Published:Updated:

வேண்டும் வரம் தருவாள் மலர் கொடுத்த நாயகி!

திருமுகீஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமுகீஸ்வரர் ஆலயம்

உப்பு வேலூர் திருமுகீஸ்வரர் ஆலயம்

உப்புவேலூர்! விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் உள்ள ஊர். சங்க காலத்தில் நல்லியக்கோடன் எனும் மன்னன் அம்பாளை வழிபட்டு அருள்பெற்ற தலம் இது. அந்தக் காலத்தில் இவ்வூர் முல்லை நிலத்தைச் சேர்ந்த வேலூர் என்றே வழங்கப்பட்டுள்ளது. அப்போது, திண்டிவனம் பகுதியில் உள்ள கிடங்கல் எனும் ஊர், ஒய்மா நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது.

வேண்டும் வரம் தருவாள் 
மலர் கொடுத்த நாயகி!

ந்த நாட்டின் அரசன் நல்லியக்கோடன். இவன் அனுதினமும் உப்புவேலூருக்கு வந்து, இங்கே கோயில் கொண்டிருக்கும் மோகீஸ்வரரையும் அம்பாள் பிரகன் நாயகியையும் அல்லிமலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் செஞ்சியை ஆண்ட குறுநில மன்னனுக்கும் நல்லியக்கோடனுக்கும் இடையே போர் மூண்டது. போரில் வெற்றி பெற வேண்டும் என்று உப்புவேலூர் அம்பாளைப் பிரார்த்தித்தான் நல்லியக்கோடன். அம்பாள் அவனுக்குப் பூ எடுத்துக்கொடுத்து ஆசி வழங்கினாள். போரின்போது அந்தப் பூவே வேலாக மாறி, நல்லியக் கோடனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததாம் (முன்னூர் எனும் திருத்தலத்திலும் இதேபோன்ற திருக்கதை உண்டு).

இங்ஙனம் அம்பாள் பூ எடுத்துக் கொடுத்ததால் `பூ வேலூர்’ என வழங்கப்பட்ட இந்த ஊரின் பெயர், காலப்போக்கில் உப்பு வேலூர் என்று மருவியது என்கிறார் உள்ளூர் பக்தர் ஒருவர்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையை பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இவர் ஒருமுறை நல்லியக்கோடனைப் பாடி பரிசில் பெறுவதற்காக இவ்வூரின் வழியே பயணித்தாராம். அப்போது, தான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, ‘தான் உண்ணும் உணவை விருந்தினர்களுக்கும் கொடுத்து உபசரிக்கும் பண்புடையவர்கள் இப்பகுதி மக்கள்’ எனப் போற்றிப் பாடினாராம்!

அருள்மிகு பிரகன்நாயகி உடனுறை அருள்மிகு திருமுகீஸ்வரர் ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். வடக்குத் திசையில் மூன்று நிலை ராஜ கோபுரம் அமைந்துள்ளது. அந்த வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால், கொடிமரத்தின் அருகே வீற்றிருக்கும் நந்திதேவரை தரிசித்துவிட்டு வலமாக வந்தால், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லட்சுமி, துர்கை, பிரம்மன், சண்டிகேஸ்வரர், மகாவிஷ்ணு, பைரவர், 63 நாயன்மார்கள் ஆகியோரை தரிசிக்கலாம். நவகிரக சந்நிதியும் உண்டு. தனியொரு மண்டபத்தில் 108 லிங்கங்கள் உள்ளன. கருவறையில் எழிலோவியமாகக் காட்சி தருகிறார் திருமுகீஸ்வரர். இந்த ஈசன் மேற்கு நோக்கி அருள்வது விசேஷமான அம்சம் என்கிறார்கள்.

வேண்டும் வரம் தருவாள் 
மலர் கொடுத்த நாயகி!
வேண்டும் வரம் தருவாள் 
மலர் கொடுத்த நாயகி!

திருமுகீஸ்வரர் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராம். மோகினியாய் அவதரித்த திருமால் தவம் செய்து வழிபட்ட ஈசன் இவர். இதையொட்டியே இந்த இறைவனுக்கு திருமுகீஸ்வரர் என்று திருப்பெயர் வந்ததாம். கோயில் கொடிமரத்தின் அருகிலேயே தவக் கோலத்தில் அருளும் மோகினியின் திருவடிவை தரிசிக்கலாம். ஸ்வாமியின் கருவறைக்கு வலப்புறத்தில் உற்சவர் சந்நிதி. இடப்புறம் உள்ள தனிச்சந்நிதியில் தேவியருடன் கிழக்கு நோக்கி அருள்கிறார் முருகப்பெருமான். அருணகிரிநாத ஸ்வாமிகள் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடியுள்ளார்.

வேண்டும் வரம் தருவாள் 
மலர் கொடுத்த நாயகி!

கொடிமரத்துக்கு வடக்கு திசையில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள் அன்னை பிரகன்நாயகி. பக்தர்கள் நினைத்த காரியத்தை அவர்கள் நினைத்தவண்ணம் நிறைவேற்றி அருளும் அம்பிகை இவள். திருமுகத்தில் புன்னகை துலங்க அறக்கருணை காட்டியவளாக தெற்குநோக்கி தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலவிருட்சமாக நிற்கிறது வேம்பு. இங்கு வந்து இந்த அன்னையை வேண்டி வழிபட்டால், சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. மட்டுமன்றி நாம் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் இந்த அன்னையின் அருளால் வெற்றி பெறும் என்கிறார்கள்.

பிரம்ம தீர்த்தமும், ஆகாய கங்கையும் கோயிலின் தீர்த்தமாகத் திகழ்கின்றன. இந்தக் கோயில் ராஜராஜசோழன் - ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் மாலையில் (5:30 - 6:00 மணிக்கு இடைப்பட்ட நேரம்) சூரியன் தன் கிரணங்களால் இத்தலத்து ஈசனை வழிபடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

இந்த ஆலயத்தின் ஹரிஹர குருக்களிடம் பிரார்த்தனைச் சிறப்புகள் குறித்து கேட்டோம்.

வேண்டும் வரம் தருவாள் 
மலர் கொடுத்த நாயகி!

“இங்கு வந்து அம்பாளை வேண்டினால் நினைத்தது விரைவில் நிறைவேறும். வேம்பு தலவிருட்சமாக இருப்பதால் நோய் நொடிகள் அனைத்தும் தீரும். இங்கே மேற்கு முகம் நோக்கியபடி வீற்றிருக்கும் சுவாமியை வழிபட்டு, பிரம்மரிஷி தன் வயிற்றுவலி நீங்கப்பெற்றாராம். ஆகவே, இங்கு வழிபட்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும். திருமணத்தடைகளும் தோஷங்களும் நீங்கும்; மணப்பேறு, மகப்பேறு கூடிவரும்.’’ என்றார் ஹரிஹர குருக்கள்.

மொத்தத்தில் அன்பர்கள் அனைவரும் ஒருமுறையேனும் குடும்பத்துடன் சென்று தரிசித்து அருள்பெற வேண்டிய அற்புதத் தலம் இது.