Published:Updated:

தமிழிசை மூவர்!

முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை
பிரீமியம் ஸ்டோரி
முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை

குடந்தை பாலு

தமிழிசை மூவர்!

குடந்தை பாலு

Published:Updated:
முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை
பிரீமியம் ஸ்டோரி
முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை

முத்துத்தாண்டவர்

தெருவில் வாரானோ...’, ‘ஆடிக்கொண்டார்...’, ‘சேவிக்க வேண்டுமையா...’ போன்ற பாடல்கள் தமிழிசை உலகில் மிகவும் புகழ்பெற்றவை. இவைபோன்ற நூற்றுக்கணக்காண பாடல்களைப் பாடியவர் முத்துத்தாண்டவர். தென்னகத்தில் கிருதி, கீர்த்தனை மரபுக்கு வழிவகுத்தவர். இவருடைய பதங்கள் அபிநயத்துக்குச் சிறப்புடையன என்று இசைவல்லார் கூறுவர்.

முத்துத்தாண்டவர் சோழவள நாட்டில் சீர்காழியில் 400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். சீர்காழி சிவத்தலத்துக்கு நாள்தோறும் சென்று வழிபடுவது முத்துத்தாண்டவரின் வழக்கம். ஒருநாள், கோயிலுக்குச் சென்றவர் களைப்பின் காரணமாக தன்னையுமறியாமல் அங்கேயே படுத்து உறங்கிப்போனார். சிறிது நேரம் சென்றபின் விழித்தெழுந்த தாண்டவர், கோயில் குருக்களின் புதல்வியைப் போன்ற சிறுமி ஒருத்தியைக் கண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தில்லைக்குச் சென்று நடராஜப் பெருமானை வழிபடுக. அங்கே அன்பர் கூட்டத்திலிருந்து எச்சொல் முதன்முதலாக வெளிப்படுகிறதோ, அச்சொல்லையே முதலாக வைத்துப் பாடுக!” எனக் கூறிவிட்டு மறைந்துபோனாள் அந்தச் சிறுமி. அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது, இறைவியே சிறுமியாய் வந்து அருள்பாலித்திருக்கிறாள் என்பது.

இறைவியின் ஆணைப்படியே தில்லைக்குச் சென்று வணங்கினார் தாண்டவர். அப்போது அடியார் கூட்டத் திலிருந்து ‘பூலோகக் கயிலாசகிரி சிதம்பரம்’ என்றொரு குரல் வெளிப்படவே, அவ்வாக்கியத்தையே முதலாகக்கொண்டு `பூலோக கயிலாசகிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறும் உண்டோ...' எனத் தொடங்கும் பாடலைப் பாடி முடித்தார். இவ்வழக்கம் தொடர்ந்தது. ஒருநாள் அடியார்களிடமிருந்து யாதொரு சொல்லும் வெளிப்பட வில்லை. எனினும் தாண்டவர், பேச்சில்லாத அந்தச் சூழலையே மனத்தில்கொண்டு, ‘பேசாதே நெஞ்சமே...’ என்ற பாடலைப் பாடி மகிழ்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நாள் சீர்காழியிலிருந்து சிதம்பரத்துக்கு வரும் வழியில் பாம்பொன்று அவரைத் தீண்டியது. அதனால் மனம் கலங்காத முத்துத்தாண்டவர் `அருமருந்தொரு தனி மருந்திது அம்பலத்தில் கண்டேனே' எனும் பாடலைப் பாட, விஷம் நீங்கப் பெற்றார்.

முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை
முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை

இவ்வாறு இனிய பாடல்களால் புகழ்பெற்ற முத்துத்தாண்டவர், ஆவணித் திங்கள் பூச நன்னாளில் இறைவன் திருமுன் நின்று `மாணிக்கவாசகர் பேறு எனக்குத் தர வல்லாயோ...” எனும் பாடலைப் பாடினார். அப்போது, சிதம்பரத்திலிருந்து பேரொளி யொன்று வெளிப்பட, தாண்டவர் அந்தப் பேரொளியில் இரண்டறக் கலந்ததாக வரலாறு!

மாரிமுத்தாப்பிள்ளை

முத்துத்தாண்டவர்போல் தில்லை பெருமான் மீது கீர்த்தனைகளும் பதங்களும் பாடிய இசைப்புலவர் மாரிமுத்தாப்பிள்ளை. இவர், 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் பிறந்த ஆண்டு கி.பி 1712.

