Published:Updated:

’கோமுகி தீர்த்தம் என்ன மகத்துவம்?’

கேள்வி பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்கள்

ஆன்மிகக் கேள்வி பதில்கள்!

’கோமுகி தீர்த்தம் என்ன மகத்துவம்?’

ஆன்மிகக் கேள்வி பதில்கள்!

Published:Updated:
கேள்வி பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்கள்

? கோயில்களில் கோமுகியில் இருந்து வெளியேறும் தீர்த்தத்தைப் புனிதமாகக் கருதுவார்கள் பக்தர்கள். சமீபத்தில், `கோமுகி தீர்த்தத்தைப் பருகு வதோ கோமுகியைத் தொடுவதோ கூடாது. அது பாவச் செயல்’ என்பது போன்ற ஒரு கருத்துப் பகிர்வைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கருத்து சரியானதா? கோமுகி தீர்த்தம் குறித்து விளக்க வேண்டுகிறேன்.

- ஆர்.கருப்பசாமி, சென்னை-44

கோமுகி தீர்த்தம்
கோமுகி தீர்த்தம்

சிவபெருமானால் உலகம் உய்ய அருளப்பட்டவை வேதாகமங்கள். வேதங்கள் பரம் பொருளைப் பற்றி குறிப்பிடுகின்றன. அந்தப் பரம்பொருளை அடைவதற்கு உரிய வழி களையும், உலக உயிர்களுக்கு நன்மை தரும் நித்ய பூஜைமுறைகள் - நியதிகள் குறித்து ஆகமங்கள் வழிகாட்டுகின்றன.

28 சிவாகமங்களும் 207 உபாகமங்களும் 66 ரிஷிகள் மூலம் இவ்வுலகுக்குச் சிவபெருமான் பராசக்தியால் அருளப்பெற்றன. இதனை திருமூலர், `அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும் அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே' என்று விளக்குகிறார்.

அவரே `ஆலயங்களில் பூஜைகள் நடைபெற வில்லை எனில் மன்னர்களுக்கு - அரசுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வளங்கள் குன்றி தேசத்திற்கு தீமை ஏற்படும் என்றும் எச்சரிக் கிறார். ஒளவை பிராட்டி `ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று அறிவுறுத்துகிறார்.

தற்காலச் சூழலில் பலர் `கோயில் வழிபாடு அவசியம் இல்லை; நம்முள் நம்மை அறிந்தால் போதுமானது' என்றெல்லாம் கூறி மக்களைக் குழப்பி வருகின்றனர். இவை தவறு என்பதை சுட்டிக்காட்டுவதாகத் திகழ்கின்றன மேற்காணும் ஆன்றோரின் கருத்துகள்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று யாராக இருந்தாலும் ஆலய வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

ஆகமங்கள், `திருக்கோயில் இறைவன் குடி கொண்டிருக்கும் இடம்' என்று மட்டும் சொல்லாமல் `அவ்வாலயமே இறைவனின் திருமேனி' என்றும் தெளிவுபடுத்துகின்றன. ராஜ கோபுரம் இறைவனின் பாதக் கமலங்கள் என்று நாம் அறிந்தால், ஆலயத்தினுள் வீண் கதைகளைப் பேசிக்கொண்டோ, தவறான சிந்தனைகளை எண்ணிக்கொண்டோ இருக்க முடியுமா?

ஆலயங்களில் உள்ள சிறு கல்லானாலும் அவற்றை இறைவனின் அங்கமாகப் பார்ப்பதே சிவ பக்தர்களின் நிலையாக முன்னர் இருந்தது.

`மூலஸ்தானம்' என்று போற்றக்கூடிய கருவறையின் மேலேயும் அதைச் சுற்றியும் இருக்கக்கூடிய அமைப்பினையும் `விமானம்' என்பார்கள். வி-மானம் - விசேஷமான அளவு என்று பொருள். விமானம் - ஸ்தூல தேஹம். அதாவது, கருவறையில் இருந்து அருள் தரும் இறைவனின் அருளைப் பெறுவதற்கு ஏற்ப, ஸ்தூலமாக அமைந்திருக்கும் தெய்வ அமைப்பையே விமானம் என்று ஆகமங்களும், மயமதம், மானஸாரம் போன்ற சில்ப நூல்களும் குறிப்பிடுகின்றன.

கோமுகி தீர்த்தம்
கோமுகி தீர்த்தம்


கோ + இல் - இறைவன் (தலைவன்) வசிக்கக் கூடிய இல்லம். சிவமே இவ்வுலகம். ஆகவே ஆலயமானது இறைவன் உறையும் இடமாக நம் அனைவருக்கும் ஆற்றல் தரக்கூடிய மந்திர மாகத் திகழ்வதாக ஆகமங்கள் கூறுகின்றன. இறைவனின் உறைவிடமான மூலாலயம் மிகவும் சரியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

`உபமான விஹீநேது சில்பி நம் ஹந்தி தேசிகம்!

ஸர்வ லக்ஷண ஸம்யுக்தம் ஏதத் ஸர்வம ப்ரதாயகம்' என்கிறது காமிகாகமம். அதாவது அளவுகள் தவறாக இருப்பின் ஆலயத்தின் ஆசார்யருக்கும் சில்பிக்கும் தீங்கு ஏற்படும் என்றும் சரியாக இருப்பின் அனைத்து நலன்களும் அளிக்கக் கூடியதாக விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே, மனிதர்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ப ஆலயங்களில் மாறுதல் ஏற்படுத்த முடியாது என்பதை அறியலாம்.

எப்படி தெய்வ மந்திரங்கள் ஆறு அங்கங் களுடன் விளங்குகின்றனவோ, அதுபோன்று கோயில் அமைப்பும் விமானத்தை ஆறு உறுப்புகளுடன் கூடியதாக விவரிக்கிறது. அவை: 1.அதிஷ்டானம் 2.பாதம் 3.ப்ரஸ்தரம் 4.கண்டம் 5.சிகரம் 6)ஸ்தூபி.

இங்ஙனம் அமைப்பு, அளவு, நியதிகள் என்று ஆலயம் தொடர்பான அனைத்தும் மிக அற்புதமாக ஞான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. எனவே, தங்கள் வீடுகளில் வழிபடுவ தற்கும் ஆலயங்களில் வழிபடுவதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.

ஆலய அமைப்பு அங்கு நடைபெறும் பூஜைகள், அர்ச்சகரின் தபோ பலம் ஆகியவற்றால், அந்த ஆலயம் எப்போதும் சக்தி மிக்க தாகவே இருக்கும். எனவே அங்கு தீய எண்ணங்களோ கர்மவினைகளோ பொடிப் பொடியாகிவிடும். ஆக, ஆலயத்தில் ஒவ்வொரு வழிபாட் டையும் முறைப்படிச் செய்ய வேண்டும்.

கருவறையில் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் ‘ப்ரணாளம்’ என்று போற்றக்கூடிய கோமுகை மிகவும் புனிதமானது. கருவறையிலிருந்து அபிஷேக நீரானது இந்த வழியாகவே வெளியேறுவதால், புனிதம் பெறுகிறது. அதை தொடுவதோ... கோமுகைப் பாகம் கல்தானே என்று கருதி அதன் மீது தேங்காய் உடைப்பது போன்ற செயல்களோ கூடாது. மீறினால் தீய பலன்களை அளிக்கும்.

அவற்றின் அருகில் தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேச்வரரை வணங்க வேண்டும். புனித நீர் செல்லும் பாதையைக்கூட காலால் மிதித்து விடக் கூடாது. கிழக்கு நோக்கியபடி நின்று, மிகுந்த பக்தியுடன் இறைவ னிடம் இருந்து வரும் நிர்மால்யத்தை... அதற்கு உரியவர்களான சண்டிகேச்வரரிடமும், ஆலய ஆச்சாரியனிடமும் அனுமதி பெற்று சிறிது பருகலாம்.

இறைவனுக்கு அளிக்கப்பட்டவை அனைத்தும், பரிசுத்தம் அடைந்துவிடும். ஆக, பரிசுத்தமான இந்தப் பிரசாதத்தை மரியாதை யுடனும் அனுமதியுடனும் சிறிது உட்கொள் வதால் பசுக்களான நம்முடைய மும்மலங்களும் அழிக்கப்படுகின்றன.

இந்த நீர் புனிதமானது என்பதற்கு ஓர் உதாரணம்.

சந்தான ஆச்சார்யரான கொற்றவன்குடி சிவ உமாபதி சிவாச்சார்யார், சிவ பெருமானின் உத்தரவின்பேரில் சாம்பன் என்னும் அடியவருக்குத் தன் கண்களினாலேயே தீக்ஷை செய்வித்து மோக்ஷம் அளித்தார். இதை அறியாத அந்த அடியவரின் மனைவியோ `சிவாச்சார்யர் தன் கணவரைக் கொன்று விட்டார்' என்று முறையிட்டார்.

இதைக்கேட்ட அரசன் சிவாச்சார்யரிடம், காரணம் வினவினார். தீக்ஷையின் தன்மையால் இப்படி ஆயிற்று என்று விளக்கம் தந்தார் சிவாச்சாரியார். அதை நம்ப மறுத்த அரசன், அதுபோன்று சபையில் தீக்ஷை செய்யும்படி கட்டளையிட்டார்.

சுற்றிப்பார்த்தார் சிவாச்சாரியார். அங்குள்ள எவரும் பக்குவ நிலை வாய்க்காதவர்கள். எனவே, அவர்களைத் திருக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே , கருவறையிலிருந்து வெளியேறும் புனித நீர் விழுந்து செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டார். கோமுகை வழியாக வந்த நிர்மால்யத்தால் புனிதம் பெற்றவை அந்தச் செடிகள் என்பதை அறிந்து நயனதீக்ஷை செய்வித்தார்.

உடனே அந்தச் செடிகளிலிருந்த பக்குவம் பெற்ற ஆன்மாக்கள் சிவகதி அடைந்தன. அரசனும் மக்களும் இந்த நிகழ்வைக் கண்டு பேரானந்தம் அடைந்து உமாபதி சிவாச்சார்யரின் மகிமையை உணர்ந்தனர்.

ஆக, கோமுகை வழியே வரும் தீர்த்தம் புனிதமானது. அனுமதியுடன் பெறுவது சிறப்பு. அங்கு நவசக்திகளும் குடிகொண்டு சிவனருளை அளிக்கின்றன.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism