
துஷ்யந்த் ஸ்ரீதர்
ராமாயணத்தில் ராமர் பல்வேறு பராக்கிரமங்களைப் புரிந்தார். காருண்யங்களைக் காட்டினார். ஆனால் விஸ்வாமித்திரர் அவை அனைத்தையும் உடன் இருந்து பார்க்கும் பாக்கியம் பெறவில்லை. ஆனால் முதன்முதலில் ராமரின் கைவண்ணத்தையும் கால் வண்ணத்தையும் கண்ட பாக்கியவான் அவர்தான்.

வசிஷ்டரின் பரிந்துரையின்பேரில் ராம லட்சுமணர்களை அயோத்தியில் இருந்து அழைத்துக்கொண்டு வனத்துக்குள் நடந்தார் விஸ்வாமித்திரர். மாவீரர்கள் என்றாலும் ராம லட்சுமணர்கள் சிறுவர்கள் அல்லவா... அவர்களுக்குப் பயணச் சிரமம் தெரியாமல் இருக்க வழிநெடுக உள்ள அந்தந்த இடங்களின் மகிமைகளை எடுத்துச் சொல்லிக்கொண்டே சென்றார்.
குமார ஸம்பவம் நடந்த ஷர வனம், பகிரதன் கங்கையைக் கொண்டுவந்த க்ஷேத்ரம், வாமன அவதாரம் நிகழ்ந்த சித்தாஸ்ரமம் ஆகிய பகுதிகளைக் கடந்து செல்லும் போது அந்தப் பகுதிகளின் வரலாற்றைச் சொல்லிக் கொண்டே செல்கிறார் விஸ்வாமித்ரர்.
விஸ்வாமித்திரர் சொல்லும் செய்திகளை எல்லாம் கூர்ந்து கவனித்துக்கொண்டே நடக்கிறார் ராமர். திடீரென்று அவர்கள் எதிரே தாடகை வந்து நின்றாள். தாடகை வான் முட்டும் அளவுக்குப் பெரிய உருவம் படைத்த வளாக இருக்கிறாள். எப்படி தெரியுமா... ஆயிரம் யானைகளின் எலும்புக்கூடுகளைக் கோத்து மாலையாக அணிந்திருந்தாள். அந்த மாலை அவள் வயிறுவரை தொங்குகிறது.
யோசித்துப் பாருங்கள், ஒரு யானையின் எலும்புக்கூடே எவ்வளவு பெரிதாக இருக்கும். ஆயிரம் யானைகளின் எலும்புக்கூடுகளால் கோத்த மாலையே வயிறுவரைதான் வரும் என்றால் அவள் எவ்வளவு பெரிய உருவம் உடையவளாக இருப்பாள்?
ராமர் மாவீரர்தான். ஆனாலும் அரக்கியே ஆனாலும் பெண் உருக்கொண்டு நிற்கும் இவளை எப்படிக் கொல்வது என்று தயங்கினார். அப்போது விஸ்வாமித்திரர் தாடகையின் கொடுங்குணங்களை விளக்கினார்.
`ஒரு கர்ப்பவதியைக் கொன்று அவள் கருவின் சிசுவைத் தின்னும் இவளைப் பெண் என்று கருதலாமா' என்று கேட்டதும் ராமரின் தயக்கம் நீங்கியது அம்பை ஏவினார். அது, பிரமாண்டமான தாடகையைக் குத்திக் கிழித்து அதேவேகத்தில் பின்சென்று விழுந்தது.
வால்மீகி ராமாயணமோ அல்லது கம்பராமாயணமோ எதை வாசித்தாலும் அவர்கள் ராமனை ரசிக்கும் அழகைக் காணவேண்டும். கிடைக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் ராமரின் அழகை ரசிப்பார்கள்.

ராமரும் தாடகையும் எதிர் எதிரே நிற்கிறார்கள். அந்தக் காட்சியைக் கம்பன் பின்வருமாறு பாடுகிறார்.
சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தி னாள்மேல் விடுத்தலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சில் தாங்காது அப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றே
ராமரும் கறுப்பு நிறம். தாடகையும் கறுப்புநிறம். எதிர் எதிரே நிற்கிறார்கள். ஆனால் இருவரையும் கம்பர் காணும் அழகைப் பாருங்கள்.
சொன்ன மாத்திரத்தில் அடுத்தவரைச் சென்று சேரும் சொல்லைப் போல வேகமாகப் பாயும் அம்பை எய்யும் ராமன் எப்படி இருக்கிறானாம்... கரிய செம்மலாக இருக்கிறானாம். கறுப்புதான் ஆனாலும் களையாக இருக்கிறான். அதனால் கரிய செம்மல். எதிரே இருக்கும் தாடகையும் கறுப்புதான். ஆனால் அவள் அல்லொக்கும் நிறத்தினாள். `அல்' என்றால் `இருட்டு.' இருட்டைப்போல அச்சம் தரக்கூட வகையில் இருக்கிறாளாம் தாடகை.
கரிய செம்மலான ராமர் விடுத்த அம்பு தாடகையின் கல்போன்ற நெஞ்சில் தங்காது மறுபுறம் போய் விழுகிறது. கற்றவர்கள் கல்லாத மூடர்களுக்குச் சொல்லும் அறிவுரை எப்படி மனதில் தங்காது வெளியேறிவிடுமோ, அதுபோன்று ராமரின் அம்பு தாடகையின் நெஞ்சில் குத்தி நிற்காமல் துளைத்து வெளியேறியது என்றார் கம்பர்.
தாடகை வதம் முடிந்தது. அழகான ஓர் ஆற்றங்கரையில் அமைத்த யாகசாலையில் மூவரும் இரவு தங்குகிறார்கள். காலை பிரம்ம முகூர்த்தம். சிறுவர்களான ராமரும், லட்சுமணர்களும் உறங்குகிறார்கள். விஸ்வாமித்திரர் மெல்ல எழுப்புகிறார்.
கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்... என்று துதித்து ராமரை எழுந்துகொள்ளும்படி விண்ணப்பிக்கிறார். `கௌசல்யையின் நற்புதல்வனான ராமா... சூரியன் உதயமாகும் வேளை வந்துவிட்டது. மனிதர்களில் புலியைப் போன்றவனே, தெய்வக் கடமையை நிறைவேற்ற எழுந்தருள்வாய்' என்று சொல்கிறார்.
எழுப்ப வேண்டியது ராமனை. `ராமா எழுந்திரு' என்றல்லவா சொல்லவேண்டும். ஆனால் விஸ்வாமித்திரர் அப்படிச் சொல்லாமல், `கௌசல்யா சுப்ரஜா' என்று சொல்கிறார். ஏன் அப்படி? இதற்குப் பெரியோர்கள் பல்வேறு விளக்கங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு மகன்மீது தந்தையைவிடத் தாய்க்கு ஆயிரம் மடங்கு உரிமை அதிகமாம். அப்படி அநேக உரிமைகளைக் கொண்ட கௌசல்யா, விஸ்வாமித்திரரோடு ராமர் செல்வதைத் தடுக்கவில்லை. அதற்கு நன்றி சொல்வதற்காக முதற் சொல்லாக கௌசல்யையைக் குறிப்பிடு கிறாராம் விஸ்வாமித்திரர். அடுத்து, சுப்ரஜா என்கிறார். மகன் என்றால் ப்ரஜா என்றே சொல்லியிருக்கலாம். கௌசல்யா `ப்ரஜா' என்றால் பொருள் மாறாது. ஆனால் சுப்ரஜா என்கிறார்.
பொதுவாக சில சொற்களுக்கு முன்பாக, `சு' என்கிற முன்னொட்டைச் சேர்த்தால் அது, `சிறந்த' என்னும் பொருளைக் கொடுக்கும். கந்தம் என்றால் மணம். சுகந்தம் என்றால் சிறந்த மணம். மதி என்றால் நிலவு. சுமதி என்றால் சிறந்த நிலவு. அதேபோன்று ப்ரஜா என்றால் மகன். சுப்ரஜா என்றால் `சிறந்த மகன்' என்று பொருள். இப்படி நல்ல சொற்களைச் சொல்லித் துயில் எழுப்பினார் விஸ்வாமித்திரர்.