`என்ன பிழைப்பு உன்றன் பிழைப்பய்யா', `உம்மைப்போல் ஆட்டை எடுத்து அம்பலத்தில் நிற்பார் ஒருவரைக் காணேன் ஐயா' போன்ற இவருடைய பல பாடல்கள், குரலிசைக் கலைஞர்களின் நாவில் என்றும் நடனம் புரியும் இனிய பாடல்களாகும்.

தமிழிசை மூவர்!

பிள்ளை அவர்களின் மூத்த புதல்வரான தெய்வரங்கன் பெருமாள்பிள்ளை, விதிவசத் தால் அறிவு மழுங்கி குடும்ப நினைவு சிறிதுமின்றி அலைந்து திரியலானார். அதனால் பெரிதும் கவலையடைந்தார் பிள்ளை. அப்போது நடராஜப் பெருமான் அவரின் கனவில் தோன்றி, `இவ்வூருக்கு ஒரு பிரபந்தம் இயற்றினால், உமது கவலை நீங்கும்' என்று அருளி மறைந்தார். அதன்படியே பிள்ளையவர்கள், ‘புலியூர் வெண்பா’ என்னும் நூலைப் பாடிட, அவரின் மகன் நலம் பெற்றார்.

சிதம்பரேசர் விறலிவிடு தூது, வருணாபுரி ஆதிமூலிசர் குறவஞ்சி, ஆதிமூலிசர் நொண்டி நாடகம், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், வியங்கேசர் பதிகம் ஆகியவற்றையும் இவர் இயற்றியுள்ளார். 1787–ல் சித்திரை 14–ம் நாள் இவர் இறையடி சேர்ந்தார்.

அருணாசலக் கவிராயர்

‘ராம நாடகக் கீர்த்தனைகள்’ என்று கூறியதும் கலைஞர்கள் நெஞ்சில் நினைவுக்கு வருபவர் அருணாசலக் கவிராயர். மயிலாடுதுறையை அடுத்துள்ள தில்லையாடி எனும் சிற்றூரில் நல்லதம்பிப்பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் 1711-ம் ஆண்டு பிறந்தார்.

இளமையிலேயே பெற்றோரை இழந்தவர், தருமபுரம் சென்று, பல்லாண்டுகள் அங்கே தங்கி தமிழ் இலக்கிய இலக்கணத்திலும் சமய நூல்களிலும் புலமை பெற்றார். இவருக்குத் தமிழறிவு ஊட்டியவர் அம்பலவாணக் கவிராயர். பல நூல்களில் பயிற்சி இருப்பினும் அருணாசலக் கவிராயரின் உள்ளத்தைக் கவர்ந் தவை திருக்குறளும் கம்ப ராமாயணமும்.

கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்த திருவரங்கத்திலேயே தன் நூலொன்றையும் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என விரும்பினார் கவிராயர். கோயில் அதிகாரிகள் முதலில் மறுத்துவிட்டனர். ஆனால், அரங்கநாதப் பெருமானின் துணையால் கவிராயர் தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டார். தம் 60-வது வயதில் ‘இராம நாடகக் கீர்த்தனைகள்’ என்னும் நூலைப் பாடினார். இது சிறந்ததோர் இசை நாடக நூலாகும்.

‘தரு’ எனும் இசைவடிவம் இதில் 197 முறை கையாளப்பட்டுள்ளது. இரண்டடிக் கண்ணிகளால் ஆன ‘திபதை’ எனும் இசைப் பாட்டு 60 முறை கையாளப்பட்டுள்ளது. கடவுள் வணக்கத்தைக் குறிக்கும் `தோடையம்' போன்ற இசை வடிவங்களும் கையாளப்பட்டுள்ளன. இந்நூலில் காணப்படும் மொத்த விருத்தங்கள் 268. வெண்பா, கொச்சகம் கலித்துறை போன்ற பாக்களும் காணப்படுகின்றன.

40 ராகங்களை இதில் பயன்படுத்தியுள்ளார். துவிஜாவந்தி, மங்களகைசிகம், சைந்தவி ஆகிய அபூர்வ ராகங்களும் உண்டு. அருணாசலக் கவிராயர் தம் 67–வது வயதில் இறையடி சேர்ந்தார்.

தமிழிசை மூவர் என்று போற்றப்படும் இந்தச் சான்றோரை நாமும் போற்றி வணங்குவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism