட்டியைக் காட்டுகிறேன்’’ என்றார்.

நவாபுவுக்கு இப்போது பதற்றம் தோன்றியது. ஒருவேளை தாய்க் குதிரைக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் பெரும் பாவம் ஏற்படுமே என்று எண்ணினார். ``ஸ்வாமி மன்னித்துவிடுங்கள். இந்தச் செயலால் தாய்க் குட்டிக்கு ஏதேனும் நிகழ்ந்துவிடக் கூடாது’’ என்றார்.

வீரபிரம்மேந்திரரோ, ``நவாப்! ஏனி இவ்வாறு கற்பனை செய்கிறாய். குதிரைக்கு எவ்வித ஆபத்தும் நேராது. அதற்கு உயிர் அளிப்பதும்; திரும்பப் பெறுவதும் நானே... நீ பொறுமையாக இரு’’ என்று அறிவுரை கூறிவிட்டு, குதிரை இருந்த இடத்துக்குச் சென்றார். சில விநாடிகளில் திரை மறைவிலிருந்து வெளிப்பட்டார். அவரின் கரங்களில் அழகான வெள்ளைநிற ஆண் குதிரைக் குட்டி இருந்தது. அனைவரும் வியந்தார்கள்.

ஸ்வாமியை வணங்கிய நவாபு, மீண்டும் குட்டியை குதிரையில் வயிற்றில் சேர்த்து விடும்படி கேட்டுக்கொண்டார். வீரபிரமேந்திரரும் மீண்டும் திரைகளின் பின்னால் சென்றார். தனது கைத்தடியால் குதிரையில் நெற்றியைத் தொட்டு, ``குழந்தாய் எழுந்திரு. உனது குழந்தையை மீண்டும் சுமந்துகொள்வாயாக. உனக்கு விதிக்கப் பட்ட பிரசவக்காலத்தில் உன் குழந்தையை ஈன்றெடுப்பாயாக’’ என்றார். குட்டி குதிரையின் கருவறையை அடைந்தது. தொடர்ந்து, எழுந்து நின்ற குதிரை, அனைவரும் காணும்படி திரைமறைவில் இருந்து வெளிப்பட்டது.

``அனைவரும் ஜெய் வீரபிரம்மேந்திர ஸ்வாமி!’’ என்று ஆர்ப்பரித்தனர்.

ஞானியர் நினைத்தால் எதுவும் சாத்தியமே என்பதற்குச் சாட்சியாக அமைந்தது இந்த அற்புதம். நவாபு ஸ்வாமிகளை மேலும் சில நாள்கள் தங்களுடன் தங்கியிருக்கும்படி வேண்டிப் பணிந்தார். ஸ்வாமியோ, ``நவாப்! உன் உள்ளம் காற்றில் அசைந்தாடும் தீபம் போன்று தத்தளிப்பதை நான் அறிவேன். வருந்தாதே. என் மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இரு. சிறிது நாள்கள் கழித்து என் மடத்துக்கு வருவாயாக. தெய்வீக தரிசனத்தையும் ஞானத்தையும் அளிக்கிறேன். இப்போது எங்களுக்கு விடைகொடு’’ என்றார்.

கண்ணீருடன் ஒப்புக்கொண்ட நவாபு, ``பிரபு தாங்கள் அருளிய காலக்ஞானத்திலிருந்து சில துளிகளை எங்களுக்கு எடுத்துரைக்க மாட்டீர்களா?’’ என்று கேட்டார். வீரபிரம்மேந்திரர் அதை ஏற்றுக்கொண்டார். மந்திர உபதேசத்துடன், காலக்ஞானத்தில் இருந்து சில துளிகளையும் உபதேசமாக அருளினார்.

மறுநாள் அதிகாலையில் ஸ்வாமியும் அவரின் சீடர்களும் அங்கிருந்து புறப்பட்டு, தங்களின் யாத்த்திரையைத் தொடர்ந்தனர். வழியில் புரொட்டுலூரு என்ற கிராமத்தை அடைந்தனர். அவ்வூர் மக்கள் இவர்களை வரவேற்று உபசரித்தனர். அன்று அங்கு தங்கிய ஸ்வாமி, அவ்வூர் மக்களுக்கு, ஆன்மிகம் தொடர்பான சந்தேகங் களைத் தீர்த்துவைத்தார்.

அங்கே கைவண்டி இழுக்கும் தொழிலாளி ஒருவர் ஸ்வாமியிடம் தெய்விக ரகசியங்களையும் யோக சூத்திரம் குறித்தும் கேட்டபோது சீடர்கள் வியந்தார்கள். அப்போது ஸ்வாமி அந்தத் தொழிலாளியைச் சுட்டிக்காட்டி ``இவர் சாமானியர் அல்ல. பெரும் ஞானி’’ என்றார்.

மறுநாள் யாத்திரை மீண்டும் தொடங்கியது. வழியில் அரிலாத்த பள்ளி எனும் கிராமத்தில் கோயில்கொண்டிருந்த வீரபத்திரரை வணங்கி வழிபட்டார் வீரபிரம்மேந்திரர். மறுநாள் புஷ்பகிரி எனும் கிராமத்தை அடைந்தார்கள். அங்கு, ஸ்வாம் ஒரு மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டார். மற்றவர்கள் அந்த வண்டியைப் பின் தொடர்ந்தனர். அந்த வழி ஒரு காட்டுப்பாதை. அருகிலிருந்த காட்டுக்குள் ஒன்பது கொள்ளையர்கள் தங்கியிருந்தனர். ஒன்பதுபேரும் மிகவும் கொடூரர்கள். உள்ளூர்க் காரர்கள் அந்தப் பாதையைத் தவிர்த்துவிடுவார்கள்.

ஸ்வாமியோ அந்தப் பாதையில் செல்வதையே விரும்பினார். வண்டி சிறிது தூரம் நகர்ந்திருக்கும். எதிரில் ஒருவன் ஓடிவந்தான். அவன் வண்டியை வழிமறித்தான். அந்த வழியே செல்லவேண்டாம் என்று வேண்டிக்கொண்டான்.

ஸ்வாமி அவனைப் புன்னகையோடு நோக்கினார்.

``என்னைத் தடுப்பதற்கு உனக்கு உரிமை இல்லை. நான் ஏற்கெனவே என் உடம்பில் உள்ள பயங்கர ஆற்றல் கொண்ட 13 கொள்ளையர்களை அடக்கிவைத்திருக்கிறேன். ஆகவே, இந்தக் காட்டில் உள்ள கொள்ளையர்கள் எனக்கு ஒரு பொருட்டே அல்ல!’’ என்றார்.

வழிமறித்தவனோ `இவர் பிடிவாதக்காரர் போலும். கொள்ளை யர்களிடம் சிக்கித் தவித்தால்தான் உண்மை தெரியவரும்’ என்று எண்ணியபடியே, ஸ்வாமியிடம் மேற்கொண்டு ஏதும் பேசாமல் அங்கிருந்து அகன்றான்.

பயணம் தொடர்ந்தது. வண்டி சிறிது தூரம்தான் சென்றிருக்கும். பாதையோரம் இருந்த பெரிய மரக்கிளைகளிலிருந்து தரையில் குதித்த ஒன்பதுபேர் வண்டியைச் சூழ்ந்துகொண்டனர்!

- தரிசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism