ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ஆலயங்களில் பள்ளியறை பூஜை எதற்காக?

பள்ளியறை பூஜை
பிரீமியம் ஸ்டோரி
News
பள்ளியறை பூஜை

பள்ளியறை பூஜை

ஆலயங்களில் பள்ளியறை பூஜை எதற்காக?

ஆலயங்களில் செய்யப்படும் வழிபாட்டு முறை ஒவ்வொன்றும் இவ்வுலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்கக் கூடியதாகும்.

பள்ளியறை பூஜை
பள்ளியறை பூஜை


மட்டுமன்றி `இயற்கை’ என்று சொல்லக்கூடிய பஞ்ச பூதங்களும் எப்படி இருந்தால் இந்த உலகம் நன்மை அடையுமோ, அதற்கேற்ப அவை ஐந்தையும் ஒரு நிலையில் - சமநிலையில் இயங்கச் செய்வதும் இந்த வழிபாடுகளின் முக்கிய நோக்கம் ஆகும். அந்த வகையில் ஆலயங்களில் செய்யப்படும் வழிபாடுகளில் ஒன்றுதான் பள்ளியறை பூஜை!

பள்ளியறை பூஜையை `சயனாலய பூஜா’ என்று ஆகமங்கள் கூறுகின்றன. பொதுவாக `சயனம்’ என்றால் `உறங்குதல்’ என்று பொருள்கொள்வோம். அந்த வகையில் `பள்ளியறை’ எனில் `உறங்கும் இடம்’ என்றே கருதுவோம். ஆனால் பள்ளியறை பூஜை யைக் குறித்துப் பார்க்கும்போது, உறங்குதல் என்று பொருள் கொள்ளாமல், `ஒடுங்குதல்’ என்றே பார்க்கவேண்டும். ஆன்மா ஒடுங்கக்கூடிய இடம்.

ஆலயத்தில் பள்ளியறை, சிவனும் சக்தியும் இணைந்து இருக்கும் இடமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு சிவன் மற்றும் சக்தியை ஆண், பெண் என்று பார்க்கக் கூடாது. சிவனை உலகை நடத்தும் கர்த்தாவாகவும் அவருக்கு உரியஆற்றலைத் தரும் சக்தியாக அம்பிகையையும் பார்க்கவேண்டும். அப்போது இந்தப் பூஜையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.


? பள்ளியறை பூஜை ஆலயங்களில் எவ்வித நியதிப்படி நிகழும்?

பள்ளியறை பூஜை என்பது ஒவ்வோர் ஆலயத்திலும் ஒவ்வொரு வழக்கப்படி செய்யப் படுகிறது. சில ஆலயங்களில் சுவாமியை அவருடைய பாதங்களில் ஆவாஹனம் செய்து, அவரை அம்பாளின் இருப்பிடத்துக்கு அழைத்து சென்று, சிவனும் சக்தியும் ஒன்றாக இருப்பதுபோல் பாவித்து உபசரிப்புகள் நிகழும்.

மறுநாள் காலை யில் பூஜை ஆரம்பிக்கும் முன், மறுபடியும் சிவ பெருமானை அங்கிருந்து அழைத்து வந்து அவர் சந்நிதியில் சேர்ப் பது ஒரு வழக்கம். சில ஆலயங்களில் இந்த வழக்கத்தில் மாறுதல் இருக்கலாம். ஆனால் தத்துவம் ஒன்றுதான். சிவனும் சக்தியும் ஒன்றாக இருத்தல் என்பது, இவ்வுலகம் நன்றாக இருக்க இயங்க வேண்டும் என்பதற்காகவே.

சிவனும் சக்தியும்
சிவனும் சக்தியும்


? இரவின் தொடக்கத்தில் நிகழும் இந்த வழிபாட்டால் உலகுக்கு நன்மை கிட்டும் என்று ஏற்கலாமா?

`ராத்ரீ் சூக்தம்’ என்று வேதத்தில் கூறப் பட்டுள்ளது. அதில் ராத்திரி காலம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஆம், இரவு காலம் அனைவருக்கும்முக்கியமானது. மனிதன் யாராக இருந்தாலும், எந்தப் பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் இரவு என்பது இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். நாம் நமக்கு வேண்டிய ஆற்றலைப் பெறுவதற்கான சரியான காலம், சந்திரனின் ஆற்றல் நிறைந்த இரவுப்பொழுதுதான்.

நமக்கு மட்டுமல்ல பயிர்கள் முதலான சகல உயிரினத்துக்கும் இரவு அவசியம். சந்திரன் தனியாக இயங்குவதில்லை. சூரியன் சந்திரனுக்குச் சக்தி தருகிறார். இவ்வுலகத்தில் அனைத்திற்கும் காரணம் சூரியன்தான். எனினும், இரவில் சந்திரனின் காந்தி வளர்ச்சி யைத் தருகிறது.

