ஜோதிடம்
Published:Updated:

புறநானூற்றில் புராணம்!

புறநானூறு புராணம்
பிரீமியம் ஸ்டோரி
News
புறநானூறு புராணம்

பாண்டிய மன்னன் இளம்பெருவெழுதியின் பாடல்

தமிழின் பழந்தமிழ் இலக்கியம் என்றால் அனைவருக்கும் முதலில் சங்க இலக்கியமே நினைவுக்கு வரும். அகம், புறம் என இரு பொருள்களில் பாடல்கள் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் புராண இதிகாசக் கருத்துகள் காணப்படுகின்றன. உதாரணமாக புகழ்பெற்ற புறநானூற்றுப்பாடல் ஒன்று, 'உண்டாலம்ம இவ்வுலகம்...' என்னும் பாடல். முதலில் அந்தப் பாடலைக் காண்போம்.

புறநானூற்றில் புராணம்!

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”

— புறநானூறு 182

கருத்து : இந்திரனுக்குரிய அமிர்தமே கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பாடலை எழுதியவர் பாண்டியமன்னர் இளம்பெருவழுதி என்பவராவார். நல்லவர்களின் இயல்பைக் குறிப்பிடும்போது முதலில் அவர் குறிப்பிடும் செய்தி இந்திரனுக்குரிய அமிர்தம் பற்றியது. அமிர்தம் என்பது தேவர்கள் உண்பது. இந்திரன் தேவர்களின் தலைவன். அவனே அமிழ்தத்துக்கு அதிபதி. அதை உண்டால் மரணம் நேராது. அத்தனை உயரிய அமிர்தம் கிடைத்தாலும் அதைத் தனியே உண்ணமாட்டார்கள் நல்லோர்கள் என்கிறார் புலவர்.

அமிர்தம் கிடைக்க தேவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப் பெற்ற அமிர்தத்தை எளிதாகக் கொடுத்தாலும் தனித்து உண்ணமாட்டார்கள் என்று சொல்லும்போது நம் விருந்தோம்பல் பண்பும் நல்லோர் இயல்பும் வெளிப்படுகிறது. அத்துடன் பழங்காலத்திலேயே புராணங்களின் செல்வாக்கு நம் இலக்கியங்களில் வெளிப்பட்டமையும் புலப்படுகிறது.