பொழுது விடிந்தது. விஸ்வாமித்திரர் யாகம் செய்ய ஆரம்பித்தார். லட்சுமணன் அருகிருக்க ராமர் பாதுகாப்புக்காக யாக சாலையைச் சுற்றி வந்தார். மாரீசனும் சுபாகுவும் தொந்தரவு செய்ய வந்தனர். சுபாகு ராமனின் அம்பால் மாண்டான். மாரீசன் தப்பி ஓடினான். யாகம் நல்ல விதத்தில் பூர்த்தியானது. விஸ்வாமித்திரர் மகிழ்ந்து இருவரையும் ஆசீர்வதித்து மிதிலை நகர் நோக்கி நடக்கலானார். சிறிது தூரம் சென்றதும் அவர்கள் மூவரையும் ஒரு பெண் தொடர்ந்தாள்.
விஸ்வாமித்திரர் அவளை, `யார்' என விசாரித்தார். அவள் தன் பெயர் `அகல்யா' என்றும் தன் கணவரின் பெயர் `கௌதமர்' என்றும் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு தன் வரலாற்றைச் சொன்னாள்.
அகலிகையின் மீது காமம் கொண்ட இந்திரன் கௌதம முனிவரின் வடிவம் எடுத்து வந்து அவளைச் சேர்ந்தான். அதனால் கோபம் கொண்ட முனிவர் அவனை சபித்தார். கூடவே அகல்யாவையும் கல்லாகிப் போகுமாறு சபித்தார். கௌதம முனி அன்று வழங்கிய அந்த சாபம் இன்று நீங்கியது. காரணம் ராமரின் பாத தூளி. பாதம் அல்ல. பாதத்தில் இருந்து விழுந்த ஒரு சிறு தூசி. `அந்த பாததூளி என் மேல் பட்டதும் சாபவிமோசனம் அடைந்தேன்' என்றாள்.
விஸ்வாமித்திரர் வியந்துபோனார். ராமனைப் பார்த்து, `ராமா உன் கை வண்ணம் அங்கு கண்டேன். கால்வண்ணம் இங்கு கண்டேன்' என்று போற்றினார். இதிலும் கம்பரின் சூட்சுமம் சுவைமிகுந்தது.
பொதுவாக, நான் ஒருவரை அரவணைப்பதாக இருந்தால் கையால் அரவணைக்க வேண்டும். சிலர் கோபத்தில் தண்டிப்பதாக இருந்தால் கால்களால் தண்டிப்பார்கள். ஆனால் இங்கே விஷயமே மாறுகிறது. அரவணைக்க வேண்டிய கைகளால் தாடகையை வதம் செய்தார் ராமர். தண்டிக்க வேண்டிய திருவடிகளிலிருந்து இருந்து வீழ்ந்த தூளி ரட்சித்தது. அதனால்தான் கம்பர் மிகவும் வியந்து, `கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்' என்று பாடினார் போலும்!
- தொடரும்...
'தெப்பத்தில் விளக்குகள்'
நாகர்கோவிலிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள ஊர் பறக்கை. மதுசூதனப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. இந்தக் கோயிலின் கருடாழ்வார் சிலையை சிற்பிகள் வடிவமைத்தபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. சிற்பக் கூடத்திலிருந்து கருடாழ்வார் பறந்து வந்து இந்தப் பெருமாள் ஆலயத்தில் அமர்ந்துகொண்டாராம். கருடாழ்வார் பறந்து வந்ததால் இந்த ஊர் `பறக்கை’ என்றானது. இங்குள்ள கருடனை வழிபட நாக தோஷங்கள் அகலும். ஆண்டு தோறும் இங்கே பங்குனி உத்திர திருவிழாவையட்டி, தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. அன்று தெப்பத்தில் விளக்குகள் வைத்துப் பெண்கள் தீபமேற்றி வழிபடுவர். இதனால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கூடிவரும்; செல்வ வளம் உயரும் என்பது ஐதீகம்.
- சி.கங்கா, தூத்துக்குடி