திருக்கதைகள்
Published:Updated:

தஞ்சைக்கு வந்த முருகன்!

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகன்

முருகன்

தஞ்சைக்கு வந்த முருகன்!

திருச்செந்தூரில் வசித்த துறவி ஒருவரிடம் அழகு ததும்பும் முருகன் விக்கிரகம் ஒன்று இருந்தது. தினமும் கடலில் நீராடுவதும், காட்டுப்பூக்களைப் பறித்து வந்து, கந்தவேலனுக்கு பூஜைகள் செய்வதுமாகவே இருந்தார் துறவி.

முருகன்
முருகன்


இப்பிறவி முடிவுறும் நாளை முன்கூட்டியே அறிந்தவர், ‘வேலவா! உனது விக்கிரகத்தை உண்மையும் தகுதியும் கொண்ட அன்பரிடம் ஒப்படைக்க, நீதான் அருள்புரிய வேண்டும்...’ என பிரார்த்தித்தார்.

ஒருநாள் இரவு, அவரின் கனவில் வயோதிகராகத் தோன்றிய முருகக்கடவுள், துறவியை அழைத்துக்கொண்டு காடுமேடெல்லாம் சென்றார். அப்போது பூந்தோட்டத்தில் தென்பட்ட பெரியவர் ஒருவரைச் சுட்டிக் காட்டி, ‘இவரிடம் விக்கிரகத்தைக் கொடு’ என அருளி மறைந்தாராம். விடிந்ததும், கனவில் கந்தக்கடவுள் அழைத்துச் சென்ற திசையில் பயணித்த துறவி, அந்தப் பெரியவரையும் சந்தித் தார். தான் வைத்து பூஜித்த ஐம்பொன் விக்கிரகத்தை அவரிடம் வழங்கி, வழிபடச் சொன்னார்.

பெரியவரும் பூக்கள் நிறைந்த பூந்தோட்டத்தில், விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடலானார். தொடக்கத்தில் சிறுகுடிசையாக இருந்த ஆலயம், நாளடைவில் அந்தப் பகுதி மக்களின் முயற்சியால், அழகிய ஆலயமாகக் கட்டப் பட்டதாம்!

இப்படி முருகனே அடியவருக்குக் கனவில் கட்டளையிட்டு, தேடி வந்து குடியேறிய கோயில் எந்த ஊரில் இருக்கிறது தெரியுமா?

தஞ்சாவூரில், பூக்காரத் தெருவில் அமைந்திருக்கிறது இந்த முருகன் கோயில். இங்கு அருள்புரியும் முருகனுக்கு விசாக நட்சத்திர நாளில் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

- சக்திதர், சென்னை-61

கங்காதரர் தரிசனம்!

கங்காதரர்
கங்காதரர்


பகீரதனின் வேண்டுகோளை ஏற்று, கங்கையைச் சடையில் தாங்கிக்கொண்ட சிவனாரின் திருக்கோலமே கங்காதரர். பகீரதப் பிரயத்தனத்தை வெற்றியாக்கிய மூர்த்தியல்லவா... ஆகவே, கங்காதரரை தரிசித்து வழிபட்டால், கடின காரியங்களும் எளிதில் நடந்தேறும் என்பார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்! காஞ்சிபுரம் கயிலாசநாதர் ஆலயத்தில் உள்ள கங்காதரர் வடிவில், உமாதேவி தன் வலக்கரத்தை ஈசனின் கால் மீது வைத்தும்; இடக்கரம் ஆச்சரிய முத்திரையுடனும் விளங்க காட்சி தருகிறாள். இந்த வடிவத்தில், சிவனார் ஆறு கரங்களுடன் திகழ்வது சிறப்பு.

- கே.கலா, முசிறி