எல்லாம்வல்லவர் சிவபெருமான். ஆயினும் அவர் அனைத்தையும் இயக்கும் வகையில், தான் நேரிடையாகச் செயல்படாமல், தன்னு டைய சக்தி மூலமாக - அம்பாள் மூலமாக இயக்குகிறார் என்றே நம்முடைய சித்தாந்தம் நமக்குச் சொல்லித் தருகிறது. பள்ளியறை பூஜை சிவ-சக்தியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும்.


? இந்த வழிபாடு நமக்கு உணர்த்தும் தத்துவம் என்ன?

`ஸமவேத சக்தி’ என்று கூறுவார்கள். சிவமும் சக்தியும் பிரிக்க முடியாதவை. ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் போது அக்னியின் எதிரில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள் கிறார்கள்... `எங்களுடைய மூச்சு இருக்கும் வரையில் நாங்கள் ஒன்றாகவே வாழ்வோம்’ என்று.

திருமணம் என்பது ஆண் - பெண் உறவுக்காக மட்டும் அமைந்த தல்ல. இல்லற தர்மங்களைச் செவ்வனே செய்து தங்களின் வாழ்வை உலகுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக ஆதி தம்பதியான சிவனும் பார்வதியும் திகழ்கிறார்கள்.

ஆதிசங்கர பகவத்பாதர் `சிவ: சக்த்யா யுக்தோ’ என்கிறார். சக்தி இருந்தால்தான் சிவனாரால் செயல்பட இயலும். இல்லையெனில் சிறு காரியத்தையும் அவரால் செய்ய முடியாது என்று செளந்தர்ய லஹரியில் கூறுகிறார். லக்ஷ்மீ விஷ்ணு சமேதராக இருக்கிறாள். சரஸ்வதி பிரம்மனுடன் இருக்கிறாள். சக்தி சிவனுடன் திகழ்கிறாள். சிவம் - சக்தி என்று நம் சமயங்களில் சொல்லப்பட்டுள்ளது எனில், அது பொருளும் ஆற்றலுமாகப் பார்க்கப்படுகிறது.


? திருக்கோயில் பள்ளியறை பூஜைகளால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நமது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும்; அர்த்தம் பொதிந்தனவாக இருக்க வேண்டும். என்ன சொல்கிறோமோ அப்படியே செயல்படவேண்டும்; எப்படிச் செயல்படுகிறோமோ அதையே சொல்லில் வெளிப்படுத்தவேண்டும். உண்மையாக இருத்தல் வேண்டும். இதுபோன்ற உயர்ந்த தர்மங்களை இந்தப் பள்ளியறைப் பூஜை களால் நாம் அடைகிறோம்.

சிவபெருமானை பல்லக்கில் அழைத்து வந்து, அவரைச் சக்தியுடன் இணைந்து இருக்கச் செய்து இருவரையும் பக்தர்கள் சிறப்பாக ஆராதிப்பதே பள்ளியறை பூஜை. ஆதி தம்பதியை - நமக்கு தாயும் தந்தையுமாக விளங்கும் சிவனாரையும் பார்வதியையும் ஒன்றாக இருக்கச் செய்வதன் மூலம், நம் எண்ணங்கள் ஒன்றுபடும்; நம் செயல்பாடுகள் ஒன்றாக இருக்கும்.

பஞ்சபூதங்களால் செய்யப்பட்ட நம் சரீரமானது ஒன்றாக இருக்கிறது. அதிலும் கண்கள் பார்க்க வேண்டும், காதுகள் கேட்க வேண்டும், வாய் நல்ல வார்த்தைகளைப் பேசவேண்டும்... ஆம், அந்தந்த அங்கங்கள் அவற்றுக்குரிய செயல்களைச் செவ்வனே செய்வதற்கான சக்தியைத் தருவது பள்ளியறை பூஜை ஆகும்.

பொதுவாக `அர்த்தயாம பூஜை’ என்பதை `அர்தத ஜாம பூஜை’ என்று கூறுவார்கள். நம் மனம் இதைக் காண்பதால் லயம் அடைகிறது. இப்பூஜையில் பங்குகொள்வதினால் நமக்கு விரும்பிய பயன்கள் கிடைக்கின்றன.

- பதில்கள் தொடரும்...

சூட்சும கங்கை!

திருச்சியில் பஞ்சநாதத் தலங்கள் என்று சிறப்பிக்கப்படும் ஐந்து சிவாலயங்களில் முதன்மையானது காசிவிஸ்வநாதர் ஆலயம். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பிகையின் திருப்பெயர் விசாலாட்சி.

அகத்தியர் வழிபட்ட இந்த ஆலயம், தரைத் தளத்தில் இருந்து சுமார் 15 அடிக்குக் கீழே அமைந்துள்ளது. இங்கே கங்காதேவி சூட்சும வடிவில் நிறைந்திருப்பதாக ஐதிகம். ஆக, இங்கு வந்து சிவ தரிசனம் செய்தாலே, கங்கையில் நீராடிய பலன் கிடைக்குமாம். தீபாவளி நாளில் இங்கு வந்து காசிவிஸ்வநாதரை தரிசித்து வழிபட்டால், தடைகள் விலகும்; வியாபாரம் சிறக்கும்; குடும்ப ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை!

- அ.ராஜா, முசிறி